Election bannerElection banner
Published:Updated:

'பாகுபலி' படம் பக்காதான்... ஆனால் இதுக்கெல்லாம் பதில் கிடைக்குமா?

தார்மிக் லீ
'பாகுபலி' படம் பக்காதான்... ஆனால் இதுக்கெல்லாம் பதில் கிடைக்குமா?
'பாகுபலி' படம் பக்காதான்... ஆனால் இதுக்கெல்லாம் பதில் கிடைக்குமா?

'பாகுபலி' படம் பக்காதான்... ஆனால் இதுக்கெல்லாம் பதில் கிடைக்குமா?

சிறந்த காட்சிகள், வெறியேத்தும் டயலாக்குகள், செவிகளுக்கு விருந்தாகிய பாடல்கள் என எல்லா அம்சங்களும் கொஞ்சம்கூட குறையாமல் 'பாகுபலி' படத்தில் பக்காவாக இருந்தன. படத்தை எவ்வளவு கொண்டாட முடியுமோ அவ்வளவு கொண்டாடி முடித்துவிட்டோம். இப்போது, அந்தப் படத்தின் மீதான ஒரு சராசரி ரசிகனின் கேள்விகள்தாம் இவை.

அம்பு ஃபேக்டரி :

தேவசேனை மீது காதல்கொண்ட பாகுபலி, அவர் இடத்துக்கே சென்று அப்பாவிபோல நடித்து, சில பல யுக்திகளைக் கையாண்டு கடைசியில், தேவசேனையே பாகுபலிக்குத் தாலாட்டுப் பாடலைப் பாடவைத்துவிடுவார். மறுநாள் இரவு, தேவசேனை ஆளும் நாட்டுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிவிடுவார்கள். அப்பாவியாக இருக்கும் பாகு, அமரேந்திர பாகுபலியாக மாறவேண்டிய தருணம் அது. ஒரே நேரத்தில் நான்கு அம்புகளை விடும் திறமை, பாகுபலியிடம் இருந்ததால், விருட் விருட்டென எதிரிகளை நோக்கி அம்புகளை விடுவார். தோராயமாக, அந்த முதுகுக்குப் பின்னால் இருக்கும் கூட்டுக்குள் எத்தனை அம்புகளை வைக்க முடியும்? ஒரு 20? ஒரு 40? சரி விடுங்க பாஸ் உங்களுக்கும் வேணாம் எங்களுக்கும் வேணாம், ஒரு 50னு வெச்சுக்குவோம். ஒரு சமயத்தில் மூன்று அம்புகள் என்றால், முறையே 15 முறை விட்டாலே... மொத்த அம்புகளும் காலியாகிவிடும். ஆனால், அங்கிருக்கும் 150-க்கும் மேற்பட்ட எதிரிகளைப் போட்டுத்தள்ள அம்புகளை விட்டுக்கொண்டே இருப்பார். இன்னும் கூர்ந்து கவனித்தால், முதுகுக்குப் பின்னால் இருக்கும் அந்த அம்பு சுமக்கும் கூட்டில், ஒரு அம்புகூடக் குறையாமல் அப்படியே இருக்கும். என்னா, உள்ள ஒரு 2000 அம்புகள் இருக்குமா..?

மகிழ்மதி மக்கள் :

ஏராளமான மக்களைக்கொண்ட சாம்ராஜ்யம்தான் மகிழ்மதி. அவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தில், மனதில் நின்ற முகங்கள் மூன்றே மூன்றுதான். ஏதாவது சீரியஸான காட்சி வந்துவிட்டால், தொடர்ந்து அதே முகங்களைக் காட்டியது ரொம்ப போர் பாஸ். அந்த அளவுக்கு பெருங்கூட்டம்கொண்ட நாட்டின் மக்கள்தொகையைக் கருத்தில்கொண்டு ஒரு சில சீன்களை இடம்பெறச் செய்திருக்கலாம். அது மட்டுமல்லாமல், மகிழ்மதி மக்களின் ஒரே டயலாக் 'பாகுபலி... பாகுபலி... பாகுபலி...' அவ்வளவுதான். பாகம் ஒன்றிலும் அந்த முதியவர் மகிழ்மதியின் உள்ளே நுழைந்த மகேந்திர பாகுபலியைக் கண்டதும் அவரிடம் வரும் முதல் வார்த்தை 'பாகுபலி...' பிறகு, கோரஸாக நரம்பு புடைக்க கத்தி, சிலையை நிறுவுவார்கள். பாகுபலியைத் தவிர வேறு எந்த வார்த்தைகளையும் சொல்லித் தரலையா சிட்டிஸன்ஸ்..?

ரெண்டு ஷிவூ :

முதல் பாகத்தில், மகேந்திர பாகுபலிக்கு அவரது வளர்ப்புப் பெற்றோர்களால் வைக்கப்பட்ட பெயர், ஷிவூ. இது, படம் பார்த்த எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் பாகம் இரண்டில், அமரேந்திர பாகுபலி தேவசேனையைக் கண்டதும் அவர் மீது காதல் கொண்டதால், தான் யார் என்று காட்டிக்கொள்ளாமல் நாடகமாடுவார். ஆரம்பத்திலிருந்தே தேவசேனைக்கு சந்தேகம். பன்றிகளைக் கொல்லும் காட்சியில், தன் மாமா ராஜவர்மன் காட்டுப் பன்றிகளைக் கொன்றிருக்க மாட்டார் என்ற சந்தேகம் அதிகமாக, அமரேந்திர பாகுபலியிடம் 'உன் பெயர் என்ன?' என்று கேட்கும் தேவசேனையிடம் தயங்கியபடி, ஷிவூ என்று அதே பெயரைச் சொல்வார். இதெல்லாம் ஒரு பஞ்சாயத்தாப்பானு நீங்க கேட்கலாம். ஆனா, ஊர் தெரிஞ்சிக்க விரும்புதே...

ஆங்ரி பேர்ட்ஸ் க்ளைமாக்ஸ் :

க்ளைமாக்ஸில், பெரியப்பாவுக்கு எதிராக சண்டைக்குக் கிளம்பும் மகேந்திர பாகுபலி, ஒரு கட்டத்தில் அடி வாங்கித் தோற்கும் நிலைக்கு ஆளாவார். அதே சமயம், அவர் அம்மா தேவசேனையை மறுபடியும் சிறைபிடித்துவிடுவார் பல்வாள் தேவன். அதைப் பார்த்து பயங்கர கோபத்தோடு மகிழ்மதி அரண்மனையை நோக்கிப் பாயும் நேரத்தில், நாசரின் கட்டளைக்கிணங்க பாகுபலியை நோக்கி அம்புகளை எய்துவிடுவார். ஆனால், ஒரு அம்புகூட இவரின் மேல் பாயாமல் ஜஸ்ட் மிஸ் ஆகிவிடும். சிறிது நேரம் கழித்து, கட்டப்பாவின் ஆட்கள் பாகுவைக் காப்பாற்றி, பாதுகாப்பான இடத்துக்கு கூட்டி வந்துவிடுவர். அம்பு மழையும் நின்றுவிடும். கோபம் தலைக்கேறிய பாகுபலி, மறுபடியும் மகிழ்மதியின் நுழைவு வாயிலை நோக்கி 'உயிரே போனாலும் என் தாயைக் காப்பாற்றியே தீருவேன்' என்று சொல்லி மறுபடியும் பாய்வார். அவரைத் தடுத்து, 'உன் தந்தை அமரேந்திர பாகுபலியைப் போல யோசி' என்று நரம்பை முறுக்கேற்றும் டயலாக்குளையெல்லாம் போட்டுக்கிட்டே இருப்பார் கட்டப்பா. அதன்பின், அங்கு நட்டு வைத்த பனை மரங்களையெல்லாம் பயன்படுத்தி, கும்பல் கும்பலாக அரண்மனைக்குள் பறப்பார்கள். 'பாகுபலி' முதல் பாகத்தில், அமரேந்திர பாகுபலியின் போர்க் காட்சிகளை இதனுடன் ஒப்பிடும்போது, எதிர்பார்ப்புகளை ஏமாற்றிவிட்டார் மகேந்திர பாகுபலி.

பொறியியல் வல்லுநர் குடும்பம் : 

அமரேந்திர பாகுபலியை அரசவையைவிட்டு சிவகாமிதேவி ஒதுக்கிவைக்க, அவர் மக்களின் கஷ்டங்களைத் தீர்ப்பதற்காக சிவில் இன்ஜினீயராக மாறி, ப்ளூ பிரின்ட் போடுவார். பனைமரத்தை இழுத்துக்கட்டி தண்ணீர் இறைப்பார். அவரது அண்ணன் பல்வாள் தேவனோ, மெக்கானிக்கல் அண்டு ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங்கையும் சேர்த்துப் படித்திருப்பார் போல. அவர் ஓட்டி வரும் அந்த அரவை மெஷின் வண்டியை டிஸைன் செய்திருப்பதே... அவரது தொழிநுட்பத்திறனைக் காட்டும். முதலாம் பாகுபலி இப்படினா, அவரது மகன் மகேந்திர பாகுபலி, ஏரோநாட்டிகல் இன்ஜினீயர் போல. க்ளைமாக்ஸ் காட்சிகளில் பறந்து பறந்து சண்டை போடுவார். எங்கேயோ போயிட்டீங்க பாகு..!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு