Published:Updated:

“இந்த அரசுகளின் தோல்விக்கு அந்த ஒரு விஷயமே சாட்சி!’’ - ‘இயற்கை விவசாயி’ பிரகாஷ்ராஜ் #VikatanExclusive

“இந்த அரசுகளின் தோல்விக்கு அந்த ஒரு விஷயமே சாட்சி!’’ - ‘இயற்கை விவசாயி’ பிரகாஷ்ராஜ் #VikatanExclusive
“இந்த அரசுகளின் தோல்விக்கு அந்த ஒரு விஷயமே சாட்சி!’’ - ‘இயற்கை விவசாயி’ பிரகாஷ்ராஜ் #VikatanExclusive

‘‘ ‘பசுமைப் புரட்சி’ எனச் சொல்லி எப்போது நீங்கள் போர்வெல் போட்டீர்களோ, அப்போதே கிணறு, ஆறு, வாய்க்கால்கள் போன்ற நீர்நிலைகளைப் பராமரிப்பதைவிட்டுவிட்டான் விவசாயி. `மழை இல்லை’ என்கிறீர்கள். பெய்த மழையைச் சேகரித்து, தேவையானபோது பயன்படுத்த உங்களிடம் திட்டம் உள்ளதா? மழை மட்டுமே இங்கு பிரச்னை கிடையாது. அப்படியே மழை பெய்து பயிர்கள் விளைந்தாலும் அதற்குரிய விலையில்லை. தண்ணீரைப் பிரித்துக்கொள்வதில் மாநிலங்களுக்குள் உள்ள சிக்கல்களை உங்களால் தீர்க்க முடியவில்லை. அடுத்து, ரசாயனப் பூச்சிக்கொல்லிகளால் காலம்காலமாக நடைபெறும் தவறான விவசாய முறை. நெல் நன்றாக விளைந்தால் அனைவரும் நெல்லாகவே வளர்ப்பது, தக்காளி என்றால் திரும்பிய பக்கங்களில் எல்லாம் தக்காளியாகவே வளர்ப்பது. இதனால்தான் விலை வீழ்ச்சியடைகிறது. இந்த விவசாயக் கல்வியைக் கொடுக்கத் தயங்குவது ஏன்? நீர் அரசியல், சிறுதானிய அரசியல், கார்ப்பரேட் அரசியல், ரசாயன மருந்து கம்பெனிகளின் அரசியல், மத்திய, மாநில அரசுகளின் அரசியல்... இப்படி அனைத்து அரசியல்களுக்கும் நடுவில் இருக்கிறான் இன்றைய விவசாயி. அவனுக்கு தண்ணீர் மட்டும்தான் பிரச்னை என்பது பொய்ப் பிரசாரம்’’ - மனதிலிருந்து பேசுகிறார் பிரகாஷ்ராஜ். மொழிகளைக் கடந்த கலைஞன். தற்போது இவர் ஓர் இயற்கை விவசாயி. ஒரு நள்ளிரவு நேரத்தில் நடந்த உரையாடலிலிருந்து...

‘‘இயற்கை விவசாயம் குறித்து தொடர்ந்து பேசிவருகிறீர்கள். நீங்கள் என்ன விளைவிக்கிறீர்கள்?’’

‘‘எனக்கு இயற்கை பிடிக்கும். அது, என் வாழ்வு முறை; இயற்கைக்கும் எனக்குமான காதல். எல்லா கோணங்களிலும் வாழ்க்கையைப் பார்க்கிறேன். ‘பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தம் கிடையாது; செயலில் இறங்க வேண்டும்’ என இறங்கினேன். ஹைதராபாத்தில் 15 ஏக்கரில் 17 வகையான காய்கறிகள், பழங்களை உருவாக்குகிறேன். இதன்மூலம் என்னிடம் வேலைபார்க்கும் ஐந்து குடும்பங்களைப் பார்த்துக்கொள்ள முடிகிறது. கர்நாடகாவில் மூன்று ஏக்கர் பரப்பளவில் நிலம் உள்ளது. சென்னை புறநகரில் சிறிய தோட்டம் ஒன்று உள்ளது. அங்கு காடுபோல் நிறைய மரங்களை வளர்க்கிறேன். ஹைதராபாத் பண்ணையில் 40 நாட்டுமாடுகள் வளர்க்கிறேன். நாட்டுமாடு இனங்களை நாங்களே உற்பத்திசெய்கிறோம். ஜீவாமிர்தம், பீஜாமிர்தங்களை உற்பத்திசெய்கிறேன். எங்களுக்கான விதைகளை நாங்களே உற்பத்திசெய்கிறோம். புதுச்சேரி ஆரோவில்லுடன் இணைந்து அங்கு இருந்து மூன்று தலைமுறை கத்திரிக்காய் விதைகளை எடுக்கிறேன். தவிர, ஒரு கிராமத்தைத் தத்தெடுத்துள்ளேன். ‘முதலில் நீ மண்ணோடு பேசு. இயற்கைக்குத் திரும்பு. விதைக்காகவோ எருவுக்காகவோ வெளியே போகக் கூடாது’ என்று அவர்களுடன் பேசிவருகிறேன்.’’ 

‘‘இன்று நம்பிக்கை தரும் இளைய விவசாயிகள், உங்கள் கண்களில் படுகிறார்களா?’’

‘‘தமிழகத்தில் நம்மாழ்வாரின் மாணவர்கள் இருக்கிறார்கள். நான் போகும் இடங்களிலெல்லாம் ஆர்வத்துடன் வந்து பேசுகிறார்கள். தங்களின் விவசாய முறைகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள். பாலேக்கர் இருக்கிறார். இப்படி ஆந்திரா, பஞ்சாப், ஹரியானா... என நாடு முழுவதும் பரவலாக இருக்கிறார்கள். ஆனால், குறைவாக இருக்கிறார்கள். இவர்களுக்குள் தேசிய அளவிளான இணைப்புக்காகத்தான் நான் முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். டெல்லியில் நடந்த தமிழ்நாட்டு விவசாயிகள் போராட்டத்தில் யாரும் அழைக்காமலேயே செய்திகளைப் பார்த்துவிட்டு ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநில விவசாயிகள் சிலர் கலந்துகொண்டனர். அதைப் பார்த்தபோதுதான், ‘இந்த இனம் நிச்சயம் ஓர் இயக்கமாக இணையும்’ என்ற நம்பிக்கை வந்தது.’’

‘‘ஆனால் நிச்சய மாத வருமானம் என்ற ஒன்று விவசாயிக்கு இருப்பதில்லையே?’’

‘‘காட்டைப் பாருங்கள். பெரிய பெரிய மரங்கள். அதற்குக் கீழே சிறிய அளவிலான மரங்கள். அதற்கும் கீழே செடிகள், கொடிகள். அதற்கும் கீழே பூமிக்குள் விளையும் விஷயங்கள் என ஐந்து லேயர் விவசாய முறை. யாரும் போய் காட்டில் விவசாயம் பண்ணுவதில்லையே! இப்படி ஒரு டிசைனை அதுதானே வடிவமைத்துள்ளது. அதைப் பார்த்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். நான் என் பண்ணையைச் சுற்றியுள்ள விவசாயிகளிடம், `மாதச் சம்பளம்போல விவசாயத்தில் வருவதற்கு வழிபண்ணுங்கள். பிறகு, அதன் மீது உங்களுக்கே ஒரு பிடிப்பு வரும். பச்சைமிளகாய் விளைவிக்கிறாயா? அதற்கு நடுவில் கத்திரிச் செடியை நடு. வறப்பைச் சுற்றி மாமரத்தை நடு. முருங்கைக்காய் போடு. மாதுளம் பழ விதையை ஊண்... ஒவ்வொரு மாதமும் உன் கையில் ஆயிரம், இரண்டாயிரம் புரளும். இதைத் தனியாகச் செய்யாமல் சுற்றியுள்ள விவசாயிகள் அனைவரும் சேர்ந்து திட்டமிட்டுச் செய்யுங்கள்’ என்று சொல்லிவருகிறேன்.  என்னால் நான்கைந்து விவசாயக் குடும்பங்களைப் பார்த்துக்கொள்ள முடியும்; ஒரு கிராமத்தைத் தத்தெடுக்க முடியும். அதனால் மட்டுமே பிரச்னை தீர்ந்துவிடாதே! இங்கு இருப்பது கோடிக்கணக்கான மக்கள். இவர்களை அரசாங்கம்தான் கவனிக்க வேண்டும். அதற்காகத்தான் அவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம். இது அரசு செய்யவேண்டிய வேலை.’’

‘‘இயற்கை விவசாயத்துக்குத் திரும்ப வேண்டும் என்கிறீர்கள். ஆனால், அதிக விளைச்சலுக்காக அரசே விவசாயிகளை ரசாயன விவசாயத்துக்குப் பழக்கிவைத்துள்ளதே?’’

‘‘பூமி அனைத்தையும் கொடுக்கும். ‘குறுகிய காலம்... அதிக லாபம்’ என நீங்கள் அவசரப்படக் கூடாது. 15 வருடங்களுக்கு முன் பஞ்சாப் விவசாயிகள் போன்ற பணக்காரர்கள் இல்லை. ஆனால் இன்றோ தலைகீழ். `வறட்சியால் தங்கள் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து தரவேண்டும்’ என்று இன்று கேட்கிறார்கள். ஆறு அடி உயரம் வளர்ந்துகொண்டிருந்த நெல், இன்று நான்கு அடிக்குமேல் தாண்டவே சிரமப்படுகிறது. ரசாயனப் பூச்சிக்கொல்லிகளைப் போட்டு நீங்கள் பூமியைக் கொன்றுவிட்டீர்கள். நாம் மீண்டும் இயற்கைக்குத் திரும்பியாகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். என் ஒருவனுக்கு மட்டுமே எல்லாம் தெரிந்துவிடாது, புரிந்துவிடாது. பலருடனும் பேசி முடிவு எடுக்க வேண்டும். அதற்கு ஒரு மாஸ் மூவ்மென்ட் கட்டமைக்கப்பட வேண்டும். அதற்கான ஆரம்பமாக தமிழ்நாடு, கர்நாடக விவசாயிகளிடம் பேசி வருகிறேன். அரசியலைத் தாண்டி இருவரையும் இணைப்பது பெரிய சவால். அது மெதுவாகத்தான் நடக்கும். மீடியா, அறிவுசார் அன்பர்கள் என பலரையும் இந்த அமைப்புக்குள் ஒருங்கிணைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இது கட்சி, தேர்தல் அரசியலில் இருந்து விலகி இயங்கும் மக்களின் இயக்கமாக இருப்பது அவசியம். அதனால் வேறு அஜண்டாவில் உள்ளே வந்து திசை திருப்புவர்கள் மீதும் ஒரு கண் வைக்கவேண்டியுள்ளது.’’

‘‘முதலில் அரசு என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்?’’

‘‘விவசாயி ஒரு கிலோ கத்திரிக்காயை மொத்த விற்பனையாளரிடம் 15 ரூபாய்க்கு விற்பனை செய்தால், பொதுமக்கள் அதை 45 ரூபாய்க்கு வாங்கிச் செல்கிறார்கள். நடுவில் 30 ரூபாய் என்னவாயிற்று? கலைஞர் ஆட்சியில் ‘உழவர் சந்தை’ என்ற அழகான அர்த்தமுள்ள மிக முக்கியமான திட்டம் ஒன்றைக் கொண்டுவந்தார். அது செட்டிலாகும்போது அடுத்து வந்த ஆட்சி அதன் முக்கியத்துவத்தைக் குறைத்துவிட்டது. இது போன்ற திட்டங்கள் பற்றியும் யோசிக்கும், விஷன் உள்ள சொல்யூஷன் போகணுமே தவிர, எங்களை வாக்குவங்கியா மட்டுமே எத்தனை காலத்துக்குப் பார்த்துக்கொண்டு இருப்பீர்கள்? ‘இப்படித்தான் இருப்போம், திட்டமிடுவோம்’ என்று சொன்னீர்கள் என்றால் காலப்போக்கில் எங்களின் ஆறுகள், ஏரிகள், கிணறுகள் இருக்காது. மரங்கள், காற்று இருக்காது. அனைத்தையும் அழித்துக்கொண்டே ஏதோ பிச்சைப்போடுவது போல், ‘கடனை தள்ளுபடி பண்ணியிருக்கோம்’ என்று அப்போதைக்கு யோசிக்கிறீர்கள் என்றால் இதற்கு நிரந்தர தீர்வுதான் என்ன? அந்த நிரந்தரத்தை நோக்கி போவதுதான் முக்கியம்.’’

‘‘விவசாயிகளின் தொடர் போராட்டங்கள் பலன் தருமா?’’

விவசாயிகளின் டெல்லி போராட்டம், எனக்கு அப்படி ஓர் உத்வேகத்தைத் தந்தது. ஆனால், இங்கு டாக்டர்கள் வேலைநிறுத்தம் செய்தால் பாதிக்கப்படுவது நோயாளிகள்; போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்தால் பாதிக்கப்படுவது பயணிகள்; ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் செய்தால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். ஆனால் விவசாயி வேலைநிறுத்தம் செய்தால், விவசாயிதான் பாதிக்கப்படுவான். அவன் தனியாக எத்தனை நாள்தான் போராடுவான்? விவசாயிக்கு இன்று என்ன தேவை? மழை இல்லை எனும்போது அரசாங்கம் அவனுக்குப் பக்கத்தில் நிற்க வேண்டும். ஆனால், அவனைப் போராடவைத்ததே இந்த அரசுகளின் மிகப்பெரிய தோல்வி.’’

‘‘இந்தச் சூழலில் தமிழக-கர்நாடக விவசாயிகள் என்ன செய்ய வேண்டும்?’’

‘‘அரசியல்வாதிகள், பிரித்துத்தான் பார்க்கிறார்கள்; பார்ப்பார்கள். பிரிட்டிஷ் காலத்திலிருந்து அப்படித்தானே இருக்கிறது. அவர்களைப் பொறுத்தவரை இந்தப் பிரச்னை நீடிக்க வேண்டும். நாம் ஒன்றுசேராமல் இருந்தால்தான் அவர்கள் பலம் பெறுவர். ஆனால், நாம் நமக்குள் ஒற்றுமையாக இருந்தால்தான் நல்லது நடக்கும். விவசாயி என்பவன் கன்னடன், கேரளன், தமிழன், மகாராஷ்டிரன் எனச் சொல்ல முடியாது; சொல்லவும் கூடாது. விவசாயி என்றால், இந்திய விவசாயிதான். நீங்கள் எல்லாருக்கும் ஒரே ஆளாகத்தான் இருக்க வேண்டும். நமக்குள் சண்டை போட்டுக்கொண்டால் எந்தத் தீர்வும் கிடைக்காது. நமக்குள் ஒற்றுமை வேண்டும். சட்டப்படியான நீதி வேண்டும் என நினைத்தால் நீதிமன்றத்துக்குப் போகலாம். நியாயம் வேண்டும் என்றால் நாம் தெருவுக்குத்தான் வரவேண்டும். இதுதான் ஜனநாயகம். இந்தியாவில் இருக்கும் அத்தனை பிரபலங்களும் கொஞ்சமாவது வெட்கப்பட்டு ‘விவசாயி இருந்தால்தான் நாமும் இருக்க முடியும்’ என்பதை உணர்ந்து ஒட்டுமொத்தமாக ஒரு மாஸ் மூவ்மென்ட் செய்தால்தான் அரசாங்கத்துக்குப் புரியும்.’’

‘‘ ‘நதிகளை இணையுங்கள்; முதல்கட்டமா தென்னிந்திய நதிகளையாவது இணையுங்கள்’ என்ற கோஷம் கேட்கிறது. இது சாத்தியமா?’’

‘‘நதிகளை இணைத்து ‘நேஷனல் வாட்டர் வே’ என்று அதில் கப்பல் போக்குவரத்துப் பற்றியெல்லாம் யோசிக்கிறார்கள். இந்த நீண்டகாலத் திட்டம் அவசியம்தான். ஆனால், அதை மனதில்வைத்து குறுகியகாலத் திட்டத்தை மறந்துபோய்விடக் கூடாது. முதலில், ‘ஆமாம், வறட்சிதான். இழப்பீடு தருகிறோம்’ என்று அவர்களுக்கு ஆறுதல் சொல்லுங்கள். அடுத்து அவர்களின் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யுங்கள். இந்தக் கோடையில் ஆறு, ஏரி, வாய்க்கால், குளம் உள்ளிட்ட நீர்நிலைகளைத் தூர்வாருங்கள். அடுத்த மழையில் இவற்றில் தேங்கும் தண்ணீர், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும். தேவைகளில் எவை குறுகியகாலத் திட்டங்கள், எவை நீண்டகாலத் திட்டங்கள் என்பதை உணர்ந்துசெய்யுங்கள்.’’

‘‘எதிர்காலத்தில் இந்திய விவசாயம் என்ன மாதிரியான பிரச்னைகளை எதிர்கொள்ளும்?’

‘‘விவசாயிக்கு அவன் வீட்டிலேயே இன்று மரியாதை இல்லை. விவசாயிகளின் பிள்ளைகள் விவசாயி ஆகத் தயாராக இல்லை. நாம் நகரத்தில் வாழ்கிறோம். இங்கிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் நம்ம விவசாயிகள், ‘எனக்கு வேலையில்லை; வாழ வழியில்லை’ என்று அவனைச் சாவை நோக்கித் தள்ளுவது யார்? நாம்தான். எனக்கு தனிப்பட்ட முறையில் எந்தப் பிரச்னையும் இல்லை. தேவையென்றால், நான் அமெரிக்காவில் இருந்தே காய்கறிகளை வரவழைத்துக்கொள்வேன். எங்கு பச்சையாக இருக்கிறதோ அங்கு ஓடிப்போகக்கூடிய அளவுக்கு பணக்காரனாக இருக்கிறேன். கூடுதலாக பேரும் புகழும் இருக்கிறது. எல்லாம் இருக்கிறது என்பதற்காக சும்மா இருக்கக்கூடாதில்லையா? இந்த உணர்வு நம் அனைவருக்கும் வரவேண்டும். உங்களுக்கு..?’’

‘‘கொஞ்சம் சினிமா பற்றியும் பேசுவோம். நீங்கள் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளில் ஒருவர். முன்பெல்லாம் சினிமா சங்கங்கள், பாராட்டு விழாக்களை நடத்துவதையே முழுநேர வேலையாக வைத்திருந்தன. இப்போது நீங்கள் என்ன செய்வதாகத் திட்டம்?’’

‘‘அரசியல் பெரிய விஷயம். அதைச் சங்கங்களுக்குள் புகுத்தக் கூடாது. சங்கத்திலிருந்து தனிநபர்கள் அரசியலுக்குப் போவதைப் பற்றி கருத்துவேறுபாடு இல்லை. ஆனால், ஒரு சங்கம் அரசியலில் ஈடுபடக் கூடாது. கலைஞன் என்பவன், படைப்பாளி; தனித்துவமான பலசாலி. அவனை ஏன் இன்னொருவரின் பலமாக்கும் அஜண்டாவுடன் இயங்குகிறீர்கள்? ஆனால், இனி அது முடியாது. நடிகர் சங்கத்தில் தொடங்கி தயாரிப்பாளர் சங்கத்துக்கும் வந்துவிட்டோம். எங்களிடம் அரசியல் கலப்பு இல்லை. ஃபேஸ்புக், ட்விட்டர், மீடியா... என மக்கள் எங்களையும் கூர்மையாகக் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை நாங்கள் உணர்ந்தே இருக்கிறோம்.’’

‘‘தமிழ் சினிமா பயணத்தைத் திரும்பிப் பார்க்கும்போது எப்போதும் பசுமையாக மனதில் நிற்கும் நினைவுகள்...’’

‘‘கே.பி சார். அவர் இருந்திருந்தால் இன்னும் பெருமைப்பட்டிருப்பார். ‘பிரகாஷ், `நான் வளர்த்துவிட்டேன்’னு ஏன்டா சொல்றீங்க? அது எல்லாத்துக்கும் காரணம் நீயோ, கமலோ, ரஜினியோதான்டா. வளர்ச்சி எல்லாம் உங்களதுதாண்டா. உங்களோட தேவை என் கதைக்கு இருந்தது. நான் இனமோ, மொழியோ பார்க்காம எடுத்துக்கிட்டேன். என் கதைகள் வென்றன. உங்களுக்குள் இல்லாததை நான் யாருடா உருவாக்க?’ என்பார். எவ்வளவு பெரிய வார்த்தைகள். ‘அது இல்லப்பா நீங்க எனக்கு வழிகாட்டினீங்கள்ல; நிரூபிக்க முடியும்னு உணரவெச்சீங்கள்ல. அதுக்கு அப்புறம்தானே நான் சக்தி உடையவனா உணர்ந்தேன்’ என்பேன். அப்பேற்பட்ட மனிதர்கள் குறைந்துவிட்டார்களோ என நினைக்கும்போது கண்ணீர் வருகிறது.’’

‘‘இதையெல்லாம் ஏன்டா செய்தோம் என நினைப்பதுண்டா?’’

‘‘நான் அப்படியெல்லாம் யோசிக்கவே மாட்டேன். அது அந்தந்த விநாடிகளின் முடிவு. அதற்கான விளைவு வரும்போது உட்கார்ந்து அழுதுகொண்டிருப்பதில் பயன் இல்லை. தவறுகளைத் திருத்திக்கொள்ள வேண்டும். புரிதல் இல்லாமலோ அறியாமையிலோ சில விஷயங்கள் செய்துவிடுவோம். அதற்காக எதையுமே செய்யாமல் இருக்கக் கூடாது. ஏதாவது ஒன்றை செய்துகொண்டே இருக்க வேண்டும். நான் அடைவதற்காக மட்டுமே வந்தேன். தொலைப்பதற்கு என்னிடம் எதுவுமே இல்லை. ஏனெனில், நான் எதையும் எடுத்துவரவில்லை.’’