Published:Updated:

'கெத்த விடாத பங்கு..!' - அஜித்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன சம்பந்தம்..?

'கெத்த விடாத பங்கு..!' - அஜித்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன சம்பந்தம்..?
'கெத்த விடாத பங்கு..!' - அஜித்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன சம்பந்தம்..?

'கெத்த விடாத பங்கு..!' - அஜித்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன சம்பந்தம்..?

'இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும் எல்லா சூழ்நிலையும் நீ தோத்துட்ட தோத்துட்டனு உன் முன்னாடி நின்னு அலறுனாலும் நீயா ஒத்துக்குற வரைக்கும் எவனாலும், எங்கேயும், எப்பவும் உன்னை ஜெயிக்க முடியாது' னு 'விவேகம்' டீஸரில் அஜித் பேசுன டயலாக் படம் பார்க்கிற ரசிகர்களுக்கானது மட்டும் இல்லை. அரசியல் பிரபலங்கள் முதல் ஐ.பி.எல் கிரிக்கெட்டில் காலங்காலமாக என்டர்டெயினராகக் கோலம் போட்டுக் கொண்டிருக்கிற ராயல் சேலஞ்சர்ஸ் வரைக்கும் அவர் சொன்ன அந்த வெற்றித் தத்துவம் பொருந்தும். 

தினகரன் : 

சின்னம்மா விட்டுவிட்டுப் போன பணிகளை சீரும் சிறப்புமாகச் செய்து முடிப்பார் எனப் பார்த்தால் நம்ம சின்னவர் தொப்பிக்குள் சிக்கிக்கொண்ட எலியாய் மாறி எஸ்கேப் ஆகிவிட்டார். கட்சிக்குத் துணைப் பொதுச் செயலாளர் ஆகியாச்சு... ஆர்.கே நகருக்கு வேட்பாளரும் ஆகியாச்சு... ஆடி போய் ஆவணி வந்தா டாப்பா வருவார்னு ஆதரவாளர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்க, அப்போதான் சிக்கினார் மனுஷன். தேர்தல் கமிஷனுக்கே சின்னம் வாங்கக் கமிஷன் கொடுத்த வழக்கில் கைதாக, பாலூற்றி வளர்த்த கிளி மார்பில் கொத்தியது போல் சொந்த அணிக்காரர்களே வெளியேறச் சொல்லித் தூது அனுப்ப 'Give Up' கொடுத்தவர் அடுத்த அத்தியாயத்திற்குக் காத்திருக்கிறார். அவர் மனதில் இருந்ததை அப்படியே இப்போது அஜித் பேசியிருப்பதால் வீறுகொண்டு எழுந்து 'கட்சியும் எனக்குத்தான்... ஆட்சியும் எனக்குத்தான்' என ஆவேசமாக வரலாம்.      

தீபா : 

ஜெயலலிதாவின் அறிவிக்கப்படாத வாரிசாகக் களமிறங்கி அரசி மகுடம் சூடத் திட்டம் போட்டவருக்குச் சுற்றிலும் தொல்லை. எதிரணியினர் எல்லாப் பக்கமும் அணைக்கட்ட மிச்சமிருக்கும் சந்து பொந்துகளிலும் அவரது கணவர் மாதவன் சிமென்ட் போட்டு அடைத்தார். வீக்கெண்ட்ல மட்டும் கட்சி நடத்துற நமக்கே இப்படினா தேசியக் கட்சிகள்லாம் குழப்பத்தையே குழம்பா ஊத்திச் சாப்பிட்டு வளர்ந்தவிங்க... அங்கே போய் ட்ரெயினிங் எடுப்போம் என அடுத்த ஆட்டத்துக்குத் தயாரானாலும் ஆகலாம். 'சொந்த வீட்டுக்குள்ளிருந்தே ஆள் பிரிஞ்சு எத்தனை கட்சிகள் தொடங்கினாலும் என்னை ஜெயிக்க முடியாது... ஏன்னா எலெக்‌ஷன் நடந்தாத்தானே... நான் தோற்றதையும் நான்தான் கூறவேண்டும் ' என டயலாக் பேசி நம்மை டரியலாக்கலாம். 

எடப்பாடி பழனிசாமி : 

ஜெயலலிதாவின் ஆஸ்தான சிஷ்யராக இருந்த ஓ.பி.எஸ், சின்னம்மா குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறு காரணமாகத் தனி அணியைத் தொடங்கி எதிர்ப்பக்கம் நிற்க, இந்தப் பக்கம் இருந்தே போர்க்கொடியைத் தூக்கிய செங்கோட்டையனைப் பக்கத்திலேயே உட்காரவைத்து எடப்பாடி பழனிசாமியை அதிகாரத்திற்குக் கொண்டுவர முயன்றது கட்சியின் ஆளும் தரப்பு. சின்னம்மா சிறைக்குப் போனாலும், ஒரு வழியாக முதல்வரான எடப்பாடிக்கு தொடக்கம் முதலே எதிர்ப்புகள்தாம். 'என்னதான் நடக்கும் நடக்கட்டுமே...' என ஈஸி சேரில் அமர்ந்தபடி கூலாக ஆட்சியை கவனித்துக் கொண்டிருந்தவர் தினகரன். ஆட்சி அதிகாரத்திற்கு வருவதை விரும்பாவிட்டாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. தினகரனை வழக்குகள் சுற்றி வளைக்க, அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட எடப்பாடியார் எதிரணியினரோடு பேச்சுவார்த்தை நடத்தி சசிகலா குடும்பத்தினரை விலக்கி வைப்பதாக முடிவெடுத்தார். ஆட்சியில் இருந்த இந்த மூன்று மாத காலத்தில் எத்தனை எதிர்ப்புகளைச் சந்தித்தாலும் அசராமல், பிடித்த பதவியை விட்டுக் கொடுக்காமல் சம்மணம் போட்டு அமர்ந்திருக்கும் எடப்பாடியார் நமக்குச் சொல்லித் தருவதும் 'நீயா ஒத்துக்குற வரையும் யாராலேயும் உன்னை ஜெயிக்க முடியாது' தத்துவத்தைத்தான். 

ராயல் சேலஞ்சர்ஸ் : 

ஒவ்வொரு முறை ஐ.பி.எல் போட்டிகள் ஆரம்பிக்கும்போதும் 'இந்த முறையாவது சாம்பியன் ஆகணும்'னு குறிக்கோளோடு மொத்த அணியினரும் களமிறங்கினாலும் அந்தக் குறிக்கோள் மட்டும் ஏலியன் பிடிக்கப்போன ராக்கெட் கணக்கா எசகுபிசகா மிஸ் ஆகி எங்கேயோ போய் விழுந்துடுது. காட்டுத்தனமா ரன் அடிக்க கெயில், டி-வில்லியர்ஸ், கோஹ்லினு எல்லா வரிசையிலும் ஆள் இருக்கிறதுனால இமாலய இலக்குகளை எட்டுவாங்க. சில நேரம் பாதிக் கிணறு கூடத் தாண்ட முடியாம டபுள் டிஜிட் ரன் எடுத்து பல்ப் வாங்குவாங்க. என்னய்யா இதெல்லாம்னு ரசிகர்கள்கிட்ட கேட்டா 'இதாம்ப்பா என்டர்டெயின்மென்ட்டு...'னு கண்ணைத் துடைச்சிக்கிட்டே கத்துவாங்க. முதல் ரவுண்ட்லேயே தாக்குப் பிடிக்க முடியாம வெளியே போனாலும் கலங்காம கல்லு மாதிரி நின்னு புதுச் சட்டையை எடுத்து மாட்டிக்கிட்டு அடுத்த சீஸன்ல களமிறங்குவாங்க இந்த என்டர்டெயினர்ஸ். சோ கால்டு 'நெவர் எவர் கிவ் அப்'. 

நாஞ்சில் சம்பத் : 

'இப்போ தினகரன் தான் எனக்குத் தலைவர். சூழலுக்குத் தகுந்த மாதிரி மாறிக்கணும்... வெளியில் யாராவது காறித் துப்புனா துடைச்சிருவேன்' என வின்ஸ்டன் சர்ச்சில் மற்றும் பலர் சொன்ன 'நெவர் எவர் கிவ் அப்' வசனத்தை நம்ம ஊருக்குத் தகுந்தபடி லோக்கலைஸ் செய்துகொண்ட நாஞ்சிலார் எப்போதும், எதற்கும் , யாருக்கும் அஞ்சுவதே இல்லை. பேசினால் வெறித்தன டயலாக், பார்த்தாலே கலாய் மீம்ஸ் என போர்வாளின் தம்பி ரொம்பவே கூர்வாள். வார்த்தைகளை வைத்து காற்றைக் கிழித்துக் கம்பு சுத்தும் நாஞ்சிலார்க்கு அஜித் சொன்னது அல்வா சாப்பிடுவதைப் போல. இன்னும் அசராமல் பேசி மக்களை அசரடிப்பார் என எதிர்பார்க்கலாம். 

'வீரம்'. 'வேதாளம்' படங்கள் ஹிட்டுனு சொன்னால் சிரிச்சிட்டுப் போறவங்க இருக்காங்க. தானாக அந்தப் படங்களின் இயக்குநரே வந்து ஒப்புக்கொள்ளுற வரைக்கும் விஜய் ரசிகர்களோ நடுநிலையான சினிமா ரசிகர்களோ படம் ஓடலைன்னு கலாய்ச்சாலும் கவலைப்படத் தேவையில்லை. இதையே தனது அடுத்த படத்தின் வழியாக அஜித்தை வெச்சு சொல்ல வெச்சிருக்கார் இயக்குநர் 'சிறுத்தை' சிவா. கெத்துதான் போங்க!

அடுத்த கட்டுரைக்கு