Published:Updated:

‘‘எவன் சொன்னான்?” - ஆவேச அஜித்! ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினி தொடர் பாகம் 3

‘‘எவன் சொன்னான்?” - ஆவேச அஜித்!  ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினி தொடர் பாகம் 3
‘‘எவன் சொன்னான்?” - ஆவேச அஜித்! ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினி தொடர் பாகம் 3

‘‘எவன் சொன்னான்?” - ஆவேச அஜித்! ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினி தொடர் பாகம் 3

‘என் வீடு என் கணவர்’ என்ற படத்தில் ஒரு பாடல் காட்சியில் சில விநாடிகள் வந்து போனது மூலம் அமைந்ததுதான் அஜித்தின் முதல் சினிமா வாய்ப்பு. ஆனால் அடுத்து வந்த ‘பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்கு பட வாய்ப்புதான் மிகச்சரியான அறிமுகம். 1992  ஆகஸ்ட் 3ல் அந்தப் பட, ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து கணக்கிட்டால், இன்னும் சில மாதங்களில் 25 வது வருடத்தைத் தொடுகிறார் அஜித். அன்றைய தெலுங்கு பட அறிமுக அஜித், ‘வேறு மொழிப் படங்களில் நடிக்க மாட்டேன். தமிழில் மட்டும்தான் நடிப்பேன்’ என்று சொல்லும் இன்றைய ‘விவேகம்’ அஜித்தாக வளர்ந்தது எப்படி? இந்தக் கேள்விக்கான பதிலை அவரின் இந்த கால்நூற்றாண்டு கால திரைப்படங்களின் வழியாக நாம் உணர முடியும். அதற்கான ஒரு ரீவைண்ட் தான்.. இந்த ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினி தொடர்! 

அஜித்தை தன் மகனாகப் பார்த்த நடிகையின் அம்மா யார்? அஜித் முதன்முதலில் புகைப்படம் எடுக்கத்தொடங்கியது எந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்? அஜித் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்திக்காக நடித்த முதல் படம் எது? விக்ரமை இருட்டடிப்பு செய்தாரா அஜித்? ‘அமர்க்களம்’ வாசு கேரக்டருக்கு எது ட்ரெயிலர் தெரியுமா? ‘பகைவன்’ ஏன் அஜித்துககு பகைவனானது? அஜித்தின் அடுத்த ஐந்து படங்களைப் பற்றி இன்று பார்ப்போம்...

11. ‘காதல்கோட்டை’

‘வான்மதி’ நடித்துக்கொண்டிருக்கும்போதே `காதல்கோட்டை’ கதையிலும் அஜித்தை கமிட் பண்ணிவிட்டார் இயக்குநர் அகத்தியன். இது நல்ல கலெக்‌ஷன், தேசிய விருது... என மிகப்பெரிய வெற்றிப் படமானது நாம் அறிந்ததே. இதில் இவருக்குக் கிடைத்த மரியாதைக்குரிய உறவு, தேவயானியின் அம்மா. அவர் அஜித்தை இன்னொரு மகனாகவே பார்ப்பாராம். இருவரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் இந்தியில் பேசிக்கொண்டிருப்பார்களாம். பின்நாளில் இவரை வைத்து ‘நீ வருவாய் என’ படம் இயக்கிய ராஜகுமாரன், ‘நான் தேவயானியைக் காதலிக்கிறேன். இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொள்ளப்போகிறோம்’ என்று சொன்ன ஒன்றிரண்டு நண்பர்களில் அஜித்தும் ஒருவர். ‘அஜித் நல்ல புகைப்படக் கலைஞர்’ என்று சொல்லப்படுவதற்கு ‘காதல்கோட்டை’ சமயத்திலேயே அவர் அடித்தளம் போட்டுவிட்டார். இந்தப் படத்தின் ஷூட்டிங் ஜெய்ப்பூரில் நடக்கும்போது ஃபிலிம் ரோல்களை லோட் பண்ணி போட்டோ எடுத்துக்கொண்டே இருப்பாராம். பிறகு, அங்கேயே உள்ள கலர் சென்டர்களில் பிரின்ட் போட்டுப் பார்த்து தனக்குத்தானே கரெக்‌ஷன்ஸ் பண்ணிக்கொள்வாராம்.

12. ‘நேசம்’

`பவித்ரா’வில் இவரை இயக்கிய கே.சுபாஷுக்காக நடித்த படம்தான் ‘நேசம்’. இதன் ஷூட்டிங் முடிந்து படத்தை வெளியிடும் வேலையில் இருந்தார் சுபாஷ். ஆனால், படத்தை வெளியிட முடியாத அளவுக்கு அவருக்கு பண நெருக்கடி. உடனே அஜித், பெரிய தொகையைக் கொடுத்து அந்தப் பட வெளியீட்டுக்கு உதவினார். விபத்தில் சிக்கி, படுத்த படுக்கையாகக் கிடந்த தன்னை ‘பவித்ரா’வில் நடிக்கவைத்த நன்றிக்கடனுக்காக சுபாஷுக்கு இப்படி ‘நேசம்’ காட்டினார் அஜித்.

13. ‘ராசி’

‘கல்லூரிவாசல்’ பட ஆடியோவை வாங்கிய நட்பில், ‘உங்களை வெச்சு ஒரு படம் பண்ணணும்ஜி. கால்ஷீட் கொடுங்க’ என்று அஜித்தை அணுகினார் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி. அவருக்காக நடித்த  படம்தான் `ராசி’. இந்தப் படம் பெரிதாக ஓடவில்லை. ஒரு படம் ஓடவில்லை என்றால், `தோல்விக்குக் காரணம் நீதான்’ என்று ஹீரோவும் தயாரிப்பாளரும் மாறிமாறி குற்றம்சாட்டிக்கொள்வது வழக்கம். ஆனால், `ராசி’யின் தோல்வியே அஜித் - சக்கரவர்த்தி இருவருக்குமான நட்பின் தொடக்கப்புள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.

14. ‘உல்லாசம்’

அமிதாப் பச்சன் தயாரித்த படம். விளம்பரப் பட இரட்டை இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி இயக்கினார்கள். விக்ரம் இன்னொரு ஹீரோ. மகேஸ்வரி ஹீரோயின். ‘நீங்க எப்படி ஜேடி-ஜெர்ரினு இணையா சேர்ந்து படம் பண்றீங்களோ, அந்த மாதிரி எனக்கும் விக்ரமுக்குமான கேரக்டர் இருக்கணும்’ என்று படப்பிடிப்பின் தொடக்கத்திலேயே சொல்லி நடித்த படம் இது. நுங்கம்பாக்கம் குட்லக் தியேட்டரில் நடந்த இந்தப் படத்துக்கான பத்திரிகையாளர் சந்திப்பில் ஒரு நிருபர், ‘நீங்கள் விக்ரமை இருட்டடிப்பு செய்கிறீர்கள் என்கிறார்களே, உண்மையா?’ என்று கேள்வி கேட்டார். அடுத்த நொடியே, ‘எவன் சொன்னான்?’ என்று அஜித் கேட்டதும், அரங்கமே அமைதியானது. இந்தப் படம், அஜித் மனதுக்கு நெருக்கமான படங்களில் ஒன்று. இவருக்கு இப்போது உள்ள ‘ஆங்ரி யங்மேன்’ என்ற இமேஜை முதன்முதலில் கொண்டுவந்த படம். பிறகு, இவர் பண்ணிய ‘அமர்க்களம்’ வாசு கேரக்டருக்கான ட்ரெய்லர் என்றே ‘உல்லாசம்’ படத்தைச் சொல்லலாம்.

15. ‘பகைவன்’

ரமேஷ் கிருஷ்ணன், திரைப்படப் பயிற்சிக் கல்லூரியில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவர். இவர் இயக்கிய ‘அதர்மம்’ என்ற படம் அஜித்துக்கு ரொம்பப் பிடித்த படம். `இருவரும் சேர்ந்து ஒரு காதல் கதை பண்ணலாம்’ என்றுதான் பேசினார்கள். ஆனால், வணிகரீதியிலான காரணங்களுக்காக ஸ்க்ரிப்டை மாற்றி பண்ணும்போது அது ‘பகைவ’னாக மாறியது. ஆனாலும் அஜித்தின் நெருங்கிய நட்பு இயக்குநர்களில் ஒருவர் ரமேஷ்.

பாக்யராஜின் நண்பருக்காக அஜித் கால்ஷீட் தந்த படம் எது தெரியுமா? இயக்குநர் சரணை அஜித்துக்கு அறிமுகப்படுத்தி வைத்தது யார்? அஜித்துக்கும் சீனியர் நடிகருமான கார்த்திக்கும் உள்ள நட்பு... அஜித் இயக்கிய பாடல் பற்றி உங்களுக்குத் தெரியுமா... நாளை பார்ப்போம்.

-அஜித் அறிவோம்..!
 

அடுத்த கட்டுரைக்கு