Published:Updated:

'விவேகம் டீஸருக்கும் கவுன்ட் டவுனுக்கும் இதுதான் சம்பந்தம்!' #VikatanExclusive

தார்மிக் லீ
'விவேகம் டீஸருக்கும் கவுன்ட் டவுனுக்கும் இதுதான் சம்பந்தம்!' #VikatanExclusive
'விவேகம் டீஸருக்கும் கவுன்ட் டவுனுக்கும் இதுதான் சம்பந்தம்!' #VikatanExclusive

'விவேகம்' படத்தின் டீசர் வந்ததையடுத்து அஜித் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் பொதுவான சினிமா ரசிகர்கள் மத்தியிலும் சிறந்த வரவேற்பினைப் பெற்றது. இந்த நிமிடம்வரை 88 லட்சத்திற்கு மேல் வ்யூஸ்களையும், 3 லட்சத்திற்கு மேல் லைக்ஸையும் குவித்துள்ளது 'விவேகம்' படத்தின் டீசர். இந்நிலையில் அந்தப் படத்தின் எடிட்டரான ஆன்டனி லிவிங்ஸ்டன் ரூபனுடன் ஒரு ஜாலி பேட்டி.

"உங்களைப் பற்றி ஒரு இன்ட்ரோ..?"

"ஸ்கூல் படிக்கும்போது ரொம்ப ஆவரேஜான ஸ்டூடண்ட்தான் நான். அதுவும் இல்லாம எனக்குப் படிப்பு மேல அவ்வளவு ஈடுபாடே இல்ல. நான் +2 முடிச்சிட்டு என்ன பண்றதுன்னே தெரியாம இருந்தேன். அப்போ என் சித்திதான் விஸ்காம் கோர்ஸ் பத்தி சொன்னாங்க. எனக்கு அது மேல ஒரு இன்ட்ரஸ்ட் வர ஆரம்பிச்சது. லயோலா காலேஜ்ல சீட் கிடைச்சது. அந்த டைம்லதான் ஃப்லிம் மேக்கிங் மேல இன்ரஸ்ட் அதிகமா இருந்துச்சு. அங்க இருந்துக்கிட்டே 'வேட்டையாடு விளையாடு' படம் ஷூட்டிங் போயிட்டு இருந்தப்போ என் காலேஜ்ல இருந்து இன்டர்ன்ஷிப் கூட்டிட்டுப் போயிருந்தாங்க. கௌதம் சார் என்கிட்ட 'ஃப்ரீ டைம்ல என்ன பண்ணுவீங்க ரூபன்'னு கேட்டார். நான் காலேஜ்ல ஃப்ரெண்ட்ஸ் எடுக்குற குறும்படங்களுக்கு எல்லாம் எடிட் பண்ணியிருக்கேன் சார்'னு சொன்னேன். 'அப்போ நீ இந்தப் படத்துல சின்ன சின்ன வேலையெல்லாம் பார்'னு சொன்னார். கௌதம் மேனன் மூலமாகத்தான் சினிமாவுல பிள்ளையார் சுழி போட்டேன். அதுக்கு அப்புறம் 'கண்டேன்', 'சமர்', 'முப்பொழுதும் உன் கற்பனைகள்' இது மாதிரி சில படங்கள் பண்ணேன். அந்தப் படங்களுக்கு போதிய வரவேற்பு கிடைக்கலை. அட்லியை எனக்கு முன்னாடி இருந்தே தெரியும்ன்றதுனால 'ராஜா ராணி' படத்துல வாய்ப்பு கிடைச்சது. அதுதான் எனக்கு முதல் ஹிட். அதுக்கு அப்புறம் 'நான் சிகப்பு மனிதன்', 'ஜீவா', 'டார்லிங்'னு நிறைய படங்கள்ல ஒர்க் பண்ணேன். இந்தப் படங்கள்லாம் பண்ணிட்டு இருக்கும்போதே நிறைய படங்களுக்கு டிரெயிலர் கட் பண்ணதுல பல இயக்குநர்களோட அறிமுகம் கிடைச்சது. அப்படி அறிமுகமானவர்தான் சிவா. என்னோட வேலை அவருக்கு ரொம்பப் பிடிச்சுப்போய் 'விவேகம்' வாய்ப்பு கிடைச்சது."  

"அஜித்துக்கும் உங்களுக்குமான ரிலேஷன்ஷிப் பற்றிச் சொல்லுங்க..?"

"அஜித் சார் ரொம்ப நல்ல மனிதர். எப்பவுமே பாஸிட்டிவா இருக்குற ஆள். அவர்கிட்ட ரொம்பப் பிடிச்ச விஷயமே அவரோட நல்லா பழகிட்டா ஃபேமிலியில ஒரு ஆளாதான் ட்ரீட் பண்ணுவார். அவர் பண்ற வேலை மேல ரொம்ப மரியாதை வெச்சுருப்பார். அவரை மாதிரியே வேலையை நேசித்துப் பார்க்குற எல்லோரையும் அவருக்கு ரொம்ப பிடிச்சுப் போயிடும். எல்லோர் கூடவும் அன்பாக பேசுவார். அவரிடம்  ஒவ்வொரு முறையும் பேசும்போது எதாவது புது விஷயம் கத்துக்கலாம். அவர் ஒருத்தர் மேல அன்பு வெச்சுட்டா அவங்ககிட்ட ரொம்ப உரிமை எடுத்துக்குவார்."  

"டீசர் கட் பார்த்துட்டு சிவாவும் அஜித்தும் என்ன சொன்னாங்க?"

"சிவா சார்க்கு டீசர் பார்த்தவுடனேயே ரொம்ப பிடிச்சது. நான் முதலில் 50 செகண்ட் மட்டும் கட் பண்ணியிருந்தேன். ட்வீட்ஸ் பார்த்துட்டு சில சீன்ஸ்களை சேர்த்து 57 செகண்ட் பண்ணலாமேனு சஜெஸ்ட் பண்ணினார் சிவா சார். எனக்கும் எடிட்டிங் முடிஞ்சதுக்கு அப்புறம் விஷுவலா டீசரைப் பார்க்கும்போது ரொம்பப் பிடிச்சது. அதுக்கு அடுத்த நாளே சிவா சார் அஜித் சார்கிட்ட 'டீசர் நல்லா வந்துருக்கு'னு சொன்னார். 'நான் உடனடியா பார்த்தே ஆகணும்'னு சொல்லி எப்படியும் 10 தடவைக்கு மேல் பார்த்து ரொம்ப சந்தோஷமாகி என்னைப் பாராட்டினார். எனக்கும் சந்தோஷமாக இருந்தது." 

"டீசரில் 'ஆகஸ்ட் மாதம் வெளியாக போகிறது' என்ற வார்த்தைகளுக்கு முன்னால் நிறைய கோட் வேர்ட்ஸ், நம்பர்ஸ்லாம் வருதே... எதுவும் குறியீடா?"

"அதுல பெருசா கோட் வேர்ட்ஸ் எல்லாம் இல்லை. ஆனால், படத்தோட டைட்டிலில் ஆரம்பித்து முடியும்வரை நம்பர்கள் நிறைய வரும். அதனால் சின்ன சின்ன டீடெயிலிங் விஷயங்கள்ல கூட நம்பரை சேர்த்துவிட்டேன். படம் மொத்தமுமே கவுன்ட் டவுண், டைம், டெக்னாலஜியான விஷயங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்தான் விவேகம். அதனால்தான் 'விவேகம்' என்ற எழுத்துக்கும் டைமர் ஃபான்டை பயன்படுத்தினோம். டீசர் வெளியாகும் முன்பு கூட யூ-ட்யூப் லைவில் கவுன்ட் டவுணை ஓட விட்டோம்."

"படத்தைப் பற்றி ஒரு சில வார்த்தைகள்?"

"இது ரொம்பவே ஸ்டைலிஷான படம். இதற்கு முன் வந்த இரண்டு சிவா சார் படங்களும் கமர்ஷியலாக இருந்தது. இந்தப் படத்தில் கமர்ஷியல் மற்றும் க்ளாஸ் ரெண்டுமே இருக்கும். அதுக்குத் தகுந்த அவுட்புட்டும் நல்லாவே வந்துருக்கு. அஜித் சார் ரசிகர்களுக்கு சிறந்த படமா இது கண்டிப்பா இருக்கும். இதுக்கு முன்னாடி வந்த அஜித் சார் படங்கள்ல எந்த அளவுக்கு மாஸ் இருந்ததோ அதற்குக் கொஞ்சம் கூட குறையாமல் இந்தப் படத்திலும் இருக்கும். அதோடு சேர்த்து ஃபேமிலி ஆடியன்ஸுக்கு விரும்பும் விஷயங்களும் இருக்கும்."  

"விஜய் எப்படி? அவரின் 61-வது படம் எப்படி போயிட்டு இருக்கு?"

"விஜய் சார் ரொம்ப ஜாலியான ஆள். சின்ன நக்கல் எப்பவுமே அவர்கிட்ட இருந்துட்டே இருக்கும். இத்தனைக்கும் அவர் ரொம்பப் பேசவே மாட்டார். அப்படிப் பேசினாலும் செமையாக கலாய்ப்பார். அஜித் சார் மாதிரியே அவரும் பாஸிட்டிவ்வான ஒரு மனிதர். அவர் மீது எவ்வளவு விமர்சனம் வந்தாலும் ஈஸியா எடுத்துட்டுப் போறவர்தான் விஜய் சார். 61-வது பட வேலை கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. வழக்கமான அட்லியோட கமர்ஷியல், ஃபேமிலி ட்ராமாதான் இந்தப் படமும். இதில் விஜய்யின் லுக்தான் ரசிகர்களுக்கு ட்ரீட்." 

"டீசர் பார்த்துட்டு ரெஸ்பான்ஸ் எப்படி இருந்தது?"

"என்னுடைய நண்பர்கள் ரொம்பவே பாராட்டினாங்க. அட்லி, ஆர்யா, எஸ்.ஜே சூர்யான்னு சினிமா துறையைச் சார்ந்தவங்களும் பாராட்டினாங்க. என்னுடைய நண்பர்கள்ல நிறைய விஜய் ஃபேன்ஸ் இருக்காங்க. அவங்களுக்கும் டீசர் ரொம்ப பிடிச்சது. விஜய் சாரோட 61-வது படத்துக்கும் இதே மாதிரி பண்ணனும்னு மிரட்டியெல்லாம் வெச்சிருக்காங்க. என் பெஸ்டை நான் கண்டிப்பா தருவேன்."  

பின் செல்ல