Published:Updated:

'அவர்கிட்ட நான் நடிச்சதில் பிடிச்ச சீன் எதுனு கேட்டுடாதீங்க’ - செந்தில் - ஶ்ரீஜா ஜாலி மீட்!

'அவர்கிட்ட நான் நடிச்சதில் பிடிச்ச சீன் எதுனு கேட்டுடாதீங்க’ - செந்தில் - ஶ்ரீஜா ஜாலி மீட்!
'அவர்கிட்ட நான் நடிச்சதில் பிடிச்ச சீன் எதுனு கேட்டுடாதீங்க’ - செந்தில் - ஶ்ரீஜா ஜாலி மீட்!

'மதுரை' மற்றும் 'சரவணன் மீனாட்சி' தொலைக்காட்சித் தொடரில் ஜோடி சேர்ந்தார்கள். பிறகு நிஜத்திலும் ஜோடி சேர்ந்துவிட்டார்கள். இப்போது 'மாப்பிள்ளை' தொடரிலும் ஜோடியாகத் தொடர்கிறார்கள். இப்போது புரிந்திருக்குமே... அந்த ஜோடி யார் என்று. செந்தில் & ஶ்ரீஜாவும்தான். பல எதிர்பார்ப்புகளுக்கிடையே வந்த 'மாப்பிள்ளை' தொடர், தற்போது இல்லத்தரசிகளின் லைக்ஸை அள்ளுகிறது. சீரியலில்போலவே செட்டிலும் கலகலவென இருந்தவர்களை சந்தித்தோம். 

"தொடரில் நடிக்கும் எல்லாருக்குமே திரும்பத் திரும்ப இந்த மாதிரி வாய்ப்பு கிடைக்குமான்னு தெரியலை. ஆனா, எங்களுக்குக் கிடைச்சிருக்கு" என மனைவியின் கைக்கோத்துப் பேசுகிறார் செந்தில்.

`` 'சரவணன் மீனாட்சி' சீரியல் முடிஞ்சு எங்களுக்குக் கல்யாணம் ஆன பிறகு, நாங்க சேர்ந்து நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்தது. ஆனா, நாங்க எதுக்குமே சம்மதிக்கலை. எங்களுக்குப் பொருந்துற மாதிரியான சில கதைகள் கேட்டோம். கதை நல்லா இருந்தாலும், அதை எல்லாம் உடனே செய்ய முடியாத சூழ்நிலை. அப்பதான் இந்த 'மாப்பிள்ளை' தொடரின் கதை சொன்னாங்க. உடனே பிடிச்சுப்போச்சு. வீட்டுல அஞ்சு பொண்ணுங்க. அதுல ஒரு பெண், வீட்டின் எல்லா சுமைகளையும் தாங்கி நிக்குறா. அவளைக் கல்யாணம் பண்ணிக்கப்போற பையனும் வீட்டோடு மாப்பிள்ளையா வரணும்னு கண்டிஷன் போடுறாங்க. இதுதான் ஸ்டோரியோட ஒன்லைன். இது இங்கே புதுசு கிடையாது. பாலசந்தர்  காலத்துல இருந்தே இது மாதிரியான கதைகள் வந்திருக்கு. இதை வேற வெர்ஷன்ல ட்ரெண்டா எடுக்கணும்னு முடிவுபண்ணி இறங்கினோம். இப்ப ரொம்ப ஜாலியா கலகலன்னு போயிட்டிருக்கு.  கதை, நாங்க நினைச்சதைவிட ரொம்பப் புதுசா இருக்கு. இப்ப எந்தக் கதையின் சாயலுமே இல்லாம ஆகிடுக்சு" எனச் செந்தில் நிறுத்த, தொடர்கிறார் ஶ்ரீஜா.

"இவர் சொன்ன மாதிரி ரொம்பவே யோசிச்சுதான் நடிக்க  சம்மதிச்சோம். கல்யாணத்துக்கு அப்புறம் நடிக்கிறது ரொம்ப ஃபீரியா இருக்கு. முன்னாடியெல்லாம் நடிக்கும்போது கண்ணுல காதலைக் கஷ்டப்பட்டுக் கொண்டுவந்து நடிக்கணும். ஆனா, இப்ப இவரைப் பார்த்தாலே காதல் வந்துரும். அதுனால் அந்த சீன்ல எல்லாம் ரொம்ப ஈஸியா நடிக்க முடியுது" என நிறுத்த, செந்தில் முகத்தில் சிவப்பு வெட்கம். 

"என் கெட்டப் எப்படி இருக்கணும்னு முடிவுபண்ணத்தான் கொஞ்ச நாள் ஆச்சு. கொஞ்சம் மார்டனாகவும் இருக்கணும், அதே சமயத்துல பாரம்பரியத்தையும் விடக்கூடாதுனு தேர்ந்தெடுத்துப் பண்ணினோம். இப்ப நான் உடுத்தும் புடவைகளைப் பார்த்துட்டு நிறைய பெண்கள் `எங்கே வாங்கினீங்க?'னு கேட்கிறாங்க. அந்த அளவுக்கு நான் உடுத்தும் உடைகளும் ஃபேமஸ்" என்கிறார் ஶ்ரீஜா.

"செந்தில் நடித்ததில் உங்களுக்கு ரொம்பப் பிடிச்ச சீன் எது?" என்று ஶ்ரீஜாவைக் கேட்டதும் பட்டென வருகிறது பதில்...

"எங்க ரெண்டு பேருக்குமே 'மதுரை' சீரியல்தான் ரொம்பப் பிடிக்கும். பள்ளிக்காலம் எப்படி நமக்கு மலரும் நினைவுகளாக இருக்குமோ, அப்படித்தான் எங்களுக்கு 'மதுரை' சீரியல். இவர் நடித்ததில் ரொம்பப் பிடிச்ச சீன்னா, 'சரவணன் மீனாட்சி' தொடர்ல மீனாட்சிக்கு இன்னொருவர்கூடக் கல்யாணம் ஆகிடுச்சுன்னு இவராவே நினைச்சுட்டு அவர் நண்பர்கிட்ட பேசி அழுவார் . அதுல  ரொம்ப யதார்த்தமா நடிச்சிருப்பார். கொஞ்சம் எக்ஸ்ட்ரா நடிச்சாக்கூட ஓவர் டோஸாகிடும். அந்த சீன்தான் அவர் நடிச்சதிலேயே எனக்கு ரொம்பப் பிடிச்சது. அவர்கிட்ட நான் நடிச்சதில் பிடிச்ச சீன் எதுனு கேட்டுடாதீங்க. `எல்லா சீன்களுமே ரொம்பப் பிடிக்கும்'னு ஐஸ் வைப்பார்" எனச் சிரிக்கிறார்.

"முன்னாடி எல்லாம் நான் நடிச்சதும் கேரளா போயிடுவேன். ஃபேஸ்புக், ட்விட்டர்னு நான் எதிலேயும் இல்லாததால், மக்கள் எப்படி ரெஸ்பான்ஸ் பண்றாங்கன்னே எனக்குத் தெரியாது. இப்ப இவரைக் கல்யாணம் பண்ணிட்டு வந்து இங்கேயே தங்கினதுக்கு அப்புறம்தான், எவ்வளவு பேர் நம்ம மேல அன்பு வெச்சிருக்காங்கனு தெரியுது. எல்லாரும் என்னை அடையாளம் கண்டுபிடிச்சுக் கூப்பிட்டுக் கூப்பிட்டுப் பாராட்டுறாங்க. இவரும் கூட வந்தார்னா, 'பொண்ணை நல்லா பார்த்துக்கோப்பா'னு சொல்வாங்க. அதைக் கேட்கும்போது சந்தோஷமா இருக்கும். அவர் வீட்டுல அவங்க பொண்ணு மாதிரிதான் என்னைப் பார்த்துக்கிறாங்க" என்றவரிடம், 'செந்திலுக்கு நீங்க நல்லா மலையாளம் பேசக் கத்துக்கொடுத்துடீங்கபோல?" என்றவுடன் குறுக்கிடுகிறார் செந்தில்.

"நான் மலையாளம் கத்துக்கலைன்னா சாப்பாட்டுக்கு எங்கே போறது? பேசித்தானே ஆகணும். வேற வழி இல்லைங்க. ட்ரெயினைவிட்டு இறங்கி இவங்க வீட்டுக்குப் போற அளவுக்கு மலையாளம் கொஞ்சம் கொஞ்சம் அறிஞ்சு வெச்சிருக்கேன்" என, சில வார்த்தைகளை மலையாளத்தில் பேச... 

"அவர் சும்மா உங்களைக் கலாய்க்கிறார். இப்ப என்னைவிட நல்லாவே மலையாளம் பேசுவார். சீக்கிரம் மலையாளத்தில் ஆர்.ஜே ஆனாலும் ஆச்சர்யப்படுறதுக்கு இல்லை. எப்படியோ சீரியலுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சிருக்கு" எனச் சிரிக்கிறார் ஶ்ரீஜா. 

சூப்பர்.

அடுத்த கட்டுரைக்கு