Published:Updated:

‘மன அழுத்தத்தினால் செத்திருப்பேன்!' - நடிகையின் வாக்குமூலம்

‘மன அழுத்தத்தினால் செத்திருப்பேன்!' - நடிகையின் வாக்குமூலம்
‘மன அழுத்தத்தினால் செத்திருப்பேன்!' - நடிகையின் வாக்குமூலம்

'ஆரம்பம்', 'போகன்' படங்களில் நடித்த நடிகை அக்ஷரா கவுடா மன அழுத்தத்துக்கு உள்ளாகி, அதிலிருந்து மீண்டவர். அதைப் பற்றிப் பேசுவதில் அவருக்கு எந்த இமேஜ் பாதிப்பும் இல்லை என்கிறார்.

''மிகவும் சந்தோஷமான குடும்பச்சூழலில் இருந்த போதுதான் எனக்கு அந்தப் பிரச்னை ஆரம்பமானது. எப்போதும் களைப்பாக உணரத் தொடங்கினேன். பல நாட்களாக பசி இருக்காது. நன்றாக டிரெஸ் பண்ணவோ, வெளியில் போகவோ தோன்றாது. காலையில் படுக்கையில் இருந்து எழுந்திருக்கத் தோன்றாது. விடிய விடிய தூக்கமின்றி விழித்துக் கொண்டிருப்பேன். அதன் பிறகு தூங்கப் போய், மதியம் 2 மணிக்கு எழுந்திருப்பேன். இப்படியே பல இரவுகள் தூக்கமின்றிக் கடந்திருக்கின்றன. எதிலுமே ஆர்வமில்லாத ஒரு நிலை. உடலில் சக்தியே இல்லாதது போன்ற ஒரு நிலை. இது பல மாதங்களுக்குத் தொடர்ந்தது.

எனக்கு மன அழுத்தம் வர வாய்ப்பே இல்லை என்கிற அளவுக்கு அருமையான குடும்பம், அன்பான பெற்றோர். பிசியாக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். என்னைச் சுற்றி நல்ல நண்பர்கள் இருந்தார்கள். ஆனாலும் மன அழுத்தம்... அமெரிக்கா போனேன். மன அழுத்தத்திலிருந்து விடுபட நடனம் கற்றேன். மன அழுத்தம் பாதித்த போதுதான் நான் படங்களில் நடித்துக்கொண்டும் இருந்தேன். பகல் எல்லாம் உற்சாகமாக வேலை செய்தாலும், இரவில் என்னால் மன அழுத்தத்தில் இருந்து விடுபட முடியாது. இதை இப்படியே வளரவிடக்கூடாது எனப் புரிந்தது. உளவியல் ஆலோசனை தேவை என்றும் உணர்ந்தேன். டாக்டர் ஷ்யாம் பட் என்பவரிடம் ஆறு மாதங்களுக்குச் சிகிச்சை எடுத்துக்கொண்டேன். 

சிகிச்சை என்றதும், திரைப்படங்களில் காட்டுகிற மாதிரி நம்மை உட்கார வைத்து நாம் உளறுவதை எல்லாம் மருத்துவர் கேட்பார் என்றுதான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அது அப்படியில்லை. என்னுடைய எண்ணங்களை எப்படிக் கையாள்வது எனக் கற்றுக்கொடுத்தார். சைக்யாட்ரிஸ்ட், சைக்கோரெபிஸ்ட் என ஒரு குழுவே எனக்கு சிகிச்சை அளித்தார்கள். கூடவே எனக்கு மருந்துகளும் கொடுத்தார்.

மன அழுத்தத்துக்கான மருந்துகள் சாப்பிடச் சொன்னபோது அவை அடிக்ஷனாக மாறிவிடுமோ என்று பயந்தேன். எனக்கு மட்டுமில்லை, பலருக்கும் அந்த பயம் இருக்கிறது. அப்படியெல்லாம் இல்லை என்பதை என டாக்டர்  புரியவைத்தார். ஆறு மாதங்கள் மருந்துகள் சாப்பிட்டேன். பிறகு நிறுத்திவிட்டேன். மோசமான விஷயங்கள் நடக்கும்போதும் பாசிட்டிவானதை மட்டுமே பார்க்கக் கற்றுக் கொடுத்தார். 'போகன்' படத்தில் நான் நடித்த பெரிய காட்சிகள் எடிட்டிங்கில் போனபோது, அதற்காக டைரக்டரிடம் சண்டை போட்டிருக்கிறேன். சிகிச்சைக்குப் பிறகுதான் யதார்த்தம் புரிந்தது. நெகட்டிவ் சிந்தனைகளில் இருந்து வெளியே வந்தேன்.

நான் நம்பர் ஒன் நடிகையாக இல்லாவிட்டாலும், என்னுடைய வேலை எனக்குத் திருப்தியைத் தந்திருக்கிறது. அதற்குக் காரணம் இந்த தெரபி. இந்த சிகிச்சைக்குப் பிறகு நெகட்டிவ் சிந்தனைகளை என்னால் முற்றிலுமாகத் தவிர்க்க முடிகிறது. களைப்பு, எதிலும் ஆர்வமின்மை என எனக்கிருந்த எந்தப் பிரச்னைகளும் இப்போது இல்லை.

மன அழுத்தத்தில் இருக்கும்போது, அதிலிருந்து மீள்வதாக நினைத்துக்கொண்டு நம்மை நாமே பிசியாக வைத்துக்கொள்வோம். என்னை நான் அப்படித்தான் ஷூட்டிங்கில் பிசியாக்கிக் கொண்டேன். ஆனால் அது தவறு என்பதைப் பிறகுதான் புரிந்துகொண்டேன். ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ் எத்தனை பிசியான மனிதர்? ஆனால் மன அழுத்தம் தாங்காமல்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார்.

நான் என் அனுபவங்களைப் பற்றி வெளியில் பேசத் தொடங்கியதும் நிறைய பேர் தாமாக முன்வந்து என்னிடமே ஆலோசனை கேட்கிறார்கள். மனஅழுத்தம் என்பது வெளியில் சொல்லக்கூடாத விஷயம் இல்லை. உங்களுக்கு மட்டும்தான் இந்த பாதிப்பு என்றும் நினைத்துக் கொள்ள வேண்டாம். நம்மைச் சுற்றி நிறைய பேருக்கு மன அழுத்தம் இருக்கிறது. மன அழுத்தத்தினால் நான் இறந்திருக்க வேண்டியவள்... ஆனால் அதை எதிர்த்துப் போராடியதால் இன்று நான் ஜெயித்திருக்கிறேன். உங்களாலும் முடியும்.''