Published:Updated:

உஷார்... இந்த உலகம் உங்களைக் கண்காணிக்கிறது! - லென்ஸ் பட விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
உஷார்... இந்த உலகம் உங்களைக் கண்காணிக்கிறது! - லென்ஸ் பட விமர்சனம்
உஷார்... இந்த உலகம் உங்களைக் கண்காணிக்கிறது! - லென்ஸ் பட விமர்சனம்

உஷார்... இந்த உலகம் உங்களைக் கண்காணிக்கிறது! - லென்ஸ் பட விமர்சனம்

ஒரு Hidden கேமரா ஸ்கேண்டல் வீடியோ உங்களுக்கு வருகிறது. அதை நீங்கள் உங்கள் நண்பர்களுடன் பகிர்கிறீர்கள். அவர் அவருடைய நண்பர்களுக்குப் பகிரலாம். ஆனால் அந்த வீடியோவில் உள்ளவர் பற்றி நாம் என்றும் கவலைப்பட்டதே கிடையாது. இல்லை என்றால் கவலைப்பட்டுக் கொண்டே ஷேர் செய்திருக்கலாம். இதன் விபரீதம் ஒரு நாள் நம்மைத் தாக்கும் போதுதான் அதன் வலி புரியும் என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது லென்ஸ்.

அரவிந்த் (ஜெயப்பிரகாஷ்) எப்போதும் போல அன்றும் ஜூலியுடன் ஸ்கைப் சேட்டிங்கில் பேசத் தொடங்குகிறார். ஆனால், அதில் வருவது ஒரு ஆண். அவன் தன்னை யோகன் (ஆனந்த் சாமி) என அறிமுகப்படுத்திக் கொண்டு, நான் சாகப் போகிறேன். அதை நீ லைவாக பார்க்க வேண்டும் எனத் தொல்லை செய்கிறான். இணைப்பைத் துண்டித்துவிட்டு யார் இவன்? எதற்காக இப்படி செய்கிறான்? என ஜெயப்பிரகாஷ் யோசிக்கும்போது அவரது மொபைலுக்கு ஒரு வீடியோ வருகிறது. அதில் ஜுலியுடன் ஜெயப்பிரகாஷ் செய்த அந்தரங்க சேட்டிங்கின் வீடியோ இருக்கிறது. பதறிப்போகும் ஜெயப்பிரகாஷ் மறுபடி அவனை வீடியோ சாட்டில் பிடிக்க, தொடங்குகிறது கதை. யார் இந்த யோகன்? எதற்காக இப்படி செய்ய வேண்டும்? இதற்கு ஜெயப்பிரகாஷை எதற்காக தேர்தெடுக்க வேண்டும் என்ற கேள்விகளுக்கு பதில் சொல்லி, பல அதிர்ச்சிகரமான கேள்விகளை நம்முன் வைக்கிறது லென்ஸ். திரைவிழாக்களில் மட்டும் ஓடிய லென்ஸை நமக்கு அளித்ததற்கு வெற்றிமாறனுக்கு முதலில் நன்றிகள்.

ஆன்லைன் சாட், செக்ஸ் ஸ்கேண்டல்ஸ், டெக்னிகல் உலகில் அடுத்தவரின் பெட்ரூமை எட்டிப் பார்க்க முடிகிற விபரீதம் எனப் பல விஷயங்களை முன் வைத்து காலரைப் பிடித்துக் கேள்வி கேட்டிருக்கிறார் இயக்குநர் ஜெயப்பிரகாஷ். இப்போதைய 4ஜி ஜெனரேஷனுக்கு தேவையான விழிப்புஉணர்வையும், நம் அந்தரங்கம் பலரது கண்களுக்கு விருந்தாகக் கூடும் என்கிற பய உணர்வையும் ஒருசேரக் கொடுத்திருக்கிறார். 

"எங்களுடைய பர்சனல் வீடியோவ ரெக்கார்ட் பண்ணி வெச்சுகிட்டு, இதை வெளிய விட்டுடுவேன்னு சொல்லி மிரட்டுறியே, உன்னால அந்த பொண்ணுடைய எதிர்காலமும் பாதிக்கப்படும்னு கொஞ்சமாவது யோசிச்சியா என ஜெயப்பிரகாஷ் பேசுவது எல்லாம் ஒரு கட்டத்தில் அவருக்கே திரும்ப வரும் வார்த்தைகளாக அமைக்கப்பட்டிருந்த திரைக்கதை ரொம்பவே ஸ்பெஷல். மொத்தமாக இருவருக்குமான உரையாடல் மிகத் தெளிவாக பயன்படுத்தப்பட்டிருந்த வார்த்தைகள் படத்தை எங்கும் தேங்கவிடாமல் நகர்த்துகிறது.

"உங்க சபலத்துக்காக என் குடும்பத்தை அழிச்சிட்டீங்களேடா" என்பது போன்ற ஒவ்வொரு வசனங்களும் சுளீர். ஜெயப்பிரகாஷை மிரட்டுவது, அவரிடம் கேட்கும் ஒவ்வொரு கேள்விகளின் போதும் கொடுக்கும் ரியாக்‌ஷன்கள், பழிவாங்கும் போது காட்டும் வெறித்தனம் என யோகனாக ஆனந்த் சாமி நிறைவாக நடித்திருக்கிறார். அதற்குப் பின் கவனம் ஈர்ப்பது ஏஞ்சலாக நடித்திருக்கும் அஷ்வதி லால். வாய் பேச இயலாதவராக வடிவமைக்கப்பட்டிருந்த அவரது கதாபாத்திரமும், பேப்பரில் எழுதிக்காட்டும் அவரது பழக்கமும் நல்ல ஐடியா. அதுதான் பின்னால் அவர் அழுது கொண்டே எழுதிக்காட்டும் ஒவ்வொரு பேப்பரைப் பார்க்கும் போதும் அத்தனை அழுத்தம் சேர்க்கிறது. அந்த சம்பவத்திற்குப் பிறகு நடந்து கொள்ளும் விதம், வீட்டு விளக்குகளை எந்த நேரமும் அணைத்தே வைப்பது, பல லட்சம் கண்கள் தன்னைப் பார்ப்பது போன்ற உணர்வு என உளவியல் சிக்கலால் தவிப்பதில் பாதிக்கப்பட்டவர்களில் பிரதிநிதியாய் நம் கண்முன் தெரிகிறது ஜூலி கதாபாத்திரம். இயக்கத்தில் ஸ்கோர் செய்தாலும் நடிப்பில் கொஞ்சம் அண்டர்ப்ளே செய்து நடித்திருக்கிறார் ஜெயப்பிரகாஷ். சில சமயம் அது கொஞ்சம் செயற்கையாக இருக்கிறது. 

இரண்டு முதன்மைக் கதாபாத்திரங்கள், சில உறுதுணைக் கதாபாத்திரங்கள், இரண்டு பேருக்குள் நடக்கும் பெரிய உரையாடல் இதனை மட்டுமே வைத்து ஒரு நல்ல சினிமாவைக் கொடுக்க முடியும் என நிரூபித்திருக்கிறார் இயக்குநர். படத்தில் பெரும்பாலான காட்சிகள் இரண்டு அறைகளுக்குள்தான் நடக்கிறது. அதில் கம்ப்யூட்டர் திரையையும் பின்புலத்தையும் எப்படி எல்லாம் காண்பித்து சுவாரஸ்யப்படுத்த முடியுமோ எல்லாவற்றையும் செய்கிறார் ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர். ஒரு இடத்தில் மயக்க நிலையில் இருக்கும் பெண்ணை நிர்வாணம் ஆக்கும் காட்சி வருகிறது. அதை துளியும் விரசம் இல்லாமல் எந்த கோணத்தில் இருந்து படம் பிடித்தால் கொஞ்சமும் ஆபாசம் இல்லாமலும், காட்சியை அழகாகவும் கொடுக்க முடியும் என யோசித்து வைக்கப்பட்டிருந்த கேமரா சூப்பர். காகின், ஜீ.பி.வெங்கடேஷ், ஜெய்னுல் அப்தீன் மூவரின் எடிட்டிங் படத்தின் அழுத்தத்தை எந்த வித்தத்திலும் பாதிக்காமல் 109 நிமிடங்களில் மிக சுருக்கமாக படத்தைக் கொடுத்திருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் பின்னணி இசை படத்தை எந்த இடத்திலும் தொந்தரவு செய்யாதபடி தேவையான இடத்தில் மட்டும் ஒலிக்கிறது. மூங்கில் நிலா பாடலும் நன்று.

படத்தின் பல இடங்களில் ஒட்டாத லிப் சிங் அப்படியே தெரிந்தது உருத்தல். அவ்வளவு நேரம், எந்தக் கேள்வியும் கேட்க முடியாத லாஜிக்குகளுடன் கதை நகர்ந்து கொண்டிருக்கும் போது, அந்த பெண் டிரைவ் லிங்க், மேக்கிங்கில் சில சொதப்பல்கள் என குறைகள் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், மனித மனங்களுக்குள் தேங்கிக் கிடக்கும் சபலங்களால், ஏதோ ஒர் மூலையில் ஒரு குடும்பம் அழியக் கூட வாய்ப்பு உண்டு என்கிற விஷயத்தை இவ்வளவு அழுத்தமாக சொல்லியதால், மற்ற குறைகளை பொறுத்துக்கொள்ளலாம். லென்ஸ் ஒரு தரமான சினிமா.

அடுத்த கட்டுரைக்கு