Published:Updated:

கை ரிட்சி படம்... டேவிட் பெக்கம் கேமியோ... ஆனால் கிங் ஆர்த்தர். படம் எப்படி ?

கார்த்தி
கை ரிட்சி படம்... டேவிட் பெக்கம் கேமியோ... ஆனால் கிங் ஆர்த்தர். படம் எப்படி ?
கை ரிட்சி படம்... டேவிட் பெக்கம் கேமியோ... ஆனால் கிங் ஆர்த்தர். படம் எப்படி ?

புராண கதாபாத்திரங்களை மையமாக வைத்து ஹாலிவுட்டில் பல படங்கள் வெளியாகி இருக்கின்றன. அதுவும், காலத்திற்கேற்ப ஒரே கதை பல்வேறு பரிமாணங்களில் பல்வேறு பட்ஜெட்டில் வெளியாகும். 5ம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக சொல்லப்படும் கிங் ஆர்த்தரின் கதையை இந்த முறை இயக்கி இருப்பது ஸ்டைலிஷ் இயக்குனர் கை ரிட்சி. ராபர்ட் டௌனி ஜூனியர் நடிப்பில் வெளிவந்த ஷெர்லாக் ஹோம்ஸ் படங்களாலும், கிங் ஆர்த்தரின் டிரெய்லர் சிறப்பாக இருந்ததாலும், படத்துக்கு எக்கச்சக்க வரவேற்பு. அதை பூர்த்தி செய்ததா , இந்த வாரம் வெளியான கிங் ஆர்த்தர்: லெஜெண்டு ஆஃப் தி ஸ்வார்ட்.

பெரும்படை ஒன்றை வீழ்த்தி வெற்றி பெறுகிறார் உதர் பென்டிரேகன்.(அந்த ஆரம்ப மிரட்டல் காட்சி முழுக்க தூசிகள் சூழ்ந்து தான் காணப்பட்டது. திரையரங்கிலோ,  3டி கண்ணாடியிலோ பிரச்னை  என நினைத்து மனதை தேற்றிக்கொண்டு பார்த்தால், உலகம் முழுக்கவே, அந்தக் காட்சி அப்படித்தான் தெரிந்ததாம்). ஆனால், உதரின் சகோதரன் வோர்ட்டிஜென் செய்யும் மாயாஜால சூழ்ச்சியால், உதரும் அவரது மனைவியும் கொல்லப்பட, உதரின் குழந்தை ஆர்த்தர் மட்டும் தப்பிக்க, பிறகென்ன குழந்தை பெரியாளாகி எப்படி.... அடப்போங்க பாஸ் அதே தான் படத்தின் கதை, ஒன்லைன் எல்லாம். பாகுபலி ஹேங்க்ஓவர் காரணமாக ஆங்காங்கே 'ஹேசா... ருத்ரசா' BGM எல்லாம் ஞாபகத்திற்கு வந்தது.

பாலியல் தொழில் செய்யும் இடத்தில் வளரும் ஆர்த்தர், அங்கு இருக்கும் சிலருடன் நண்பர்கள் ஆகிறான். ஆர்த்தர் வளர்ந்து பெரியாளாக, தண்ணீருக்குள் தொலைந்து போன உதரின் வாள் வெளியே வருகிறது. கல்லில் சொருகி வைக்கப்பட்டு இருக்கும் அந்த வாளை யாராலும் வெளியே எடுக்க முடியவில்லை. முடியவே இல்லை. ஒரு சுபயோக சுபதினத்தில் ஆர்த்தர் அந்த வாளை எடுக்க, படம் பார்த்துக்கொண்டு இருந்தவர்களைத் தவிர அனைவரும் அதிர்ச்சி ஆகிறார்கள். தன் சகோதரனைக் கொல்ல கடல் மோகினிகளுக்கு தன் மனைவியை உயிர் தியாகம் செய்வான் வோர்ட்டிஜென். இறுதியாக ஆர்த்தரைக்கொல்ல வோர்ட்டிஜென் செய்யும் தியாகம் சற்றே எமோஷனல். 

கை ரிட்சி படங்களுக்கே உரித்தான ஃபாஸ்ட் நரேட்டிவ் காட்சி அமைப்புகள் இதிலும் இடம் பெற்று இருக்கின்றன. ஆனால், அந்த புத்திசாலித்தனங்கள் எல்லாம் நெட்டி முறிக்க வைக்கும் கதையால் சோபிக்கத் தவறுகிறது. அதையும் தாண்டி ஆர்த்தர் கதை சொல்லும் சில காட்சிகள் செம்ம. அதே போல், மேஜ் செய்யும் சில விலங்கின மாயாஜாலங்களும் ஈர்க்க வைக்கின்றன. கால்பந்து வீரர் டேவிட் பெக்காம், ஒரு காட்சியில் வருகிறார். (டேவிட் பெக்காமை அசிங்கப்படுத்திட்டீங்க என அவரது ரசிகர்கள் இணையத்தில் வாள் சண்டை புரிவது தனிக்கதை)

முழுக்க முழுக்க ஒரு புராண கால கதைக்கு, கை ரிட்சி தேர்வு செய்திருக்கும் காஸ்டியூம்கள் ஏற்கெனவே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. டி-ஷர்ட், ஷூ சகிதம் ஹீரோ கிங் ஆர்த்தர் (சார்லி ஹன்னம் ) செய்யும் சாகசங்கள் எல்லாம் வேற லெவல். டிஷர்ட் காமெடிகள் ஒருபக்கம் இருக்க, வோர்ட்டிஜெனின் காலம் வேறு, ஆர்த்தரின் காலம் வேறு என வரலாற்று ஆய்வாளர்கள் மற்றொரு பக்கம் சண்டையிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஷெர்லாக் ஹோம்ஸ் திரைப்படங்களில் டாக்டர் வாட்சனாக வரும் ஜூட் லா தான் படத்தின் வில்லன் வோர்ட்டிஜென்.

வரும்  எதிர்ப்புகளுக்கு இயக்குனர் கை ரிட்சி, "இப்ப இருக்குற ரசிகர்களுக்கு ஏத்த மாதிரி கதைக்கருவ அப்படியே வச்சுக்கிட்டு, சில விஷயங்கள் மாத்துறதுல ஒரு தப்பும் இல்லை" என்கிறார். ஆனால், எதிர்பார்த்தது அதிகம் என்பதால், கிங் ஆர்த்தர் ரசிகர்களை சோதிக்கவே செய்கிறது. கை ரிட்சியின் சில டெம்ப்ளேட் புத்திசாலித்தனங்களுக்காக வேண்டுமானால், ஒருமுறை படத்தைப் பார்க்கலாம்.  

பின் செல்ல