Published:Updated:

அஜித் அழுதது ஏன்? ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினி தொடர் பாகம் 4

அஜித் அழுதது ஏன்? ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினி தொடர் பாகம் 4
அஜித் அழுதது ஏன்? ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினி தொடர் பாகம் 4

அஜித் அழுதது ஏன்? ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினி தொடர் பாகம் 4

‘என் வீடு என் கணவர்’ என்ற படத்தில் ஒரு பாடல் காட்சியில் சில விநாடிகள் வந்து போனது மூலம் அமைந்ததுதான் அஜித்தின் முதல் சினிமா வாய்ப்பு. ஆனால் அடுத்து வந்த ‘பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்கு பட வாய்ப்புதான் மிகச்சரியான அறிமுகம். 1992 ஆகஸ்ட் 3ல் அந்தப் பட, ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து கணக்கிட்டால், இன்னும் சில மாதங்களில் 25 வது வருடத்தைத் தொடுகிறார் அஜித். அன்றைய தெலுங்கு பட அறிமுக அஜித், ‘வேறு மொழிப் படங்களில் நடிக்க மாட்டேன். தமிழில் மட்டும்தான் நடிப்பேன்’ என்று சொல்லும் இன்றைய ‘விவேகம்’ அஜித்தாக வளர்ந்தது எப்படி? இந்தக் கேள்விக்கான பதிலை அவரின் இந்த கால்நூற்றாண்டு கால திரைப்படங்களின் வழியாக நாம் உணர முடியும். அதற்கான ஒரு ரீவைண்ட் தான்.. இந்த ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினி தொடர்! 

பாக்யராஜின் நண்பருக்காக அஜித் கால்ஷீட் தந்த படம் எது தெரியுமா? இயக்குநர் சரணை அஜித்துக்கு அறிமுகப்படுத்தி வைத்தது யார்? அஜித்துக்கும் சீனியர் நடிகருமான கார்த்திக்கும் உள்ள நட்பு... அஜித் இயக்கிய பாடல் பற்றி உங்களுக்குத் தெரியுமா...

அஜித்தின் அடுத்த ஐந்து படங்களைப் பற்றி இன்று பார்ப்போம்.

16. ‘ரெட்டைஜடை வயசு’

‘இன்று போய் நாளை வா’ படத்தில் பாக்யராஜின் நண்பர்களாக வரும் மூன்று பேர்களில் ஒருவர் பழனிச்சாமி. இவர் பின்னாளில் பாக்யராஜின் மேனேஜராகவும் இருந்தார். இவரின் மகன் கார்த்திக், அஜித்துக்கு நெருங்கிய நண்பர். இந்த கார்த்திக்காக அவரின் அப்பா பழனிச்சாமி  தயாரிப்பில் நடித்த படம்தான் ‘ரெட்டைஜடை வயசு’. பிறகு ‘தீனா’, ‘அட்டகாசம்’ படங்களையும் இதே பேனருக்காக நடித்தார்.

17. ‘காதல் மன்னன்’

அஜித்தும் சரணும், ஹைதராபாத் பயணம் ஒன்றில் ஃப்ளைட்டின் பக்கத்துப் பக்கத்து இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தனர். அந்த ஒரு மணி நேரப் பயணத்தில் கதை சொல்லி ஓ.கே வாங்கிய படம்தான் `காதல் மன்னன்’. இது, அஜித்தின் கேரக்டரை மனதில் வைத்து பண்ணப்பட்ட படங்களில் முக்கியமான படம். ‘சவால் விடுவது. அதில் வெற்றிபெறுவது...’ என இவருக்கு ரசிகர்களைக் கொண்டுவந்து சேர்த்ததில், `காதல் மன்ன’னுக்கு முக்கிய பங்கு உண்டு. இந்தப் பட இயக்குநர் சரண், பாலசந்தரிடம் உதவி இயக்குநராக இருந்தவர். இவரை அஜித்துக்கு அறிமுகப்படுத்திவைத்தது நடிகர் விவேக். சரணும் விவேக்கும் குடும்ப நண்பர்கள்.

சமீபத்தில் விவேக்கின் மகன் இறந்த செய்தி அறிந்தபோது, காலில் ஆபரேஷன் முடிந்து கட்டுப்போட்டு ஓய்வில் இருந்தார் அஜித். அந்தத் துக்கத்தில் அவரால் பங்கெடுக்க முடியாத சூழல். ஆனால், போயே தீரவேண்டும் என்று கிளம்பிவிட்டார். விவேக்கைப் பார்த்ததும் தேம்பித் தேம்பி அழுதார். ‘தன் மகனுக்கு இப்படி ஒரு பிரச்னை இருக்கிறது. ட்ரீட்மென்ட் எடுத்துக்கொண்டிருக்கிறோம்’ என்று அஜித்திடம் விவேக் ஒரு சமயம் சொல்லியிருக்கிறார். அப்போது, ‘டோன்ட் வொர்ரிஜி. எங்க அப்பாவுக்கும் இந்தப் பிரச்னை இருந்துச்சு. பிறகு, சரியாகிடுச்சு’ என்று சொல்லியிருக்கிறார் அஜித். ‘ஒருவேளை அப்ப நான் அவரை பயமுறுத்தியிருந்தால், அவர் இதை இன்னும் சீரியஸா எடுத்திருந்திருப்பாரோ. அதனால ரொம்ப கில்ட்டியா ஃபீல் பண்றேன்’ என்று அங்கு இருந்தவர்களிடம் சொல்லி அழுதிருக்கிறார். இந்த விஷயத்தை நடிகை சரண்யா பொன்வண்ணன் குறிப்பிட்டிருக்கிறார்.

18. ‘அவள் வருவாளா’

தெலுங்கில் பெரிய ஹிட் ஆன ‘பெல்லி’ படத்தின் தமிழ் ரீமேக். வெங்கட அப்பாராவ், சுப்பாராவ் என்கிற இரண்டு பெரிய தெலுங்குப் படத் தயாரிப்பாளர்கள் ‘பெல்லி’யின் ரைட்ஸ் வாங்கி வந்து, ‘நீங்க பண்ணணும்’ என்று கேட்டபோது, உடனடியாக ஒப்புக்கொண்டு நடித்த படம். அந்தக் காலகட்டத்தில் அஜித்தின் படங்களில் அதிக வசூலான படம் இது. ஏற்கெனவே திருமணமாகி, சூழ்நிலை காரணமாகத் தனித்து வாழும் பெண்ணைத் திருமணம் செய்ய முயற்சிக்கும் சாஃப்ட்டான இளைஞன் கேரக்டர், இவரை பெண்களிடமும் கொண்டு சேர்த்தது.

19. ‘உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்’

நடிகர் கார்த்திக் உடன் இவருக்கு நல்ல நட்பு உண்டு. தான் ஒரு சீனியர் நடிகராக இருந்தாலும் இறங்கி வந்து இளைஞர்களுடன் செம ஜாலியாக பேசும், அவர்களை ஊக்குவிக்கும் கார்த்திக்கை பெர்சனலாக இவருக்கு ரொம்பப் பிடிக்கும். அதனால் இருவரும் சேர்ந்து நடித்த படம். ‘அமெரிக்க மாப்பிள்ளை என்றாலே டம்மியாக வந்து போவார்கள்’ என்ற இமேஜை, அஜித்தின் இந்தப் பட கேரக்டர் மாற்றியது.

20. ‘உயிரோடு உயிராக’

அம்மா சுஷ்மா இயக்குநர், மகள் ரிச்சா ஹீரோயின். இந்தப் படத்தில் ‘பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது...’ என்ற பாடலை இயக்கியது அஜித். மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அந்தப் பாடலுக்கு ஹீரோயின் எப்படி டான்ஸ் ஆட வேண்டும் என்று மூவ்மென்ட்ஸ் சொல்லிக்கொடுப்பது தொடங்கி, ஷாட் ப்ளான் பண்ணி இயக்குவது வரை ஒன்பது மணி நேரத்துக்குள் அந்தப் பாடலை ஷூட் பண்ணி முடித்தார் அஜித். அந்தப் பாடலை ஷூட் பண்ணின கேமராமேன் அரவிந்த் கமலநாதன், சீனியர் நடிகை வைஷ்ணவியின் கணவர். இவரும் அஜித்தும் இன்று வரை நெருங்கிய நண்பர்கள்.

‘உன்னைத்தேடி’ பட டப்பிங்கில் அவர் ரத்தம் வழிய வழிய டப்பிங் பேசியது ஏன்? ‘வாலி’ கதை எடுக்கப்படாமல் காத்திருந்தது எத்தனை வருடங்கள் தெரியுமா? ஜோதிகா ‘சோனா’வானது எப்படி? நான்கைந்து நாள் தாடி தோற்றத்தை அறிமுகப்படுத்திய நடிகர் யார்? எந்த ஹீரோயினையும் நேரில் சென்று பார்க்காத அஜித் ‘அமர்க்கள’த்துக்காக ஷாலினியை மட்டும் நேரில் பார்த்தது ஏன்? நாளை பார்ப்போம்.

- அஜித் அறிவோம்..!

அடுத்த கட்டுரைக்கு