Published:Updated:

'அம்மா சொன்ன ஒரு விஷயத்தை மட்டும் ஃபாலோ பண்ண முடியல' - லாரன்ஸ் நெகிழ்ச்சி! #MothersDay

'அம்மா சொன்ன ஒரு விஷயத்தை மட்டும் ஃபாலோ பண்ண முடியல' - லாரன்ஸ் நெகிழ்ச்சி! #MothersDay
'அம்மா சொன்ன ஒரு விஷயத்தை மட்டும் ஃபாலோ பண்ண முடியல' - லாரன்ஸ் நெகிழ்ச்சி! #MothersDay

'அம்மா சொன்ன ஒரு விஷயத்தை மட்டும் ஃபாலோ பண்ண முடியல' - லாரன்ஸ் நெகிழ்ச்சி! #MothersDay

''ஆயிரம் தெய்வங்கள் உலகில் உண்டென்றாலும் அன்னையவளுக்கு  நிகராகிடுமா...' என்கிற வாக்கியத்துக்கு வலுசேர்க்கும் விதமாக, தன் அம்மா தன்னுடன் இருக்கும்போதே சென்னை அம்பத்தூரில், அன்னையர் தினமான இன்று அவருடைய சிலையைத் திறந்து வைத்திருக்கிறார் நடிகர் ராகவா லாரன்ஸ். அவர் தன் அம்மா பற்றியும், அவர் மீது வைத்திருக்கும் அளவிட முடியாத  அன்பைப் பற்றியும் நம்மிடம்  நா தழுதழுக்கப் பேசினார்... 

''என்னோட அப்பாவுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்குப் பல வருஷங்களாக குழந்தைகள் இல்ல. அதனால, தான் கட்டிக்கிட்ட பெண்ணோட தங்கையையே திருமணம் செய்துகிட்டார். அவங்கதான் என் அம்மா.  நானும்  என் தம்பியும் பிறந்தோம். பல வருஷங்கள் குழந்தை இல்லாம இருந்த என் பெரியம்மாவுக்கு நான் பிறந்த பிறகு, மூன்று பெண் குழந்தைகள் பிறந்தாங்க. அப்பா இறந்தப்போ சொத்தைப் பிரிக்கவேண்டிய சூழல் வந்தது. அப்போ, என் அம்மாவுக்கு என எந்தச் சொத்தும் பிரித்துக் கொடுக்கப்படல. என்னையும், என் தம்பியையும்  இரண்டு கையில பிடிச்சுக்கிட்டு வீட்டை விட்டு வெளியேறினாங்க. புகுந்த வீட்ல இருந்து எந்த உதவியும் இல்லாம அவங்க வெளிய வந்தப்போ, மனசுல என்ன வைராக்கியம் இருந்ததுனு எனக்குத் தெரியாது. ஆனா, எனக்கு அந்தச் சின்ன வயசுலயே ஒரு வைராக்கியம் இருந்தது. `நல்ல வேலைக்குப் போகணும், அம்மாவை  எப்பவும் கண்கலங்காம பார்த்துக்கணும்; ஊர் மெச்ச நாங்க வாழணும்'னு நினைச்சேன். அதுக்காக படிப்பு முடிச்ச கையோட எல்.ஐ.சி ஏஜென்ட்டா சேர முடிவெடுத்தேன். அப்போ அம்மா, 'உனக்கு என்ன பிடிக்குதோ அதைப் பண்ணுப்பா. எந்த முடிவு எடுக்கிறதா இருந்தாலும் நல்லா யோசிச்சுட்டு முடிவெடு'னு சொன்னாங்க. அதன்படி எல்.ஐ.சி ஏஜென்ட் வேலைக்குப் போகலை. 

என் அம்மாவை நான் தெய்வமா இப்பவும், எப்பவும் நேசிக்கக் காரணம்... என்னோட சின்ன வயசுல எனக்கு வந்த பிரெய்ன் ட்யூமர். அன்னிக்கு மட்டும் என் அம்மா என்னை சரியா பார்த்துக்காம விட்டிருந்தா, இன்னிக்கு என்னைப் புதைச்ச இடத்துல புல் பூண்டு முளைச்சிருக்கும். லாரன்ஸ் என்கிற இந்த ஒரு குழந்தையைக் காப்பாத்தியதால இன்னிக்கு 60 குழந்தைகளை என்னால வளர்க்க முடிஞ்சிருக்கு. நான் இப்பவும், முதியோர் இல்லம், அநாதை இல்லம் எனப் போகும்போது அம்மாக்கள் பலரும், 'என் பையன் வந்துட்டான்'னு சொல்லி கட்டிப்பிடிச்சு அழுவாங்க. எனக்கு அப்போ, 'எப்படித்தான் இவங்களை முதியோர் இல்லத்துல விட மனசு வந்ததோ'னு  அவ்வளவு கஷ்டமா இருக்கும். 'அம்மா இருக்கும்போது எதுக்கு அவங்களுக்கு சிலை வைக்கிறீங்க?'னு நிறைய பேர் கேட்டிருக்காங்க. அவங்க இருக்கும்போது இதைப் பார்த்து சந்தோஷப்படுவாங்க. அதனாலதான் அவங்ககிட்டயும் ஒரு வார்த்தை சொல்லிட்டு, இந்த ஏற்பாடுகளைச் செய்தேன். சிலை வடிவமைக்கும்போது ஒவ்வொரு விஷயத்தையும் கூர்ந்து கவனித்துச் செய்தேன். மே 14-ம் தேதிக்குப் பிறகு என்னோட ஒரு கோரிக்கையை எல்லோர் முன்னிலையிலும் வைக்கலாம்னு இருக்கேன். அதாவது, ஹெல்மெட் போடாம வண்டி ஓட்டினாலோ,  பொது இடத்தில் சிகரெட் பிடிச்சாலோ ஃபைன் போடுறாங்க... தன்னைப் பெத்து வளர்த்த அம்மாவை  முதியோர் இல்லத்தில்  கொண்டு விடுறான். இது எவ்வளவு பெரிய தவறு. இதுக்கு என்ன  தண்டனை?'' என்பவரிடம், ``நீங்கள் நடித்திருக்கும் படங்களில் அம்மா  சென்டிமென்ட் வைத்திருக்கீங்களா?'' என்று கேட்டோம், 

'' `பாண்டி' படத்தில் அப்படி ஒரு கான்செப்ட் இருந்தது. அந்தப் படத்தின் கதையை வேறு ஒருவர் சொன்னதால ஓ.கே சொல்லி நடிச்சேன். உண்மையான அன்பை நடிப்பால வெளிப்படுத்த முடியாது என்னால. அதனாலயே என் அம்மா மீது நான் வைத்திருக்கும் பாசத்தை எந்தப் படத்திலும் வெளிக்கொண்டு வந்ததில்லை'' என்றவர், வேலை முடித்து வீட்டுக்குள் வரும்போதே `கண்மணி' என கூப்பிட்டுட்டேதான் வருவாராம். அதுபற்றி அவரே சொல்கிறார்... 

''என் அம்மா பேரு கண்மணி. பாசமா இருக்கும்போது, சண்டைபோடும்போதுனு எப்பவுமே அவங்களை பேர் சொல்லித்தான் கூப்பிடுவேன். ஆனா, பொதுவெளியில வந்துட்டா, `அம்மா'னு கூப்பிடுவேன். கண்மணினு கூப்பிட்டுப் பழகிட்டு, திடீர்னு அம்மானு கூப்பிடும்போது வலுக்கட்டாயமா கூப்பிடுற மாதிரி இருக்கும். அவங்களுக்கும் அப்படித்தான். அம்மா, என்கிட்ட அடிக்கடி கோபப்படாதேனு சொல்லிட்டே இருக்காங்க. நடிப்பு, தயாரிப்பு, ட்ரஸ்ட் எனத் தொடர்ந்து அதிகப்படியான வேலைகள் இருக்கும். ஒருத்தனே எல்லா வேலையையும் பார்க்கவேண்டி இருக்கிறதால, கோபம் வந்துட்டு இருக்கு. கூடிய சீக்கிரமே அதைக் கட்டுப்படுத்தணும்'னு முயற்சி பண்ணிட்டு இருக்கேன்'' என்றவர், தன் அம்மா வீட்டில் எப்படி இருப்பார் என்பதையும் பெருமையுடன் பகிர்கிறார்... 

''வீட்ல சின்னத் தூசுகூட இருக்கவிட மாட்டாங்க. அவ்வளவு சுத்தம்! கூடவே தீவிர ஆன்மிகவாதி. அவங்ககிட்ட இருந்துதான் எனக்கும் ஆன்மிகம் மீதான நாட்டமும் வந்ததுனு நினைக்கிறேன். பல பிரச்னைகள் வந்தப்போ அவங்க என் கூடவே இருந்திருக்காங்க. ஒவ்வொரு இடத்திலும் எனக்குத் துணையா நின்னுருக்காங்க. இன்றைக்கு இருக்கிற இளையதலைமுறைக்கு நான் சொல்லிக்கிற ஒரே விஷயம்... பெத்தவங்களவிட பெரிய செல்வம் எதுவுமில்ல. அவங்கள கண்கலங்காம வெச்சுக்கோங்க. எவ்வளவு பிரச்னை வந்தாலும், உட்கார்ந்து பேசுங்க. அது கண்டிப்பாக தீர்க்கக்கூடியதாகத்தான் இருக்கும்'' என்று அக்கறையுடன் சொல்லி முடித்தார் ராகவா லாரன்ஸ்.

அடுத்த கட்டுரைக்கு