Published:Updated:

'ரஜினி படம் ஹாஜி மஸ்தான் கதையல்ல' : மிரட்டல் கடிதத்துக்கு தயாரிப்பாளர் தரப்பு விளக்கம்!

குருபிரசாத்
'ரஜினி படம் ஹாஜி மஸ்தான் கதையல்ல' : மிரட்டல் கடிதத்துக்கு தயாரிப்பாளர் தரப்பு விளக்கம்!
'ரஜினி படம் ஹாஜி மஸ்தான் கதையல்ல' : மிரட்டல் கடிதத்துக்கு தயாரிப்பாளர் தரப்பு விளக்கம்!

கபாலிக்குப் பிறகு ரஜினி நடிப்பில் ரஞ்சித் படம் இயக்கும் செய்தியும், அதை தனுஷ் தயாரிக்கப் போகும் தகவலும் வெளியான நாள் முதல் படத்தின் கதை பற்றிய செய்திகளும் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தன. இந்நிலையில், இந்தப் படத்தில், ஹாஜி முஸ்தஃபா என்பவரின் கதையில் தான் ரஜினி நடிப்பதாகவும் சில தகவல்கள் வெளியானது. இதனால் சமீபத்தில் ஹாஜி அலிமஸ்தான் என்பவரின் வளர்ப்பு மகன் ரஜினிக்கு ஒரு மிரட்டல் கடிதத்தை அனுப்பியிருந்தார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து, படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தரப்பு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில், "எங்கள் நிறுவனத்தின் சார்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க, பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் படத்தைப் பற்றியும் அதன் கதையைப் பற்றியும் பத்திரிகைகளில் பலவிதமான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அவ்வாறு வந்த செய்திகளில் ஒன்றாக, 'ஹாஜி மஸ்தான் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றின் பின்னணி கொண்ட கதையாக இப்படம் உருவாகி வருகிறது' என்று ஒரு செய்தியும் பத்திரிகைகளில் வெளியானது.

அந்த செய்தியின் அடிப்படையைக் கொண்டு ஹாஜி மஸ்தானின் வளர்ப்பு மகன் சுந்தர் சேகர் மிஸ்ரா,  இது சம்பந்தமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதம் தொடர்பாக இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் நாங்கள் தயாரித்து வரும் இப்படம் மும்பை பின்னணியைக் கொண்ட கற்பனை கதை மட்டுமே. இப்படத்தின் கதை யாருடைய வாழ்க்கை வரலாற்றையோ அல்லது அவர்களுடைய நிஜ சம்பவங்களையோ கொண்டு உருவாக்கப்பட்ட கதை கிடையாது.

குறிப்பாக இப்படத்தின் கதை எந்த வகையிலும் ஹாஜி மஸ்தான் மற்றும் அவர்களுடைய குடும்ப பின்னணியை வைத்து உருவாக்கப்பட்ட கதையல்ல. இது சம்பந்தமாக படத்தின் இயக்குநர் பா. இரஞ்சித், தன்னை தொடர்பு கொண்ட பத்திரிகையாளர்களிடம் இது "ஹாஜி மஸ்தான் அவர்களுடைய கதையல்ல" என்று விளக்கம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது "ஹாஜி மஸ்தான் அவர்களுடைய கதை" என்ற செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எங்களின் இந்த விளக்க அறிக்கையை அளிக்கிறோம்" என்று கூறியுள்ளார்.