Published:Updated:

ஷர்வானந்த் ஆக்‌ஷன் ஹீரோவாக எடுபடுகிறாரா? - ராதா படம் எப்படி?

ஷர்வானந்த் ஆக்‌ஷன் ஹீரோவாக எடுபடுகிறாரா? - ராதா படம் எப்படி?
ஷர்வானந்த் ஆக்‌ஷன் ஹீரோவாக எடுபடுகிறாரா? - ராதா படம் எப்படி?

காதல், காமெடி, ஃபைட், வில்லன், க்ளைமாக்ஸ் அதே டெய்லர் அதே வாடகை என மீண்டும் ஒரு தெலுங்கு சினிமாவாக வந்திருக்கிறது ராதா. 

ராதா கிருஷ்ணனுக்கு (ஷர்வானந்த்) சிறு வயதில் இருந்து பகவத் கீதை, கிருஷ்ணன், போலீஸ் மூன்றும் மிகப்பிடிக்கும். வளர்ந்த பின்பு ஒரு போலீஸ் ஆக வேண்டும் என்கிற கனவுடன் இருக்கிறார். ஏரியாவில் இருக்கும் திருடர்களைப் பிடித்துக் கொடுப்பதைப் பார்த்து டி.எஸ்.பி இவரைப் எஸ்.ஐ ஆக சிபாரிசு செய்கிறார். போலீஸ் வேலையும் கிடைக்கிறது. முதலில் குற்றமே நடக்காத ஒரு ஊரில் போஸ்டிங் கிடைக்க, 'எனக்கு அடிதடி, வெட்டுகுத்து இருக்கும் ஊருக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணிடுங்க' என உயர் அதிகாரியிடம் கேட்கிறார். அதுவரை ஜாலியாக ராதாவைக் (லாவண்யா) காதலிப்பதாக சொல்லி பின்னால் சுற்றிக் கொண்டிருக்கிறார். ட்ரான்ஸ்ஃபர் கிடைத்த பின், அரசியல்வாதி சுஜாதாவுடன் (ரவி கிஷன்) மோத வேண்டியதாகிறது. எதற்காக எனச் சொல்லி, காவல் துறைக்கான ட்ரிப்யூட்டாக படத்தை முடிக்கிறார்கள். 

முழுப் படத்தையும் தாங்கும் அளவுக்கு முன்னேறியிருக்கிறார் ஷர்வானந்த். பாழடைந்து கிடக்கும் போலீஸ் ஸ்டேஷனைப் பார்த்து காமிக் ஃபீலிங்ஸ் கொடுப்பது, லாவண்யாவின் செயினை வைத்து கலாட்டா செய்வது, ரவி கிஷணை எதிர்த்து சவால் விடுவது என ஆக்‌ஷன் ஹீரோவாக முதல் அடி எடுத்து வைத்திருக்கிறார். அதை நிறைவாக செய்தாலும் சில இடங்களில் அல்லு அர்ஜுனை நினைவுபடுத்துகிறார். படத்துக்கு ஹீரோயின் வேண்டும், ட்ரான்ஸ்ஃபர் கிடைக்கும் வரை ஹீரோயினுடன் காட்சிகளை வைத்துவிடுவோம் என லாவண்யாவின் ரோல் அமைக்கப்பட்டிருக்கிறது. மற்றபடி பாடல்களுக்கு மட்டும் வந்து செல்லக் கூடிய ரோல்தான். இரண்டு ஹீரோயின் ஆடும் பாடலுக்காக அக்‌ஷா பர்தசானி கதாபாத்திரமும் சேர்க்கப்பட்டிருக்கிறது. வில்லன் ரவி கிஷனுக்கும் இது புதிய ரோல் கிடையாது, 'ரேஸ் குர்ரம்' படத்தில் நடித்த அதே அரசியல்வாதி வில்லன் ரோல். அப்படியே "ஒன்ஸ் மோர் ரிப்பீட்டு" என்கிற டைப்பில் அசால்டாக நடித்து சென்றிருக்கிறார். படத்தில் நம்மைக் கவர்வது சப்தகிரி வரும் சில காமெடி சீன்கள் மட்டுமே. போலீஸ் டிரெய்னிங்கில் செய்யும் காமெடிகளுக்கும், ரவி கிஷனுடனான 'நானாக்கு ப்ரேமதோ' காட்சிகளுக்கும் தியேட்டரே சிரிப்பில் அதிர்கிறது. 

எளிதாக யூகிக்க முடிகிற காட்சிகள், போரடிக்கும் திரைக்கதை, பார்த்து பார்த்து சலித்துப் போன ஹீரோயிசம் என மிக வழக்கமான படம் என்பது பெரிய மைனஸ். போலீஸுக்கு ரெஸ்பெக்ட் வேணும், போலீஸ் மேல கைவெச்சா என்னா ஆகும்னு தெரியணும் என பக்கம் பக்கமாக வசனம் பேசிவிட்டு, ஐட்டம் சாங், ஹீரோயினுடன் ரொமான்ஸ் எல்லாம் முடித்து க்ளைமாக்ஸில் தான் படம் என்ன பேசவேண்டுமோ அதற்குள் செல்கிறது. ஷர்வானந்திற்கு இருக்கும் பிரச்னை புதிது, ஆனால் அதை படத்தின் மெய்ன் ட்விஸ்டாக வைத்திருப்பது கொஞ்சம் வீக்கான விஷயம். பன்ச் டயலாக் வைக்காமலிருந்தது கொஞ்சம் ஆறுதல். 'பாகுபலி' மூலம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து கொண்டிருக்கும் தெலுங்கு சினிமாவில் இது போன்ற மசாலாக்கள் மட்டும் தொடர்ந்து கொண்டே இருப்பது வருத்தம்.

பகவத் கீதை பிடித்த போலீஸ், அதன்படி வில்லன்களை தண்டிப்பது என ஒரு கான்செப்ட் பிடித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் சந்திர மோகன். ஆனால், அதில் வழக்கமான காட்சிகள், டபுள் ஹீரோயின்களுடன் டான்ஸ் என வழக்கமான தெலுங்குப் படமாக மாற்றுகிறார். ஷர்வானந்திற்கான கமர்ஷியல் என்ட்ரிக்கு மட்டுமே உபயோகப்படும் சினிமா தான் இந்த 'ராதா'.