Published:Updated:

‘ரஜினி ரசிகர்களைத் திரட்டியது இதற்காகத்தான்’ - அரசியல் விமர்சகர் ஞாநி

விகடன் விமர்சனக்குழு
‘ரஜினி ரசிகர்களைத் திரட்டியது இதற்காகத்தான்’ - அரசியல் விமர்சகர் ஞாநி
‘ரஜினி ரசிகர்களைத் திரட்டியது இதற்காகத்தான்’ - அரசியல் விமர்சகர் ஞாநி

டிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா... வர மாட்டாரா என்ற விவாதம் தமிழக அரசியலில் பல ஆண்டுகளாக ஒலித்துக்கொண்டிருக்கிறது. அதற்கு ரஜினியும் ஒரு காரணம். சில நேரங்களில் அவருடைய பேச்சு அந்த வகையில் அமைந்திருக்கும். மறைமுகமாக அவருடைய பேச்சில் அரசியல் சாயம் இருந்தாலும், அதற்கான இறுதி வர்ணத்தைத் தீட்டாமல் காலம் கடத்திக் கொண்டிருக்கிறார் ரஜினி. அப்படியும் ஒருமுறை அவருக்கு இருக்கும் அரசியல் ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தார். அதுதான் 1996ஆம் ஆண்டில் தி.மு.க-வும் தமிழ் மாநில காங்கிரஸும் கூட்டணி அமைத்து சந்தித்த சட்டப்பேரவைத் தேர்தல்.

ரஜினி வாய்ஸ் யாருக்கு?

இந்தத் தேர்தலில் அந்தக் கூட்டணிக்கு தனது ஆதரவை வெளிப்படையாக அறிவித்தார். அப்போது ரஜினி, 'வாய்ஸ்' கொடுத்ததால்தான் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி முடிவுக்கு வந்ததாக அவருடைய அரசியல் ஆதரவு குறித்துப் பரபரப்பாகப் பேசப்பட்டது. அப்போது இருந்தே ரஜினி அரசியலுக்கு வருவார் என்று பலரும் கூறிவந்த நிலையில், இன்றுவரை ரஜினி அதற்கான உறுதியான வாய்ஸ் கொடுக்காமல் உள்ளார். இந்த நிலையில் அண்மைக்காலமாக ரஜினியின் ரசிகர்கள், 'ரஜினி அரசியலுக்கு வரவேண்டும்' எனத் தீவிரமாகத் தங்களது குரலை உயர்த்தி வருகின்றனர். பல இடங்களிலும் 'ரஜினி அரசியலுக்கு வருவார்' என்ற வாசகங்கள் எழுதப்பட்ட நம்பிக்கை நிறைந்த சுவரொட்டிகளையும் ஒட்டியுள்ளனர். இதற்கிடையில் சில அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் ரஜினியைச் சந்தித்துப் பேசிவருகின்றனர். அரசியல் தலைவர்களின் இந்தச் சந்திப்பு தொடர்பாக அவ்வப்போது பரபரப்பாகப் பேசப்பட்டாலும், ரஜினி தரப்பில் இருந்துவரும் வார்த்தைகள் அரசியல் சந்திப்பு இல்லை என்றே சொல்லிக்கொண்டிருக்கிறது. அவர் தரப்பில் அப்படிச் சொன்னாலும் அவரைத் தேடிப்போய்ச் சந்திக்கும் அரசியல் தலைவர்கள் எப்படியாவது ரஜினியின் வாய்ஸ் தமது கட்சியின் பக்கம் ஒலிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே செல்வதாகச் சொல்லப்படுகிறது. இப்படியாக ரஜினியின் வாய்ஸ் யாருக்கு என்று தமிழக அரசியல் களத்தின் ஏக்கம் ஒருபக்கம் கனன்றுகொண்டிருக்கிறது.

அரசியலுக்கு வருவார்...

இந்த நிலையில் சுமார் 8 வருடங்களுக்குப் பிறகு ரஜினி தனது ரசிகர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். சென்னை ராகவேந்திரா மண்டபத்தில்

நிகழ்ந்த இந்தச் சந்திப்பில், ரஜினி நீண்ட உரை ஆற்றியுள்ளார். அதில், "சூழ்நிலையால் அரசியலுக்கு வந்தால் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களைச் சேர்க்க மாட்டேன்'' என்று பேசியுள்ளார். இந்தப் பேச்சின் மூலம் அவர் அரசியலுக்கு வருவதற்கான அறிகுறிகள் தென்படுவதாகப் பலரும் கருத்துக் கூறுகின்றனர். இதுதொடர்பாக ரஜினி ரசிகர் மன்றச் செயலாளர் ரஞ்சித் பாபாவிடம் பேசியபோது, "தமிழகத்தில் அரசியலில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. தலைமை இல்லாமல் தமிழக மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, அவர் அரசியலுக்கு வருவதற்குச் சரியான தருணமிது. அதைப் பிரதிபலிப்பதாக அவருடைய ரசிகர்கள் மத்தியிலான இன்றைய பேச்சும் அமைந்துள்ளது.

'' 'முதல்வன்' பட பாணி ஐடியாலாஜி!'' 

எங்களுடைய தலைவரை அரசியல் களத்தில் பார்க்க மனம் ஆவல் கொள்கிறது. விரைவில், அவரிடமிருந்து நல்ல செய்தி வரும் என்று நம்புகிறோம்'' என்றவரிடம், ''ரஜினியை பி.ஜே.பி அழைப்பதாகக் கூறப்படுகிறதே... அதில், ரஜினியும் ஆர்வம் காட்டுவதாகச் சொல்கிறார்களே'' என்றோம். அதற்கு அவர், ''எங்களுடைய விருப்பம் அவர் தனியாக அரசியல் களம் காண வேண்டும் என்பதே. அதையும் மீறி பி.ஜே.பி., கம்யூனிஸ்ட், வேறு எந்தக் கூட்டணியாக இருந்தாலும் சரி, அவருடைய கான்செஃப்ட் வித்தியாசமானது. அதனால் அரசியல் ரீதியாக ஒப்பாகாது. சுருக்கமாகச் சொன்னால் 'முதல்வன்' பட பாணியிலானது எங்கள் தலைவரின் ஐடியாலாஜி" என்றார். 

அரசியலுக்கு வரமாட்டார்!

''ரஜினி, அரசியலுக்கு வரக்கூடிய சூழல் உருவாகிவிட்டது'' என்கிறார் அவருடைய ரசிகர் ஒருவர். அதே நேரம், "ரஜினி அரசியலுக்கு வருவது சந்தேகம்" என்கிறார் அரசியல் விமர்சகர் ஞாநி. மேலும் அவர், ''ஒவ்வொரு படத்தின் ரிலீஸின்போதும் ரஜினி இப்படித்தான் செய்வார். 'எந்திர'னின் அடுத்த பார்ட்டான 2.0 படத்தைப் பார்ப்பதற்காகவே ரசிகர்களை இப்படி ஒன்றுதிரட்டியுள்ளார்.எனவே, அவர் அரசியலுக்கு வருதற்காக ரசிகர்களைத் திரட்டவில்லை. அரசியலுக்கு வருவது சந்தேகமே. ஆனால், பி.ஜே.பி-யினர் அவரை எப்படியாவது தங்கள் பக்கம் கொண்டுவர துடித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர் அரசியலுக்கு வரமாட்டார்'' என்றவரிடம், ''தமிழக அரசியலில் உள்ள வெற்றிடத்தைப் பயன்படுத்தப் பார்க்கிறாரா ரஜினி'' என்று கேட்டதற்கு, "இதை ரஜினி பயன்படுத்த மாட்டார். அவர் அரசியலுக்கு வரும் வாய்ப்பு குறைவுதான்" என்றார்.

 ரஜினி அரசியலுக்கு வருவாரா... வரமாட்டாரா? அவருடைய வாய்ஸ் மீண்டும் ஒலிக்கத் தொடங்கிவிட்டது...