Published:Updated:

ரத்தம் வழிய வழிய டப்பிங் பேசிய அஜித்! ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினி தொடர் பாகம் 5

ரத்தம் வழிய வழிய டப்பிங் பேசிய அஜித்! ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினி தொடர் பாகம் 5
ரத்தம் வழிய வழிய டப்பிங் பேசிய அஜித்! ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினி தொடர் பாகம் 5

ரத்தம் வழிய வழிய டப்பிங் பேசிய அஜித்! ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினி தொடர் பாகம் 5

‘என் வீடு என் கணவர்’ என்ற படத்தில் ஒரு பாடல் காட்சியில் சில விநாடிகள் வந்து போனது மூலம் அமைந்ததுதான் அஜித்தின் முதல் சினிமா வாய்ப்பு. ஆனால் அடுத்து வந்த ‘பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்கு பட வாய்ப்புதான் மிகச்சரியான அறிமுகம். 1992  ஆகஸ்ட் 3ல் அந்தப் பட, ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து கணக்கிட்டால், இன்னும் சில மாதங்களில் 25 வது வருடத்தைத் தொடுகிறார் அஜித். அன்றைய தெலுங்கு பட அறிமுக அஜித், ‘வேறு மொழிப் படங்களில் நடிக்க மாட்டேன். தமிழில் மட்டும்தான் நடிப்பேன்’ என்று சொல்லும் இன்றைய ‘விவேகம்’ அஜித்தாக வளர்ந்தது எப்படி? இந்தக் கேள்விக்கான பதிலை அவரின் இந்த கால்நூற்றாண்டு கால திரைப்படங்களின் வழியாக நாம் உணர முடியும். அதற்கான ஒரு ரீவைண்ட் தான்.. இந்த ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினி தொடர்! 

‘உன்னைத்தேடி’ பட டப்பிங்கில் அவர் ரத்தம் வழிய வழிய டப்பிங் பேசியது ஏன்? ‘வாலி’ கதை எடுக்கப்படாமல் காத்திருந்தது எத்தனை வருடங்கள் தெரியுமா? ஜோதிகா ‘சோனா’வானது எப்படி? நான்கைந்து நாள் தாடி தோற்றத்தை அறிமுகப்படுத்திய நடிகர் யார்? எந்த ஹீரோயினையும் நேரில் சென்று பார்க்காத அஜித் ‘அமர்க்கள’த்துக்காக ஷாலினியை மட்டும நேரில் பார்த்தது ஏன்? அஜித்தின் அடுத்த ஐந்து படங்களைப் பற்றி இன்று பார்ப்போம்...

21. ‘தொடரும்’

இயக்குநர், நடிகர் ரமேஷ் கண்ணா ஏகப்பட்ட படங்களுக்கு பூஜை போட்டு ஒன்றுகூட படப்பிடிப்புக்குப் போகாத நிலையில், அவருக்காக நடித்த படம். ஏகப்பட்ட இடைவெளிகளுடன் ஷூட்டிங் நடந்து வெளியானது.

22. ‘உன்னைத்தேடி’

‘உல்லாசம்’ சமயத்தில் தொடங்கிய முதுகுவலிக்கு, ‘உன்னைத்தேடி’ முடிந்த பிறகு ஆபரேஷன் செய்துகொண்டார். ‘உன்னைத்தேடி’ படத்துக்கு உடனடியாக டப்பிங் பேசியாகவேண்டிய சூழல். தன்னால் அந்தப் படம் தாமதமாகக் கூடாது என்பதற்காக, ஆபரேஷன் புண் ஆறாத நிலையில்கூட மருத்துவமனையிலிருந்து நேராக ஸ்டூடியோவுக்கு வந்து புண்ணிலிருந்து ரத்தம் வழிய வழிய டப்பிங் பேசினார். இவரின் மனதுக்கு நெருக்கமான படங்களின் வரிசையில் ‘உன்னைத்தேடி’யும் ஒன்று.

23. ‘வாலி’

எஸ்.ஜே.சூர்யாவின் ஒரிஜினல் பெயர் ஜஸ்டின்; லயோலா கல்லூரி மாணவர். பிறகு, இயக்குநர் வசந்திடம் உதவி இயக்குநர். ‘ஆசை’யில் நடிக்கும்போதே ‘வாலி’ படக் கதையை அஜித்திடம் சொல்லிவிட்டார். இந்தக் கதை, ஐடியாவாகவே இயக்குநரிடம் மூன்றரை வருடங்கள், ஹீரோவிடம் இரண்டு வருடங்கள் இருந்தது. காரணம், இதன் சிக்கலான கதை அமைப்பு. பிறகுதான் இந்தப் படம் வெளியானது. ‘வாலி’, 1999 ஏப்ரல் 30-ம் தேதி ‘படையப்பா’ உடன் ரிலீஸ் ஆனது. இதில் ‘சோனா என்ற பெண்ணைக் காதலிப்பதாக சிம்ரனிடம் அஜித் சொல்லும்போது, திரையில் சோனா கேரக்டரைக் காட்ட வேண்டுமா... வேண்டாமா?’ என்று பயங்கர விவாதம் நடந்தது. அப்படிக் காட்டினால், சோனாவாக நடிப்பவர் ஏற்கெனவே அறிமுகமான நடிகையாக இல்லாமல் புது நடிகையாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஜோதிகாவை நடிக்கவைத்தார்கள்.

24. ‘ஆனந்த பூங்காற்றே’

இதற்கு முன்பு வரை தெளிவாக ஷேவ்செய்து பளிச் முகத்துடன் நடித்தவர், இந்தப் படத்தில் நான்கைந்து நாள் தாடி இருப்பதுபோன்ற தோற்றத்துடன் நடித்தார். அந்த ஃபேஷனை அறிமுகப்படுத்தியதே அஜித்தான். பிறகு, அந்த லுக்கைப் பரவலாக எல்லா நடிகர்களும் முயற்சித்தனர். அதை ஆரம்பித்துவைத்த படம் ‘ஆனந்த பூங்காற்றே’.

25. ‘அமர்க்களம்’

குழந்தை நட்சத்திரமாக நடித்துக்கொண்டிருந்த ஷாலினி, பிறகு மலையாளத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அப்போது அவரின் போட்டோ ஒன்று வார இதழில் அட்டைப்படமாக வந்திருந்தது. அதைப் பார்த்ததும் ` ‘அமர்க்களம்’ பட ஹீரோயின் கேரக்டருக்கு ஷாலினி சரியாக இருப்பார்’ என நினைத்தார் இயக்குநர் சரண். ஆனால், ஷாலினி தரப்பிலிருந்து நெகட்டிவ் சிக்னல். அதற்கு முன்பு வரை எந்த ஹீரோயினையும் நேரில் சென்று பார்த்து ‘நீங்க நடிக்கணும்’ என்று கன்வின்ஸ் பண்ணினது இல்லை; ஆனால், தன் இயக்குநருக்காக ஷாலினியை கன்வின்ஸ் பண்ண நேரில் சென்றார் அஜித். இவர் நேரில் சென்று பேசியதும், படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் ஷாலினி. முதல் நாள் படப்பிடிப்பு. ஷாலினியை கத்தி காட்டி அஜித் மிரட்டுவது போன்ற காட்சியில் ஷாலினி மீது கத்தி பட்டு ரத்தம் கொட்டியது. ஷாலினின் கையில் ரத்தத்தைப் பார்த்ததும் அஜித் பதறிவிட்டார். அந்தத் தவிப்பும் பதற்றமும்தான் காதலுக்கான முன்னோட்டமாக அமைந்தது. ‘அமர்க்களம்’ வாசு கேரக்டர், 1990-களின் இறுதியிலிருந்த அஜித்தின் ஒரிஜினல் கேரக்டரை கண்முன் நிறுத்தியது. பிறகு வந்த ‘தீனா’வுக்கு ரூட் போட்டதும் இந்த வாசுதான்.

‘முகவரி’ படத்தில் முதலில் நடிப்பதாக இருந்த நடிகர், ஆடியோ வெளியீட்டு விழா நடந்த அஜித்தின் கடைசிப்படம், அஜித்தை சிவாஜியுடன் ஒப்பிட்டு பேசிய தயாரிப்பாளர், ‘தீனா’ கதையை அஜித்திடம் முருகதாஸ் சொல்லி ஓ.கே வாங்கிய விதம், அஜித்தை ‘தல’னு முதன் முதலில் அழைத்தவர்... நாளை பார்ப்போம்.

- அஜித் அறிவோம்..!

அடுத்த கட்டுரைக்கு