Published:Updated:

பாம்புக் காதலியைத் தேடி ஒரு சுவாரஸ்யப் பயணம் #Sahara

பாம்புக் காதலியைத் தேடி ஒரு சுவாரஸ்யப் பயணம் #Sahara
பாம்புக் காதலியைத் தேடி ஒரு சுவாரஸ்யப் பயணம் #Sahara

பாம்புக் காதலியைத் தேடி ஒரு சுவாரஸ்யப் பயணம் #Sahara

பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்களை பொதுவாக நேர்மறை பாத்திரங்களாக வைத்து படைப்புகள் உருவாவது அபூர்வம். அதுபோன்ற உயிரினங்கள் பார்த்தவுடனே கொல்லப்பட வேண்டியவை, தீயவை என்பது போன்ற பிம்பம் நம் ஆழ்மனதுக்குள் தொடர்ந்து பதியவைக்கப்படுகிறது. எருமை, பன்றி போன்றவை அவலட்சணமானவை என்றும் 'கரப்பான்பூச்சிகளைக் கொல்லுங்கள்' என்று வெறுப்புடன் ஒலிக்கும் பூச்சிமருந்து விளம்பரத்தையும் நினைவுகூரலாம்.

உயிரினங்களில் உயர்வு தாழ்வு என்று ஏதுமில்லை. இரைக்காக அன்றி எந்தவொரு உயிரினமும் பொதுவாக இதர உயிரினங்களைக் கொல்வதில்லை. மனிதனை அவை தாக்க முற்படுவதுகூட வேறு வழியில்லாத சூழலில்தான். அவற்றுக்கு ஏற்படும் அச்சம் மற்றும் சுயபாதுகாப்புக்காகவே.

இப்படி சில குறிப்பிட்ட உயிரினங்கள் எதிர்மறையான நோக்கில் வில்லன்களாகப் பார்க்கப்படும் சூழலில், இரண்டு பாம்புகளுக்கு இடையேயான காதல் கதையை அனிமேஷன் திரைப்படமாக உருவாக்கிய சஹாரா (Sahara) குழுவினரைப் பாராட்ட வேண்டும். பாம்புகளின் உலகத்தில் உள்ள காதல், சமூகப் பாகுபாடு, ஏமாற்றம், காதலியை மீட்கும் சாகசம் என்று அந்த உயிரினத்தின் பிரத்யேக உணர்ச்சிகளைச் சொல்கிறது இந்தத் திரைப்படம்.

சஹாரா பாலைவனம். புழுதியிலும் வெப்பத்திலும் வாழும் இனக்குழுவில் உள்ள ஒரு பாம்பு, அஜார். அதனுடைய உயிர்த்தோழன் பிட்டி என்கிற தேள். தாகம் தாங்காமல் இரண்டு பேரும் சேர்ந்து வழிப்போக்கரிடம் இருந்து ஒரு தர்பூசணி பழத்தைத் திருடுகிறார்கள். 'அந்தப் பழத்தை எப்படி உண்ணலாம்?' என்று இரண்டு பேரும் ஆவலாகத் திட்டம் போடும்போது மூத்த பாம்பு அண்ணன்கள் வருகிறார்கள். அவர்கள் சேட்டைக்காரர்கள். 'பழத்தைத் தருகிறாயா, உதை வாங்கி சாகிறாயா?' என்று வில்லன் வீரப்பா மாதிரி உரக்க சிரித்துக்கொண்டே கேட்கிறார்கள். நடைமுறை ஞானமுள்ள பிட்டி பயந்து பதுங்க, அஜார், ஒரு ஹீரோவாகும் ஆசையுடன் 'துணிவிருந்தால் தொட்டுப் பாரேன்' என்று கெத்தாக பஞ்ச் டயலாக் பேசி, முகத்தில் ஓர் அபாரமான குத்தை வாங்கிச் சரிகிறது.

இவர்களை வெறுப்பேற்றிக்கொண்டே அண்ணன்மார்கள் பழத்தைச் சாப்பிட்டு முடிக்கிறார்கள். அஜாருக்கும் பிட்டிக்கும் வாழ்க்கையே வெறுத்துப்போகிறது. அஜாருக்கு கூடுதல் வெறுப்பு. 'இந்த இடத்தில் எதுவும் சரியில்லை. வேறு எங்காவது செல்லப்போகிறேன்' என்கிறது. அருகில் இருக்கும் ஒரு சோலைக்குச் சென்று சொகுசாக வாழலாம் என்பது அதன் திட்டம். 'தெரியாத இடத்தில் சென்று மாட்டிக்கொள்ளாதே' என்று எச்சரிக்கிறது பிட்டி.

இருவரும் தங்கள் பகுதியின் எல்லைக்குள் நின்று இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்போது அஜாரின் கண்கள் திடீரென ஆச்சரியத்தில் விரிகின்றன. சோலையில் இருந்து ஒரு பச்சை நிறப் பாம்பு இவர்களின் பகுதிக்குள் வர முயற்சிக்கிறது. அழகான பெண் பாம்பு. அதன் பெயர் ஈவா. அஜார் வாயைப் பிளந்து ஜொள்விட்டு பார்த்துக்கொண்டிருக்கும்போதே ஈவாவை ஒரு பறவை தூக்கிச்செல்கிறது. எல்லைப் பகுதியை கண்காணிக்கும் காவல் துறையைச் சார்ந்தது அது. ஈவாவை தூக்கிபோய் அவளது தந்தையிடம் விட்டுவிட்டு விஷயத்தைச் சொல்கிறது.

அஜாரும் பிட்டியும் வாழ்வது புழுதியும் வெப்பமும் உள்ள பகுதி. ஈவா வாழ்வது பசுமையும் நீரும் உள்ள சோலைப் பகுதி. வெவ்வேறு சூழல். வெவ்வேறு சமூகங்கள். இரண்டும் ஒன்றோடு கலக்க முடியாது. சோலையில் வாழும் உயிரினங்கள், தங்களை உயர்வாக கருதுகின்றன. அதனாலேயே புழுதியில் வாழும் உயிரினங்களைத் தாழ்வாக நினைக்கின்றன.

சோலையில் வாழ்ந்தாலும் ஈவாவுக்கு சிறை போன்ற அந்த சின்னஞ்சிறிய இடம் பிடிப்பதில்லை. அங்கிருந்து தப்பித்து புதிய உலகத்தைக் காண வேண்டும் என்பது கனவு. அந்த நோக்கத்தில் தப்பிக்கும்போதுதான் காவல் துறையிடம் பிடிபடுகிறது. இங்கிருந்து எப்படித் தப்பிப்பது என்று அது யோசிக்கிறது. புழுதிப் பகுதியில் வாழும் விலங்குகளின் நிறத்தை தன் மேல் செயற்கையாக பூசிக்கொண்டு பழுப்பு நிறமாகிறது.

இதே சமயத்தில் அந்தப் பக்கம் அஜாரும் இதே யோசனையில் தன்மேல் பச்சை நிறத்தை பூசிக்கொண்டு சோலைக்குள் நுழைகிறது. ஈவாவை பார்த்த அந்தக் கணத்தில் இருந்து அதன் மீது காதல். சோலைக்குச் சென்று வாழ வேண்டும் என்கிற விருப்பம். கூடவே பிட்டி தேளும் பயத்துடன் வருகிறது.

சோலைப் பகுதிக்குள் மாறுவேடத்தில் நுழையும் அஜார், அங்குள்ள பசுமையைக் கண்டு உற்சாகம்கொள்கிறது. அஜாரும் ஈவாவும் சந்திக்கும் சூழல் அமைகிறது. காதலர்களின் முதல் சந்திப்பு. ஆனால், பரஸ்பரம் அடையாளம் தெரியவில்லை. இரண்டுமே மாறுவேடத்தில் இருக்கின்றன. காவல் துறையைச் சேர்ந்த பறவை இவர்களைக் கண்டு விசாரிக்க முயல்கிறது. மலையுச்சியில் இருந்து அஜாரை இழுத்துக்கொண்டு நீருக்குள் பாய்கிறது ஈவா. புழுதிப் பகுதியைச் சேர்ந்த அஜார், நீச்சலடிக்க தெரியாமல் தடுமாறுகிறது. ஈவா அதைக் காப்பாற்றி அழைத்துச் செல்கிறது. நீருக்குள் வண்ணங்கள் கலைந்து இரண்டும் தன் இயல்பான நிறத்தை அடைகின்றன. ஒன்றையொன்று அடையாளம் கண்டுகொள்கின்றன.

காதலர்கள் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு வருங்காலத்தைப் பற்றி உரையாடத் துவங்குவதற்குள் அந்த விபரீதம் நிகழ்கிறது. ஈவாவை ஒரு பாம்பாட்டி பிடித்துச் சென்றுவிடுகிறான். பாம்புகளை வைத்து நடமானசெய்து பிழைப்பு நடத்துபவன் அவன். தொடக்க நிலையிலேயே தன் காதல் வாழ்க்கை பறிபோவதைக் கண்டு பதற்றத்துடன் அவனைத் துரத்துகிறது அஜார்.

ஈவாவை கண்டுபிடித்து அழைத்துவருவது என்கிற முடிவுடன் அஜார் செய்யும் சாகசப் பயணமே மீதிக் கதை. பிட்டி தேளும் ஈவாவின் அண்ணனான கேரி என்கிற பச்சைப் பாம்பும் உதவுகின்றன. காதலியை மீட்கச் சென்ற அஜாரின் இந்தப் புனிதமான காதல் பயணம் நிறைவேறியதா என்பதை படத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

வெவ்வேறு சமூகங்களைச் சார்ந்த மனிதர்களுக்கு இடையிலான பாகுபாடுகள், காதலில் உண்டாகும் சிக்கல்கள் என்று எல்லாவற்றையும் பாம்புகளின் வாழ்விலும் பொருத்திச் சொல்கிறார் இயக்குநர். பாம்பாட்டியிடம் இருந்து தப்பித்துச்செல்ல நினைக்கும் ஈவா, மகுடியின் ஓசையைக் கேட்டு தன்னிச்சையான உன்மத்துடன் நடனமாடுவது சிறப்பான காட்சி. (பாம்புகளுக்கு காது கேட்காது என்கிற உண்மையைச் சுவாரசியம் கருதி மறந்துவிடலாம்). அண்ணன்மார்களிடம் உதை வாங்கி 'கைப்புள்ள'யாக இருந்த அஜார், தன் காதலியை மீட்பதற்காக விடாமுயற்சியுடன் செய்யும் பயணமும் சாகசங்களும் அற்புதம். கூடவே, அலப்பறை செய்துகொண்டே வரும் கேரி.

இறுதிக் காட்சியில் நிகழும் சாகசம் ஒன்றில், கட்டடத்தின் உச்சியில் கம்பியைப் பிடித்துக்கொண்டு சமாளிக்கும் பாம்பின் உடலைப் பாம்பாட்டி பிடித்துக்கொண்டு தொங்க, மனிதனின் பளு தாங்காமல் அஜார் சிரமப்பட, உருவப்பட்ட பாம்புச் சட்டையுடன் பாம்பாட்டி கீழே விழுவது அபாரமான கற்பனை.

பெரும்பாலான காட்சிகள் பாலைவனத்தின் பின்னணியில் நிகழ்வதால் அது சார்ந்த அழகியல் திரைப்படம் முழுக்க வெளிப்படுகிறது. தொடக்கத்தில் சித்தரிக்கப்படும் பாலைவனப் புயல் முதற்கொண்டு பல காட்சிகள் சிறந்த வரைகலை நுட்பத்துடனும் சுவாரசியமாக உருவாக்கப்பட்டுள்ளன. இது, பிரான்ஸ் - கனடா தயாரிப்பு. பாம்புகளைப் பிரதானப்படுத்தி அனிமேஷன் திரைப்படத்தை உருவாக்கியதற்காகவே இயக்குநர் பெர்ரி கோர் (Pierre Coré) பாராட்டப்பட வேண்டியவர்.

பாம்புகளின் அழகான இயக்கத்தை, வாழ்வியலை  சஹாரா (Sahara) திரைப்படத்தின் மூலம் அறியலாம். அதுபோன்ற உயிரினங்களும் இயற்கையின் ஒரு பங்கு, அவை வெறுக்கப்பட வேண்டியதல்ல என்பதற்காகவே இதைக் குழந்தைகளுடன் கண்டு களிக்க வேண்டிய படங்களில் முதன்மையானது.

அடுத்த கட்டுரைக்கு