Published:Updated:

அஜித்தைப் பார்த்து பொறாமைப்பட்ட கமல்... ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினி தொடர் பாகம் 6

அஜித்தைப் பார்த்து பொறாமைப்பட்ட கமல்... ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினி தொடர் பாகம் 6
அஜித்தைப் பார்த்து பொறாமைப்பட்ட கமல்... ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினி தொடர் பாகம் 6

அஜித்தைப் பார்த்து பொறாமைப்பட்ட கமல்... ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினி தொடர் பாகம் 6

‘என் வீடு என் கணவர்’ என்ற படத்தில் ஒரு பாடல் காட்சியில் சில விநாடிகள் வந்து போனது மூலம் அமைந்ததுதான் அஜித்தின் முதல் சினிமா வாய்ப்பு. ஆனால் அடுத்து வந்த ‘பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்கு பட வாய்ப்புதான் மிகச்சரியான அறிமுகம். 1992  ஆகஸ்ட் 3ல் அந்தப் பட, ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து கணக்கிட்டால், இன்னும் சில மாதங்களில் 25 வது வருடத்தைத் தொடுகிறார் அஜித். அன்றைய தெலுங்கு பட அறிமுக அஜித் , ‘வேறு மொழிப் படங்களில் நடிக்க மாட்டேன். தமிழில் மட்டும்தான் நடிப்பேன்’ என்று சொல்லும் இன்றைய ‘விவேகம்’ அஜித்தாக வளர்ந்தது எப்படி? இந்தக் கேள்விக்கான பதிலை அவரின் இந்த கால்நூற்றாண்டு கால திரைப்படங்களின் வழியாக நாம் உணர முடியும். அதற்கான ஒரு ரீவைண்ட் தான்.. இந்த ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினி தொடர்! 

‘முகவரி’ படத்தில் முதலில் நடிப்பதாக இருந்த நடிகர், ஆடியோ வெளியீட்டு விழா நடந்த அஜித்தின் கடைசிப்படம், அஜித்தை சிவாஜியுடன் ஒப்பிட்டு பேசிய தயாரிப்பாளர், ‘தீனா’ கதையை அஜித்திடம் முருகதாஸ் சொல்லி ஓ.கே வாங்கிய விதம், அஜித்தை ‘தல’னு முதன் முதலில் அழைத்தவர்... அஜித்தின் அடுத்த ஐந்து படங்களைப் பற்றி இன்று பார்ப்போம்...

26. ‘நீ வருவாய் என’

ராஜகுமாரனின் ஒரே ஹிட் படம். இதில் அஜித் இறந்துவிடுவதுபோல் நடித்திருந்தார். பட ரிலீஸுக்குப் பிறகு அஜித்தைச் சந்தித்த அவர் ரசிகர்கள், ‘இனி இறந்துவிடுவது போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டனர்.

27. ‘முகவரி’

முதலில் இந்தப் படத்தில் நடிப்பதாக இருந்தவர் முரளி. `எல்லாம் அமையும்’ என்பார்களே, அப்படி `முகவரி’க்கு எல்லாம் அமைந்த படம். இதில் வரும் ‘ஸ்ரீதர்’ கேரக்டர் அஜித்துக்கு அவ்வளவு நெருக்கமானது. அந்த கேரக்டரை அவ்வளவு அழகாக உள்வாங்கி, இயல்பாக நடித்திருந்த படம் `முகவரி’.

28. ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’

அஜித், மம்மூட்டி, அப்பாஸ் என மூன்று ஹீரோ சப்ஜெக்ட். தயாரிப்பாளர் தாணு, இசை ஏ.ஆர்.ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், தபு, இயக்கம்-ஒளிப்பதிவு ராஜீவ் மேனன்... என பெரிய ஸ்கேல் படம். ஷூட்டிங் முடிந்து வந்ததும் ‘சந்தன தென்றலை...’ பாடலைப் போட்டுப்பார்த்த தாணு, ‘யோவ், உச்சரிப்பில் சிவாஜி கணேசன் சாருக்கு அப்புறம் அந்த அளவுக்கு பெர்ஃபெக்‌ஷனை இந்தப் பாட்டுல அஜித் தம்பிட்ட பார்க்கிறேன்யா...’ என்று மனம்விட்டு பாராட்டினாராம். அஜித், எப்போதும் உச்சரிப்பில் மிகவும் கவனமாக இருப்பார். காரணம், ‘தமிழ் சரியா பேசத் தெரியலை’ எனச் சொல்லிவிடுவார்களோ என்ற அச்சம். அதனால் மனப்பாடம் செய்து தெளிவாகப் பேசுவார். இதுதான், ஆடியோ வெளியீட்டு விழா நடந்த இவரின் கடைசிப் படம். தேவி தியேட்டரில் நடந்த அந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் தலைமை தாங்கி பேசிய கமல், ‘அஜித், உன்னைப் பார்த்து நான் பொறாமைப்படுகிறேன்’ என்றார். எதற்காக அஜித்தைப் பார்த்து கமல் பொறாமைப்பட்டார் என்பது அவருக்கே வெளிச்சம்.

29. உன்னைக்கொடு என்னைத் தருவேன்’

ராணுவப் பின்னணியில் எடுக்கப்பட்ட படம். வெலிங்டன் ராணுவப் பயிற்சி மையத்தில், 21 நாள்கள் படப்பிடிப்பு நடந்தது. அஜித் கடுமையான பயிற்சிகளைச் செய்து இதில் நடித்தார். இந்தப் படம் சுமாராக வந்ததில் அஜித்துக்கு மிகப்பெரிய வருத்தம்.

30. ‘தீனா’

முதலில் அஜித்தின் இந்த கால்ஷீட்டில் படம் பண்ண ஃபிக்ஸ் ஆகியிருந்தவர் இயக்குநர் பிரவீன்காந்த். ‘தக்‌ஷத்’ என்ற இந்திப் படத்தைத் தமிழில் ரீமேக் பண்ணலாம் என அஜித்தும் பிரவீன்காந்தும் முடிவுசெய்து வேலைகள் நடந்துகொண்டிருந்தன. ஆனால், தயாரிப்பாளருக்கும் பிரவீன்காந்துக்கும் இடையே கருத்துவேறுபாடு. அதனால் அதே கம்பெனிக்கு வேறோர் இயக்குநர் தேடவேண்டிய சூழல். ஏற்கெனவே ஓர் அறிமுக இயக்குநர் பற்றி தன் மேனேஜர் சுரேஷ்சந்திரா சொன்னது அஜித்துக்கு நினைவுக்கு வந்தது. ‘அந்தப் பையன் என்ன பண்றார்? அவரைக் கூட்டிட்டு வாங்க’ என்று நள்ளிரவு 12 மணிக்குச் சொல்கிறார் அஜித். நம்பர் 9, அழகம்பெருமாள் கோயில் தெருவில் உள்ள அந்த இளைஞரின் வீட்டின் கதவைத் தட்டுகிறார் சுரேஷ்சந்திரா. ‘காலையில வரவா சார்?’ என்று தயங்கி நிற்காமல், ‘உடனே வர்றேன் சார்’ என்று அஜித்தைச் சந்திக்க கிளம்பினார் அந்த இளைஞர். ‘நீங்கதானா தம்பி. எஸ்.ஜே.சூர்யா அசிஸ்டன்ட்தானே நீங்க? நான் உங்களை அவர் ஸ்பாட்ல பார்த்திருக்கேன். இப்ப ஏதாவது கதை வெச்சிருக்கீங்களா?’ என்றார் அஜித். ‘தன் தங்கையோட காதலனைக் கொல்லணும்னு துடிக்கிறான் சொந்த அண்ணன். அந்தப் பெண்ணின் சத்தியத்துக்காக அந்தக் காதலனைக் காப்பாத்தணும்னு துடிக்கிறான் வளர்ப்பு அண்ணன். இதுதான் சார் லைன்’ என்கிறார் அந்த இளைஞர். ‘எனக்குப் பிடிச்சிருக்கு. எப்ப ஷூட்டிங் போகலாம்?’ என்றார் அஜித். ‘எனி டைம் ரெடி சார்’ என்றார் அந்த இளைஞர். அந்த இளைஞர் ஏ.ஆர்.முருகதாஸ், அந்தப் படம் ‘தீனா’.

இந்தப் படத்தில் அஜித்தின் இயல்பைச் சொல்லும் வகையில் முருகதாஸ் பாடலாசிரியரிடம் கேட்டு வாங்கி சேர்த்த பாடல்தான் ‘வத்திக்குச்சி பத்திக்காதுடா யாரும் வந்து உரசுற வரையிலே...’  இந்தப் படத்தில்தான் அஜித் முதன்முதலில் ‘தல’ என்று அழைக்கப்பட்டார். ‘நான்தான் அவருக்கு முதல்ல ‘தல’னு பட்டம் சூட்டினேன்’ என்று யார் யாரோ அதற்கு சொந்தம் கொண்டாடுகிறார்கள். ஆனால், அது அந்தப் படத்தில் லோக்கல் ஸ்லாங்கில் ‘தல’ என்று முதன்முதலில் பேசி நடித்த துலுக்கானத்துக்குப் போய் சேரவேண்டிய கிரெடிட்.

‘தினமும் திறந்த ஜீப்பில் எங்களைப் பார்த்து கை அசைத்தபடி போகணும்’ என்று அஜித்தை அன்பு கட்டளையிட்ட மக்கள், நடிகர் திலகம் சிவாஜி இறந்தபோது அஜித் வெளியூரில் இருந்து வந்தது, விஷ்ணுவர்தனை கண்டெத்த திரைப்படம், ரசிகர்களின் ஆழம் பார்க்க அஜித் நடித்த படம்... நாளை பார்ப்போம்.

அஜித்தை அறிவோம்...

அடுத்த கட்டுரைக்கு