Published:Updated:

ரஜினி - காற்றா? கானல் நீரா?

ரஜினி - காற்றா? கானல் நீரா?

ரஜினி - காற்றா? கானல் நீரா?

ரஜினி - காற்றா? கானல் நீரா?

ரஜினி - காற்றா? கானல் நீரா?

Published:Updated:
ரஜினி - காற்றா? கானல் நீரா?

''ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது'' இப்படி, 'பாட்ஷா' பட விழாவில், பரபரப்பாக ரஜினி பேசியது முதல் தமிழக அரசியலில் ரஜினி என்ற பிம்பம் அவ்வப்போது ஆனால், தொடர்ச்சியாக எழுந்துவருகிறது.

சரி, அரசியல் தொடர்பாக ரஜினியின் கடந்த கால வாய்ஸ்களையும் அவரின் அணுகுமுறைகளையும் பின்னோக்கலாம். 

'பாட்ஷா' பட விழாவில், ரஜினி மேற்கண்டவாறு பேசியதற்குக் காரணம், இயக்குநர் மணிரத்னம் வீட்டில் அப்போது நடந்த குண்டு வெடிப்புச் சம்பவம் மட்டுமல்ல; அதற்கு முன்பிருந்தே ஜெயலலிதாவுக்கும் ரஜினிக்கும் இருந்த மறைமுக மோதல்களும்தான்.

1996-ம் ஆண்டு காங்கிரஸிலிருந்து பிரிந்த மூப்பனார், தனிக்கட்சி ஆரம்பித்து சைக்கிளோடு கிளம்பினார். அந்த சைக்கிளை சோ, கோபாலபுரத்தில் கொண்டுபோய் நிறுத்தினார். அதற்கு, ரஜினியும் ஆதரவு தந்தார். அந்தத் தேர்தலில், தி.மு.க கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. அதற்கு, ரஜினி வாய்ஸ் மட்டுமே காரணமல்ல. அப்போது, ஜெயலலிதா அரசின் ஆடம்பரம் மீதும் ஆட்சியின் மீதும் மக்களுக்கு இருந்த அதீத கோபமும் ஒரு காரணம். அதனால்தான் பர்கூர் தொகுதியில், ஜெயலலிதாவே தோற்றுப்போனார்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில், 1998-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. அந்தத் தேர்தல் வாக்குப் பதிவுக்குச் சில நாள்களுக்கு முன், கோவையில் குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது. அதையும் பொருட்படுத்தாமல், தி.மு.க கூட்டணிக்கு ஆதரவாக ரஜினி அப்போதும் வாய்ஸ் கொடுத்தார். ஆனால், அந்தத் தேர்தலில் தி.மு.க கூட்டணி சொற்ப இடங்களிலும் அ.தி.மு.க அதிக இடங்களிலும் வெற்றிபெற்றன. அது முதல், ரஜினி வாய்ஸ் இமேஜ் இறங்குமுகமானது.

பிறகு, தன் திரைப்பட வேலைகளில் பிஸியாகிவிட்டார் ரஜினி. ஆனால், பிறகொரு சமயம், ரஜினி ரசிகர்களுக்கும் பா.ம.க-வுக்கும் முட்டல் மோதல் நடந்தது. 2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் சமயம் அது. அப்போதும் சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் தனது ரசிகர்களைச் சந்தித்த ரஜினி, தி.மு.க கூட்டணியில் இருந்த பா.ம.க-வை எதிர்க்கும்விதமாக, 'பா.ம.க போட்டியிடும் தொகுகளில் மட்டும் எதிர்த்து வாக்களியுங்கள்' என்று தனது ரசிகர்களுக்குக் கட்டளையிட்டார். ஆனால், அந்தத் தேர்தலில் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணியே வென்றது.

தேர்தலுக்குப் பின் அதுபற்றி பேட்டியளித்த ரஜினி, ''அடித்தது பெரும் புயல்; இதில் நான் எம்மாத்திரம்?'' என்றார். அதன்பிறகு, அவர் யாருக்கும் ஆதரவாக வாய்ஸ் கொடுக்காமல், கருணாநிதி ஆட்சியில் அவரது மேடையிலும், ஜெயலலிதா ஆட்சியில் அவரது மேடையிலும் பாராட்டு வாய்ஸ் மட்டுமே கொடுத்தார்.

இப்போது தனது ரசிகர்களை அழைத்த ரஜினி, தான் அரசியலுக்கு வருவதுகுறித்து கையைத் தூக்கி சைகை காட்டாமல், கொஞ்சம் வெளிப்படையாகவே பேசியிருக்கிறார்.

வெற்றிடங்களை நிரப்புவது காற்றின் இயல்பு. இப்போது தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப ரஜினி நினைக்கிறாரோ என்னவோ? ரஜினி காற்றுதான், அவரின் ரசிகர்களுக்கு! ஆனால், தமிழக மக்களுக்கு அவர் காற்றா? அல்லது கானல் நீரா என்பது போகப் போகத்தான் தெரியும்!