Published:Updated:

பாகுபலி மூன்றாம் பாகம் உருவாக இந்தக் காரணங்கள் போதும்தானே..!

தார்மிக் லீ
பாகுபலி மூன்றாம் பாகம் உருவாக இந்தக் காரணங்கள் போதும்தானே..!
பாகுபலி மூன்றாம் பாகம் உருவாக இந்தக் காரணங்கள் போதும்தானே..!

பாகுபலிதான் இன்னும் ஹாட் டாபிக். அந்தப் படம் ஏற்படுத்திய தாக்கம் சிறிதளவும் குறையவில்லை. இரண்டாம் பாகத்தோடு முடித்துக்கொள்வோம் என்று நினைத்த இயக்குநர்  ராஜமௌலிக்குக் கூட அடுத்த பாகம் எடுக்கலாம் என்ற எண்ணத்தை விதைத்துவிட்டனர் ரசிகர்கள். ஒருவேளை பாகுபலி-3 படம் எடுத்தால், எந்தக் காரணங்களை அடிப்படையாக வைத்து எடுப்பார். ஒரு சின்ன கற்பனை!

நாசர் உயிருடன் இருக்கிறார் :

பல்வாள் தேவனுக்கு பின்னால் இருந்து முழுக்க முழுக்க அவருக்கு கீ கொடுத்து ஆட்டிப் படைப்பது, அவரது அப்பா பிங்களத்தேவன் தான். என்னதான் அவரின் கதாபாத்திரம் நாட்டை ஆளத் தகுதி இல்லை என்றாலும், சில பல வில்லத்தனமான ராஜ தந்திரங்களை முதல் பகுதியில் இருந்தே கையாளுவார். ஆதலால் அவரை அவ்வளவு எளிதில் கணக்கிட முடியாது. ஏறத்தாள அவரது அந்த வில்லத்தனமான கதாபாத்திரம் மகாபாரதத்தில் இடம்பெறும் சகுனியின் கதாபாத்திரத்துடன் ஒப்பிட்டுப் பேசக் கூடிய அளவுக்கு இவர் தனது பெஸ்ட்டை கொடுத்துவிட்டார். ஆனால் பாகுபலி இரண்டாம் பாகத்தின் க்ளைமாக்ஸில் மகேந்திர பாகுபலி பல்வாள் தேவனை மட்டும் கொன்றுவிட்டு, இவருக்கு உயிர் பிச்சை கொடுத்துவிடுவார். தன் மகனைக் கொன்ற மகேந்திர பாகுபலியை பழி வாங்க, இவர் ஏன் பழைய மாதிரி சூழ்ச்சிகளை செய்யக் கூடாது? மகிழ்மதி சாம்ராஜ்யத்தில் இவர் பேச்சைக் கேட்பதற்கென்றே தயாராக இருக்கும் கூட்டணியை இவர் ஏன் உண்டாக்கிக் கொள்ளக் கூடாது? நாட்டின் மன்னனை ஒட்டுமொத்த ஊருக்கேவா பிடித்துவிடும்? இப்படி பல லாஜிக்கான கேள்விகள் இருப்பதனால் அதையே பயன்படுத்தி ராஜமௌலி மூன்றாவது பாகம் எடுப்பதற்கான வாய்ப்புகள் மிகுந்த அளவில் இருக்கின்றன.

தமன்னா :

அமரேந்திர பாகுபலி மற்றும் மகேந்திர பாகுபலி ஆகிய இரண்டு கதாநாயகர்களையும் சரிசம வீரத்தோடு தான், இரண்டு பாகங்களிலுமே காட்டியிருக்கிறார் இயக்குநர். 'அப்பாவுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறார்' என்ற பழமொழிக்கு ஏற்றார் போல் அமரேந்திர பாகுபலியிடம் இருக்கும் ஒட்டுமொத்த வித்தையும், வீரமும் மகேந்திர பாகுபலியிடமும் இருக்கும். ஆனால் முதல் பாகத்தை ஒப்பிடும்போது இரண்டாம் பகுதியில் மகேந்திர பாகுபலிக்கு கெத்து சற்று குறைவே. இது ஒரு பக்கம் இருந்தாலும், அமரேந்திர பாகுபலிக்கு அவரது மனைவி தேவசேனா எந்த அளவுக்கு முக்கியமோ, அதே போல மகேந்திர பாகுபலிக்கு அவர் காதலிக்கும் பெண்ணான அவந்திகாவும் முக்கியம்தான். ஒருவேளை அடுத்து எடுக்கவிருக்கும் பகுதியல் ஃபேமிலி சென்டிமென்ட், ரொமான்ஸ் போன்ற காட்சிகள் இடம்பெறவிருந்தால் மகேந்திர பாகுபலி-அவந்திகா ஜோடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கலாம்.  

பல்வாள் தேவனின் மனைவி :

பாகுபலி முதல் பகுதியில் 'கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்?' என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் மண்டையை குழப்பிக் கொண்டு இருந்தனர். அதே போல் எதுவும் சொல்லாமல் இந்தப் பகுதியில் பல்வாள் தேவனின் மனைவியை ஃப்ரேமில் ஒரு மூலையில் கூட காட்டவில்லை. அதை ஏன் அடுத்த பாகத்துக்கு வழிகாட்டியாக இருக்கக் கூடாது. பாகுபலி முதல் பாகத்தில், பல்வாள் தேவனின் குடும்பம் என்று சொல்லிக்கொள்ள அவருக்கு ஒரே ஒரு மகன் மட்டும்தான் இருப்பார். அதுவும் அவரை மிகைப்படுத்தும்படியாக ஒரு சீன் கூட இடம்பெற்றிருக்காது. அப்படி இருக்கும்போது பல்வாள் தேவனின் மனைவி ரகசியமாக இருப்பது போல், அவரின் வாரிசு என்று சொல்லிக்கொள்ள மற்றொரு மகனோ, மகளோ ஏன் இருக்கக் கூடாது? 'லாஜிக்கா இதெல்லாம் கரெக்ட்டா வராது பாஸ்' என்று கூறும் நெட்டிசன்களிடம் ஒரே ஒரு கேள்வி. அவ்வளவு துல்லியமாகப் படம் எடுக்கும் ராஜமௌலி ஏன் பல்வாள் தேவனின் மனைவியை படத்திற்குள் புகுத்தவில்லை? ஹீரோவின் மனைவியும், மகனும் எந்த அளவு முக்கியமோ அதே அளவிற்கு வில்லனின் குடும்பமும் வாரிசும் முக்கியம்தான். இந்தக் காரணமே படத்தின் அடுத்த பாகத்திற்கு வழிகாட்டியாக இருக்கலாம் என்ற ஒரு சின்ன லாஜிக்கான கற்பனை. #WhereIsBhallaladeva'sWife

கட்டப்பா எப்படி அடிமையானார்?

என்ன சொன்னாலும் ஏன் என்று ஒரு வார்த்தை கூட கேட்காமல் செய்யும் கட்டப்பா ஒரு பக்கம். ராஜமாதா சொன்ன கட்டளையை ஏற்று அவர் பாசமாக வளர்த்த அமரேந்திர பாகுபலியையே அவரது முதுகில் குத்திவிடுவார். அதேபோல் பல்வாள் தேவன், பிங்காளத்தேவன் எவ்வளவு கொடுமைகளைச் செய்தாலும் சற்றும் கோவப்படாமல் பொறுமையாகக் கேட்டு, இட்ட கட்டளைகள் அனைத்தையும் செய்து முடிப்பார். இந்த அளவிற்கு அடிமையாக இருக்கும் கட்டப்பாவின் பின் கதை என்ன? பாகுபலி முதல் பாகத்தில் வெறும் ஒரே வரியில் ஃப்ளாஷ்பேக்கை சொல்லி முடித்துவிடுவார். என்னதான் போரில் தோற்றாலும் வீர மரணம் அடையாமல் சொல்வதையெல்லாம் கேட்கும் அடிமைத்தனத்திற்குப் பின்னால், ஏதோ பெரிதான காரணம் இருந்திருக்கலாம். படத்தின் முக்கியமான பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்பதால் இயக்குநர், கட்டப்பாவின் பின்னணி பற்றிக் காட்டாமல் இருந்தாரோ என்னவோ? அதை கருத்தில் கொண்டும் மூன்றாம் பாகத்தில் எடுத்துக் கூறலாம். 

காளகேயர்கள் :

இந்தக் காரணத்தை ஆப்ஷனில் வைத்துக்கொள்ளலாம். முதல் பாகத்தில் காளகேயர்களின் மீது படுபயங்கரமாக தோற்றத்தை உண்டாக்கினர். அதேபோல் க்ளைமாக்ஸின் சண்டைக் காட்சிகளும் இரு பக்கமும் சரிசமமாக இடம்பெற்றிருந்தது. அதையடுத்து மூன்றாவது பாகத்தில் மெயின் வில்லனுக்கு பற்றாக்குறை இருந்தால், சின்ன சின்ன ஃபேமிலி ட்விஸ்டுகளுடன் காளகேயர்களையே பயன்படுத்திவிடலாம். மிகப் பெரிய மகிழ்மதி சாம்ராஜ்யத்திற்கு ஈடாக ஒரு நாட்டை மீண்டும் காட்டுவதற்குப் பதில், முதல் பாகத்தில் காட்டிய இவர்களையே பயன்படுத்தினால் சிறப்பு. 

அஸ்லாம் கான் :

இது எல்லாத்தையும் விட முதல் பாகத்தில் கேமியோவாக வந்த சுதீப் (அஸ்லாம் கான்) எங்கே? இதையே பெரிய லீடாக கருதி பாகுபலி பாகம் மூன்றுக்கான வேலையை இயக்குநர் ராஜமௌலி தொடங்கலாம்.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு கண்டிப்பாக மூன்றாம் பாகத்தைத் தாராளமாக எடுக்கலாம். ஹாலிவுட் படங்களில் செத்தவனை வைத்து அடுத்த பாகம் எடுக்கும்போது, இதுபோன்ற பிரமாண்ட படத்தை மூன்றாவது பாகமாக எடுத்தால் தவறேதும் இல்லை. ஜெய் மகிழ்மதி..!