Published:Updated:

‘ரஜினியின் அந்த வாக்குறுதி... கமலின் அந்த வார்த்தை!’ - நெகிழும் வையாபுரி

‘ரஜினியின் அந்த வாக்குறுதி... கமலின் அந்த வார்த்தை!’ - நெகிழும் வையாபுரி
‘ரஜினியின் அந்த வாக்குறுதி... கமலின் அந்த வார்த்தை!’ - நெகிழும் வையாபுரி

‘ரஜினியின் அந்த வாக்குறுதி... கமலின் அந்த வார்த்தை!’ - நெகிழும் வையாபுரி

“எவ்வளவுதான் திறமை இருந்தாலும், வாய்ப்பு கிடைக்கலைன்னா வீட்டில் ரெஸ்ட்தான் எடுக்கணும். சினிமா, யாருக்கும் நிரந்தரம் இல்லை. ஆனாலும் சினிமா மேல ஆசையும், அன்பும், நம்பிக்கையும் இருந்தால் அது நம்மை நிச்சயம் கைவிடாது'' என அழகாகப் பேசிச் சிரித்து நெகிழ்கிறார் காமெடி நடிகர் வையாபுரி. ​​​

“எப்படி இருக்கீங்க?” 

“ரொம்ப நல்லா இருக்கேன். சினிமாவுக்கு வந்து 23 ஆண்டுகள் ஆகிடுச்சு. இதுவரைக்கும் 450 படங்களுக்கு மேல நடிச்சுட்டேன். சினிமாவில் இருக்கும் பெரும்பாலானவங்க, கைவசம் வேற தொழில் வெச்சிருப்பாங்க. ஆனா, இன்னிக்கு வரை எனக்குத் தெரிந்த ஒரே தொழில் சினிமாதான். என்னோட மாமா, அப்பா, அண்ணன்னு யாருமே சினிமாவில் கிடையாது. எந்தப் பின்னணியும் இல்லாம சினிமாவுக்குள் நுழைந்தவன் நான். பெற்றது அன்னை, வளர்த்தது சென்னை.”

“நீங்க நடித்ததில் மறக்க முடியாத கதாபாத்திரம்?” 

“இதுவரைக்கும் நடிச்சது எல்லாமே மறந்துபோற கேரக்டர்தான். மறக்க முடியாத கேரக்டர் இனிமேதான் நடிக்கணும். ஏன்னா, வயசு 48. இந்த வயசுல பண்ணக்கூடிய மெச்சூரிட்டியான கேரக்டர் எல்லாம் முன்னாடியே நடிச்சுட்டேன். அதனால பெருசா ரீச் ஆகலைன்னு தோணும். முன்னாடி நடிச்ச பல கேரக்டர் இப்போ கிடைச்சா, இன்னும் செமத்தியா நடிப்பேன். ‘பெண்ணின் மனதைத் தொட்டு’ படத்துல வாய் பேச முடியாத கேரக்டர்ல நடிச்சிருப்பேன். அந்த ரோல் இப்போ கிடைச்சா, காமெடியைத் தாண்டி சென்டிமென்ட்லயும் நல்ல பெயர் வாங்குவேன். ”

“உங்களுக்குப் பிடித்த மூன்று ‘பா’ இயக்குநர்கள் பற்றி சொல்லுங்க!” 

“எந்த நடிகணும், நடிக்க ஆசைப்படுவது இந்த மூன்று இயக்குநர்களின் படத்தில்தான். பாரதிராஜா, பாலசந்தர், பாலுமகேந்திரா. இதில் பாலுமேந்திரா படமான ‘ராமன் அப்துல்லா’-வில் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. அவரிடம் எளிதில் சினிமா கத்துக்கலாம். குழப்பமே இல்லாம படப்பிடிப்பு நடத்துவார். பாரதிராஜா சாருடன் ‘கருத்தம்மா’ படத்துல நடிச்சேன். பாலசந்தர் சார் படத்தில் நடிக்கிற வாய்ப்பு கடைசி வரைக்கும் கிடைக்கவேயில்லை. அதுக்கு பதில், பாலசந்தர் சாரின் சீடரான கமல் சார் படத்தில் நடிச்சுட்டேன். அதுவும் கமல் சார் இயக்கிய முதல் படமான ‘ஹேராம்’ படத்திலேயே அந்த வாய்ப்பு கிடைச்சது ரொம்ப சந்தோஷம்.” 

"கமலுடன் நிறைய படங்கள் நடிச்சுட்டீங்களே?"  

" கமல் சாரோட கார் நம்பர், 2345. அந்த கான்டெசா க்ளாசிக் கார் ரோட்ல போனாலே, உள்ளே கமல் இருக்காரோ, இல்லையோ இறங்கி நின்னு சல்யூட் அடிப்பேன். அந்த அளவுக்கு அவர் மேல எனக்கு பயம், பத்தி, பாசம். அவர் காமினேஷன்ல முதல்ல ‘அவ்வை சண்முகி’ படத்துல நடிச்சேன். அந்தப் படத்துக்காக என்னோட கேரக்டர் பெயர் ராஜா. ‘உன் பேர் என்ன?’ன்னு கமல் சார் கேட்டார். `வையாபுரி'ன்னு சொன்னேன். ‘ராஜா,ராமு-ன்னு எல்லா படங்கள்லயும் சொல்றதுதானே, வையாபுரின்னே ஷாட்ல கூப்பிடுறேன்’னு கே.எஸ்.ரவிகுமார் சாரிடம் சொன்னார். முதல்முறையா படத்துல என் பெயரைச் சொல்லி கமல் சார் கூப்பிட்டதுலேயே சிலிர்த்துப்போனேன். ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ படத்துல நடிக்கும்போது ‘நான் ஹீரோ இல்லை. நீங்கதான் ஹீரோ’னு சொல்வார். படத்தோட ஸ்பெஷல் ப்ரிவ்யூ ஷோவுக்கு நிறைய இயக்குநர்கள் வந்திருந்தாங்க. படம் பார்த்த எல்லா இயக்குநர்களிடமும் படம் எப்படி இருக்குன்னு கேட்காம, ‘வையாபுரி எப்படி நடிச்சிருக்கார்?’னு கேட்டார் கமல் சார்.  இப்போ வரைக்கும்  அவர் படத்துலயும் நடிக்கிறேன், அவரோட நட்பாகவும் இருக்கேன்.” 

“சமீபத்தில் ரஜினி வீட்டுக்குப் போனீங்களாமே! என்ன சங்கதி?” 

“என் மகன், ரஜினியின் தீவிர ரசிகன். ஒருமுறையாவது ரஜினி சாரைச் சந்திக்கணும்னு ஆசைப்பட்டான். நானும் அவரோட வீட்டுக்கு போன் பண்ணிக் கேட்டிருந்தேன். திடீர்னு போன வாரம் ரஜினி சார் வீட்டிலிருந்து ஒரு போன். ‘நாளை காலை 10 மணிக்கு சார் வரச்சொல்றார்’னு சொன்னாங்க. 9:50-க்கு ரஜினி சார் வீட்டுக்குப் போயிட்டோம். பார்த்ததும் கட்டிப்பிடிச்சுக்கிட்டார். அப்படியே  நெகிழ்ந்துட்டேன். ‘கமலோட நிறைய படம் பண்ணிட்டீங்க. ஆனா, நாம சேர்ந்து ஒரு படம்கூட பண்ணதில்லையே. நிச்சயமா அடுத்த படம் பண்ணலாம்’னு சொன்னார். ரஜினி சாரோடு சுமார் 20 நிமிடம் பேசிட்டிருந்தோம்.” 

“அப்போ ரஜினியின் அடுத்த படத்தில் நீங்க இருக்கீங்க?”

“அவர்  ஸ்டைல்ல சொல்லணும்னா, இறைவன்தான் முடிவுசெய்யணும். நமக்குக் கிடைக்கணும்னு இருந்தா நிச்சயம் கிடைக்கும்.”  

“ட்ரெண்டு மாறிடுச்சு, புது காமெடி நடிகர்களின் வரவு  அதிகமாகிடுச்சு. உங்களை அப்டேட் பண்ணாமவிட்டதால்தான், பட வாய்ப்பு குறைந்ததாக நினைக்கிறீங்களா?”

“இப்போ வரைக்கும் ஹீரோக்கூட சோலோ ட்ராக் பண்ணதில்லை. ரெண்டு கைகளும் சேர்த்து தட்டினால்தான் ஓசை எழும். ஒரு காமெடியன் பேசுற பன்ச்சுக்கு நான் கவுன்ட்டர் கொடுத்தால்தான் அது காமெடி. நான் மட்டுமே படம் முழுவதும் காமெடி பண்ணா கடுப்புதான் வரும். கவுண்டமனி - சத்யராஜ் சார் ரெண்டு பேரும் சேர்ந்து நடிச்சதுனால்தான் ஹிட்டாச்சு. விவேக், தாமு, சார்லின்னு அவங்ககூட நடிச்சதைத்தான் என்னோட ப்ளஸ்ஸா நினைக்கிறேன். எத்தனை புதுமுகங்கள் வந்தாலும் வாழ்த்துகள். புது காமெடி நடிகர்கள், நடிக்கக் கூப்பிட்டாலும் நடிப்பேன். இன்றைக்கு ட்ரெண்டுல இருக்கிறவங்ககூட சேர்ந்து நடிப்பதுகூட, நம்மை ட்ரெண்டுல வெச்சிட்டிருக்கிற மாதிரிதானே.”


“நிறைய படங்கள், நிறைய கேரக்டர்கள் நடிச்சுட்டீங்க. ஆனாலும் மிகப்பெரிய ஹிட் கொடுக்கலைன்னு வருத்தம் உண்டா?”

“ இப்போ தொப்பி போட்டுத்தான் வெளியவே வர்றேன். காரணம், தலையில் முடி, மேல வரைக்கும் ஏறிடுச்சு. இப்போ வரைக்கும் விக் வெச்சு நடிச்சதில்லை. இனிமேல், நல்ல கேரக்டர் ரோல் வந்தா நடிக்கலாம்கிறதுதான் என் விருப்பம். ஆனா, காலையில் வாக்கிங் போகும்போது, பார்க்கிறவங்க ‘என்ன சார் இப்போ எதுவும் படம் இல்லைபோல, அப்போ அவ்வளவுதானா?’னு கேட்பாங்க. நான் நடிக்க மாட்டேன்னு சொல்லலை. நிறைய காமெடி நடிகர்கள் வந்துட்டாங்க. காமெடியனாக இல்லாவிட்டாலும் மாமா, அப்பா, மச்சான்னு எந்த ரோல்னாலும் நடிக்க ரெடி. சீக்கிரமே பழைய மாதிரி ஹிட் கொடுப்பேன்.” 

“கைவசம் என்னென்ன படங்கள் இருக்கு?” 

“வெற்றி மாறன் இயக்கத்தில் தினேஷ் நடிக்கும் படம் ரெடி. இந்தப் படத்துல ராதாரவி சாருக்கு அசிஸ்டென்டா சைலன்ட் வில்லனா நடிச்சிருக்கேன். விக்ரம்பிரபுவோடு ‘பக்கா’. இன்னும் பத்து பதினைந்து படங்கள் ரிலீஸாக ரெடியா இருக்கு. எல்லா படங்களும் ரிலீஸானா நீண்ட இடைவெளிக்குப் பிறகு வையாபுரியைத் திரையில் பார்க்கலாம்.”

“நடிப்பிலிருந்து அரசியலுக்கு ஏன் வந்தீங்க?” 

``அரசியல் பற்றியெல்லாம் பெருசா எனக்கு எதுவுமே தெரியாது. ஷூட்டிங் இல்லை. அதனால மீட்டிங் போனேன். அங்கே போய் நான் ஏதும் நடிக்கவும் செய்யலை. எந்தத் தலைவர் பற்றியும், எந்தக் கட்சியைப் பற்றியும் எதிரா பேசாம, என் சார்புக் கட்சியின் திட்டங்கள் பற்றி மட்டும்தான் பேசி ஓட்டு கேட்டேன். எந்தத் தலைவரையும் இதுவரையும் விமர்சனம் பண்ணதில்லை. நகைச்சுவையா கட்சி மீட்டிங்கில் பேசுறதுனால எல்லா கட்சிக்காரர்களுக்கும் என்னைப் பிடிக்கும்.” 

“ஜெயலலிதா இல்லாத கட்சியை எப்படிப் பார்க்குறீங்க?”  

``உண்மையிலேயே தமிழ்நாட்டுக்கே அம்மா இல்லாத மாதிரிதான் நினைக்கிறேன். எனக்கு அம்மா கிடையாது.  நான் அவங்களைதான் அம்மாவா நினைப்பேன்.  அம்மா செய்ய நினைச்சதை, அ.தி.மு.க. - கட்சியினர்தான் செய்யணும்.” 

“ஆனா, கட்சி இரண்டா பிரிந்து கிடக்கே!”  

``அம்மா,  கஷ்டப்பட்டு ஜெயிச்சு ஆட்சியைப் பிடிச்சாங்க; மக்கள் மனதிலும் இடம்பிடிச்சாங்க. இன்னும் நான்கு ஆண்டுகள் இந்த ஆட்சி தொடரணும். கட்சிக்குள்ள எந்தக் கருத்து வேறுபாடும் இல்லாம எல்லோரும் ஒற்றுமையா இருக்கணும். அதுதான் என் விருப்பம். ”

“ரஜினி கட்சி ஆரம்பிச்சா, நீங்க அவர் சார்பா பேசுவீங்களா?”

“ஆண்டவன் நினைத்தால் பார்க்கலாம்னுதான் ரஜினி சார் சொல்லியிருக்கார். ஒருவேளை அவர் அரசியலுக்கு வந்தால், அவரின் கட்சித் திட்டங்கள் நல்லா இருந்தால் நிச்சயம் மக்களுக்கு எடுத்துச்சொல்வேன். மக்களுக்கு நல்லது செய்யணும்னு நினைக்கிறவங்க யாரா இருந்தாலும் அவங்களைப் பற்றிப் பேசுறது தப்பில்லை.”  

“தேர்தலில் போட்டியிடும் எண்ணமிருக்கா?” 

“நீங்க நம்பினாலும் நம்பாவிட்டாலும், அரசியலில் போட்டியிடவோ, பதவியின் மீதோ ஆசையோ எனக்குக் கிடையாது. யாரையும் பகைவனா நினைக்க மாட்டேன். முதல்ல இருந்தே எதிரி இல்லாமலேயே வாழ்ந்துட்டேன். கடைசிவரைக்கும் அப்படியே இருக்க ஆசைப்படுறேன்.”

அடுத்த கட்டுரைக்கு