அஜித்திடம் மிஸ்... ரஜினி மூலம் என்ட்ரி! யார் அந்த ஹூமா குரேஷி?

ஒருவழியாக ரஜினி - பா.இரஞ்சித் இணையும் படத்துக்கு ஹீரோயின் கிடைத்துவிட்டார். பாலிவுட் நடிகை ஹூமா குரேஷிதான் அந்த லக்கி நடிகை. 'ஆம், இவர்தான் நடிக்கிறார்' எனச் சொல்லி, ஒரு வரியில் கடந்துவிட முடியாது. ஹூமாவின் நடிப்பைப் பற்றித் தெரிந்தவரிடமிருந்து "வாவ்... தமிழ்ல நடிக்கிறாங்களா... செம!" என்ற ரியாக்‌ஷன்தான் வரும். நடித்தது 12 படங்கள்தான், நடிக்கத் தொடங்கி ஐந்து வருடங்கள்தான் ஆகின்றன. அப்படி என்ன செய்துவிட்டார், யார் இந்த ஹூமா குரேஷி?

ரஜினி

விளம்பரங்களில் நடித்துக்கொண்டிருந்த ஹூமாவை, சினிமாவுக்கு அழைத்துவந்தார் அனுராக் காஷ்யப். ஆனால், அதற்கு முன்பே ஆடிஷன் மூலம் ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அது அஜித்குமார் நடித்த `பில்லா-2'. படம் தொடங்க தாமதமாகவே படத்திலிருந்து விலகிக்கொண்டார். `பில்லா-2' மூலம் அறிமுகமாகியிருக்கவேண்டியவர், அனுராக்கின் 'கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர்' மூலம் அறிமுகமானார். இரண்டு பாகங்களிலும் ஹூமாவின் நடிப்பு பரவலாகப் பேசப்பட்டது. இத்தனைக்கும் படத்தில் ஹூமாவுக்கு சப்போர்ட்டிங் ரோல்தான். ஆனால், மோனிஷா கதாபாத்திரம் மூலம் ரசிகர்கள் மனதில் ஆழமாகப் பதிந்தார்.

அறிமுகமானபோது வழக்கமான பாலிவுட் ஹீரோயின்கள்போல சைஸ் ஸீரோ உடல்வாகு ஹூமாவுக்குக் கிடையாது. ஆனால், அவரின் நடிப்பு பலரையும் கவர்ந்தது. அடுத்ததாக 'லவ் ஷுவ் தே சிக்கன் குரனா' என்ற காமெடிப் படத்தில் நடித்தார். இதில் ஹூமாதான் மெயின் லீட். கனமான ரோல் மட்டுமல்ல, காமெடி படத்திலும் தன்னால் பெர்ஃபாம் செய்ய முடியும் என நிரூபித்தார். அந்தப் படத்துக்காக நிறைய பாராட்டுகளைப் பெற்றார். அதன் பிறகு நடித்த 'ஏக் தி தாயன்', 'டி-டே' படங்கள் மிக்ஸ்டு ரிவ்யூஸ் பெற்றன என்றாலும் ஹூமாவின் நடிப்பைப் பற்றி மட்டும் 'இந்தப் பொண்ணு ஹூமா, படத்துக்குப் படம் அசத்துறா' எனக் குறிப்பிட்டு எல்லா பத்திரிகைகளும் பாராட்டிக்கொண்டே இருந்தன.

'ஷார்ட்ஸ்', 2013-ம் ஆண்டில் வெளியான ஆந்தாலஜி படம். ஐந்து இயக்குநர்கள் இயக்கியிருந்த குறும்படங்களின் தொகுப்பில் `சுஜாதா' என்ற படத்தில் ஹூமா நடித்திருந்தார். படத்தை இயக்கியது ஸ்லோக் ஷர்மா. 20 நிமிடக் குறும்படத்தில் ஹூமா வரும் காட்சி
10 நிமிடங்களுக்கும் குறைவுதான். அதில் ஒரு காட்சி, கர்ப்பிணி ஒருவருக்கு மசாஜ் செய்துகொண்டே, பாதத்தைப் பற்களால் கடிக்கவேண்டும். எந்தத் தயக்கமும் இல்லாமல் நடித்திருப்பார் ஹூமா. குறும்படமோ, திரைப்படமோ ஹூமாவின் அர்பணிப்பும் நடிப்பும் ஒன்றுதான். நடிக்கும் கதாபாத்திரத்தில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக்கொள்வதுதான் ஹூமாவின் ஸ்டைல். 

ஷார்ட்ஸ்

 

 

 

'தே இஷக்யா', 'பட்லபூர்', 'ஹைவே' (மராத்தி) படங்களும் ஹூமாவுக்குப் பாராட்டுகளைப் பெற்றுத்தந்தன. குறிப்பாக, 'பட்லபூர்' படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்திருந்ததற்கு நிறைய பாராட்டுகளைப் பெற்றார் ஹூமா. இதேபோல மலையாளத்தில் மம்மூட்டியுடன் நடித்த ஒயிட், ஹாலிவுட் படமான 'விக்டோரியாஸ் ஹவுஸ்', தன் சகோதரருடன் நடித்திருக்கும் 'தோபரா' படங்கள் எல்லாம் முடித்துவிட்டு இப்போது சூப்பர் ஸ்டார் படத்தில் ஜோடி சேர இருக்கிறார். மிக இயல்பான நடிப்பு, எந்த ரோல் என்றாலும் தயங்காமல் சிறப்பாக நடித்துக்கொடுப்பது எனப் பல திறமைகள் இருந்தும் இன்னும் ஹூமாவைப் பற்றி ஓயாமல் பேசவைப்பதற்கான படம் அவருக்குக் கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த மாதிரியான படமாக அவரின் இந்தத் தமிழ்ப் படம் அமையும் என நம்புவோம்.

வெல்கம் டு கோலிவுட் ஹூமா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!