Published:Updated:

‘நான் யாரு?’ ஆழம் பார்க்க அஜித் எடுத்த ரிஸ்க்... ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினி தொடர் பாகம் 7

‘நான் யாரு?’ ஆழம் பார்க்க அஜித் எடுத்த ரிஸ்க்...  ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினி தொடர் பாகம் 7
‘நான் யாரு?’ ஆழம் பார்க்க அஜித் எடுத்த ரிஸ்க்... ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினி தொடர் பாகம் 7

‘நான் யாரு?’ ஆழம் பார்க்க அஜித் எடுத்த ரிஸ்க்... ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினி தொடர் பாகம் 7

‘என் வீடு என் கணவர்’ என்ற படத்தில் ஒரு பாடல் காட்சியில் சில விநாடிகள் வந்து போனது மூலம் அமைந்ததுதான் அஜித்தின் முதல் சினிமா வாய்ப்பு. ஆனால் அடுத்து வந்த ‘பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்கு பட வாய்ப்புதான் மிகச்சரியான அறிமுகம். 1992  ஆகஸ்ட் 3ல் அந்தப் பட, ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து கணக்கிட்டால், இன்னும் சில மாதங்களில் 25 வது வருடத்தைத் தொடுகிறார் அஜித். அன்றைய தெலுங்கு பட அறிமுக அஜித், ‘வேறு மொழிப் படங்களில் நடிக்க மாட்டேன். தமிழில் மட்டும்தான் நடிப்பேன்’ என்று சொல்லும் இன்றைய ‘விவேகம்’ அஜித்தாக வளர்ந்தது எப்படி? இந்தக் கேள்விக்கான பதிலை அவரின் இந்த கால்நூற்றாண்டு கால திரைப்படங்களின் வழியாக நாம் உணர முடியும். அதற்கான ஒரு ரீவைண்ட் தான்.. இந்த ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினி தொடர்! 

‘தினமும் திறந்த ஜீப்பில் எங்களைப் பார்த்து கை அசைத்தபடி போகணும்’ என்று அஜித்தை அன்பு கட்டளையிட்ட மக்கள், நடிகர் திலகம் சிவாஜி இறந்தபோது அஜித் எங்கிருந்து வந்தார் தெரியுமா? விஷ்ணுவர்தனை கண்டெடுத்த திரைப்படம், ரசிகர்களின் ஆழம் பார்க்க அஜித் நடித்த படம்...  அஜித்தின் அடுத்த ஐந்து திரைப்படங்களைப் பற்றி இன்று பார்ப்போம்.

31. ‘சிட்டிசன்’
‘நண்பர் ஒருவர் நல்ல ஸ்க்ரிப்ட் வெச்சிருக்கார். அவரை கூட்டிட்டு வரவா?’ என்று கேட்டிருக்கிறார் கேமராமேன் செல்வமணி பன்னீர்செல்வம். ‘இந்திய வரைபடத்திலிருந்து காணாமல்போன கிராமம். அதன் ஒரு குரல், ஐ.நா சபையில் எதிரொலிக்கிறது.’ இதுதான் அந்த லைன். சொன்னவர் இயக்குநர் சரவண சுப்பையா. ‘நாம பண்ணலாம். யூ டூ த ஸ்க்ரிப்ட் ’ என்றார் அஜித். அந்த மீனவர் கதாபாத்திரத்தில் தனக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என எதிர்பார்த்தார் அஜித். ‘தீனா’வுக்கே மிகப்பெரிய ஓப்பனிங் இருந்தது என்று சொல்வார்கள். ஆனால் அதை அஜித் நேரில் உணர்ந்தது ‘சிட்டிசன்’ படப்பிடிப்பில்தான். பழவேற்காடு அருகே படப்பிடிப்பு. ‘அஜித் தினமும் ஷூட்டிங் முடித்து போகும்போது திறந்த ஜீப்பில் ஃபோகஸ் லைட் போட்டுக்கொண்டு எங்களைப் பார்த்து கை அசைத்தபடிதான் போகணும்’ என்று அன்பு மிகுதியால் அந்தக் கிராம மக்கள் கலாட்டா செய்திருக்கிறார்கள். அங்கு படப்பிடிப்பு நடந்த பத்து நாள்களும் அஜித் அப்படித்தான் வீடு திரும்பினார். ஆனால், ‘சிட்டிசன்’ அவர் எதிர்பார்த்த அளவுக்கு அங்கீகாரத்தைப் பெறவில்லையே என்ற வருத்தம் அஜித்துக்கு இன்றும் உண்டு. 

32. ‘பூவெல்லாம் உன் வாசம்’
‘தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிக்கு ஒரு படம் பண்ணணும். ஃபீல் குட் மூவியா இருந்தா நல்லா இருக்கும்’ என்று முடிவுசெய்து நடித்த படம் இது. குலுமணாலியில் படப்பிடிப்பு. ‘நடிகர்திலகம் சிவாஜி இறந்துவிட்டார்’ என்ற செய்தி வருகிறது. குலுமணாலியிலிருந்து டெல்லிக்கு வந்து அங்கு ஃப்ளைட் பிடித்து சென்னைக்கு வரவேண்டும் என்பது அஜித்தின் திட்டம். ஆனால், குலுமணாலியில் பேய்மழை. ‘இந்த மழையில கார் ஓட்ட முடியாது சார்’ என்று டிரைவர் மறுத்திருக்கிறார். பிறகு, அங்கிருந்து டெல்லி வரை இவரே கார் ஓட்டி வந்து, டெல்லி டு சென்னை சாட்டர்ட் ஃப்ளைட் பிடித்து சிவாஜிக்கு அஞ்சலி செலுத்துவிட்டுச் சென்றார். 

33. ‘அசோகா’
சின்ன கேரக்டர். கிட்டத்தட்ட வில்லன்ரோல். இயக்குநர் மணிரத்னத்தின் ஆடிட்டர் கணபதி சுப்ரமணியம் என்பவர் ஒருங்கிணைத்த புராஜெக்ட். தவிர, ஷாரூக் கான் அஜித்துடன் பெர்சனலாகப் பேசியதால் நடித்துக்கொடுத்த படம். அஜித், தான் நடிக்கும் படங்களில் பணிபுரியும் உதவி இயக்குநர்களைக் கூர்ந்து கவனிப்பார். பரபரப்பாக வேலைசெய்வது, ஒரு விஷயத்தில் முடிவெடுக்கும் தன்மை... எனத் திறமையான உதவி இயக்குநர்களைத் தேர்ந்தெடுத்து தன் அடுத்தடுத்த படங்களில் வாய்ப்பு கொடுப்பார். அப்படி ‘அசோகா’வில் வேலைசெய்த உதவி இயக்குநரை அவருக்கு மிகவும் பிடித்துப்போனது. அவர்தான் இயக்குநர் விஷ்ணுவர்தன். அதன் பிறகு ‘பில்லா’, ‘ஆரம்பம்’ போன்ற படங்களை இயக்கினார் விஷ்ணுவர்தன். 

34. ரெட்
எல்லா பெரிய நடிகர்களும் குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தில், ‘நாம இன்னிக்கு எங்கே நிக்கிறோம்?’ என்று ஆழம் பார்க்க ஒரு படம் நடிப்பார்கள். அஜித் அப்படி நடித்த படம்தான் ‘ரெட்’. தயாரிப்பாளர் பூர்ணசந்திரராவுக்கு ‘ஏறுமுகம்’ என்ற படம் ஆரம்பித்து டிராப் ஆனது. அந்தப் படத்தில் இவருக்கு தாதா கேரக்டர். ‘ரெட்’ டைரக்டர் சிங்கம்புலி கொண்டுவந்ததோ, காதல் கதை. அந்த ‘ஏறுமுகம்’ தாதாவையும் சிங்கம்புலியின் காதலையும் ஒன்றாகப்போட்டு குலுக்கி எடுத்ததில் வந்த படம்தான் ‘ரெட்’. மதுரைக்கும் இவருக்கும் புவியியல், உயிரியில் என எந்தவிதமான கனெக்‌ஷனும் இல்லை. ஆனால் மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் தமிழகத்தில் இவருக்கு வெறிபிடித்த ரசிகர்கள் உண்டு. ‘ரெட்’டில் ஒவ்வொரு ஏரியாவைப் பற்றியும் வசனம் வரும். அப்போது அந்தந்த ஏரியா தியேட்டர்களில் விசில் பறந்தது. தன் ஹீரோவின் படப் பெயரை தங்களுடைய பெயர்களுக்கு முன்னால் வைத்துக்கொள்வது ரசிகர்களின் பொதுவான வழக்கம். அப்படி அஜித்தின் ரசிகர்கள் ‘ரெட்’ படத் தலைப்பைத் தங்கள் பெயர்களுக்கு முன்னால் வைத்துக்கொண்டுள்ளவர்களே அதிகம். 

35. ‘ராஜா’
‘பூவெல்லாம் உன் வாசம்’ ஹிட் கொடுத்த இயக்குநர் எழிலுடன் சேர்ந்து இன்னொரு படம் பண்ண வேண்டும் என்று நடித்த படம். இது ஓர் இந்திப் படத்தின் ரீமேக். ஆனால் ‘ராஜா’ சரியாகப் போகவில்லை. 

‘வில்லன்’ கதையை எழுதிய பிரபலம், அஜித் நடித்த போர்ஷனை இன்னொரு நடிகரின் படத்தில் சேர்த்து ரிலீஸ் செய்த படம், அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்த முதல் படம், அஜித் சினேகாவுடன் நடித்த ஒரே படம், அஜித் தூத்துக்குடி ஸ்லாங் பேசி நடித்த படம்... நாளை பார்ப்போம்.

- அஜித் அறிவோம்..!

அடுத்த கட்டுரைக்கு