Published:Updated:

மாநகரம் முதல் பவர் பாண்டி வரையிலான படங்களில் இவர்களும் ஹீரோதான்!

தார்மிக் லீ
மாநகரம் முதல் பவர் பாண்டி வரையிலான படங்களில் இவர்களும் ஹீரோதான்!
மாநகரம் முதல் பவர் பாண்டி வரையிலான படங்களில் இவர்களும் ஹீரோதான்!

ந்த ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த சில படங்களில், ஹீரோக்கள், ஹீரோயின்களை தாண்டி சில குணச்சித்திர கதாபாத்திரங்களும் நம் கவனத்தை ஈர்த்தார்கள். அவர்களில் சிலரைப் பற்றி இங்கே...

முனீஸ்காந்த் :

2011-ல் இருந்தே `எத்தன்', `கடல்', `சூது கவ்வும்' என பல படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இவர் இடம்பிடித்தது `முண்டாசுப்பட்டி' படத்தின் மூலமாகதான். இவரின் உண்மையான பெயர் ராமதாஸ். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டையைச் சேர்ந்தவர். இயல்பு வாழ்க்கையில் எப்படி பேசுவாரோ அதே கலாய் கவுன்டர்களைத் தான் கேமரா முன்னும் போட்டுத் தாக்குகிறார். இவர் பேச்சில் `திண்டுக்கல்' லியோனி சாயலும் ஆங்காங்கே தென்படும். அதே நக்கலான பேச்சைதான் `மாநகரம்' படத்திலும் பயன்படுத்தியிருப்பார். படத்தின் ஆரம்பம் முதல் க்ளைமாக்ஸ் வரை சீரியஸான சீன்களிலும் காமெடிகளை அள்ளித்தெளித்தது படத்துக்கும் ப்ளஸ் ஆகிப்போனது. 

ரின்ஸன் : 

மில்லிமீட்டராக தனது சினிமா பயணத்தை `நண்பன்' படம் மூலம் தொடங்கினார் ரின்ஸன். அதற்கு முன் `பாய்ஸ் vs கேர்ள்ஸ்', `ஜோடி நம்பர்-1' என சின்னத்திரையில் கலக்கிக் கொண்டிருந்தார். சிம்பு நடுவராக இருந்த `ஜோடி நம்பர்-1' நிகழ்ச்சியில் இவரின் ஆட்டத்தைக் கண்ட சிம்பு `காளை' படத்தில் இவருக்கு ஆட ஒரு வாய்ப்பு கொடுத்தார். ப்ளஸ் 2 வரையுமே படித்திருக்கும் ரின்ஸனுக்கு தெரிந்ததெல்லாம் டான்ஸ், டான்ஸ், டான்ஸ் மட்டும்தான். சமீபத்தில் இவருக்கு தனுஷ் இயக்கத்தில் வெளியான `ப. பாண்டி' படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. ராஜ்கிரண் இருக்கும் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுப் பையனாக நடித்திருந்தார். கிட்டதட்ட ராஜ்கிரணை `போயா வாயா' என கூப்பிடும் அளவிற்கு க்ளோஸ் ஃப்ரெண்ட் ரோலில் நடித்திருப்பார். படம் வெற்றியடைந்த பின் தனுஷே தனிப்பட்ட முறையில் போன் செய்து வாழ்த்தியிருக்கிறார். படத்தில் சில சீன்களிலேயே வந்தாலும் செமையாக ஸ்கோர் செய்திருப்பார் ரின்ஸன்.

சார்லி :

சார்லிக்கு அறிமுகமே தேவையில்லை. தமிழ் சினிமாவில் சின்னச்சின்ன முகபாவனைகள் மூலம் தனக்கென்று ஒரு இடத்தை உண்டாக்கிக் கொண்டார். ஏறத்தாழ எல்லா பெரிய ஹீரோக்களுடனுமே நடித்துவிட்டார். ஆரம்பத்தில் இருந்தே காமெடி கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வந்த இவர், `கிருமி' படம் வெளியான பிறகுதான் கேரக்டர் ரோல்களிலும் அடித்து துவம்சம் செய்வார் என்று தெரியவந்தது. அதேபோல், சமீபத்தில் வெளியான `மாநகரம்' படத்திலும் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அன்றாட வாழ்விற்கு கஷ்டப்படும், நடுத்தர வாழ்க்கையை வாழ்ந்து வரும் ஒரு டாக்ஸி டிரைவராகவே வாழ்ந்திருப்பார் என்று சொல்லலாம். காமெடி கதாபாத்திரங்களில் எந்த அளவுக்கு முக பாவனைகள் கொடுத்து நடிப்பாரோ அதைவிட பல மடங்கு குணசித்திர கதாபாத்திரங்களிலும் கொடுத்து நடித்துவருகிறார்.  

எம்.எஸ்.பாஸ்கர் :

சார்லியைப் போலவே இவரும் காமெடி நடிகர்களுள் ஒருவராகத்தான் களம் இறங்கினார். ஆனால் `மொழி', `பயணம்' போன்ற படங்களில் மூலம் நல்ல குணசித்திர நடிகர் என்றும் தன்னை நிரூபித்தார். `உத்தம வில்லன்' படத்தில் கமலுடன் இடம்பெறும் அந்த ஒற்றைக் காட்சியே போதும், இவரது திறமையைச் சொல்ல. சமீபத்தில் வெளியான `8 தோட்டாக்கள்' படத்தின் மூலம் அடுத்த கட்டத்தை எட்டிவிட்டார் என்றே சொல்லலாம். ஹீரோவை விட எம்.எஸ்.பாஸ்கர் நடித்த கதாபாத்திரம் தான்  அனைவரையும் கவனிக்கவைத்தது. `பிரேக்கிங் பேட்' என்ற ஆங்கிலத் தொடரை இன்ஸ்பிரேஷனாக வைத்து எடுக்கப்பட்ட படம்தான் `8 தோட்டாக்கள்'. அந்தத் தொடரின் ஹீரோ கதாபாத்திரமும், இந்தப் படத்தில் எம்.எஸ்.பாஸ்கர் கதாபாத்திரமும் கிட்டதட்ட ஒன்றுதான். ஆனால், அந்தத் தொடரின் ஹீரோவின் நடிப்பைவிட எம்.எஸ்.பாஸ்கரின் நடிப்பு வேற லெவலில் இருக்கும்.

ரேவதி :

அந்தக் காலத்தில் டாப் கதாநாயகிகள் பட்டியலில் ரேவதியும் ஒருவர். `மகளிர் மட்டும்', `தேவர் மகன்', `மௌன ராகம்' என பல ப்ளாக்பஸ்டர் படங்களில் நடித்தவர். சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு  `ப.பாண்டி' படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். இவர் நடிப்பில் அந்தப் பழைய குறும்புத்தனம் கொஞ்சம் கூட குறையாமல் அவ்வளவு க்யூட்டாக நடித்திருந்தார். பாதிப் படம் முடிந்தபின்பு தான் ரேவதி படத்திற்குள் என்ட்ரி ஆவார். அதுவரை ராஜ்கிரண் மீதிருக்கும் கவனம் ரேவதி மீது திரும்பி விடும். வயசானாலும் உங்க க்யூட்னஸ் உங்களை விட்டு போகலை மேடம்.