Published:Updated:

‘முதல்வர் மாறிட்டா, எல்லாம் சரியாகிடுமா?' - அரசியல் வித் ஆர்.ஜே.பாலாஜி

‘முதல்வர் மாறிட்டா, எல்லாம் சரியாகிடுமா?' - அரசியல் வித் ஆர்.ஜே.பாலாஜி
‘முதல்வர் மாறிட்டா, எல்லாம் சரியாகிடுமா?' - அரசியல் வித் ஆர்.ஜே.பாலாஜி

"ஹாய்... ஹலோ...  ஹவ் ஆர் யூ? ஜனவரிக்கு அப்புறம் இப்பத்தான் பேசுறேன். என்ன வேணும்னாலும் கேளுங்க. நான் ரெடி" என்று ஆர்வமாகச் சொன்ன ஆர் ஜே பாலாஜியிடம் ஓர் அரசியல் பேட்டி.

.

"சமச்சீர் கல்வி பற்றி ஏன் சர்ச்சையான ஒரு கருத்தைச் சொன்னீங்க?"

"நான் `நீட்' தேர்வுக்காகத்தான் அந்தக் கருத்தைச் சொன்னேன். இங்கே ஒவ்வொரு மாநிலத்துலயும் ஒவ்வொரு மாதிரியான பாடத்திட்டம் இருக்கு. அதையெல்லாம் மாற்றி, நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தைக் கொண்டுவரணும். அதுக்காக, ஐந்து வருஷம்கூட டைம் எடுத்துக்கோங்க. அதுக்கு அப்புறம் `நீட்' தேர்வு நடத்தினால் அது நியாயம். இதுதான் நான் சொன்ன கருத்து. இதுக்காக சமச்சீர் கல்வி ரொம்பக் கேவலமான தரத்துல இருக்குனு சொல்லலை. ஆனா, நம்ம கல்விமுறை ரொம்பக் கம்மியான தரத்துலதான் இருக்கு. அதை ஏத்துக்கிட்டுதான் ஆகணும். அதுக்காக, யாரோ நூறு பேர் பைத்தியக்காரத்தனமா சொல்லிட்டு இருப்பவர்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை."

"ரஜினி, `அரசியலுக்கு வரணும்னு இருந்தால் வருவேன்'னு சொல்லி இருக்கிறார். அவர் வருவார்னு நினைக்கிறீங்களா?"

"நான் ஸ்கூல் படிக்கும்போது தமிழ்நாடு பாலிட்டிக்ஸ் ரொம்ப பீக்ல இருந்துச்சு. எங்க தாத்தா எது பேசினாலும் அவர் பேச்சை கேட்கிற ஒரே ஆளு நான் மட்டும்தான். அப்ப 'முத்து' படம் ரிலீஸாகி இருந்தது. 'இந்தப் படத்துல ரஜினி, மீனாகிட்ட பேசுற வசனம் எல்லாம் ஜெயலலிதாவுக்குச் சொல்ற பதில்தான்'னு என்கிட்ட தாத்தா சொன்னார். 'ஏம்மா... நான் பாட்டுக்கு என் வேலையைப் பார்த்துட்டுதான இருக்கேன்'னு ரஜினி சொல்ற வசனத்தைக் கேட்டு, ஆறாவது படிக்கிற எனக்கே `இது அரசியல்'னு தெரிஞ்சது. அப்புறம் நான் 11-வது படிக்கும்போது `பாபா' வெளிவந்தது. அதுல வர்ற ஒரு பாட்டுலயும் 'பாபா... கிச்சுக் கிச்சு தா'னு வரும். அதுக்கு இவர் தர மாட்டேன்னுதானே சொல்லணும். ஆனா, தலையை ஆட்டி  'தமிழ்நாடு... தமிழ்நாடு என் உயிர் நாடு...'னு அங்கேயும் அரசியல் பேசுவார். ஒவ்வொரு முறையும் இப்படித்தான் பேசிட்டிருக்கிறார். அரசியலுக்கு வருவது காலத்தின் கையில்னு 25 வருஷமா கேட்டாச்சு. நான் தீவிரமான சூப்பர் ஸ்டார் ரசிகன் என்ற முறையில் சொல்றேன். அவர் இப்ப அரசியலுக்கு வருவார்  என்ற நம்பிக்கை  எனக்கு இல்லை. அது போயிடுச்சு."

பார்ட் - 1 

"அவர் படம் ரிலீஸ் ஆகுற நேரத்துலதான் அரசியல் பற்றிப் பேசுவார்னு நினைக்கிறீங்களா?"

"யாராவது புது ஹீரோ இப்படிப் பண்ணினால் `ஸ்டன்ட்'னு சொல்லலாம். ஆனால், சூப்பர் ஸ்டார் படம் ரிலீஸ் ஆச்சுன்னா, இந்தியா முழுவதும் உள்ள நியூஸ் சேனலில் 'why he is super star?'னு விவாதமே நடத்துறாங்க. `ஷாரூக் கான்கிட்ட இல்லாதது, அமீர் கான்கிட்ட இல்லாதது, சூப்பர் ஸ்டார்கிட்ட என்ன இருக்கு?'னு விவாதிக்கிறாங்க. அதனால, படம் ஓடவைக்கணும்னு ஸ்டன்ட் மாதிரி எனக்குத் தெரியலை. ஆனா, 99.99 சதவிகிதம் ரஜினி, அரசியலுக்கு வர மாட்டார். இப்ப என் பையனுக்கு நான் 'முத்து' படம் பார்த்த வயசாகுதுங்க."

"சரி, நீங்க அரசியலுக்கு வருவீங்களா?"

"என்னங்க, வீட்டுக்கு சிக்கன் சாப்பிட வருவீங்களானு கூப்பிடுற மாதிரி கேட்குறீங்களே... ஒருத்தருக்கு அவரைச் சுற்றி நடக்கிற எல்லா விஷயங்களிலும் ஆர்வம் இருக்கு, அக்கறை இருக்குன்னா, அவர் அரசியலுக்கு வரணும்னு எந்தக் கட்டாயமும் கிடையாது. தேர்தல் அரசியலுக்கு வந்தால்தான் மாற்றம் நிகழ்த்த முடியும்னு எதுவும் இல்லை. இப்ப கருணாஸ் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். அவரால் தமிழ்நாட்டுக்கு என்ன நல்லது நடந்தது? அவரைக் குறிப்பிட்டுச் சொல்வதால் அவரை மட்டும் சொல்லலை,  இங்கே ஒரு சி.எம் மாறுவதால் எதுவும் மாறிவிடாது. ஒரு முதலமைச்சருக்குக் கீழே எம்.எல்.ஏ., வட்டச் செயலாளர், வார்டு மெம்பர்னு பல ஆயிரம் பேர் இருக்காங்க. இவங்க ஒவ்வொருத்தரும் கொள்ளை அடிச்சுக்கிட்டு, கட்டப்பஞ்சாயத்துப் பண்ணிட்டிருக்கும்போது ஒரு சி.எம் மட்டும் மாறினால் ஒரு மாநிலம்  மாறும்னு நம்பிக்கை எனக்கு இல்லை. இங்கே சிஸ்டத்தை முதலில் மாற்றணும். சிஸ்டத்தை மாற்றணும்னா நிறைய பேர் வரணும். இப்ப நான் ஒருத்தர் வருவதால் மட்டும் எதுவும் நடக்காது. இப்ப நான் அரசியலுக்கு வருவதால் எந்த மாற்றமும் நடக்காது. அரசியலுக்கு வராமலேயே பல நேர்மையான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிங்களை உருவாக்கி நல்லது செய்ய முடியும்."

பார்ட் - 2

"ஜல்லிக்கட்டுப் பிரச்னையின்போது ஏன் அவ்வளவு குழப்பமா பேசுனீங்க?"

"அந்த இறுதி நேரத்துல ஜல்லிக்கட்டுப் பிரச்னை முடிஞ்சுப்போயிடுச்சுனு யாரெல்லாம் சொன்னாங்களோ, அவங்களை எல்லாம் அசிங்கப்படுத்த ஆரம்பிச்சுட்டாங்க. இன்னொன்னு, 100 பேருடைய எண்ணங்கள் என் மைண்ட்ல போயிட்டிருக்கு. ஒருத்தன் `முடிஞ்சுடுச்சு'னு சொல்லச் சொல்றான். இன்னோருத்தன் `முடியலை'னு சொல்லச் சொல்றான். வேற ஒரு ஆள் `இதை எல்லாம் நீ சொல்லவே சொல்லாத, வாயை மூடு'னு சொல்றான். எனக்கு அப்போ என்ன பண்றதுன்னே தெரியலை. அதனால, 'முடிஞ்சுடுச்சுனா நீங்க கிளம்புங்க. இல்லைன்னா அங்கேயே இருங்க'னு சொன்னேன். இந்த மாதிரி பேசுற ஆள் நான் கிடையாது. அந்தச் சமயத்துல என்னைக் குழப்பிட்டாங்க. கடைசி நேரத்துல நடந்த நிகழ்வுகளை எல்லாம் பார்த்து இயலாமையால் அழுதுட்டேன். அந்த அசம்பாவிதத்தை என்னால் முடிஞ்ச அளவுக்குத் தடுத்திருக்கலாம்னு தோணுச்சு."