Published:Updated:

''குழந்தைங்க மரியாதை இல்லாம பேசுனா, வருத்தமா இருக்கும்!'' - இமான் அண்ணாச்சிக்கு என்னாச்சு?

''குழந்தைங்க மரியாதை இல்லாம பேசுனா, வருத்தமா இருக்கும்!'' - இமான் அண்ணாச்சிக்கு என்னாச்சு?
''குழந்தைங்க மரியாதை இல்லாம பேசுனா, வருத்தமா இருக்கும்!'' - இமான் அண்ணாச்சிக்கு என்னாச்சு?

''குழந்தைங்க மரியாதை இல்லாம பேசுனா, வருத்தமா இருக்கும்!'' - இமான் அண்ணாச்சிக்கு என்னாச்சு?

சன் டி.வி யில் கடந்த ஐந்து வருடங்களாக ஞாயிற்றுக்கிழமையில் ஒளிபரப்பாகிவரும் குட்டிச் சுட்டீஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிவருகிறார் இமான் அண்ணாச்சி. இது தவிர சன்.டி.வியில் மற்றொரு நிகழ்ச்சியான 'சொல்லுங்கண்ணே சொல்லுங்க', வெளிநாட்டு நிகழ்ச்சிகள், படங்கள் எனப் பரபரப்பாக இருப்பவரிடம் பேசினோம்.

''குட்டிச் சுட்டீஸ் ஆரம்பிச்சு ஐஞ்சு வருஷம் ஆச்சு. எப்படி இத்தனை வருஷம் ஓடிபோச்சுனே தெரியல'' என்று குஷியாக ஆரம்பிக்கிறார் இமான் அண்ணாச்சி.

''குறும்புக் குழந்தைகளை எப்படி சமாளிக்கிறீங்க..?''
''ஆரம்பத்துல கஷ்டமாதான் இருந்துச்சு. அப்புறம் போகப்போக பழகிடுச்சி. குழந்தைகள் செம ஷார்ப்பா இருக்காங்களேன்னு ஒரு பக்கம் பொறாமையா இருக்கும். அப்படி புத்திசாலித்தனமும், குறும்புத்தனமும் உள்ள குழந்தைகளாலதான் நிகழ்ச்சி இத்தனை வருஷமா வெற்றிகரமா கொண்டு போக முடிஞ்சிருக்கு.''

அண்ணாச்சி கொஞ்சம் சிகப்பாயிட்டாப்ல இருக்கே?
''அட ஆமாங்க.. முன்னவிட இப்போ கொஞ்சம் கலராத்தான் ஆகியிட்டேன். மேக்கப் போட்டுப்போட்டு இந்தக் கலருக்குக் கொண்டு வந்து நிறுத்திருக்கேன். இன்னும் நாலஞ்சு வருஷம் போச்சுனா அரவிந்த்சாமி என் கலரைவிட கொஞ்சம் கம்மியாத் தெரிவாப்ல பாத்துக்கிடுங்க. ஆனா என் கலரு குறைஞ்சது வருத்தமாத்தான் இருக்கு.''

''என்ன.. கலர் குறைந்தது வருத்தமாக இருக்கா?''
''ஆமாங்க... என்னோட அடையாளமே கறுப்புகலர்தான். இப்போ அந்தக் கலர் கொறைஞ்சு வெள்ளையானா வருத்தமா இருக்காதா...''

''குட்டிச் சுட்டீஸ்ல மறக்க முடியாத குழந்தைகள் பற்றி?''
''நிறையப் பேர் இருக்காங்க. அதுல ரெண்டு, மூணு பேரை மறக்க முடியாது. முதல் ஷோவுல ஒரு குட்டிப்பாப்பா வந்திருந்துச்சு. 'உங்க அப்பா பேரு என்னம்மா'னு கேட்டேன். உடனே, அவங்க அப்பா பக்கம் திரும்பி 'வெங்கடேஷூ கேட்கிறாங்கல்ல.. சொல்லு'னு சென்னை பாஷையிலப் பேசுச்சு. அந்த பாப்பாகாகவே நிறையப் பேர், அந்த எபிசோட திரும்பத் திரும்ப பார்த்தாவ. இன்னொரு குட்டிப் பையன்கிட்ட, 'தீபாவளிக்கு என்ன செய்வீங்க'னு கேட்டேன். வேற எதாவது பதில் சொல்வான்னு பார்த்தா, 'பொங்கல் செய்வோம்'னுட்டான். சரி அடுத்தக் கேள்வியக் கேட்டு சமாளிப்போம்னு 'அப்போ பொங்கலுக்கு என்ன செய்வீங்கனேன்'. 'தொட்டுக்க சட்னி செய்வோம்'னான். இப்படி ஒவ்வொரு கேள்விக்கும் எடக்குமடக்காவே பதில் சொல்லிட்டு இருந்தான். அதே மாதிரி சாய்னு ஒரு பையன்கிட்ட, ஒவ்வொரு நடிகரோட டயலாக்கா சொல்லிட்டு இருந்தேன். 'யார் அடிச்சா பொறி கலங்குதோ அவன் தான் தமிழ்'னு சொன்னதும், 'அப்ப நாங்கலாம் என்ன இங்கிலீஷா'னு கேட்டான். அடுத்து, 'தெறிக்கவிடலாமா'னு கேட்டேன். அதுக்கு அவன் டப்புனு 'முதுகு அரிக்குது கொஞ்சம் சொறிஞ்சு விடுறீங்களா'னு கேட்குறான். இப்படிப் பல குழந்தைகள் இருக்காங்க. எப்படித்தான் அவங்களுக்கு இப்படி எல்லாம் யோசிக்க முடியுதோ... ஷ்ப்ப்ப்ப்பா''

''நிகழ்ச்சியில் குழந்தைகளைச் சமாளிச்சுடுறீங்க? வீட்ல எப்படி?''
''என் பொண்ணு ஜெஃபி சைனி இப்போ ஏழாம் வகுப்பு முடிச்சு எட்டாம் வகுப்பு போறா. எல்லாம் நம்மள மாதிரிதான். ஆபீஸுக்கோ, வேலைக்கோ போகணும்னா தலைவலி, வயித்துவலினு சாக்குபோக்கு சொல்லிட்டு லீவ் போடுவோம்ல, அதே மாதிரிதான் அவளும். லீவ் போடணும், வேற எதாவது வேணும்னா லேசா என் பக்கத்துல வந்து காதக் கடிப்பா. சரி போ போனு நானும் விட்டுடுவேன். மனுஷங்க எல்லாரும் ஒவ்வொரு நேரத்துலயும் ஒரே மாதிரி இருக்க மாட்டோம்ல. சில நேரத்துல எனக்குக் கோபமும் வரும்.''

''நிகழ்ச்சியில குழந்தைங்க உங்கக்கிட்ட மரியாதைக் குறைவாகப் பேசும்போது வருத்தமா இருக்காதா?''
''குழந்தையும், தெய்வமும் ஒண்ணுனு சொல்லுவாங்க. அவங்ககிட்டதானே எல்லா அன்பையும் கொட்ட முடியும்.. கோபிக்க முடியும். 'அண்ணாச்சி நீங்க அழகா இருக்கீங்க'னு ஒரு முறை ஒரு பெண் குழந்தை சொல்லுச்சு. 'நீயாவது நான் அழகா இருக்கேன்னு சொன்னியேன்’னு சொல்லி சந்தோஷப்பட்டு முடிக்கிறதுக்குள்ள, 'ஆமா கொரில்லா மாதிரி இருக்கீங்க'னு சொல்லி சிரிச்சது. இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரைக்கும் நம்மள டம்மியாக்கினாதான் குழந்தைகள் உலகத்துக்குள்ளப் போக முடியும். குட்டிச் சுட்டீஸைப் பொறுத்தவரைக்கும் நான் டம்மீ பீஸ். என்னை கலாய்ச்சா அதை பெருசா எடுத்துக்கமாட்டேன். மரியாதை இல்லாம பேசினா கண்டிப்பா யாரா இருந்தாலும் வருத்தமாத்தான் இருக்கும்.''

''அப்போ குழந்தைகள் மரியாதையில்லாமல் பேசுறதை வரவேற்கிறீங்களா?''
''கண்டிப்பா இல்ல. இந்த நிகழ்ச்சியில் வந்த நிறைய குழந்தைகளுக்கு மரியாதையைக் கத்துக் கொடுத்திருக்கேன். ஒரு முறை மிலிட்டரி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு குழந்தை , நிகழ்ச்சியோட ஆரம்பத்துல இருந்து ஒருமையிலதான் பேசிட்டு இருந்தாப்ல. 'யார்ம்மா உனக்கு இப்படி சொல்லிக் கொடுத்தா'னு கேட்டேன். உடனே தாத்தாவை கைக்காட்டுச்சு. அந்த நிகழ்ச்சியிலயே 'ஏன் உங்க பேரனுக்கு நீங்க மரியாதையா பேசணும்ங்கிறத கத்துக் கொடுக்கலயா'னு கேட்டேன். 'பல வருஷம் காத்திருந்து பிறந்த குழந்தை. அதனால ரொம்ப செல்லமா வளர்த்துட்டோம்'னு சொன்னாப்ல. அதற்குப் பிறகு, 'எல்லாருக்கும் மரியாதைக் கொடுத்துத்தான் பேசணும் சரியா'னு சொன்னேன். 'சரிங்க அங்கிள்' என அந்த நிகழ்ச்சியிலயே அந்தக் குழந்தை அழகா புரிஞ்சுகிடுச்சு. இதைப் பார்த்து எத்தனையோ குழந்தைகள் திருத்திக்க வாய்ப்பு கிடைக்கும் இல்லையா?''

''உங்க மனதைப் பாதிச்ச விஷயம் ஏதாவது?''
''நிகழ்ச்சியில் ஒருமுறை ஒரு குழந்தையிடம், 'ரோஸ் எதுக்கும்மா குடுக்கிறாங்க' எனக் கேட்டேன். அதுக்கு அந்தக் குழந்தை 'ரோஸ் குடுத்தா லவ் பண்றாங்கனு அர்த்தம்'னு சொன்னதும் எனக்குத் தூக்கி வாரிப்போட்டுடுச்சு. 'எப்படிம்மா தெரியும்'னு கேட்டேன். 'என் அப்பா, அம்மாவும் லவ் பண்ணித்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க'னு சொன்னதும், பெத்தவங்க இரண்டு பேரும் அதிர்ச்சியில உட்கார்ந்திருந்தாங்க. அதுக்குள்ள அதிர்ச்சி தரமாதிரி இன்னொரு விஷயத்தையும் அந்த பொண்ணு சொல்லுச்சு, 'என்னோட ஃப்ரெண்ட்டுக்கு, என் கிளாஸ்ல படிக்கிற ஒரு பையன் லவ் யூனு சொன்னான்'னு சொன்னதும் கொஞ்ச நேரம் எனக்கு என்னவோ மாதிரி இருந்தது. எல்.கே.ஜி படிக்கிற குழந்தைக்கு எப்படி இந்த விஷயம் எல்லாம் தெரியுதுனு தெரியல. மனசுக்கு ரொம்ப வருத்தமாப் போச்சு. மறக்கவே முடியல. குழந்தைங்க இயல்பு மாறிப்போறதுக்கு நாம்தான் காரணம் இல்லியா.''

''சினிமா, டி.வி போன்ற ஊடகங்கள் குழந்தைகளின் வளர்ச்சியைப் பாதிக்கிறதுனு சொல்றாங்களே?''
''உண்மையச் சொல்லணும்னா படங்கள்ல நெறைய ரெட்டை அர்த்த வசனம் நிறைஞ்சதா இருக்கு. குழந்தைகளோடு சேர்ந்து படம் பார்க்கிறப்ப, அவங்க கேட்கிற சில கேள்விகளுக்கு நம்மளால பதில் சொல்ல முடியாமப் போகுது. இந்த விஷயங்கள் எல்லாம் மாறணும். இளைய சமுதாயத்துக்கு நல்ல விஷயங்களைக் கொடுக்க வேண்டிய பொறுப்பில் நாம இருக்கோம்ங்கிறத உணர்வது அவசியமா நினைக்கிறேன். பல படங்களில் ரெட்டை அர்த்தம் தர்ற வசனங்கள் சர்வசாதாரணமா வருது. அதையெல்லாம் பார்க்கிறப்ப மனசுக்குள்ள வருத்தமாகத்தான் இருக்கும். முடிந்த வரைக்கும் நான் நடிக்கிற படத்துல அந்த மாதிரி டயலாக் வராம பார்த்துக்கிறேன்'' என்கிறார் இமான் அண்ணாச்சி.

அடுத்த கட்டுரைக்கு