Published:Updated:

தமிழ் சினிமாவில் ஹீரோக்களை மிஞ்சிய சூப்பர்ஹீரோக்கள் இவர்கள்!

நித்திஷ்
தமிழ் சினிமாவில் ஹீரோக்களை மிஞ்சிய சூப்பர்ஹீரோக்கள் இவர்கள்!
தமிழ் சினிமாவில் ஹீரோக்களை மிஞ்சிய சூப்பர்ஹீரோக்கள் இவர்கள்!

நூறு புல்லட்களுக்கு நடுவே பூந்து பூந்து தப்பிப்பது, அந்தரத்தில் பூமராங் போல சுற்றிக்கொண்டே பறப்பது, பில்டிங்கில் இருந்து பாலத்துக்கு பறப்பது என தமிழ் ஹீரோக்களால் முடியாதது எதுவுமே இல்லை. இந்த சூப்பர்ஹீரோ சூராதித்தனங்களை எல்லாம் தாண்டி சில துணை கதாப்பாத்திரங்கள் பிரமிக்க வைக்கும். 'வாட் எ மேன்' என வாய் பிளக்க வைக்கும். அப்படி ஹீரோக்களை மிஞ்சி வித்தை காட்டிய துணை கதாப்பாத்திரங்கள் பற்றிய குறிப்பு இது. 

'சிங்கம்' விஜயகுமார்:

ஹை டெசிபலில் கத்துவது, இந்திய ரோடுகள் முதல் இன்டர்நேஷனல் ரோடுகள் வரை ரன்னிங், ஜாகிங் போவதென சூர்யாவே ஏகப்பட்ட வித்தைகள் காண்பிப்பார். அவரைத் தாண்டி ஸ்கீரினில் தெரிவது ஹோம் மினிஸ்டர் விஜயகுமார்தான். சப் இன்ஸ்பெக்டரை ஓவர் நைட்டில் அசிஸ்டென்ட் கமிஷனர் ஆக்குவது, அண்டர்கவர் ஆபரேஷன் அனுப்புவது, கிட்டத்தட்ட சூர்யாவைத் தவிர எல்லா போலீஸ் ஆபிஸர்களையும் சஸ்பெண்ட் செய்வது என எக்கச்சக்க வித்தைகளை கட்டி இறக்குவார். அதிலும் உச்சகட்டம் இந்திய அரசுக்கே தெரியாமல் ஆப்ரிக்காவுக்கு சூர்யாவை அனுப்புவது! இப்படி ஒரு சூப்பர் அமைச்சர் இருந்தா சூப்பர்மேன் எல்லாம் தேவையே இல்லையேய்யா!

பாட்ஷா பாடிகார்ட்ஸ்:

பாட்ஷா பாய் பெரிய டான் தான். ஊரே பார்த்து நடுங்கும்தான். ஆனால் க்ளைமேக்ஸில் பாட்ஷா பாயின் அடியாட்கள்தான் கெத்து காண்பிப்பார்கள். சிங்கை ஆண்டனி சுட்டுவிட, ஜனகராஜ் ஆக்‌ஷன் சீன்ல நமக்கென்ன வேலை என ஒதுங்கிவிட, கெத்து காண்பிப்பதெல்லாம் தளபதி தினேஷும் மகாநதி சங்கரும்தான். வீட்டை சுற்றி சுற்றி வந்து கரெக்டாக குண்டு இருக்கும் இடங்களை எல்லாம் லபக் லபக்கென கேட்ச் பிடித்து பியூஸை பிடுங்கி எறிவார்கள். ஹிஸ்டரியின் முதல் ஹியூமன் பாம் டிடெக்டர்ஸ் இவங்கதான்!

'மங்காத்தா' பிரேம்ஜி:

தமிழ் சினிமா இதுவரை எத்தனையோ ஹேக்கர்களை பார்த்திருக்கிறது. கீபோர்டில் எல்லா பட்டன்களையும் அமுக்கி விளையாடும் 'ஆரம்பம்' ஆர்யா தொடங்கி இந்த வாரம் ரேஷன் கடைல அரைக்கிலோ சக்கரை வாங்கியிருக்கான்ப்பா' எனச் சொல்லும் சிங்கம் 3 நிதின் சத்யா வரை சகலரும் அடக்கம். ஆனால் உருட்டி மிரட்டுவதென்னவோ மங்காத்தா பிரேம்ஜிதான். ஒரு சிக்னல் விடாமல் ஹேக் செய்யும் பிரேம்ஜியை விடப் பெரிய பெரிய ஹேக்கர்கள் இருக்கிறார்கள்தான். ஆனால், பண்றது பிரேம்ஜி என்பதாலேயே சூப்பர் ஹேக்கர் ஆகிறார்.

சந்திரமுகி சாமியார்:

'நல்லவங்க ரத்தம் கீழ சிந்தக்கூடாது' என்ற பன்ச் பேசி அறிமுகமாவாரே அதே சாமியார்தான். மற்றவர்கள் கண்ணுக்குத் தெரியாத தேஜஸை இவர் மட்டும் ரஜினி முகத்தில் கண்டுபிடிப்பது, ரஜினிக்கு பத்து மூளை என எக்ஸ் ரே எடுத்துப் பார்த்து சொல்வது, க்ளோஸ் ப்ரெண்ட் பிரபுவுக்கே, சமயங்களில் ரஜினிக்கே தெரியாத ரஜினி பற்றிய விஷயங்களை சொல்வது என அதகளம் செய்வார் இந்த சாமியார். எனவே இந்த லிஸ்ட்டின் சூப்பர் சாமியார் இவர்தான்.

'அருணாச்சலம்' விசு:

'கோதாவரி கோட்டை கிழிடி' டயலாக் அளவுக்கு சினிமாவில் விசு பார்க்கும் கணக்கு வழக்குகளும் பேமஸ். 'உழைப்பாளி' படத்தில் மொத்த எஸ்டேட் கணக்கையும் பிரித்து மேயும் கில்லாடியாக நடித்திருந்தாலும் விசுவின் பெஸ்ட் அருணாச்சலம்தான். 'முப்பது நாள்ல முப்பது கோடி' என டார்கெட் பிக்ஸ் செய்து, அதை நோக்கி ரஜினியை ஓட வைத்து, சூப்பர்ஸ்டார் அண்ட் கோ செய்யும் சேட்டைகளுக்கு எல்லாம் முறைப்படி கணக்கெழுதி என நம்பர்களோடு மட்டுமே குடித்தனம் நடத்திக்கொண்டிருப்பார் விசு. எனவே அவர்தான் தமிழ்சினிமாவின் 'ஹியூமன் கால்குலேட்டர்'