`விவேகம்', `விஸ்வரூபம்-2', `2.0' படங்கள் எப்போது ரிலீஸ்?

ஆகஸ்ட் 10 - ம் தேதி  ‘விவேகம்’

விவேகம்

வெவ்வேறு இயக்குநர்களின் இயக்கத்தில் நடித்துவந்த அஜித், தற்போது ‘வீரம்’ ‘வேதாளம்’  ‘விவேகம்’ எனத் தொடர்ந்து  ஒரே இயக்குநருடன் பணியாற்றிவருவது ஆச்சர்யமான உண்மை. எப்போதும் திட்டமிட்ட ஷூட்டிங், வேகமான வேலைவடிவமைப்பு ஆகியவையே இயக்குநர் சிவாவின் ஸ்பெஷல் குவாலிட்டிஸ். ஐரோப்பாவிலிருந்து சென்னைக்கு வந்து ஒருசில நாள்களே ஓய்வெடுத்த சிவா, அடுத்து எடிட்டிங், டப்பிங், கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் எனப் பரபரப்பாகிவிட்டார். ‘விவேகம்’ படத்தை ஆகஸ்ட் மாதம் எப்படியும் ரிலீஸ் செய்துவிட வேண்டும் என, சுறுசுறுப்பாக வேலைபார்த்து வருகிறார். சத்யஜோதி நிறுவனம் சார்பில் தயாரிக்கும் இந்தத் திரைப்படம் மிகச்சிறப்பாக உருவாகியிருப்பதால் உற்சாகத்தில் திளைத்துவருகிறார், ஆர்.எம்.வீரப்பனின் மாப்பிள்ளையான தியாகராஜன். 

தீபாவளிக்கு ‘விஸ்வரூபம்-2’

பிரமாண்டமாக வெளிவந்து, உலக அளவில் வசூலையும் பிரமிப்பையும் ஒருசேரக் குவித்த ‘பாகுபலி-2’ திரைப்படம், கமலுக்குள் உறங்கிக்கொண்டிருந்த ‘விஸ்வரூபம் -2’ படத்தை உசுப்பிவிட்டுள்ளது. ஏற்கெனவே படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்துள்ள நிலையில், கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் வேலைகள்தான் இழுத்துக்கொண்டிருக்கின்றன. ‘விஸ்வரூபம் -2' வெளியீட்டில் இடையில் தொய்வு ஏற்பட்டிருந்தாலும் ‘பாகுபலி -2' படத்தின் வெற்றி ‘விஸ்வரூபம் -2' யூனிட்டுக்கு உற்சாக டானிக்கை ஊற்றிக்கொடுத்துள்ளது. படத்தை மென்மேலும் மெருகேற்றும் பணியில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார் கமல். ` ‘விஸ்வரூபம்-2' படத்துக்காக மேலும் 10 நாள்கள் ஷூட்டிங் நடத்தலாமா?' என்ற யோசனையில் இருக்கிறார் கமல். அக்டோபர் மாதம் 13-ம் தேதி, தீபாவளி  விருந்தாக ‘விஸ்வரூபம்-2' படத்தை ரிலீஸ் செய்வதற்கு, தயாரிப்புத் தரப்பும் கமலும் பரபரப்பாகப் பணியாற்றி வருகின்றனர்.

2018 ஜனவரி 26 - தேதியில் ‘2.0’

`தென்னிந்தியாவின் பிரமாண்ட இயக்குநர் திலகம்' என்ற பெயரை நேற்று வரை தக்கவைத்துக்கொண்டிருந்த ஷங்கர், தற்போது  நடுநடுங்கிக்கொண்டிருக்கிறாராம். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் சாட்டிலைட் உரிமை மட்டும் 140 கோடி ரூபாய்க்கு விலைபோனது ‘பாகுபலி - 2’. ரஜினி, அக்‌ஷய் குமார் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் ‘2.0' படம், இப்போது வெளிவருவதற்கான வேலைகளே நடக்கவில்லை. அதற்குள் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளுக்கான சாட்டிலைட் உரிமையை, 148 கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறது ஜீ டிவி. `மிருகத்திலிருந்து பரிணாம வளர்ச்சி வாயிலாக வளரும் மனிதன், அந்த மிருகத்தையே ஆட்டுவிக்கிறான். வேற்றுக்கிரகத்துக்குச் செல்லும் மனிதன், அதன் பண்புகளைப் பெற்று அதகளம் செய்வதே ‘2.0' படத்தின் ஒன்லைன்' என்று சொல்கிறார்கள். முதலில், 2017-ம் ஆண்டில்  தீபாவளிக்கு ‘2.0' பட வெளியீடு எனத் தீர்மானித்து வைத்திருந்தனர். ‘பாகுபலி -2' படத்தின் பிரமிப்பும் வெற்றியும் ஷங்கர் மூளைக்குள்ளும் ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. ஆம், ‘2.0' படத்தில் இடம்பெறும் ஹைலைட் காட்சிகளை மீண்டும் ரீஷூட் செய்ய திட்டமிட்டுள்ளாராம் ஷங்கர். 2018 ஜனவரி 26-ம் தேதி, அதாவது ஷங்கரின் சென்டிமென்ட் எண்ணான 8-ம் தேதியில் ‘2.0' படம் ரிலீஸாக இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!