Published:Updated:

விவேகம்... விஜய் 61... சங்கமித்ரா... என்னத்த கன்னையாக்களின் அட்ராசிட்டீஸ்! #VikatanFun

நமது நிருபர்
விவேகம்... விஜய் 61... சங்கமித்ரா... என்னத்த கன்னையாக்களின் அட்ராசிட்டீஸ்! #VikatanFun
விவேகம்... விஜய் 61... சங்கமித்ரா... என்னத்த கன்னையாக்களின் அட்ராசிட்டீஸ்! #VikatanFun

எதைப் பற்றிப் பேச ஆரம்பித்தாலும் `அதெல்லாம் சரியா வராது, விளங்காது, அவிஞ்சுபோயிடும், பூமாதேவி சிரிச்சுருவா' என நெகட்டிவ் நெருஞ்சி முள்ளை ஏற்றுவதையே ஒரு கூட்டம் வேலையாக வைத்திருக்கும். `என்னத்த பேசி, என்னத்த கிளம்பி' எந்நேரமும் என்னத்த கன்னையாவாகவே வாழ்ந்து வரும் அவர்களை விவேகம், விஜய் 61 போன்ற படத்திற்கெல்லாம் கூப்பிட்டு பாருங்களேன். இப்படித்தான் பதில் சொல்வாங்க.

ரங்கூன்: 

`முத்துராமலிங்கம்' எனும் பெருங்காவியத்திற்கு பிறகு கௌதம் கார்த்திக் நடிச்சு ரிலீஸாகப்போற படம் தானே. அதான் என்ன கதைனு அந்த டிரெய்லர் பார்த்தாலே தெரியுதே. பர்மா சம்பந்தபட்ட கதை, அதில் வழக்கம்போல ரேஸிங், சேஸிங், லவ்விங், ஃபைட்டிங். போதும்மா... இன்னும் எத்தினி நாளைக்குதான் இதேமாதிரி படமா பார்க்கப்போறோம்னு தெரியல. சரி, நான் அத்தோ சாப்பிடப்போறேன், கூட யார் வர்றீங்க? 

சங்கமித்ரா: 

ஜான்சி ராணிக்கு டூப் போட்டா எப்படி இருக்குமோ அதுதான் ஸ்ருதிஹாசனோட கெட்-அப். ஒருபக்கம் ஹீரோயின் குதிரை சவாரி, இன்னொரு பக்கம் ஹீரோ கப்பல் சவாரினு `பாகுபலி'யையும் `பைரேட்ஸ் ஆஃப் தி கரிபீயன்' படத்தையும் போஸ்டரில் குழைச்சு வெச்சுருக்காங்க. என்னத்த சொல்ல... இவ்வளவு நாள் பேய்படமா எடுத்து கொன்னுட்டு இருந்தாங்க, அதுக்கு முன்னாடி காமெடி படமா எடுத்து கதிகலங்க வெச்சாங்க. இப்போ `பாகுபலி' மாதிரியே கோடானு கோடி செலவில் எபிக் மூவி எடுக்க கிளம்பிட்டாங்க. புதுசா எப்போதான் எடுக்க ஆரம்பிப்பாங்கனு தெரியல...

விவேகம்:

எத்தனை நாளைக்குத் தான் கண்ணுல கூலிங் க்ளாஸ், கையில் துப்பாக்கி, தலையில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிலேயே தலையைப் பார்க்கிறது. அந்த காலத்துல நல்லா சாக்லேட் பாயாக அழகா, அம்சமா  இருந்தார். இப்போ சிக்ஸ் பேக் எல்லாம் வெச்சு மெலிஞ்சு போயிட்டார். வயற்றில் அங்கங்கே கட்டி, கட்டியா பார்க்கவே காமெடியா இருக்கு. கடந்த சில ஆண்டுகளாகவே வெறும் போலீஸ், ரௌடி கதாபாத்திரங்களில் மட்டுமே மாறிமாறி நடிச்சு அடியாட்களை அடிச்சு துவைச்சுக்கிட்டு இருந்தவர், இப்போ காட்டுக்குள்ளே அடிக்க ஆள் இல்லாததால் மரத்தைப் பிடிச்சு அடிச்சு உடைச்சுட்டு இருக்கார். ஆக மொத்தத்தில் இந்த படத்திலேயும் `தல' பைக், துப்பாக்கி, கூலிங் க்ளாஸ் சகிதமா போய் வில்லன்களை அழிக்கப்போறார், அதானே... 

விஜய் 61 :

அட்லீ ஏற்கனவே மணிரத்னம் எழுதின கதைகளை தான் பட்டி, டிங்கரிங் பார்த்து மறுபடியும் எடுத்து இருக்கார்னு ஊருக்குள்ள பேசிட்டு இருக்காய்ங்க. ஒருவேளை, இந்த படத்தில் அட்லீ அதை உடைச்சுக் காட்டுவார்னு நினைக்கிறேன். ( பரவாயில்லையே நல்ல வார்த்தையா பேசுறானே..! ) இந்த படத்தோட கதை சத்தியமா மணிரத்னம் படத்தின் கதையா இருக்காது, `தேவர் மகன்' படத்தின் கதையாகத்தான் இருக்கும். விஜய் முறுக்கு மீசை, வேஷ்டி சட்டையோட நிற்கிறதை பார்த்தால் கன்ஃபார்மா தெரியுது. சத்யராஜ் தான் சிவாஜி, விஜய் தான் கமல், காஜல் தான் கௌதமி, சமந்தா தான் ரேவதி, வடிவேலு கதாபாத்திரத்தில் வடிவேலுவே தான். ஆனால், எஸ்.ஜே.சூர்யா கோட்சூட்டோட நிற்பதை பார்த்தால் `16 வயதினிலே' டாக்டர் மாதிரியும் தெரியுறார். என்னவோ போடா மாதவா...

- சுஜிதா