Published:Updated:

ஸ்ட்ரைக்கை விஷால் வாபஸ் வாங்கிய பின்னணி!

ஸ்ட்ரைக்கை விஷால் வாபஸ் வாங்கிய பின்னணி!
ஸ்ட்ரைக்கை விஷால் வாபஸ் வாங்கிய பின்னணி!

ஸ்ட்ரைக்கை விஷால் வாபஸ் வாங்கிய பின்னணி!

`சேவை வரியைக் குறைக்கவும், திருட்டு விசிடி உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகவும் மே 30-ம் தேதி முதல் காலவரையற்றப் போராட்டம் நடைபெறும்' என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிவித்திருந்தார். இதுகுறித்து தயாரிப்பாளர் சங்க ஆலோசனைக் கூட்டம் நேற்று, விஷால் தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் போராட்டம் குறித்த அறிவிப்பை விஷால் வாபஸ் பெற்றார். 

தயாரிப்பாளர் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் விஷால் பேசும்போது, “ `தயாரிப்பாளர் சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு மாசம் ஆகிடுச்சு. இன்னும் 23 மாசம் என்ன செய்யப்போறேன்?'னு எல்லோரும் கேட்கலாம். நான் உங்க குடும்பத்துல ஒரு நபர். உங்க படத்துக்கு எந்த இடத்திலிருந்தெல்லாம் தொகை வரணுமோ, அதை எப்பாடு பட்டாவது வாங்கித் தருவோம். அதற்கு, எல்லோருமே ஒற்றுமையா இருக்கணும். ‘8 தோட்டாக்கள்’ திரைப்படத்துக்கு மொத்த விற்பனை 40 லட்சம் ரூபாய். சேட்டிலைட் உள்ளிட்ட எந்த விற்பனையும் அந்தப் படம் செய்யவில்லை. சரியா விலைக்கு விற்பனை செய்திருந்தால் அந்தப் படத்துக்கு ஒன்றரைக் கோடி ரூபாய் வந்திருக்கும். எல்லா படங்களையுமே வெளிப்படைத்தன்மையோடு விற்பனை செய்யணும். அதுக்காக தயாரிப்பாளர் சங்கத்துக்கான இணையதளம் மற்றும் அப்ளிகேஷன் இன்னும் 15 நாள்களில் தயாராகிவிடும். எந்தப் பிரச்னை என்றாலும் இந்த இணையத்தில் பதிவுபண்ணலாம். நாங்களே உங்களை அழைத்துப் பேசுவோம். திரையரங்க ஒப்பந்தத்தில் தொடங்கி, அனைத்து விவரங்களும் இணையத்தில் இருக்கும். ஏன்னா, நாங்க பண்ற வியாபாரம் உங்களுக்குத் தெரியணும்; நீங்க பண்ற வியாபாரம் எங்களுக்குத் தெரியணும். டைட்டில் பதிவுகூட இந்த சைட்டில் ஒரே க்ளிக்கில் செய்துகொள்ளலாம். 

தனிப்பட்ட விஷயத்துக்காக நாங்க எதுவுமே பண்ணலை. உங்களுடைய நன்மைக்காக மட்டுமே போராடுறோம். உங்களுடைய பணம், நிச்சயம் உங்களை மட்டும்தான் வந்துசேரும். இடையில் யாரும் பறித்துவிட முடியாது. உங்க அறிவுரையைக் கேட்க நாங்க எப்போதும் தயாரா இருக்கோம். ஆனா, பழைய மாதிரி எதுவும் இங்கே நடக்காது. நாங்க எதுக்குமே பயப்பட மாட்டோம். அனைத்து தயாரிப்பாளர்களுக்காகவும் நாங்க முன்னாடி நிற்போம்.  இந்த மாதிரி கூட்டம் மாதம் ஒருமுறை நடக்கும். அப்போதுதான் உங்களுடைய குறைகள், பிரச்னைகள் எங்களுக்குத் தெரியும். வெறும் 15 பேர் கையில் இந்தச் சங்கம் இல்லை. இந்த ஒட்டுமொத்த சினிமாத் துறையும் தயாரிப்பாளர் கையில்தான் இருக்கு.  வாங்க... நல்லது பண்ணலாம். சென்னதைச் செய்வோம். சொன்னதை மட்டும்தான் செய்வோம். நல்லது மட்டும்தான் நடக்கும்” என்று கூறினார் விஷால். 

பெப்சி சங்கத் தலைவர் செல்வமணி பேசும்போது, “விஷாலைச் சந்திக்கும்போது, ‘விஷால், நான் உங்களுக்கு ஓட்டு போடலை. ராதாகிருஷ்ணன் சாருக்குத்தான் ஓட்டு போட்டேன். ஏன்னா, `ஒரு தயாரிப்பாளர்தான் சங்கத் தலைவரா வரணும்'னு நினைச்சேன். நாங்க பண்ண நினைச்சதை நீங்க பண்றீங்க. எங்களால் செய்ய முடியாமப்போனதை நீங்க செய்யணும்னு முன்வரதுனால உங்களுக்கு நிச்சயம் நாங்க ஆதரவா இருப்போம்.

ஒரு வேண்டுகோள். என்னென்னா, எல்லா தயாரிப்பாளர்களையும் ஒண்ணுசேருங்க. என்னுடைய 15 வருட அனுபவத்தை, உழைப்பை திருடி, சுரண்டி, வேலை செய்யவிடாமப் பண்ணிட்டாங்க. எனக்கு மறுபடியும் படம் பண்ற திறமை இருக்கு. ஆனாலும் பயத்தினால் படம் பண்ணாம இருக்கேன். இந்த நிலை மாறணுங்கிற விருப்பமும் கோபமும் எனக்கு இருக்கு. இந்தப் போராட்டம் நிறுத்தப்பட்டதற்கு நாங்களும் ஒரு காரணம். நாங்க போராட்டத்துக்கு ஆதரவு கொடுக்க மாட்டோம்னு சொல்லலை. போராட்டம் நடைபெற்றால் தொழிலாளர்களோட வாழ்வாதாரம் பாதிக்கும். தயாரிப்பாளர் வாழ்ந்தால் மட்டும்தான் நாம வாழ முடியும். ஆனால் மறுபடியும் போராட்டம் பற்றிப் பேசினால், பெப்சி தொழிற்சங்கம் நிச்சயம் ஆதரவு கொடுக்கும். எதிரி வெளியேதான் இருக்கான்னு நினைச்சேன். துரோகி உள்ளேதான் இருக்கான். அதனால எல்லோரும் ஒற்றுமையா இருக்கணும். நாம என்னதான் டப்பா படம் எடுத்தாலும், லாபம் வராவிட்டாலும் பரவாயில்லை. நஷ்டம் வராது. அதுபற்றி விஷால் பேசிய கருத்து சரி. இள ரத்தங்கிறதுனால ஆவேசமா பேசுறார். விஷால் பேசுவதை நம்மை நோக்கி பேசும் குரலாக எடுத்துகொள்ள வேண்டாம். நமக்கு முன்னால் எதிரிக்கான குரலாகத்தான் எடுத்துக்கணும். அதனால் விஷால் அனைத்து தயாரிப்பாளருடன் இணக்கமா இருக்கவேண்டியது அவசியம்” என்று கூறினார்.

செல்வமணி பேசியதற்குப் பதிலாக, “நிச்சம் இனி நிதானத்துடன் பேசுவேன். என்னை நான் திருத்திக்கொள்வேன். ஏதும் தவறாகவோ, உங்கள் மனம் புண்படும்படி பேசியிருந்தால், அனைவரும் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்”  என்று கூறினார் விஷால். 

தயாரிப்பாளர் சங்க ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும், செய்தியாளர்களைச் சந்தித்தார் விஷால். 

“தமிழ் சினிமா கஷ்டமான நிலையில்தான் போயிட்டிருக்கு. அந்தக் கஷ்டங்களை எல்லாம் போக்குவதற்காகத்தான் வேலை நிறுத்தம் ஏற்பாடு செய்தோம். அதனால் சிலருக்கு வருத்தங்கள் இருக்கும். அதையெல்லாம் தாண்டி சினிமாத் துறை வெளிப்படையா இருக்கணும்கிறதுதான் எங்களுடைய நோக்கம். அதனால, இந்தப் போராட்டத்தை வாபஸ் பெறுவதா முடிவெடுத்திருக்கோம். ஆனாலும் சங்க முடிவுகள் பற்றி ஆலோசனை நடத்தியிருக்கோம்.

ஆன்லைனில் டிக்கெட் பதிவுசெய்யும்போது பெறப்படும் கூடுதல் கட்டணத்தை நீக்குவது, வெப்சைட், அப்ளிகேஷன் எனப் பல விஷயங்கள் விரைவில் கொண்டுவர இருக்கிறோம். இனி, மறைமுக கலெக்‌ஷன் இருக்காது. அனைத்தும் வெளிப்படைத் தன்மையுடன்தான் இருக்கும். தயாரிப்பாளருக்கு வரவேண்டிய வருமானத்தை எல்லோரும் சுரண்டுறாங்க. அதை இனிமேல் அனுமதிக்க முடியாது. அதற்கான முயற்சியைச் சீக்கிரமே நடைமுறைபடுத்த இருக்கிறோம். தன்னிச்சையாக எந்த முடிவையும் நான் எடுக்கவில்லை” என்று கூறினார் விஷால்.

போராட்டத்தை வாபஸ் பெற்றுவிட்டது தயாரிப்பாளர் சங்கம். அதற்கு திரைப்பட வர்த்தக சபை முக்கியக் காரணம் என்று சொல்லப்படுகிறது. எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் போராட்டம் நடத்துவது சாத்தியமில்லை என்பதாலும், தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதாலும் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. மீண்டும் போராட்டம் நடைபெற வேண்டும் என்றால், அனைத்து தயாரிப்பாளர்கள், பெப்சி நலச்சங்கம், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களுடன் கலந்து ஆலோசித்துதான் முடிவெடுக்க முடியும். போராட்டம் குறித்து விஷால் இவர்களுடன் கலந்து ஆலோசிப்பாரா? அனைவரின் சம்மதத்துடன் போராட்டம் எப்போது நடைபெறும் என்பதெல்லாம் கேள்விக்குறிதான்.

அடுத்த கட்டுரைக்கு