Published:Updated:

''அம்மா இழப்புல இருந்து மீண்டு வர முயற்சி பண்றேன்!" - 'கம்பேக்' கல்யாணி

''அம்மா இழப்புல இருந்து மீண்டு வர முயற்சி பண்றேன்!" - 'கம்பேக்' கல்யாணி
''அம்மா இழப்புல இருந்து மீண்டு வர முயற்சி பண்றேன்!" - 'கம்பேக்' கல்யாணி

''அம்மா இழப்புல இருந்து மீண்டு வர முயற்சி பண்றேன்!" - 'கம்பேக்' கல்யாணி

னது எட்டு வயதில் 'அள்ளித்தந்த வானம்' திரைப்படத்தின் மூலம் திரைப் பயணத்தை ஆரம்பித்த பூர்ணித்தா என்கிற கல்யாணி சின்னத்திரையிலும் தனக்கான முத்திரையைப் பதித்தார். 

விஜய் டி.வியில் ஒளிபரப்பான 'பிரிவோம் சந்திப்போம், 'ஆண்டாள் அழகர்' தொடர்களில் நடித்தவர், ராஜ் டி.வி யில் 'பீச் கேர்ள்ஸ்' நிகழ்ச்சியிலும் தொகுப்பாளராக இருந்தார். 2013 ஆம் ஆண்டு மருத்துவர் ரோஹித்தை திருமணம் செய்து கொண்டவர் சிறிதுகாலம் சின்னத்திரைக்கு பிரேக் விட்டிருந்தார். தற்போது மீண்டும் ரீ என்ட்ரியாக 'ஜீ தமிழ் ஜூனியர் சீனியர் ' நிகழ்ச்சி தொகுப்பாளராக களம் இறங்கியிருக்கிறார். 

''எப்படி இருக்கு ரீ என்ட்ரி?'' 

''நிறைய மாறியிருக்கு. ஒரு துறையில தொடர்ந்து பயணிச்சா மட்டுமே நாம நம்மளை புதுப்பிச்சுக்க முடியும்னு புரிய ஆரம்பிச்சிருக்கு. நான் வெள்ளித்திரைக்கு வந்த டைம்ல ஒருசில குழந்தை நட்சத்திரங்கள் மட்டுமே இருந்தார்கள். அதனாலதான், பல பேருக்கு நான் பரிட்சயம் ஆக முடிஞ்சது. ஆனால் இப்ப அப்படியில்ல. எல்லா குழந்தைகளுமே எதோ ஒரு விஷயத்தில் தங்களுடைய திறமைகளை வெளிக்கொண்டுட்டு வர்றாங்க. சந்தோஷமா இருக்கிற அதே நேரத்துல லைட்டா பொறாமையாவும் இருக்கு.'' 

''ரீ என்ட்ரியிலேயும் உங்களுக்கு வாய்ப்பு முன்ன மாதிரி இருக்கிறதா நினைக்கிறீங்களா?'' 

''கண்டிப்பாக. எப்போதுமே திறமைசாலிகளை புறக்கணிக்க முடியாதுனு நினைக்கிறேன். அதே நேரம் நிறையப் போட்டிகளை இந்த ஃபீல்டில் பார்க்க முடியுது. நம்மளை நிரூபிச்சே ஆகணும்னு தள்ளப்படுற மாதிரி உணர்றேன். எனக்கும் இப்படிப்பட்ட வாய்ப்புகள் கிடைச்சிருந்தா வெள்ளித்திரையில ஒரு ரவுண்ட் வந்திருக்கலாம்னு தோணுது. நிறைய வாய்ப்புகளை தவறவிட்டுடதா நினைக்கிறேன். ஆனாலும், ஏதோ ஒருவிதத்துல என் பேர் மக்கள் மனசுல பதிஞ்சு போற அளவுக்கு நடிச்சிருக்கேன்ங்கிற திருப்தி இருக்கு. 'திரும்ப வந்துட்டேனு சொல்லுங்க. கல்யாணி எப்படி இருந்தாலோ அதே மாதிரி திரும்பி வந்துட்டானு சொல்லுங்க.'' 

''இந்த இடைப்பட்ட ஓய்வு காலத்தை எப்படி பயன்படுத்திக்கிட்டீங்க?'' 

''அதை ஓய்வுக்காலம்னு சொல்றதைவிட என்னைப் புரிஞ்சுக்க எனக்குக் கிடைத்த அவகாசமாகத்தான் நினைக்கிறேன். இன்னும் சொல்லப் போனா திருமணத்துக்குப் பிறகும் ஒரு வருஷம் வேலை பார்த்தேன். அதற்குப் பிறகான வருடங்களில் என்னை ஃபிட்டாக வைத்திருக்க முயற்சிப் பண்ணிட்டே இருந்தேன். இடையில என்னுடைய முதுகெலும்பா இருந்த என் அம்மாவோட இழப்பு என்னை ரொம்ப பாதிச்சிருச்சு. அதுல இருந்து மீண்டு வர ரொம்ப கஷ்டப்பட்டேன். அதுபோக எனக்கு நடந்த சின்ன அறுவை சிகிச்சை எல்லாம் என்னை இந்த ஃபீல்டுல இருந்து தள்ளி வைச்சிருந்தது. இப்ப பெர்ஃபக்ட்.'' 

''நீங்கள் வீட்டில் ரொம்ப அமைதியான பொண்ணுனு கேள்விப்பட்டோமே?'' 

''யாரோ உங்ககிட்ட பொய் சொல்லியிருக்காங்க. இப்பவே பாருங்க எவ்வளவு பேசுறேன். வீட்லயும் அப்படித்தான். என்னை எல்லாம் வச்சுக்கிட்டு சமாளிக்கிறது அவ்வளவு ஈஸியில்ல. என் கணவர்தான் திண்டாடுறார். ரொம்ப அமைதியான அவரை வெளியக் கூட்டிட்டுப் போகச்சொல்லி டார்ச்சர் கொடுத்துட்டே இருப்பேன். நாங்க பெங்களூருல செட்டில் ஆகிட்டோம். என்னைச் சமாளிக்க எப்படியாவது வாரத்துல ரெண்டு நாள் வெளியில கூட்டிட்டுப் போயிடுவார். அப்படியில்லையா கார்ல ஒரு லாங் டிரைவ் போயிடுவோம். பைக்னா எனக்கு அலர்ஜி.'' 

''ஏன் டூவிலர்ல பயணம் செய்றது உங்களுக்குப் பிடிக்காதா?' 

''ஆமா...சைக்கிள் ஓட்டத் தெரியாத நான் சீரியலுக்காக ஒருதடவை ரொம்ப மோசமா ஓட்டினேன். அதுக்குப் பிறகு டூவீலர் எப்பவும் யூஸ் பண்ணினது கிடையாது. என் அப்பா ஒரு முறை பைக்கில் போகும்போது பெரிய விபத்தில் மாட்டிக்கிட்டார். அந்த பயத்தினாலேயே எனக்கு சைக்கிள் கூட ஓட்டக் கத்துக்கொடுக்கல.''

''எதிர்பார்த்த வாய்ப்பு வராமல் போறதுக்காக தற்கொலைக்கு முயலும் நடிகைகள் பத்தி?'' 

''எனக்கே அந்த மாதிரி மன அழுத்தம் வந்திருக்குங்க. வீட்ல இருக்கும்போது டி.வி பார்ப்பேன். அப்போ நடிக்கிற நடிகைகளைப் பார்க்கும் போது எனக்குக் கஷ்டமா இருக்கும். இவங்க எல்லாம் நடிக்கிறாங்களே.. நம்மளால நடிக்க முடியலையே. இனிமே இப்படித்தானானு பல நேரங்களில் புலம்பியிருக்கேன். கொஞ்ச நேரம் கழித்து, 'ஏன் இப்படி நினைக்கிறோம். இதனால ஒண்ணும் வாழ்க்கை முடிஞ்சுப் போயிடலேயே. அடுத்து வாய்ப்பு கிடைக்கும்போது நம்மளை நிரூபிக்க முடியும்னு என்னை நானே சமாதானப்படுத்திப்பேன். என்கூட இருக்கவங்களும் எனக்கு ஆதரவா இருந்தாங்க. அதுதான் என்னை எப்பவும் நிம்மதியாக வைத்திருந்தது. நடிப்புத் துறையில இருக்கிறவங்களுக்கு எனக்குக் கிடைச்ச மாதிரி ஆறுதல் கிடைக்காம தற்கொலை முடிவுக்கு போயிடுறாங்க. அவங்களுக்கான கவுன்சிலிங்கையும் கூடிய விரைவில் ஆரம்பிக்கப்போகிறேன்.'' 

''அப்படியா... எந்த மாதிரியான கவுன்சிலிங் இது?'' 

''எனக்கு நெருக்கமான சபர்ணா, சாய் என மூன்றுக்கும் மேற்பட்ட நண்பர்கள் தற்கொலை செய்துகிட்டாங்க. சபர்ணா இறந்தபோது என்னால ரெண்டு நாள் வீட்டை விட்டு வெளிய வர முடியல. சபர்ணாவுக்கு தான் உடல்பருமனோடு இருக்கிறதாலதான் வாய்ப்புக் கிடைக்கலனு நினைச்சு எடை குறைப்பும் பண்ணிப் பார்த்தா. ஆனா, அதற்குப் பிறகும் வாய்ப்பு கிடைக்கல. அது தந்த மனஅழுத்ததால தான் தற்கொலை முடிவுக்குப் போயிட்டா. சபர்ணா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துட்டா அவ்வளவு கலகலனு இருக்கும். அப்படிப்பட்டவளுக்கு இப்படி ஒரு முடிவானு நினைக்கும்போதே கஷ்டமா இருக்கும். அதனாலதான் முறையா கவுன்சிலிங் கோர்ஸ் முடிச்சிட்டு சின்னத்திரையில் இருப்பவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கலாம் நினைக்கிறேன். சின்னத்திரையில இருக்கிறவங்க தின தேவைக்குகூட கஷ்டப்படுற நிலைமை இருக்குது. அதைத்தடுக்க முதல்ல மனதிடம் வேணும். அதைதான் கவுன்சிலிங் மூலமா ஈடுகட்டப் போறோம்'' என்பவர் கூடவே புரடக்‌ஷனிலும் விரைவில் இறங்கப் போகிறாராம்.’’ 

''சீரியல்ல மறுபடியும் களமிறங்கப் போகிறீர்களா?'' 

''இதுவரை மூன்று தொடர்களுக்கான வாய்ப்புகள் வந்தது. ஒரு சீரியலுக்கு நெகட்டிவ் ரோலில் நடிக்கக் கூப்பிட்டார்கள். மற்ற இரண்டு சீரியல்களிலும் என் திறமையை வெளிப்படுத்தும் அளவுக்கு வாய்ப்புகள் கிடைக்காதது போல தோன்றியதால் இன்னும் எதையும் முடிவு செய்யவில்லை. கூடிய விரைவில் என்னை சீரியலிலும் பார்க்கலாம். டோன்ட் மிஸ் இட்'' என்கிறார் கல்யாணி ஸ்மைலிகளை உதிர்த்தபடியே...

அடுத்த கட்டுரைக்கு