Published:Updated:

இந்தப் படங்களோட டைட்டில் கார்டையெல்லாம் கவனிச்சிருக்கீங்களா?

தார்மிக் லீ
இந்தப் படங்களோட டைட்டில் கார்டையெல்லாம் கவனிச்சிருக்கீங்களா?
இந்தப் படங்களோட டைட்டில் கார்டையெல்லாம் கவனிச்சிருக்கீங்களா?

பார்வையாளர்களைக் கவர ஒரு படத்தின் டீஸர் தற்போது எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியமானது படம் பார்க்கும் ரசிகர்களுக்குச் சுவாரஸ்யத்தை அளிக்கும் டைட்டில் கார்டு. கதையோடு ஒன்றி, சிறந்த காட்சிகளுடன் டைட்டில் கார்டு இடம்பெற்ற சமீபத்திய படங்கள்தாம் இவை! 

கத்தி :

'கத்தி' விஜய் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் எல்லோருக்கும் பிடித்தமான படம். விஜய்யின் ப்ளாக் பஸ்டர் படங்களுள் இந்தப் படமும் டாப்தான். சூரிய உதயத்தில் 'இளைய தளபதி விஜய்' என்ற வார்த்தைகளைத் தியேட்டர் ஸ்க்ரீனில் காட்டியபோது காது கிழிய விசில் அடித்த காட்சி இன்னமும் கண் முன்னே நிற்கிறது. ஆனால் அடுத்து வந்த காட்சிகளைக் கண்டதும் ரசிகர்களின் விசில் சத்தமும், அலறல் சத்தமும் மெள்ள மெள்ளக் குறையத் தொடங்கியது. காரணம், டைட்டிலில் பெயர் போடும்போது கண்ட காட்சி அவ்வாறு இருந்தது. பட்டாம்பூச்சி, குருவியில் ஆரம்பித்து மாட்டு வண்டி, அதில் இருக்கும் சக்கரம், ஆடு, மாடு கோழி, என விவசாயம் சார்ந்த அனைத்து விஷயங்களும் ஒரு பக்கம், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் விதமாகத் தொழிற்சாலைகளில் இயங்கும் இயந்திரம் மறுபக்கம் என இரண்டையுமே ஒன்றிணைத்துக் காட்டிய காட்சி மிகவும் சிறப்பு. படத்தின் ஒட்டுமொத்தக் கதையினையும் 2 நிமிட டைட்டில் கார்டில் சொல்லியிருப்பார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.  

பாகுபலி 2 :

'பாகுபலி-2' படம் ஒட்டுமொத்தமாக வேற லெவலில் இருந்தது. ஆனால், படத்தின் டைட்டில் கார்டைப் பற்றிப் பெரிதாக பேசப்படவில்லை. முதல் பாகத்தில் ரம்யா கிருஷ்ணன் கையில் குழந்தையை ஏந்தியபடி ஆற்றுக்குள் மிதக்கும் காட்சி, பிரபாஸ் தமன்னாவைக் காண, மலை மேல் ஏறுவதற்காக அங்கிருக்கும் மரத்தை நோக்கி அம்பை விடும் காட்சி, அப்படியே மேலே கேமராவை கொண்டு சென்றால் தமன்னா பாடலில் இடம்பெற்ற காட்சி, அதன் பின் தேவசேனா சிறைப்பட்டு இருந்த நேரத்தில் விறகுகளைச் சேகரிக்கும் காட்சி, ராணாவை நோக்கி ஆவேசத்துடன் தாக்க வரும் மாட்டை வீரத்தோடு அடக்கும் காட்சி, மகேந்திர பாகுபலி பத்ராவின் தலையிந்த் துண்டித்த காட்சி, கட்டப்பா மகேந்திர பாகுபலியின் காலை எடுத்துத் தன் தலையில் வைத்துக் கொள்ளும் காட்சி, கடைசியாகக் கட்டப்பா அமரேந்திர பாகுபலியை முதுகில் குத்தும் காட்சி என முதல் பாகத்தில் இடம்பெற்ற அனைத்து முக்கியமான காட்சிகளையும் 3D வடிவில் காட்டிது படத்தின் சிறப்பை மேலும் கூட்டியது. அதைக் கண்ட ரசிகர்களையும் ஆம்பத்திலேயே வியக்க வைத்தது. 

என்னை அறிந்தால் :

இந்தப் படத்தின் தீம் மியூஸிக்கை கேட்டால் மிகவும் எனர்ஜெட்டிக்காக இருக்கும். அந்த தீமை வைத்துதான் படத்தின் டைட்டில் கார்டே ஆரம்பிக்கும். போலீஸ் என்பதால் அந்தத் துறைக்குத் தொடர்பான ஹேண்ட் கஃப்ஸ், துப்பாக்கி, எக்ஸ்ப்லோஸிவ்ஸ், துப்பாக்கியில் இருக்கும் புல்லட், போலீஸ் ஆடையில் இருக்கும் ஸ்டார் என அனைத்துமே விஷுவலாய் அழகாய் இடம்பெற்றிருக்கும். அவை மட்டுமல்லாமல் அதே படத்தின் சண்டைக் காட்சியில் இவர் பயன்படுத்திய குட்டிக் கத்தியும், அஜித் கையில் அணிந்திருக்கும் காப்பும் டைட்டில் கார்டில் இடம்பெற்றிருக்கும். இவை அனைத்தையும் பின்னணியில் தீம் மியூஸிக் ஒலிக்கக், காட்சியாய் பார்க்கும்போது செம மாஸ்.

ரெமோ :

'இந்த உலகத்துல காதல் வராத மனுஷனே கிடையாது' என்ற குரலோடுதான் படம் ஆரம்பிக்கும். உலகில் வெவ்வேறு இடங்களில் இருக்கும் காதலர்களைக் காட்டி 'எதுவுமே தெரியாத ஸ்டுப்பிட் மாதிரி இருக்கானே இவன் பெயர்தான் குப்பிட்' என்று அதனைப் பற்றி ஒரு சின்ன இன்ட்ரோ. அதன் பின்னர் ஹீரோ சிவகார்த்திகேயனின் என்ட்ரி. குப்பிடின் அடுத்த ப்ராஜெக்ட் நம்ம ஹீரோதான் என்று கூறி, அவருக்குச் சிறு வயதிலேயே சினிமா ஆசை எப்படி வந்தது, ஹீரோவின் வாழ்க்கை எப்படி இருந்தது என்று பின்னணியில் எஸ்.ஜே. சூர்யா தன் குரலில் சொல்லிக் கொண்டே இருப்பார். சிறந்த காமிக்கல் டைட்டில் கார்ட் இடம்பெற்ற படங்களுள் இந்தப் படமும் ஒன்று.

மாநகரம் :

படம் ஆரம்பித்த 15 நிமிடம் டைட்டில் கார்டே இல்லாமல் சுவாரஸ்யம் நிறைந்த காட்சிகளோடு மட்டுமே நகரும். படத்தின் ஹீரோ ஶ்ரீ ஒயின்ஷாப்பில் இருந்து வெளியே வரும்போது வேறு ஆளுக்குப் பதிலாக இவர் அடி வாங்குவார். அதிலிருந்துதான் டைட்டில் தொடங்கும். 'இரவு வேட்டையாடுதே' என்ற பாடல் பின்னணியில் ஒலிக்க 'மாநகரம்' என்று படத்தின் பெயர் இடம்பெறும் காட்சியே சிறப்பாக இருக்கும். அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக காட்சிகள் நகர, சின்னச் சின்ன விஷுவல் எஃபெக்ட்ஸுடன் சேர்த்து கதையும் நகரும். ஒட்டுமொத்தக் கதையுமே அதில் இருந்துதான் தொடங்கும். டைட்டிலில் பயன்படுத்திய டீடெயிலிங் ஒர்க் படத்தின் கதை என்னவாக இருக்கும் என்ற சுவாரஸ்யத்தையும் அதிகப்படுத்தியது.  

வேறு சில சுவாரஸ்யம் நிறைந்த டைட்டில் கார்ட் இடம்பெற்ற படங்களை அடுத்த கட்டுரையொன்றில் பார்க்கலாம்.