Published:Updated:

‘என் 50வது படத்துல இதெல்லாம் இருக்கக்கூடாது’ - கறார் காட்டிய அஜித்! ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினிதொடர் பாகம் 10

‘என் 50வது படத்துல இதெல்லாம் இருக்கக்கூடாது’ - கறார் காட்டிய அஜித்! ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினிதொடர் பாகம் 10
‘என் 50வது படத்துல இதெல்லாம் இருக்கக்கூடாது’ - கறார் காட்டிய அஜித்! ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினிதொடர் பாகம் 10

‘என் 50வது படத்துல இதெல்லாம் இருக்கக்கூடாது’ - கறார் காட்டிய அஜித்! ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினிதொடர் பாகம் 10

‘என் வீடு என் கணவர்’ என்ற படத்தில் ஒரு பாடல் காட்சியில் சில விநாடிகள் வந்து போனது மூலம் அமைந்ததுதான் அஜித்தின் முதல் சினிமா வாய்ப்பு. ஆனால் அடுத்து வந்த ‘பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்கு பட வாய்ப்புதான் மிகச்சரியான அறிமுகம். 1992  ஆகஸ்ட் 3ல் அந்தப் பட, ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து கணக்கிட்டால், இன்னும் சில மாதங்களில் 25 வது வருடத்தைத் தொடுகிறார் அஜித். அன்றைய தெலுங்கு பட அறிமுக அஜித், ‘வேறு மொழிப் படங்களில் நடிக்க மாட்டேன். தமிழில் மட்டும்தான் நடிப்பேன்’ என்று சொல்லும் இன்றைய ‘விவேகம்’ அஜித்தாக வளர்ந்தது எப்படி? இந்தக் கேள்விக்கான பதிலை அவரின் இந்த கால்நூற்றாண்டு கால திரைப்படங்களின் வழியாக நாம் உணர முடியும். அதற்கான ஒரு ரீவைண்ட் தான்.. இந்த ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினி தொடர்!

அஜித் ஆசைப்பட்டு ஒப்புக்கொண்ட ப்ராஜெக்ட், ‘கபாலி’யில் ரஜினி பேசியதை ‘பில்லா’விலேயே பேசிய அஜித், கவுதம் மேனன் முதன்முதலில் அஜித்துடன் சேர்ந்திருக்க வேண்டிய படம், ‘கதை, திரைக்கதை, வசன உதவி - அஜித்குமார்’ எந்தப்படத்தில்? அஜித் தன் 50வது படத்தை எப்போது முடிவு செய்தார் தெரியுமா? அஜித்தின் அடுத்த ஐந்து படங்களைப் பார்ப்போம்...

46. ‘கிரீடம்’

அடுத்த படம் பாலாஜி ஃபிலிம்ஸுக்கு என முடிவானது. ‘ரீமேக் பண்ணலாம். எந்தப் படத்தைப் பண்ணலாம், யார் டைரக்டர்?’ எனத் தேடிக்கொண்டிருந்தார்கள். இதற்கிடையில் அஜித்தின் மேனேஜர் சுரேஷ்சந்திராவினுடைய அலுவலகத்துக்கு வந்த ஒருவர், ‘சார், இது அட்வர்டைஸிங் ஏஜன்சியா? சிடி கொடுத்துட்டு வரச் சொன்னாங்க’ என்று ஒரு சிடியைக் கொடுத்துச் சென்றார். அதைத் தன் பையில் வாங்கி வைத்த சுரேஷ், அதை மறந்தேவிட்டார். வழக்கம்போல் அஜித் வீட்டுக்குப் போகும்போது அங்கு அஜித் ஹோம் தியேட்டரை சரிசெய்துகொண்டிருந்தார். அது சரியாக வேலை செய்கிறதா என்பதைப் பார்க்க, ‘ஒரு சிடி கொண்டுவாங்க’ என்று தன் உதவியாளரிடம் அஜித் கேட்க, ‘என்கிட்டகூட ஒரு சிடி இருந்துச்சு’ என்று தன் பையில் இருந்த அந்த விளம்பர சிடி-யை எடுத்துக் கொடுத்திருக்கிறார் சுரேஷ்.

அது ஒரு நகைக்கடை விளம்பரப் படம். அதில் அட்டிகை, வளையல்கள்... என நகைகளை வாங்கிய ஒரு பெண், பணத்தைக் கொடுப்பார். பிறகு கூலிங் கிளாஸ், வாக்கிங் ஸ்டிக் சகிதமாக கண் தெரியாத அந்தப் பெண் நடப்பார். பின்னணியில், ‘நம்பிக்கை நாணயம்!’ என்று வாய்ஸ் ஓவர் வரும். அந்த விளம்பரப் படம் அஜித்துக்கு ரொம்பப் பிடித்துவிட்டது. ‘சுரேஷ்பாலாஜிடம் சொல்லி அடுத்த படத்துக்கு இந்தப் பையனை ஃபிக்ஸ் பண்ணச் சொல்லுங்க’ என்றார் அஜித். பிறகு, ‘நாங்களும் அந்தப் பையனை மைண்ட்ல வெச்சிருக்கோம் சார்’ என்று சொல்லியிருக்கிறார் சுரேஷ்பாலாஜி. அந்தப் பையன்தான் இயக்குநர் A.L. விஜய். பிரபல மலையாள இயக்குநர் பிரியதர்ஷனிடம் உதவி இயக்குநராக இருந்தவர். அவர் இயக்கிய இந்த ‘கிரீடம்’, அஜித்தின் மனதுக்கு நெருக்கமான படங்களில் ஒன்று. தவிர, இது அவர் ஆசைப்பட்டு ஒப்புக்கொண்ட புராஜெக்ட். 

47. ‘பில்லா

மீண்டும் ரீமேக். ‘ஏதோ ஒரு படத்தை ரீமேக் பண்றதுக்குப் பதிலா, எங்ககிட்டதான் ‘பில்லா’ இருக்கு. அதையே ரீமேக் பண்ணலாமே சார்’ என்றார் சுரேஷ்பாலாஜி. ரஜினியிடம் அனுமதி கேட்டபோது ‘உடனே பண்ணுங்க அஜித். உங்களுக்கு ‘பில்லா’ பொருத்தமா இருக்கும். வாழ்த்துகள்’ என்றார். தவிர, ‘பரமசிவன்’ படப் பூஜைக்கு வரும்போதே இதைப் பற்றி அஜித்திடம் ரஜினி பேசியிருக்கிறார். ஆனால், ‘ரஜினி சாரின் மிகப்பெரிய வெற்றிப் படம். அதை நாம கெடுத்துடக் கூடாது’ என்று அஜித்துக்கு நிறைய யோசனை. அவற்றையெல்லாம் மீறி ‘பில்லா’ பெரிய வெற்றி. இது விஷ்ணுவர்தனுடன் அஜித்துக்கு முதல் படம். நயன்தாரா காம்பினேஷன். மலேசியாவில் ஷூட்டிங். அதில் அஜித் அங்கேயே வாழ்ந்துவரும் தமிழர் என்பதைக் குறிக்கும் வகையில் அவரின் ஒரு க்ளோசப் காட்சியில், ‘ஆதித் தமிழன் ஆண்டவன் ஆனான்! மீதித் தமிழன் அடிமைகள் ஆனான்!’ என்று அங்குள்ள தேயிலைத் தொழிலாளர்கள் பற்றி கனெக்ட் கொடுத்துப் பாடுவதுபோல் இருக்கும். ஆனால், அந்தப் படத்தின் ஃபேன்டசி, கிளாமரில் அது சரியாகக் கண்டுகொள்ளப்படவில்லை.

48. ‘ஏகன்’

விஜய் நடித்த ‘போக்கிரி’யை பிரபுதேவா இயக்கிக்கொண்டிருந்தபோது, ராஜுசுந்தரம் டைரக்‌ஷனில் வந்த படம் இது. ‘சீரியஸ் சப்ஜெக்டா பண்ணிட்டிருக்கோம். கொஞ்சம் லைட் சப்ஜெக்டா பண்ணலாம்’ என்று பேசி முடிவுசெய்து ஷாரூக் கான் நடித்த இந்திப் படம் ஒன்றை ரீமேக்கினார்கள். அது பெரிதாகப் போகவில்லை. 

49. ‘அசல்’

சிவாஜி புரொடக்‌ஷன்ஸுக்கு ஒரு படம் பண்ண வேண்டும் என்று விரும்பினார். முதலில் இந்தப் படத்துக்கு இயக்குநராக கமிட் ஆனவர் கவுதம் வாசுதேவ் மேனன். ஆமாம், அஜித்தும் கவுதம் வாசுதேவ் மேனனும் இணைந்து பணியாற்றவேண்டிய முதல் படம் இதுதான். ஹாரிஸ் ஜெயராஜ் இசை. தயாரிப்புத் தரப்பில் ஹரிஸ் ஜெயராஜ் வேண்டாம் என்றது. ‘அவரை விட்டுக்கொடுக்க முடியாது’ என்று கவுதம் உறுதியாக இருந்தார். அதனால் இந்தப் படத்தை அவர் பண்ணாமல் விலகிவிட்டார். ஆனால், அவர் ஃபிக்ஸ் செய்திருந்த சமீரா ரெட்டிதான் இந்தப் பட ஹீரோயின். பிறகு, கவுதமும் ஹாரிஸும் கருத்துவேறுபாட்டில் விலகியது வேறு கதை. அதன் பிறகு இந்தப் படத்துக்கு இயக்குநராக சரணும், இசையமைப்பாளராக பரத்வாஜும் ஃபிக்ஸ் ஆனார்கள். முதன்முதலாக இந்தப் பட பூஜையில்தான் அஜித் தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளைக் கலந்துகொள்ளவைத்தார். இந்தப் பட டைட்டில் கார்டில் ‘கதை, திரைக்கதை, வசன உதவி - அஜித்குமார்’ என்று வருவதை இவரின் தீவிர ரசிகர்கள் கவனித்திருப்பார்கள். இந்தப் படம் சரியாகப் போகாததால் அது ரீச் ஆகவில்லை. ஆனால், இந்தப் படத்தில் அஜித்தின் கெட்டப் பெரிதாகப் பேசப்பட்டது. அதேபோல ‘சிங்கம் என்றால் என் தந்தைதான்...’ என்ற பாடல் சிவாஜி ஃபேமிலிக்கு மிகப்பெரிய கனெக்ட்டிவிட்டியைக் கொடுத்த வகையில் அஜித்துக்கு ‘அசல்’ சந்தோஷமே! 

50. ‘மங்காத்தா’

அஜித், தன் 42-வது படமான ‘பரமசிவன்’ நடித்துக்கொண்டிருக்கும்போதே தன் 50-வது படம் எப்படி இருக்க வேண்டும் என்பதை முடிவுசெய்துவிட்டார். ‘வழக்கமா, 50-வது படம்னா ஹீரோ பூவுக்குள்ள இருந்து எழுந்து சிரிப்பார்; ஓப்பனிங் சீன்ல ஆட்டிக்குட்டியைக் காப்பாத்துவார். ஆனா, என் 50-வது படத்துல இந்த மாதிரி எதுவும் இருக்கக் கூடாது. குறிப்பா நான் நார்மலா, வழக்கமான ஹீரோவா இருக்க மாட்டேன்’ எனச் சொல்லிக்கொண்டிருப்பாராம். அதாவது, வழக்கமான ஹீரோவுக்கு நேரெதிர் ஹீரோவாக இருக்க வேண்டும் என முடிவுசெய்து, அதற்கு தகுந்த மாதிரியான ஸ்க்ரிப்டையும் தேடிக்கொண்டிருந்தார். 

அந்தச் சமயத்தில் வெங்கட் பிரபு இவரிடம் தன் அடுத்த பட ஸ்க்ரிப்ட்டைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். ‘இது உங்க ரேஞ்ச் படம் இல்லைன்னா, நான் பசங்களை வெச்சு பண்றேன். சத்யராஜ் சார், விவேக் ஓபராய் இருவருக்கும் முக்கியமான கேரக்டர்கள்’னு சொல்லியிருக்கிறார். இது அப்படியே தான் தேடிக்கொண்டிருந்த 50-வது படத்துக்கான ஸ்க்ரிப்டாக இருப்பதைப் புரிந்துகொண்ட அஜித், ‘நீ எனக்கு ஸ்க்ரிப்ட்ல தனியா எதுவும் பண்ண தேவையில்லை. உன் கதையில் நான் இருப்பேன். அந்த கேரக்டராவே நான் இருப்பேன்’ என்று சொல்லியிருக்கிறார். அப்படித்தான் அஜித் `மங்காத்தா’வுக்குள் வந்தார். அதாவது சத்யராஜ், விவேக் ஓபராய்க்குப் பதிவலாக அஜித், அர்ஜுன்.

ராவாகக் குடித்துவிட்டு நடக்கும் மாஸ் ஹீரோ கேரக்டர்களுக்கு மத்தியில், இதில் மறுநாள் காலையில் ‘ஐயோ தலைவலிக்குதே!’ என்பார். ராய் லட்சுமிடன் படுக்கையில் இருப்பார். த்ரிஷாவின் அப்பாவை காரிலிருந்து தள்ளிவிடுவார். ‘மணி... மணி... மணி!’ எனப் பணத்துக்காக அலைவார். அவர் சொன்னதுபோலவே வழக்கமான ஹீரோவுக்கான நேர்ரெதிர் கேரக்டர். வெங்கட் பிரபுவின் ஸ்க்ரிப்டில் இவர் இருந்தாலும் அது தியேட்டரில் மிகப்பெரிதாகத் தெரிந்ததற்கு ஒரே காரணம் அஜித். 

அதேபோல அர்ஜுனுக்கு படத்தில் அவ்வளவு ஸ்பேஸ் இருந்த ஸ்க்ரிப்டில் எந்தச் சிறிய மாற்றமும் சொல்லவில்லை. முதல் நாள் படப்பிடிப்பில் அஜித்துக்கான காட்சிகள் எதுவும் இல்லை. அர்ஜுன் சம்பந்தப்பட்ட காட்சிகளைத்தான் படம்பிடித்தனர். ஆனால், அர்ஜுனை இலகுவாக்க முன்னதாகவே படப்பிடிப்புத் தளத்துக்குப் போய் அர்ஜுனை வரவேற்றது முதல் அன்று படப்பிடிப்பு முடியும் வரை அர்ஜுனுடன் இருந்துவிட்டு வந்தார். 

சால்ட் அண்ட் பெப்பர் லுக்குக்கான ரெஃபரன்ஸ் ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனிதான். அவரின் முந்தைய படங்களில்கூட நரைமுடியுடன்தான் நடித்திருப்பார். அப்போதே அவரிடம் டை அடிக்கச் சொல்லியிருக்கிறார்கள். ‘நேற்று வரை வெள்ளை முடியா இருந்துட்டு, திடீர்னு கறுப்பு முடியுடன் போய் நிற்க ஒரு மாதிரியா இருக்குது’ எனத் தவிர்ப்பாராம். ‘மங்காத்தா’ அவரின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தைத் தந்த படம். 

‘பில்லா’- ‘வேலு நாயக்கர்’ தொடர்பு, பணம் பெறாமல் அஜித் நடித்த படம், ‘அஜித்தை வைத்து இனி படமே பண்ண மாட்டேன்’ என சொன்னவர், ஏ.எம்.ரத்னத்தின் மறு ஆரம்பம், ‘ஆரம்பம்’ படத்துக்கு அதிக தியேட்டர்கள் கிடைக்க அஜித் என்ன செய்தார் தெரியுமா? ‘சிறுத்தை’ எப்படி ’வீரம்’ ஆனார்? ‘ஹூ ஈஸ் தல’ என்று கேட்டவர் யார்? நாளை பார்ப்போம்..

அஜித்தை அறிவோம்...

அடுத்த கட்டுரைக்கு