Published:Updated:

தலைவர் வந்து, தனிக்கட்சி தொடங்கி, ஜெயிச்சு... கஸ்தூரி சொல்லும் நிதர்சனம்!

தலைவர் வந்து, தனிக்கட்சி தொடங்கி, ஜெயிச்சு... கஸ்தூரி சொல்லும் நிதர்சனம்!
தலைவர் வந்து, தனிக்கட்சி தொடங்கி, ஜெயிச்சு... கஸ்தூரி சொல்லும் நிதர்சனம்!

ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கு, ஆதரவு... எதிர்ப்பு என இரு துருவக் குரல்களும் தற்போது ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துள்ளன. இந்தச் சூழலில், நடிகை கஸ்தூரி ட்விட்டரில் போட்டிருந்த பதிவுகள் ரசிகர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. எனினும், “நான் சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகை. அதற்காக அவர் தவறு செய்யும்போது பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியுமா?” என்று தைரியமாகக் கேட்கிறார். அதே துணிச்சலுடன் நமது கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

``கடந்த சில மாதங்களாக உங்களுக்கு அரசியல் ஆர்வம் அதிகரித்துள்ளதே?”

“கடந்த சில மாதங்களாக நம்ம ஊரோட அரசியல் நிலைமை, அமைதியா இருக்கிறவங்களையும் பேசவைக்குது. சமூகப் பொறுப்பும் அரசியல் ஈடுபாடும் எனக்கு எப்பவும் இருக்கு. தவறாம ஓட்டு போடுறேன். அதனால அரசியல் சார்ந்த விஷயங்களில் தவறுகளைத் தட்டிக் கேட்கிற உரிமையும் எனக்கு இருக்கு.”

“ரசிகர்கள் ‛அரசியலுக்கு வா தலைவா’ என்னும்போது எப்படி இவ்வளவு தைரியமா ஸ்டேட்டஸ்?”

“நான் எப்பவும்போல என்னோட தனிப்பட்ட கருத்துகளை ட்விட்டரில் போட்டுகிட்டிருக்கேன். இந்த அரசியல் ட்வீட் வைரல் ஆகிடுச்சு. எத்தனையோ வருஷங்களா கவனிச்சுட்டிருக்கிற ஒரு விஷயத்தைப் பற்றி நான் சாதாரணமா போட்ட, ஒரு கமென்ட்டுக்கு  இவ்ளோ தாக்கம் இருக்கும்னு நான் நினைச்சுக்கூட பார்க்கலை. நீட் தேர்விலிருந்து, நெடுவாசல் வரைக்கும், ஐபிஎல்-லில் இருந்து ஐஸ்வர்யா ராய் வரைக்கும் எல்லாரைப் பற்றியும் கமென்ட் போடுறேன். ஆனா, இந்த கமென்ட் மட்டும் வைரல் ஆகியிருக்குனா அதுக்கு ரஜினியோட மாஸ்தான் காரணம்.”

“தாமதமான முடிவு என்பதுபோல சொல்லியிருக்கிறீர்கள். அப்படியெனில் ரஜினி அரசியலுக்கு வர வேண்டாம் என நினைக்கிறீர்களா?”

“இல்லையில்லை. நான் அப்படியெல்லாம் நினைக்கவே இல்லை. நான் பதிவுபண்ணியிருக்கிற ட்வீட்கள்கூட என் கருத்தா எடுத்துக்காம, கேள்விகளாத்தான் எடுத்துக்கணும். அந்தக் கேள்விகளுக்கு மற்றவர்களுடைய ரியாக்‌ஷன் என்னனு தெரிஞ்சுக்கத்தான் ட்வீட் பண்ணினேன். ஆயிரம் பேர் பதில் சொல்வாங்கனு நினைச்சா, அதையும் தாண்டி போயிட்டிருக்கு. அவர் வரக் கூடாதுங்கிறது என் கருத்தில்லை. வந்திருந்தா எப்பவோ வந்திருக்கணும்.  இந்த நிலையில் மீண்டும் ஒரு தலைவர் வந்து, அவர் தனிக்கட்சி தொடங்கி, அதில் எவ்ளோ நாள் ஆக்டிவா இருக்க முடியும்? ‛அவருக்குப் பிறகு யார்?’ங்கிற பிரச்னைகளை மக்கள் மீண்டும் சந்திக்கவேண்டியிருக்கும். அவர்களுடைய தீவிர நிலைப்பாட்டைக்கூட ரெண்டு தேர்தல்களுக்குப் பிறகுதான் மக்கள் கண்டறிய முடியும். தேர்தல்னுகூட இல்லை...ஒரு புதுகட்சிக்கு பத்து வருஷ இடைவெளி தேவைங்கிறது என்னோட கருத்து. அதனால, மற்றவர்களுக்காக எதையும் செய்யாம, அவர் மனசு என்ன சொல்லுதோ அதை செய்றதே நல்லது. ”

“இன்றைய சமூக வலைதளச் சூழ்நிலைகள் பற்றி உங்கள் கருத்து என்ன?”

“நிறைய பாசிட்டிவான விஷயங்கள் இருக்கு. அதேநேரம் அதைவிட எக்கச்சக்கமா நெகட்டிவ்வும் இருக்கு. அரசியலையே ஆட்டிப்படைக்கக்கூடிய சக்தியா மீடியா எப்பவும் இருக்கு. ஆனா, அதைத் தாண்டி ஒவ்வொரு தனி மனிதருமே அரசியல் சூழ்நிலைகளைத் தட்டிக்கேட்கிற நிலைமைக்கு உயர்ந்திருக்காங்கனா, அதுக்குக் காரணம் இன்றைய சோஷியல் மீடியா வளர்ச்சி. பொய்களை உரக்கச் சொல்றதும், உண்மைகளை மறைச்சுவைக்கறிதும் முன்பெல்லாம் சாதாரணம். ஆனா, சோஷியல் மீடியா வளர்ச்சிக்குப் பிறகு எந்த உண்மையும் மறைக்க முடியாது. நெடுவாசல், விவசாயிகள் போராட்டம், ஜல்லிக்கட்டு இதெல்லாம் அதற்கு எடுத்துக்காட்டு. மக்கள் சக்திக்கு பெரிய சப்போர்ட், சமூக வலைதளம். இருந்தாலும் முன்பெல்லாம் திண்ணையில் உட்கார்ந்து வம்பு பேசியவங்க, இப்போ சோஷியல் மீடியாவுலயும் இருக்காங்க. அவங்களைத் தூக்கிப் போட்டுட்டு பார்த்தா, நல்ல கருத்துகளைச் சொல்பவர்களுக்கு, இது ஒரு நல்ல தளம்.”

“இந்த ட்வீட்டுகளுக்குப் பதிலா வரும் மிரட்டல்களை எப்படிச் சமாளிக்கிறீர்கள்?”

“இதுவரை எத்தனையோ விஷயங்களைப் பற்றிப் பதிவிட்டிருக்கேன். இந்த விஷயத்துல தமிழ்நாடே ரெண்டுபட்டு கிடக்கு. ஏன்னா, அந்த அளவுக்கு சரமாரியா நிறைய எதிர்க்கருத்துகள் வந்துட்டே இருக்கு. அதில், ரஜினி ரசிகர்கள்னு தங்களைச் சொல்லிக்கிறவங்கள்ல குறிப்பிட்ட சிலர் நாகரிகமா எதிர்ப்பு தெரிவிச்சாங்க. ஆனா, பெரும்பாலானவங்க ரொம்பக் கொச்சையா என்னோட குலம், நாகரிகம், வேலை, ஒழுக்கம்... எல்லாத்தையும் மட்டமா விமர்சிச்சாங்க. என்னோட கருத்துகளை விமர்சிக்காம, என்னையே விமர்சிக்கிற பண்பு எப்படிப்பட்டது? உண்மையாகவே இவங்கெல்லாம் அவருடைய ரசிகர்களா? இப்படிப்பட்ட ஆள்களைத்தான் அவர் தன் படைவீரர்களா நினைக்கிறாரா?

“அறிஞர் அண்ணா, கிரண் பேடி, சந்திரபாபு நாயுடு நல்ல அரசியல் தலைவர்கள்னு சொல்லியிருக்கீங்க. அதுபோன்ற தலைவர்கள் உருவாக வாய்ப்பிருக்கா?”

“நான் இவங்க மட்டுமே நல்ல தலைவர்கள்னு சொல்லலை. இன்னும் எத்தனையோ பேர் இருக்காங்க. அதில் எனக்கு ஞாபகம் வந்தவர்களின் பெயரை மட்டுமே சொல்லியிருக்கேன். இவர்களோட வரிசையில் ரொம்ப ரொம்ப மதிக்கிறது, சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் லீ க்வான் யூ. இவர்கள் எல்லார்கிட்டையும் ஒரு ஒற்றுமையை பார்த்துருக்கேன். அதில் முதலாவது தொலைநோக்குப் பார்வை. இரண்டாவது ஆணித்தரமான முடிவுகள். மூன்றாவது அதிரடியான நடவடிக்கைகள். இந்த மாதிரியான அரசியல் தலைவர்கள் இனிமேலும் உருவாகுவதற்கான சாத்தியக்கூறுகள் நிறையவே இருக்கு. நம்ம ஊரிலும் ஒருநாள் நிச்சயமா அப்படிப்பட்ட அரசியல் தலைவர் கிடைப்பார்ங்கிற நம்பிக்கை இருக்கு.”

”ரஜினியின் இந்தத் திடீர் முடிவை எப்படிப் பார்க்கிறீங்க?

“அவர் இப்போ முடிவு செய்திருக்கார்ங்கிறதையே நான் நம்பலை. 20 வருஷமா இதைத் சொல்லிக்கிட்டு இருக்கார். ‛இந்த 20 வருஷங்களில்  நான் யாரையும் சார்ந்திருக்கவில்லை’னு வாய்ஸ் கொடுத்திருக்காரே தவிர, மக்களுக்காகவும், அரசியல் சார்ந்த நடவடிக்கைகளிலும் அவர் ஈடுபட்டதாவே தெரியலை. பர்சனலா அவர் அரசியலுக்கு வருவதற்கான காரணமும் அழுத்தமா இல்லை. சுத்தியிருக்கறவங்க ஏத்தி விடுறதாலகூட, ஏன் வரக்கூடாதுன்னு அவர் யோசிக்கறாரோனு தோணுது. ஆனால், இதுக்கெல்லாம் எவ்வளவு டைம் இருக்கு? அதைப் பத்தி அவர் யோசிக்கவே இல்லை. அதுதான் எனக்கு ஆச்சரியமா இருக்கு. ”

”இன்றைய அரசியல் சதுரங்கங்களை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“சதுரங்கம்லாம் இல்லை...ஆளுக்கொரு பக்கம் பிடிச்சு இழுக்கிற டக் ஆஃப் வார்.  

பிரசாரத்துல டெட் பாடி... 

பெட்டிக்குள்ள  பலகோடி... 

பெங்களூருல ஒரு லேடி...

பதறுறாரு எடப்பாடி...

எல்லாத்துக்கும் பின்னாடி

இருக்கிறாரா மோடி?

 இப்படித்தான் போகுது நம்ம நிலைமை.”

“கஸ்தூரியின் எதிர்கால திட்டம் என்ன?”

“சினிமாவுல மறுபடியும் நிரந்தர இடத்தைப்பிடிக்கணும். அதற்கு முன்னாடி மறைந்த என் பெற்றோர்கள் நினைவா ஆதரவற்றோர்களுக்கான இல்லத்தை ஆரம்பிக்கற திட்டத்தில் கவனம் செலுத்திட்டு இருக்கேன். அடுத்ததா என்னோட பெண் பெயரில் அறக்கட்டளை நிறுவியிருக்கேன். அவள் மூணு வருஷம் மருத்துவமனையில் இருந்து நிறைய பாடங்களை எனக்கு கத்துக் கொடுத்திருக்கா. என்னோட பெரிய ரோல் மாடல். அவள் பேரில் ஆரம்பிச்சுருக்க அறக்கட்டளை மூலமா, குழந்தைகளுக்கான மருத்துவச்செலவு, படிப்பு, சமுதாய வளர்ச்சிக்கு உதவி செய்யணும். இதுதான் எதிர்கால திட்டம்.”

“மறுபடி சினிமாவில் உங்களை எப்போ பார்க்கலாம்?”

“கூடிய விரைவிலேயே பார்க்கப்போறீங்க. ஒரு சர்ப்ரைஸ் காத்துக்கிட்டிருக்கு. ஒருவேளை இந்தப் பேட்டி வெளியாகிறதுக்குள்ள அந்த அறிவிப்பு வரலாம். வெயிட் அண்ட் வாட்ச்.” என்று கூலாக பேட்டியை முடித்துக் கொண்டார் கஸ்தூரி.

அடுத்த கட்டுரைக்கு