Published:Updated:

"விஷாலுக்கு எதுவுமே புரியாம, எதையாவது சொல்லிட்டு முழிக்கிறார்..!" - கடுகடுக்கும் சங்கம்

"விஷாலுக்கு எதுவுமே புரியாம, எதையாவது சொல்லிட்டு முழிக்கிறார்..!" - கடுகடுக்கும் சங்கம்
"விஷாலுக்கு எதுவுமே புரியாம, எதையாவது சொல்லிட்டு முழிக்கிறார்..!" - கடுகடுக்கும் சங்கம்

"விஷாலுக்கு எதுவுமே புரியாம, எதையாவது சொல்லிட்டு முழிக்கிறார்..!" - கடுகடுக்கும் சங்கம்

தயாரிப்பாளர் சங்கத்துக்கான ஆலோசனைக் கூட்டத்தில் விஷால் பேசியதுதான் தற்போதைய ஹாட் டாபிக்.  திருட்டு விசிடி-யில் தொடங்கி பலவற்றை விமர்சித்துப் பேசியிருந்தார் விஷால். அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது திரையரங்க உரிமையாளர் சங்கம். 

தயாரிப்பாளர் சங்கக் கூட்டத்தில் விஷால் பேசும்போது, `திரையரங்குகளில் ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவுசெய்வதற்குக் கூடுதல் கட்டணமாக 30 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அதனால் தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து புதிய இணையதளம் தொடங்க இருப்பதாகவும், அதில் டிக்கெட் முன்பதிவு செய்ய 10 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும்' என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அந்த முடிவுக்கு, காஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்டத் திரையரங்க உரிமையாளர் சங்கத்தினர் ‛விநியோகஸ்தர்களையும் திரையரங்க உரிமையாளர்களையும் ஆலோசிக்காமல் தன்னிச்சையாகப் பல முடிவுகளை விஷால் எடுக்கிறார்' எனக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து திருவள்ளூர் - காஞ்சிபுரம் திரையரங்க உரிமையாளர் சங்கப் பொதுச்செயலாளர் கண்ணப்பன் கூறியதாவது... “படத்தை விநியோகஸ்தர்கள் அதிக விலைக்கு வாங்கிடுறாங்க. அதனால எங்களையும் அதிக விலைக்கு டிக்கெட் விற்கச் சொல்லிக் கட்டாயப்படுத்துறாங்க. இனிமேல் அதிக விலைக்கு டிக்கெட் விற்க மாட்டோம் என்று முடிவெடுத்திருக்கிறோம் அதுமட்டுமில்லாம, இனிமேல் மினிமம் கியாரன்டிக்கும் இடமில்லை.  தயாரிப்பாளரோடப் படத்தை நாங்க வாங்கி திரையிடுறோம். அப்போ மினிமம் கியாரன்டி அவங்க தரணுமா... இல்லை நாங்க குடுக்கணுமான்னு யோசிச்சா, லாஜிக் இடிக்குது. விநியோகஸ்தர்கள், படத்தை பெரிய தொகைக்கு வாங்கினாலும் மினிமம் கியாரன்டி கொடுக்க முடியாது. ஏன்னா, `லிங்கா' படத்துக்கு நாங்க குடுத்த அட்வான்ஸ் தொகையே இன்னும் பலருக்குத் திருப்பிக் குடுக்கலை.

இந்த நிலையில், ஜி.எஸ்.டி-ங்கிற மத்திய அரசு நிர்ணயிக்கும் வரி வேறு. டிக்கெட் விலையுடன் 28 சதவிகித வரியைக் கூடுதலாக ஜி.எஸ்.டி விதிச்சிருக்கு. இதனால் டிக்கெட் விலை கூடும். அந்த விலைஉயர்வுக்கு பொதுமக்கள் மத்தியில் எந்த அதிர்வும் இல்லை. 2006-ல இருந்தே விலைவாசி ஏறிடுச்சு. ஆனா, இந்த 11 வருஷங்களா திரையரங்கக் கட்டணம் மட்டும் அப்படியே இருக்கு.  படம் பார்க்க வர்றவங்களுக்கு அடிப்படை வசதிகள், பராமரிப்புச் செலவு, மின்கட்டணம்னு நிறைய இருக்கு. அதனால டிக்கெட் விலை உயர்த்தவேண்டியது அவசியம். விலை உயர்வினால் பொதுமக்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லைங்கிறதுதான் உண்மை.

`ஆன்லைன் புக்கிங் வசதி செய்றோம்'னு விஷால் சொல்றார். ஆன்லைன் புக்கிங்கிறது தியேட்டர் சம்பந்தப்பட்டது. எல்லாருமே ஆன்லைனில் புக் பண்ண மாட்டாங்க. ஆன்லைன் புக்கிங் கட்டணம்கிறது நம்ம வசதிக்காகச் செலுத்தும் கட்டணம். சாதாரண மக்கள் ஆன்லைனில் டிக்கெட் புக் பண்றதில்லையே. விஷால் தம்பிக்கு அது தெரியலை.

தயாரிப்பாளர் சங்கத்தில் என்ன வேலை இருக்கோ, அதை மட்டும் அவர் செய்துட்டுப் போலாம். ஆன்லைன் புக்கிங் எங்க உரிமை. எங்க தியேட்டருக்கு நாங்க டிக்கெட் விற்கிறோம். இதுல ஏதும் பிரச்னைன்னா நாங்கதான் சொல்லணும். தியேட்டர் பற்றி ஏதும் பேசுறதா இருந்தா, விஷால் முதல்ல எங்ககிட்டதானே பேசியிருக்கணும்? ஏன்னா, ஒவ்வொரு தியேட்டர்காரரும் ஒவ்வோர் இணையதளத்துல ஒப்பந்தம் போட்டிருப்பாங்க. திடீர்னு இவர், `நான் பண்றேன்'னு எப்படி வர முடியும்? ஜி.எஸ்.டி-யில் தொடங்கி இதுல பல பிரச்னைகள் இருக்கு.

விஷாலுக்கு இது எதுவுமே புரியாம, எதையாவது சொல்லிட்டு முழிக்கிறார்.  முதல்ல `போராட்டம் பண்ணப்போறேன்'னு சொன்னார். இப்போ வாபஸ் வாங்கிட்டார். விஷால் அறிவிச்சப் போராட்டத்துக்கே நாங்க எதிர்ப்புதான் தெரிவிச்சோம். ஏன்னா,  அந்த நேரத்துல ஓடிட்டிருந்த படங்களோட நிலைமை, விநியோகஸ்தர்களோட நாங்க போட்ட ஒப்பந்தம்னு யோசிச்சு எடுத்த முடிவு. ஒப்பந்தப்படி படத்தைத் திரையிடலைன்னா, அதற்கான நஷ்டஈடு பணத்தையும் நாங்கதான் கொடுத்தாகணும். 

விஷால் பாவம். அவருக்கே என்ன செய்றோம்னு தெரியலை. நல்ல பெயர் வரும்னு எல்லாத்தையும் அவசரப்பட்டு செய்றார். படம் தயாரிக்கிறதுதான் அவரோட வேலை.  படத் தயாரிப்புல நடக்கிற பிரச்னையை வேணும்னா அவரால் கட்டுப்படுத்த முடியும். எங்களுக்கும் அவருக்கும் சம்பந்தமே கிடையாது. இந்த விஷயத்தில் தலையிடக்கூட அவருக்கு உரிமை கிடையாது. சினிமா நல்லா இருக்கணும்னு நல்ல விஷயங்களைக் கொண்டுவந்தால் நிச்சயம் விஷாலுக்கு ஆதரவா இருப்போம்” என்று கூறினார் திரையரங்க உரிமையாளர் சங்கப் பொதுச்செயலாளர் கண்ணப்பன்.  

அடுத்த கட்டுரைக்கு