Published:Updated:

‘‘அஜித்தை வைத்து இனி படமே பண்ணமாட்டேன்’’ ‘ஆரம்ப’ கதை - ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினிதொடர் பாகம் 11

‘‘அஜித்தை வைத்து இனி படமே பண்ணமாட்டேன்’’ ‘ஆரம்ப’ கதை - ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினிதொடர் பாகம் 11
‘‘அஜித்தை வைத்து இனி படமே பண்ணமாட்டேன்’’ ‘ஆரம்ப’ கதை - ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினிதொடர் பாகம் 11

‘‘அஜித்தை வைத்து இனி படமே பண்ணமாட்டேன்’’ ‘ஆரம்ப’ கதை - ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினிதொடர் பாகம் 11

‘என் வீடு என் கணவர்’ என்ற படத்தில் ஒரு பாடல் காட்சியில் சில விநாடிகள் வந்து போனது மூலம் அமைந்ததுதான் அஜித்தின் முதல் சினிமா வாய்ப்பு. ஆனால் அடுத்து வந்த ‘பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்கு பட வாய்ப்புதான் மிகச்சரியான அறிமுகம். 1992  ஆகஸ்ட் 3ல் அந்தப் பட, ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து கணக்கிட்டால், இன்னும் சில மாதங்களில் 25 வது வருடத்தைத் தொடுகிறார் அஜித். அன்றைய தெலுங்கு பட அறிமுக அஜித், ‘வேறு மொழிப் படங்களில் நடிக்க மாட்டேன். தமிழில் மட்டும்தான் நடிப்பேன்’ என்று சொல்லும் இன்றைய ‘விவேகம்’ அஜித்தாக வளர்ந்தது எப்படி? இந்தக் கேள்விக்கான பதிலை அவரின் இந்த கால்நூற்றாண்டு கால திரைப்படங்களின் வழியாக நாம் உணர முடியும். அதற்கான ஒரு ரீவைண்ட் தான்.. இந்த ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினி தொடர்! 

‘பில்லா’- ‘வேலு நாயக்கர்’ தொடர்பு, அஜித் பணம் பெறாமல் நடித்த படம், ‘அஜித்தை வைத்து இனி படமே பண்ண மாட்டேன்’ என சொன்னவர், ஏ.எம்.ரத்னத்தின் மறு ஆரம்பம், ‘ஆரம்ப’த்துக்கு அதிக தியேட்டர்கள் கிடைக்காதற்கு காரணம் என்ன? ‘சிறுத்தை’ எப்படி ’வீரம்’ ஆனார்? ‘ஹூ ஈஸ் தல’ என்று கேட்டவர் யார்? அஜித்தின் அடுத்த ஐந்து படங்களைப் பற்றி இன்று பார்ப்போம்.

51. ‘பில்லா-2’

அடுத்தடுத்த பாகமாக ‘பில்லா’வைத் தொடர்ந்து பண்ணலாம் என்று முடிவுசெய்து எடுத்த படம். முதல் பாகத்திலேயே ‘பில்லா’ இறந்துவிடுவதாகக் காட்டியிருப்பார்கள். இதில், ‘சாதாரண ஓர் இளைஞன் எப்படி பில்லா என்கிற டான் ஆகிறான்?’ என்பதைக் கதையாக எடுத்தார்கள். இன்னொரு விஷயத்தைக் கவனித்திருக்கலாம். ரஜினியின் மிகச்சிறந்த கேரக்டர்களில் ஒன்று ‘பில்லா’. அதேபோல கமல்ஹாசனின் சிறந்த கேரக்டர்களில் ஒன்று ‘வேலு நாயக்கர்’. இதில் ‘பில்லா-2’ கேரக்டருக்கு அந்த வேலு நாயக்கர் ரெஃபரன்ஸ் என்றுகூடச் சொல்லலாம். அவர் எப்படி கடற்கரையோரக் குப்பத்தில் பிறந்து அநாதையாக மும்பை வந்து எப்படி டானாக வளர்ந்தார் என்று சொல்வார்களோ, அப்படித்தான் ‘பில்லா-2’வை எடுத்திருப்பார்கள். இதன் மிகப்பெரிய மைனஸ், இயக்குநர், முக்கியமான நடிகர்கள்... எனப் பெரும்பாலும் வெளிமுகங்கள். நல்ல ஓப்பனிங் இருந்தும் படத்துடன் ஒன்ற முடியாததற்கு இதுகூட ஒரு காரணமாக இருக்கலாம்.

52. ‘இங்கிலீஷ் விங்கீலிஷ்.’

ஸ்ரீதேவி தனிப்பட்ட முறையில் போன் செய்து, ‘நான் இதில் நடிக்கிறேன். நீங்களும் இதில் நடிக்கணும்னு விரும்புறேன்’ என்று கேட்டுக்கொண்டார். ஆனால் அஜித்துக்கு ஸ்ரீதேவி பெரிய பழக்கம் இல்லை. பொதுவான நண்பர்கள் மூலம் பேசி, ‘இது தன்னம்பிக்கை பற்றிய முக்கியமான கேரக்டர். உங்களால் மட்டுமே இந்த ரோலை பண்ண முடியும்’ எனச் சொல்லியிருக்கிறார். ஆனால், இது ஸ்ரீதேவியின் முடிவா, இயக்குநர் கௌரியின் முடிவா எனத் தெரியவில்லை. இங்கிருந்து மும்பை போய் வந்தது, அங்கு தங்கியது உள்பட அனைத்துமே அஜித் செலவு. தயாரிப்புத் தரப்பிடமிருந்து ஒரு பைசாகூட வாங்கிக்கொள்ளவில்லை. 

53. ‘ஆரம்பம்’

‘படைப்பாளிகள் சங்கப் பிரச்னையின்போது இவரிடம் கொடுத்திருந்த அட்வான்ஸை ஏ.எம்.ரத்னம் திரும்ப வாங்கிக்கொண்டார். ‘அஜித்தை வைத்து இனி படமே பண்ண மாட்டேன்’ எனப் பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்தார். இதற்கு முன்னதாக ஒரு ‘பில்லா’ சம்பவம். அஜித், சஞ்சய் வாத்வாவுக்குத் தேதி கொடுக்கிறார். அவர் அந்தத் தேதியை சுரேஷ்பாலாஜிக்குத் தருகிறார். பிறகு, இந்துஜா பிரதர்ஸுக்குக் கைமாறி, ஆஸ்கர் ரவிக்கு அந்தப் படத்தை ரிலீஸ் பண்ண கொடுக்கிறார்கள். ஆனால் அவரோ, படத்தை ரிலீஸ் பண்ணாமல் ‘எனக்கு ஆறு கோடி ரூபாய் நஷ்டம்’ என்கிறார். காரணம், அந்தக் கைமாற்றல்கள்தான். ஆழ்வார்பேட்டையில் அஜித்தின் அலுவலகத்துக்கும் ஆஸ்கர் ரவியின் வீட்டுக்கும் இடையில் ஐந்து கட்டடங்கள்தான் இடைவெளி. ‘ஏங்க நான்தான் நடிக்கிறேன். இவர்தான் ரிலீஸ் பண்ணப்போறார்னா இவர்கிட்டயே போய் படத்தைப் பண்ணியிருப்பேனே. நான் ஏன் மும்பை வழியா போய் வரணும். ஏன் இங்கே ஒரு படத்தை எடுத்து ரிலீஸ் பண்ற தனி தயாரிப்பாளர்களே இல்லையா?’ என்று பயங்கரமாக வருத்தப்பட்டார். 

‘இருக்காங்க சார். ஆனால், நாம்தான் பண்ணுவதில்லை’ என்று உடன் இருந்தவர்கள் சொல்லியிருக்கிறார்கள். `அப்படி யார் யார் இருக்கிறார்கள்?’ எனப் பேச்சு வரும்போது, ஏ.எம்.ரத்னத்தின் பெயர் அடிபட்டிருக்கிறது. ‘அவர் நம்முடன் நல்ல டேர்ம்ஸில் இல்லை. ஆனால், அவரை மாதிரியான ஆள்கள் போனதால்தான் இவங்களை மாதிரி ஆள்கள் வர ஆரம்பிச்சுட்டாங்க’ என்று அவரிடம் சொல்லியிருக்கிறார்கள். 

மறுநாள் காலை. தி.நகரில் உள்ள அஜித்தின் நண்பரின் அலுவலகத்திற்கு ஏ.எம்.ரத்னம் அழைக்கப்படுகிறார். ட்விஸ்ட் என்னவென்றால், அந்த அலுவலகம்தான் ஏ.எம்.ரத்னத்தின் ஆரம்பகால அலுவலகம்.  ரத்னம் எந்த அறையில், எந்த நாற்காலியில் முன்பு உட்கார்ந்திருப்பாரோ அதே அறையில் அதே நாற்காலியில் அமரவைக்கப்படுகிறார்.   ‘இங்கே வந்து எத்தனை வருஷமாச்சு!’ என்று ரத்னம் பழைய நினைவுகளை ஃப்ளாஷ்பேக்குகிறார்.  ‘ஒரு நல்ல செய்தி. சார், உங்களுக்கு படம் பண்றார். இந்த இடத்தில் உங்களைக் கூப்பிட்டுச் சொல்லச் சொன்னார்’ என்கிறார் அஜித்தின் மேனேஜர் சுரேஷ்சந்திரா. ரத்னத்துக்கு அப்படி ஒரு சந்தோஷம். விஷ்ணுவர்தன், ஏ.எம்.ரத்னம், எழுத்தாளர்கள் சுபா... காம்பினேஷனில் தொடங்கியது ‘ஆரம்பம்’. 

இந்தப் படத்தில் ஹீரோயினாக யாரை ஃபிக்ஸ் பண்ணலாம் எனப் பேசிக்கொண்டிருந்தபோது நயன்தாரா நடித்த ‘ராமாயணம்’ படத்தை டிவி-யில் பார்த்திருக்கிறார் அஜித். ‘அவங்க சும்மாதானே இருக்காங்க. அவங்களைப் பேசிப்பாருங்களேன்’ என்று சொல்லியிருக்கிறார். ‘ஆரம்ப’த்தில் கமிட்டான நேரமோ என்னவோ, நயன்தாரா பிறகு பரபரப்பாகிவிட்டார். இந்தப் பட சமயத்தில், ஆர்யா ‘இரண்டாம் உலகம்’ ஷூட்டிங்குக்குப் போய்விடுவார். நயன்தாரா மற்ற படங்களுக்குப் போய்விடுவார். ‘அவர்கள் வரட்டும்’ என அஜித் பொறுமையாகக் காத்திருந்து நடித்த படம். 

படம் முடிந்தது. ‘ஆரம்பம்’ ரிலீஸ். ஆரம்பத்துடன் வேறொரு படமும் ரிலீஸ். அந்தப் படத்தின் தயாரிப்பாளர், தன் படத்துக்கு அதிக தியேட்டர்கள் போடுகிறார். ‘ஆரம்பம்’ படத்துக்குக் குறைவான தியேட்டர்களே கிடைத்தன. அதற்கு அவர் சொன்ன காரணம்தான் அஜித்துக்கு அதிர்ச்சி. ‘ரத்னம் இப்பதான் புதுசா வாழ்க்கையை ஆரம்பிக்கிறார். அவர்கிட்ட `ஆரம்பம்’ மட்டுமே உள்ளது. ஆனா என்கிட்ட, நிறைய பெரிய படங்கள் அடுத்தடுத்து ரிலீஸுக்குக் காத்திருக்கு. இந்தப் படத்துக்கு உங்க தியேட்டர்களைக் கொடுத்தீங்கன்னா, என் அடுத்தடுத்த படங்களையும் உங்க தியேட்டர்களுக்கே தருவேன்’ என்று சொல்லியிருக்கிறார். உடனே அஜித் ‘ஆரம்பம்’ ரிலீஸுக்கு முன்பே, ‘அடுத்த படமும் ரத்னம் சாருக்கே பண்றேன்’ என்று அறிவித்தார். தியேட்டர்காரர்கள் ரத்னத்தை நோக்கி ஓடிவந்தனர். ‘ஆரம்பம்’ படத்துக்கும் அதிக தியேட்டர்கள் கிடைத்து படம் ரிலீஸ் ஆனது. 

இந்தப் படத்தில் அஜித்தைக் கைது செய்வதுபோல் ஒரு காட்சி. அப்போது அஜித்தின் மீது போலீஸ் அதிகாரி கை வைப்பார். அஜித் அந்த அதிகாரியை, திரும்பி ஒரு பார்வை பார்ப்பார்.  அப்போது தியேட்டரில் அப்படி க்ளாப்ஸ் அள்ளியது. அந்தக் காட்சிக்கு அத்தனை க்ளாப்ஸ் கிடைக்கும்  என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. அந்தக் காட்சியை எடுத்து, ‘தல மாஸ்’ என்று போட்டு வைரலாக்கினார்கள் அவரது ரசிகர்கள்.

54. ‘வீரம்’

மறைந்த சீனியர் தயாரிப்பாளர் நாகிரெட்டியின் 100-வது பிறந்த நாள் மற்றும் அவரின் ‘விஜயா வாஹினி’ தயாரிப்பு நிறுவனத்துக்கு 100-வது படம். அஜித்தை வைத்து பண்ணணும் என்று விருப்பப்பட்டனர். ‘எனக்கும் வாஹினிக்குப் படம் பண்ணணும்னு விருப்பம். நான் நேர்ல வர்றேன்’ என்று சொல்லி அஜித்தே நேரில் போனார். இயக்குநர் யாரென்று முடிவாகவில்லை. அஜித்தின் மேனேஜருக்கு நடிகர் பாலா நல்ல பழக்கம். அவரின் மூலம் அவரின் சகோதரரும் ‘சிறுத்தை’ பட இயக்குநருமான சிவாவும் பழக்கம். அவர், ‘லைஃப்ல ஒரே ஒரு ஆம்பிஷன்தான் சார். அஜித் சாரை வெச்சு ஒரு படமாவது பண்ணிடணும்’ என்று சொல்லிக்கொண்டே இருப்பாராம். சிவா, ஆஸ்கர் நிறுவனத்தில் ஏற்கெனவே கேமராமேனாக இருந்தவர். 

பிறகு அஜித்-சிவா சந்திப்பு நடக்கிறது. அவரிடம் பேசிய உடனேயே ‘இவர், கவுதம் வாசுதேவ் மேனன், ஹரி ஸ்டைல்களை மிக்ஸ் பண்ணி படம் பண்ணக்கூடியவர்’ என்பதைப் புரிந்துகொண்டார் அஜித். அப்படித்தான் இந்த காம்பினேஷன் அமைந்தது. நாலு அண்ணன்-தம்பிகள். படம் பட்டாசாக வந்தது. அந்தச் சமயம் அஜித், தன் ரசிகர் மன்றங்களைக் கலைத்திருந்தார். ‘என்னைத் தாண்டிப் போய்... ’, ‘நம்கூட இருக்கிற நாலு பேரைப் பார்த்துக்கிட்டா, ஆண்டவன் நம்மளைப் பார்த்துப்பான்’ என்று தன் தம்பிகளைப் பற்றிப் பேசிய வசனங்களை எல்லாம் தங்களைப் பற்றி பேசியதாகவே ரசிகர்கள் எடுத்துக்கொண்டனர். ‘மன்றத்தைத்தான் கலைச்சுட்டேன். ஆனால், முன்பைவிட இன்னும் கனெக்ட்டிவிட்டியோடு இருப்பேன்’ என்று அஜித் சொல்வது போன்ற விஷயங்களை சிவா இதில் பண்ணினார். 

55. ‘என்னை அறிந்தால்’

கவுதம் வாசுதேவ் மேனன், அப்போது பல பிரச்னைகளில் இருந்தார். ‘ஆரம்பம்’ ஃபர்ஸ்ட் காப்பி பார்த்துவிட்டு வெளியே வரும்போதுதான் அந்தப் பட ரிலீஸில் உள்ள பிரச்னைகளை ரத்னம் சொல்கிறார். பிறகு, அடுத்த படத்தையும் அவருக்கே என அறிவிக்கச் சொல்கிறார். ஆனால், அடுத்த பட இயக்குநர் யார் எனப் பேசும்போது சிலர், ‘கவுதம் வாசுதேவ் மேனன் சரியாக இருப்பார்’ என்று சொல்லியுள்ளனர். ஆனால், ஏற்கெனவே சிவாஜி ஃபிலிம்ஸுக்காக அஜித்தை இவர் இயக்கவேண்டிய படம் டிராப் ஆனதும் ‘ஹூ இஸ் தல?’ என்று கவுதம் கேட்டது அஜித்துக்கும் தெரியும். 

அது எதையும் மனதில் வைத்துகொள்ளாமல், ‘ம்... பேசுங்க’ எனச் சொல்லியிருக்கிறார். அப்போதுதான் கவுதம் வாசுதேவ் மேனன் அஜித்தை அறிந்துகொண்டார். அஜித்துக்கும் ‘என்னை அறிந்தால்’ தனிப்பட்ட முறையில் பிடித்த படம், பிடித்த கேரக்டர். இதில் வரும், ‘உனக்கென்ன வேணும் சொல்லு...’ பாடல் அவர் அதை பெர்சனலாக ரிஸீவ் செய்துகொண்ட பாடல். அந்தப் பாட்டுக்காக அவர் போன எல்லா ஊர்களிலும் போட்டோ எடுத்து தனி கலெக்‌ஷனாகவே வைத்திருக்கிறார். அவருடன் நெருங்கிப் பழகியவர்கள், இதில் வரும் மேனரிஸங்களைப் பார்க்கையில் அவரை அப்படியே நேரில் பார்ப்பதுபோல் இருக்கும்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் காப்பியைப் பார்த்தவர்கள் `அருண்விஜய் போர்ஷனைக் குறைக்க வேண்டும்’ எனப் பேசினார்கள். ஆனால், `இந்தப் படத்தில் அந்தப் போட்டிதான் அழகு’ என்றவர், ‘படத்தை அருண்விஜய் பார்த்துட்டாரா?’ என்று கேட்டிருக்கிறார். ‘இன்னும் பார்க்கவில்லை’ என்பதைத் தெரிந்துகொண்டு, ‘அவர் ஃபேமிலிக்குத் தனியா ஒரு ஷோ புக் பண்ணுங்க. இந்தச் சந்தோஷத்தைத் திரும்பி அந்த ஃபேமிலிக்கு உங்களால கொடுக்கவே முடியாது. உடனே புக் பண்ணுங்க’ என்று சொல்லியிருக்கிறார். இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்கள், அஜித்தை எந்த அளவுக்குக் கொண்டாடினார்களோ, அதற்குக் குறைவில்லாமல் ‘விக்டர்’ அருண்விஜய்யையும் கொண்டாடினார்கள். 

ஆலுமா டோலுமாவுக்கு ஆடும் அஜித் மகன், ஆப்ரேஷன் அன்றே டிஸ்சார்ஜ் ஆன அஜித், ‘விவேகம்’ ஸ்பெஷல் ஃபிட்னஸ், அஜித் பற்றி அக்ஷரா சொன்னவை... நாளை பார்ப்போம்.


அஜித்  அறிவோம்...

அடுத்த கட்டுரைக்கு