Published:Updated:

“அவங்க வருவாங்க... என்கூட சேர்ந்து வாழ்வாங்க!” - பாலாஜி நம்பிக்கை

ம.கா.செந்தில்குமார்
“அவங்க வருவாங்க... என்கூட சேர்ந்து வாழ்வாங்க!” - பாலாஜி நம்பிக்கை
“அவங்க வருவாங்க... என்கூட சேர்ந்து வாழ்வாங்க!” - பாலாஜி நம்பிக்கை

நகைச்சுவை நடிகரும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளருமான தாடி பாலாஜியின் குடும்பத்தில், தற்போது புயல் வீசுகிறது. இவரின் மனைவி நித்யா சென்னை மாதவரம் காவல் நிலையத்தில், ‘பாலாஜி, என் சாதியைக் குறிப்பிட்டு திட்டுகிறார்’ என்று புகார் கொடுத்திருக்கிறார். காதல் திருமணம் செய்துகொண்ட பாலாஜி-நித்யா தம்பதிக்கு, ஆறு வயதில் பெண் குழந்தை உள்ளது. 

இந்தப் புகார் குறித்துப் பேச, நித்யாவைத் தொடர்புகொண்டோம். ஆனால், ‘‘அது பற்றி நான் பேச விரும்பவில்லை’’ என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.  அதைத் தொடர்ந்து தாடி பாலாஜியிடம் பேசினோம்.

‘‘ ‘சில விஷயங்கள் வேண்டாம், நல்லதுக்கு இல்லை’னு சொல்றோம். அதைக் கேட்காம ஈடுபடும்போதுதான் நமக்குக் கோபமே வரும். அப்படி நார்மலா ஒரு குடும்பத்துல வர்ற சண்டையை, அவங்க வசதிக்காக சாதியைச் சொல்லித் திட்டினதா மாத்தியிருக்காங்க. அவங்ககூட இருக்கிற சிலரின் தவறான ஆலோசனையைக் கேட்டுட்டு இப்படிப் பண்றாங்க. இத்தனைக்கும் எங்களுக்குத் திருமணமாகி எட்டு வருஷங்கள் ஆகுது. நான் என்ன சாதி, அவங்க என்ன சாதினு தெரிஞ்சுதான் ரெண்டு பேரும் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அப்படி இருக்கும்போது, இத்தனை வருஷங்கள் கழிச்சு அவங்களை சாதியைச் சொல்லி பேசவேண்டிய அவசியம் என்ன? என்னை அசிங்கப்படுத்தணும்கிறதுக்காகவே இந்தப் பொய்ப் புகாரைக் கொடுக்க அவங்களைத் தூண்டியிருக்காங்க. 

நாங்க இப்ப இருக்கிற கொளத்தூர் வீடு, என் மனைவி நித்யாவுக்கு அவங்க அப்பா கொடுத்தது. பிறகு நானும் நித்யாவும் இருக்கிற நகைகளை எல்லாம்  அடமானம் வெச்சு, டிவி ஷோ மூலமா வந்த பணத்தையும் போட்டு அந்த வீட்டுக்கு மேல ரெண்டு அடுக்கு மாடிக் கட்டடம் எழுப்பினோம். அதுக்கு பிள்ளையார்சுழி போட்டது என் நண்பன் ஈரோடு மகேஷ்தான். சந்தோஷமா இருக்கணும்னு நினைச்சுதானே அப்படிக் கட்டினோம். ஆனா, ஒவ்வொரு கட்டத்துலயும் ‘இது என் வீடு, வீட்டைவிட்டு வெளியே போ!’னு சொல்லிக்கிட்டே இருந்தாங்க. ஆனாலும் பொறுத்துக்கிட்டேன். இத்தனைக்கும் அது மாமனார் தந்த வீடா இருந்தாலும் அதுக்கு மாசம் 15 ஆயிரம் ரூபாய் வாடகை  கொடுத்துட்டிருக்கேன். மனைவியோட செலவுக்குப் பணம் தர்றேன். அதுபோக அடமானம் வெச்ச நகைக்கு வட்டி, அவங்க அப்பா வாங்கி தந்த லோனுக்கு வட்டி... இவ்வளவும் பண்றது இப்படி கெட்டபெயர் சம்பாதிக்கவா சார்? 

புகார் கொடுத்ததும், வக்கீல்கள்னு சொல்லிக்கிட்டு 10 பேர் ‘டேய் பாலாஜி, கதவைத் திறடா’னு வீட்டுக்குள்ளே வந்தாங்க. ‘உங்களைப் பார்த்தா வக்கீல்கள் மாதிரி தெரியலையே’னு சொன்னேன். உடனே என்னையும் என் மகளையும் உள்ளே வெச்சுப் பூட்டிட்டுப் போயிட்டாங்க. இவ்வளவும் போலீஸ்காரங்க கண் எதிர்லயே நடந்துச்சு. பிறகு இன்ஸ்பெக்டர் போன் பண்ணி, ‘உங்க மகளை அனுப்பிவைங்க சார்’னு சொன்னார். பெண் குழந்தை அம்மாக்கூட இருக்கிறதுதான் நல்லதுனு உடனே அனுப்பிவெச்சேன். 

அவ்வளவு ஏன் சார், புகார் கொடுத்த பிறகு வாட்ஸ்அப்ல நித்யாவோடு பேசினேன். ‘பேப்பர், டிவினு செய்தி போட்டுட்டிருக்காங்கம்மா. இது நீயும் நானும் உட்கார்ந்து பேசி, சரி பண்ணவேண்டிய விஷயம். இல்லையா, உன் சைடுல நாலு பேர், என் சைடுல நாலு பேர் உட்கார்ந்து பேசுவோம்’னு சொன்னேன். ஆனா ‘உன்னை உள்ளே தள்ளுவேன், ஜெயில்ல உட்காரவைப்பேன்’னு வீம்புக்குப் பேசிறவங்ககிட்ட நான் என்ன பதில் பேச முடியும்?

இப்பவும், ‘சரி நடந்தது நடந்துடுச்சு’னுதான் நினைக்கிறேனே தவிர, என் மனைவி மேல எனக்கு எந்தக் கோபமும் இல்லை. அவங்களும் என் மேல ப்ரியமாத்தான் இருக்கிறாங்க. ஆனா, வழக்கமா ஒரு குடும்பத்துல நடக்குற சின்னச் சின்னச் சண்டைகளை அவங்ககூட இருக்கிறவங்கதான் ஊதிப் பெருசாக்குறாங்க. அதான் பிரச்னை. ‘ஒரு குடும்பம் நல்லா இருக்கணும்’னு நினைக்கிற நண்பர்களா இருந்தா அவங்களை இப்படித் தப்பா வழிநடத்துவாங்களா? 

‘ஏதோ நடந்துடுச்சு. நீயும் புகார் கொடுத்துட்ட... வா, நாம பேசி தவறுகளைச் சரிபண்ணிப்போம். சேர்ந்து வாழுவோம். அதை விட்டுட்டு மாறி மாறிப் பேசிட்டே இருந்தா ரெண்டு குடும்பங்களுக்கும்தான் அசிங்கம். நம்மளை நாமளே ஏன் அசிங்கப்படுத்திக்கணும்?’னு எவ்வளவோ சொன்னேன். என்ன... இந்தப் பிரச்னையில் என் குழந்தை பாதிக்கப்படுறாளேனு நினைச்சாதான் வருத்தமா இருக்கு. நான் கடவுளை நம்புறேன். ‘அவர் எங்களைக் காப்பாத்துவார்; சேர்த்துவைப்பார்’ங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு’’ என வருத்தம் தோய்ந்த குரலில் பேசுகிறார் பாலாஜி. 

`ஊரையே சிரிக்கவைக்கும் ஒரு கலைஞனின் குடும்பத்தில் இவ்வளவு பிரச்னைகளா!' என நினைக்கும்போது வருத்தமாகத்தான் இருக்கிறது. அவரும் அவரின் மனைவியும் கருத்துவேறுபாடுகளைப் பேசித் தீர்த்து, மீண்டும் ஒன்றுசேர்ந்து வாழ வேண்டும் என்பதே நம் விருப்பம்!