Published:Updated:

மிஸ்டர் ஜாக்... உங்க பைரேட்ஸ் படத்துல இதெல்லாம் இருக்குமா?

தார்மிக் லீ
மிஸ்டர் ஜாக்... உங்க பைரேட்ஸ் படத்துல இதெல்லாம் இருக்குமா?
மிஸ்டர் ஜாக்... உங்க பைரேட்ஸ் படத்துல இதெல்லாம் இருக்குமா?

ஃபேன்டஸி படங்கள் வரிசையில் டாப்பில் இருப்பது 'பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்'. ஜோவாச்சிம் ரோன்னிங் இயக்கத்தில் 10 வருடங்கள் கழித்துக் கரையேறப்போகும் வில்லியம் டர்னருடன் சேர்த்து வெளியாக இருக்கும் 'டெட் மேன் டெல்ஸ் நோ டேல்ஸ்' பாகத்திலும் இந்த விஷயங்கள் எல்லாம் இடம்பெற்று ரசிகர்களின் ஆவலைப் பூர்த்தி செய்யுமா?

முன்குறிப்பு : கோரி விர்பின்ஸ்கி இயக்கத்தில் வெளியான முதல் பாகமும் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத வண்ணம் இருக்கும். ஆனால் கடைசியாக வெளியான 'ஆன் ஸ்ட்ரேஞ்சர் டைட்ஸ்' பாகம் படத்திற்குக் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாமல் வேற்றுக் கிரகத்தைச் சேர்ந்த படம் போல் இருப்பதால் அந்தப் பாகத்தை கீழே குறிப்பிட்ட பாயின்டுகளுடன் ஒப்பிடவில்லை. 

மாஸ் என்ட்ரி :

ஒவ்வொரு பாகத்திலும் கேப்டன் ஜேக் ஸ்பாரோவின் என்ட்ரி வேற லெவலில் இருக்கும். 'தி கர்ஸ் ஆஃப் ப்ளாக் பேர்ல்' பாகத்தில் மெல்ல மெல்ல தீம் மியூஸிக் ஒலிக்க ஒரே ஒரு ஓட்டைப் படகின் மேல் நின்று செம கெத்தாக போர்ட் ராயலை நோக்கி வந்துகொண்டிருப்பார். கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் படகு கடலுக்குள் மூழ்கிக் கொண்டிருக்க மிகத் துல்லியமாக கரையின் மீது கால் வைத்து ஸ்டைலாக நடந்து வருவார். 'டெட் மேன் செஸ்ட்' பாகத்தில் கடலுக்கு நடுவில் ஒரு சவப்பெட்டி மிதந்து வந்துகொண்டிருக்கும். அதில் ஒரு பறவை வந்து கொத்திக் கொண்டிருக்கும்போது அதைத் துப்பாக்கியால் சுட்டு அந்த சவப்பெட்டியில் இருந்து வெளியே வருவார். இதுதான் இரண்டாம் பாகத்தின் என்ட்ரி. 'அட் தி வேர்ல்ட்ஸ் எண்ட்' பாகத்தில் டேவி ஜோன்ஸின் பெட்டகத்துக்குள்ளே மாட்டிக்கொள்வார் ஜாக் ஸ்பாரோ. தனி ஆளாக ப்ளாக் பேர்ல் கப்பலை கரைக்கு கொண்டு வர போராடிக் கொண்டிருக்கும்போது இடம்பெற்ற காட்சிதான் இந்தப் பாகத்தின் என்ட்ரி. ஆக, மூன்று பாகத்திலும் ஒவ்வொரு ரகத்தில் என்ட்ரி கொடுத்த ஜாக் ஸ்பாரோ வெளிவரவிருக்கும் 'டெட் மேன் டெல் நோ டேல்ஸ்' பாகத்திலும் இந்த அளவிற்கு மாஸ் என்ட்ரி இருக்குமா ஜாக் ஸ்பாரோ? 

கெத்து :

எல்லாப் பாகங்களிலும் கேப்டன் ஜாக் ஸ்பாரோவை எதாவது ஒரு வழியில் யாராவது மட்டம் தட்டிக் கொண்டேதான் இருப்பார்கள். இருப்பினும் அவருக்கான கெத்து படத்தில் எந்த இடத்திலும் கொஞ்சம் கூடக் குறையவே குறையாது. இரண்டாம் பாகமான டெட் மேன் செஸ்டின் க்ளைமாக்ஸில் ஜாக் இறப்பது போல் படம் முடியும். அடுத்த பாகமான அட் தி வேர்ல்ட்ஸ் எண்டில் ஒட்டுமொத்த டீமும் ஜாக் ஸ்பாரோ என்ற ஒரு ஆளைக் காப்பாற்றி கூட்டி வருவதற்காக புறப்படுவதுதான் அந்தப் பாகத்தின் பாதிக் கதை. படம் ஆரம்பித்த 30 நிமிடங்கள் கழித்துத்தான் ஜாக் ஸ்பாரோ என்ட்ரி கொடுப்பார். ஒரு பக்கம் காப்பாற்ற வரும் ஆட்கள் ஒரு நீர் வீழ்ச்சியில் மாட்டிக்கொண்டு கப்பல் இன்றிக் கரையில் தவித்துக் கொண்டிருப்பார்கள். அப்போது இவர் மாட்டிக் கொண்ட இடத்தில் இருக்கும் நண்டுகளைப் பயன்படுத்தி ப்ளாக் பேர்ல் கப்பலைப் பின்னணியில் தீம் மியூஸிக் ஒலிக்க கப்பலின் மேல் நின்று கரைக்குக் கொண்டு வருவார். இதே மாதிரியான மாஸ் சீன்கள் இந்தப் பாகத்திலும் இடம்பெறுமா? 

வித்தை :

முதல் மூன்று பாகத்திலும் சிறந்த காட்சிகள் இடம்பெற்ற சீன் ஏராளமாக உள்ளன. இருப்பினும் 'அட் தி வேர்ல்ட்ஸ்  எண்ட்' பாகத்தில் அந்தக் கப்பலைத் தலைகீழாகத் திருப்பும் சீன்தான் எபிக். சில பல அறிவியல் காரணத்தினால் சூரிய உதயத்தை பார்க்கக் கூடாது என்ற கட்டாயம் ஏற்படும். அதனால் ஜாக்கிடம் இருக்கும் மேப்பில் 'அப் இஸ் டவுன்' என்ற ஒரே குறியீடை வைத்து கப்பலுக்குக் குறுக்கே அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருப்பார். ஜாக்கின் கூடே இருப்பவர்கள் இவர் செய்வதைப் பார்த்து வழக்கம்போல் கிறுக்குத் தனமாக செய்கிறான் என்று நினைக்க, உண்மையினை அறிந்த பின் 'கில்லாடி ஜாக்' என்று சொல்லி எல்லோரும் அவரைப் போல செய்து கப்பலை தலைகீழாகத் திருப்பி தப்பித்துவிடுவார்கள். இதே மாதிரியான சீன்கள் வரப் போகும் பாகத்திலும் இருக்குமா விஞ்ஞானி ஜாக்? 

தீம் மியூஸிக் :

படத்தின் வெற்றிக்குக் கதையும், காட்சிகளும் 70 சதவீதம் காரணமாக அமைந்தால், ஹான்ஸ் ஜிம்மரின் தீம் மியூஸிக் 30 சதவீதம் பேசும். முதல் பாகத்தில் ஆரம்பித்து கடைசிப் பாகம்வரை ஒவ்வொரு முக்கியமான காட்சிகளிலும் அந்தப் படத்தின் பி.ஜி.எம் மெதுவாக ஒலித்துக் கொண்டேதான் இருக்கும். இன்றுவரை பலரின் மொபைல் போனின் ரிங் டோனாக ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது. க்ளௌஸ் பாடெல்ட், ரோட்ரிகோ, எரிக் விட்டாக்ரே எனப் பல மியூஸிக் டைரக்டர்கள் இருந்தாலும் ஹான்ஸ் ஜிம்மர் விதைத்த 'ஹீ எஸ் எ பைரேட்' என்ற பேக்ரவுண்ட் ஸ்கோர்தான் எல்லோர் மனதிலும் நின்று வென்றது. வரப்போகும் பாகத்தில் ஜியாஃப் ஸானெல்லி பி.ஜி.எம்மில் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வாரா?

நக்கல் :

எல்லாப் பாகங்களிலுமே ஜாக் ஸ்பாரோவின் தனித்துவம் என்று சுட்டிக்காட்ட நிறைய ஹீரோத்தனமான விஷயங்கள் இருந்தாலும் அதைவிட அதிகமாக அவரது டயலாக்கிலும் சரி, பாடி லாங்குவேஜிலும் சரி இவரின் நக்கலுக்கும், நையாண்டிக்கும் குறை இருக்காது. ஜாக்கின் மீது எவ்வளவு பாசமாகப் பேசி காதல்வயப்பட்டாலும் கடைசியில் சம்பந்தப்பட்ட ஆளுக்கு மிஞ்சுவது ஏமாற்றம் மட்டுமே. எதாவது ஆபத்தில் மாட்டிக் கொள்ளும் இக்கட்டான சூழ்நிலைகளில் மட்டும் வேறு வழியின்றியும், இல்லை இவருக்கு எதாவது காரியம் ஆக வேண்டுமென்றால் மட்டுமே காப்பாற்ற முன் வருவார். அதுபோக முக்கால்வாசி நேரத்தில் கூடவே இருந்து அதையும் இதையும் சொல்லி இவர் காரியத்தை ஜெயித்துக் கொள்ள ஒருவரை ஆபத்தில் சிக்க வைப்பதும் இவரே. அதே நையாண்டித்தனம் வரப்போகும் பாகத்திலும் இருக்குமா கேப்டன் ஜாக் ஸ்பாரோ..? அதைப் படம் பார்த்துத்தான் தெரிந்துகொள்ள வேண்டும். வீ ஆர் வெய்ட்டிங்!