மதுர வீரன், ஜல்லிக்கட்டு, அன்பு மகன்..! - விஜயகாந்த் வீட்டு அப்டேட்

 ‘சகாப்தம்’ படத்துக்குப் பிறகு ‘மதுர வீரன்’ படத்தில் நடிக்கிறார் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன். சமீபத்தில் அந்தப் படத்தின் பூஜையை, சென்னையில் அமர்க்களமாக நடத்தி முடித்தார், விஜயகாந்த். ‘மதுர வீரன்’ படத்தின் படப்பிடிப்பு, முழுக்க முழுக்க உசிலம்பட்டி பகுதியில் நடந்துகொண்டிருக்கிறது. ஒரே நாளில் ஏகப்பட்ட காட்சிகளை விறுவிறுவென படமாக்கிவருகிறார், இயக்குநர் முத்தையா. 

மதுர வீரன்

சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்காக எழுச்சிப் போராட்டம் நடத்தி வெற்றி கண்ட மாணவர்கள் பற்றிய கதையை மையமாக வைத்து ‘மதுர வீரன்’ கதையை உருவாக்கியிருக்கிறார் முத்தையா. இந்தப் படத்தில் வேல ராமமூர்த்தி, மைம் கோபி, மாரிமுத்து ஆகியோர் வில்லன்களாக நடிக்கிறார்கள். முக்கியமான வில்லனாக, தயாரிப்பாளர் தேனப்பன் நடிக்கிறார். விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியனுக்கு அப்பாவாக சமுத்திரக்கனி சிறப்புத் தோற்றத்தில் வருகிறார். தனக்கான காட்சிகளை உசிலம்பட்டியில் நடந்த படப்பிடிப்பில் நடித்துக் கொடுத்துவிட்டு,  தற்போது சென்னைக்குத் திரும்பி ‘தொண்டன்' படத்துக்கான ரிலீஸ் வேலைகளை பரபரப்புடன் பார்த்துவருகிறார் சமுத்திரக்கனி.

வெளிநாட்டில் வேலைபார்க்கும் ஹீரோவாக நடிக்கும் சண்முகபாண்டியனை, தமிழ்நாட்டில் நடக்கும் ஜல்லிக்கட்டு போராட்டம் உணர்வுபூர்வமாக உலுக்கி எடுக்கிறது. தாயகம் திரும்பி தாய்திருநாட்டின் ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்காக எந்தத் தியாகத்தையும் செய்ய திட்டமிட்டு, வெளிநாட்டு வேலையை உதறிவிட்டு தாய்நாடு திரும்புகிறார். திடீரென தன் கண் முன்னே வந்து நின்ற மகன் சண்முகபாண்டியனைப் பார்த்துத் திகைத்துபோகிறார் சமுத்திரக்கனி. ஜல்லிக்கட்டு விளையாட்டு வீரராகக் கலந்துக்கொள்ளவே தாய்நாடு திரும்பி வந்துள்ளதாகச் சொல்ல... தமிழ்ப் பண்பாடு, கலாசாரம் மீது மகன் கொண்டுள்ள பாசம் கண்டு நெகிழ்ந்துபோகிறார் அப்பா சமுத்திரக்கனி. இப்படியாக சென்டிமென்ட், ஆக்‌ஷன், காதல் என ஜோராக நகர்கிறது ‘மதுர வீரன்’ படத்தின் கதை. 

சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கான தடையை நீக்கச்சொல்லி மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் வடிவம் மற்றும்  ஏற்கெனவே படமாக்கப்பட்டிருக்கும் ஜல்லிக்கட்டுப் போராட்டக் காட்சிகளையும் ‘மதுர வீரன்’ படத்தில் சேர்க்கத் திட்டமிட்டிருக்கின்றனர். சென்னை கடலுக்குள் இறங்கி போராடிய மாணவர்களைக் கைதுசெய்த காட்சியும், சென்னையில் மாணவர்கள் மீதும் கடற்கரைப் பகுதிகளில் இருந்த குடியிருப்புகள் மீது போலீஸார் நடத்திய தாக்குதல் காட்சிகளும் படத்தில் உண்டாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!