Published:Updated:

அந்த மனவலிமைதான் கார்த்தி ஸ்பெஷல்... நீ கலக்கு சித்தப்பு! #HBDKarthi

அந்த மனவலிமைதான் கார்த்தி ஸ்பெஷல்... நீ கலக்கு சித்தப்பு! #HBDKarthi
அந்த மனவலிமைதான் கார்த்தி ஸ்பெஷல்... நீ கலக்கு சித்தப்பு! #HBDKarthi

"சார், பயங்கரமா கஷ்டப்படவேண்டியிருக்கும். நார்த் இந்தியாவுல வெயில், குப்பைன்னு க்ளைமேட் மோசமா இருக்கு’'னு சொன்னேன். அதுக்கு, ‘ஆயிரத்தில் ஒருவன்’ல செருப்பு இல்லாம முழுப்படமும் நடிச்சேன். காலையில நாலு மணிக்கு பயங்கரமா குளிரும். பனியில் கால்கள் விறைச்சிக்கும். நடிச்சிட்டே இருக்கும்போது 10 மணிக்கு வெயில் ஏற ஆரம்பிச்சு, பாதத்துல பிசுபிசுனு ஏதோ ஒட்டும். குனிஞ்சுப் பார்த்தா பாதங்கள் வெடிச்சு ரத்தம் வடிஞ்சிட்டிருக்கும். அதுக்கு முன்னாடி ‘பருத்திவீரன்’ல என்னைக் கொண்டுபோய் வெச்சு செஞ்சிருக்காங்க. அதையே சமாளிச்சு நடிச்சுட்டேன். நீங்க கவலைப்படாதீங்க, நான் பாத்துக்கிறேன்'னார். தொடர்ந்து வட இந்தியாவில் 45 நாள்கள் பிரேக் இல்லாமல் ஷூட்டிங். அந்த வெயில் தாங்காம ஒவ்வொருத்தரா மயக்கம் போட ஆரம்பிச்சாங்க. நான் அப்பப்ப மயக்கத்தைத் தொட்டுட்டு வந்தேன். ஆனா, கார்த்தி சார் கூலா வொர்க் பண்ணார். அந்த உடல், மனவலிமை இல்லைன்னா ஒரு நடிகரால் இந்த மாதிரி படம் பண்றது கஷ்டம். ஆமாம், கார்த்தி சார் முழுமையான நடிகர்" `தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் கார்த்தியின் டெடிகேஷன் பற்றி இயக்குநர் வினோத் கூறிய வார்த்தைகள் இவை. அந்த டெடிகேட்டட் நடிகர் கார்த்தியின் பிறந்த நாள் இன்று. 

மேலோட்டமாகப் பார்க்கும் பலருக்கும், `அப்பா நடிகர், அண்ணன் நடிகர்னு சினிமா பின்னணி உள்ள குடும்பம். அதனால, இவர் ஹீரோ ஆகிட்டார்' என்ற பார்வை இருக்கும். சினிமா பின்னணி இருந்து சினிமா துறைக்கே வரும் பலரும் எதிர்கொள்ளும் பிரச்னைதான் இது. ஆனால், முதல் படம் மூலமே இந்த அலட்சியப் பார்வையைத் தாண்டினார். வெயிலில் துவண்டு, புழுதியில் புரண்டு... இத்தனைக்கும் மணிரத்னம் இயக்கிய 'ஆய்த எழுத்து' படத்தில் சித்தார்த் நடித்த ரோலில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஒருவேளை அதில் நடித்திருந்தால் `பருத்திவீர'னை கார்த்தியும் நாமும் மிஸ்செய்திருக்கக்கூடும். அதற்கு முன் அவரை நாம் எந்த ரோலிலும் பார்க்கவில்லை. எனவே, எப்படி வேண்டுமானாலும் கார்த்தியை ஆடியன்ஸுக்கு அறிமுகப்படுத்த முடியும் என்கிற வசதி அமீருக்கு பெரிய ப்ளஸ். அதைத் தேர்வுசெய்தது கார்த்தியின் புத்திசாலித்தனமும்கூட. இது கடினமான படம், கரடுமுரடான ஓர் அனுபவம் கிடைக்கப்போகிறது எனத் தெரிந்தே 'பருத்திவீரன்' படத்தில் நடித்தார். நடிப்பு ஆசையே இல்லாமலிருந்த ஒருவரிடமிருந்து இப்படியான பெர்ஃபாமன்ஸ் வந்தது யாரும் எதிர்பார்க்காதது. 

அதன் பிறகு கார்த்தியின் மிக முக்கியமான முடிவு, `ஆயிரத்தில் ஒருவன்'. படத்திலிருந்த பிரச்னைகள், கிடைத்த வரவேற்பு எல்லாவற்றையும் மீறி, வளரும் நடிகருக்கு அப்படி ஓர் அனுபவம் தேவை. `பருத்திவீரன்' அளவுக்கு வரவேற்பு பெறவில்லை என்றாலும், ஒருசில அடிகளாவது கார்த்தியின் நடிப்பை முன்னேற்றியது செல்வாவின் ஸ்கூல்தான்.

`மெட்ராஸ்' படம் கார்த்தியின் கரியரில் குறிப்பிட்டு சொல்லவேண்டிய படம். நடிப்பில் கார்த்திக்கு இருக்கும் சவாலே அவரின் முதல் படம்தான். காரணம், படத்துக்குப் படம் நடிப்பில் முன்னேறிய பிறகு `பருத்திவீரன்' வந்திருந்தால் அந்த வளர்ச்சியை ஒரு டைம்லைனுக்குள் அடக்க முடியும். ஆனால், முதல் படமே `பருத்திவீரன்' என்பதால், அதை மிஞ்சும்படியான ஒரு படம் அமையும்போதுதான் கார்த்தி மீண்டும் தன் நடிப்பைப் பற்றி பேசவைக்க முடியும். `பையா', `தோழா' போன்ற ஃபீல்குட் படங்கள் நடித்தாலும், திடீரென `காஷ்மோரா' போன்ற பரிசோதனை முயற்சியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள கார்த்தி தவறவில்லை.

ஒரு நடிகனாக அந்தத் தேடல் கார்த்தியிடம் தொடர்ந்து இருந்தது. `பருத்திவீரன்' போலவே `மெட்ராஸ்' படத்தின் காளி கதாபாத்திரமும் குறிப்பிடத்தக்கது. `பருத்திவீரன்' படத்தில் எந்த இடத்திலும் கார்த்தியாகத் தெரியாமல் பருத்திவீரனாகவே தெரிந்ததுபோலவே, `மெட்ராஸ்' படத்தில் காளியாக மட்டுமே தெரிவார். 

முதல் பாலில் ஹெலிகாப்டர் ஷாட் அடித்துவிட்டு, அடுத்து சிங்கிள் தட்டுவது போன்ற கிராஃப் கார்த்திக்கு அமைந்துவிட்டது என்பதுதான் பிரச்னை. இன்னொரு முறை அப்படி ஒரு கனமான கதாபாத்திரம் கிடைத்தால் அதை மிகச்சிறப்பாகச் செய்யக்கூடியவர் கார்த்தி என்பது மட்டும் உறுதி. ஒரு நடிகராக கார்த்தியின் பயணம் இன்னும் வெகுதூரம் இருக்கிறது. கற்றுக்கொள்ளவும் மாற்றிக்கொள்ளவும் நிறைய இருக்கின்றன என்றாலும், குறிப்பிட்ட நடிகர்களைப் பட்டியலிட்டால், அதில் கார்த்தி பெயரைத் தவிர்க்க முடியாது. `மெட்ராஸ்', காளி போல இன்னும் பல கதாபாத்திரங்களில் கார்த்தி மிரட்டுவார் என்பதில் சந்தேகமே இல்லை.

நீ கலக்கு சித்தப்பு!