Published:Updated:

சின்னி கொடுக்கு, மிஸ் பீன்.. நயன்தாரா ஃபேன்..! ஸ்ரீதிவ்யாவின் பெர்சனல் #HBDSriDivya

சின்னி கொடுக்கு, மிஸ் பீன்.. நயன்தாரா ஃபேன்..! ஸ்ரீதிவ்யாவின் பெர்சனல்  #HBDSriDivya
சின்னி கொடுக்கு, மிஸ் பீன்.. நயன்தாரா ஃபேன்..! ஸ்ரீதிவ்யாவின் பெர்சனல் #HBDSriDivya

`வருத்தப்படாத வாலிபர் சங்கம்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஶ்ரீதிவ்யா. கல்யாணம், காதுகுத்து, ஆடல்பாடல் நிகழ்ச்சிகள் என ஸ்பீக்கர் தேயத் தேய ஒலித்த 'ஊதா கலரு ரிப்பன்...' பாடல், ஶ்ரீதிவ்யாவின் அடையாளம் ஆகிப்போக, தொடர்ந்து 'ஜீவா', 'வெள்ளக்காரதுரை', 'காக்கிச்சட்டை' சமீபத்தில் வெளியான 'சங்கிலி புங்கிலி கதவ தொற' வரை பத்துக்கும் அதிகமான படங்களில் நடித்துவிட்டார். ஹீரோயின் ரேஸில், ஶ்ரீதிவ்யாவிடம் ஆமை நடையும் இல்லை, முயல் வேகமும் இல்லை. ஆனால், ரேஸில் இருக்கிறார். இன்று பிறந்த நாள் காணும் ஶ்ரீதிவ்யாவை வாழ்த்துவோமே!

ஹைதராபாத்தில் பிறந்த ஶ்ரீதிவ்யாவுக்கு, இயல்பிலேயே நடிப்பு ஆர்வம் இருந்ததால்தான், மூன்று வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.  தெலுங்கு டிவி சீரியல்களிலும், சில தெலுங்குப் படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். சில வருட இடைவெளிக்குப் பிறகு, 2010-ம் ஆண்டில் வெளியான 'மனசாரா' என்ற தெலுங்குப் படத்தில் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படம் தோல்வி. அடுத்த படமான 'பஸ் ஸ்டாப்' வெற்றிபெற்று, இவருக்கான இடத்தில் இறக்கிவிட்டது. 

மூன்று தெலுங்குப் படங்களுக்குப் பிறகு, பொன்ராம் இயக்கிய 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படம் மூலம் தமிழில் என்ட்ரி. 'ஊதா கலரு ரிப்பன்' பாடலும், பாவாடை தாவணியில் இவர் காட்டிய ஸ்மார்ட் அண்ட் ஸ்வீட் மேனரிசங்களும் ஆசம். நான்கு வரிகளைக் கடக்கும்போதே, 'ஊதா கலரு ரிப்பன்... உனக்கு யாரு அப்பன்?' என்ற வரிகள் மனசுக்குள் கடந்துபோயிருக்கும்.

ஶ்ரீதிவ்யாவின் அப்பா ஒரு போலீஸ் அதிகாரி. இருப்பினும் முறைப்பும் விறைப்புமாக முறுக்கிக்கொண்டு நிற்காமல், அன்பான அப்பாவாக, அமைதியான அதிகாரியாக இருப்பாராம்.

யாரு சொன்னா?

ஶ்ரீதிவ்யாவே சொன்னாங்க.

தவிர, ஶ்ரீதிவ்யா, ஶ்ரீரம்யா இருவர் மீதும் அப்பாவுக்குப் பாசம் அதிகம். ஶ்ரீதிவ்யாவின் அக்கா ஶ்ரீரம்யாவும் நடிகைதான். தமிழில் 'யமுனா' என்ற படத்தில் நடித்திருக்கிறார். ஶ்ரீதிவ்யாவைப் பற்றி, அக்கா ஶ்ரீரம்யா என்ன சொல்றாங்க தெரியுமா?

``என் தங்கச்சி ஶ்ரீதிவ்யாவை நினைச்சுப் பெருமைப்பட்ட தருணங்கள்தான் அதிகம். தவிர, அவ்ளோ நல்ல பொண்ணு. சின்ன வயசுல ரெண்டு பேருக்கும் சாக்லேட் கிடைக்கும்போது, நான் வேகமா சாப்பிட்டு முடிச்சுட்டு அவளுடையதையும் கேட்பேன். கொஞ்சம்கூட யோசிக்காம சட்டுனு கொடுத்துடுவா. ரொம்பப் பாசமானவள்'' என நெகிழ்கிறார். 

தெலுங்கில் 'சக்கரவாகம்' என்ற சீரியலில் அக்கா, தங்கையாகவே நடித்திருக்கும் ஶ்ரீரம்யா - ஶ்ரீதிவ்யாவுக்கு, டபுள் ஹீரோயின் கதையில் திரைப்படத்திலும் ஒன்றாக நடிக்கவேண்டும் என்பது ஆசையாம். ஶ்ரீதிவ்யாவுக்குப் பிடித்த நடிகர் விஜய். ''அவர் எனர்ஜியான நடிகர். அவரோட டான்ஸ் எனக்கு ரொம்பப் பிடிக்கும்'' எனப் புகழும் ஶ்ரீதிவ்யா, விஜய்யுடன் நடிக்கக் கிடைத்த வாய்ப்பை கால்ஷீட் பிரச்னையால் இழந்த வருத்தத்தில் இருக்கிறார். இயக்குநர் மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்பதும், அந்த கேரக்டர் 'மெளனராகம்' ரேவதி கேரக்டர்போல இருக்க வேண்டும் என்பதும் ஶ்ரீதிவ்யாவின் ஆசை. 

நயன்தாராவின் வெறித்தனமான ரசிகை ஸ்ரீதிவ்யா. ‘காஷ்மோரா’ பட ரிலீஸின்போது தனது தலைவி வைத்திருப்பதுபோல் கறுப்பு நிற
பிஎம்டபிள்யூ காரை வாங்கி, அவரிடமே ஆசீர்வாதமும் வாங்கிவிட்டாராம். 

சின்ன வயதில் ஶ்ரீதிவ்யா ஓவர் சேட்டை. இவருடைய சேட்டைகளைப் பார்த்து, இவரது அம்மா 'சின்னி கொடுக்கு' எனப் பட்டப்பெயர் வைத்திருக்கிறார். 'கொடுக்கு' என்றால் பையன் என்று அர்த்தம். ``உன்னை பையன் மாதிரி வளர்த்துட்டோம். உன் சேட்டையும் அப்படித்தான் இருக்கு'' என விளக்கம் சொன்ன அம்மா, ஶ்ரீதிவ்யாவை 'சின்னி கொடுக்கு' என்றே அழைப்பாராம். தவிர, 'மிஸ்டர் பீன்' ஷோவின் தீவிர ரசிகை ஶ்ரீதிவ்யா. பள்ளியில் படிக்கும்போது, மிஸ்டர் பீன் கதைகளை மணிக்கணக்கில் தோழிகளிடம் அளந்துவிடுவார் ஶ்ரீதிவ்யா. இதனால், 'மிஸ் பீன்' என்றும் பட்டப்பெயர் வைத்துவிட்டார்கள் தோழிகள்.

ஹேப்பி பர்த்டே 'மிஸ் பீன்!'