Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கலகக்காரர் கவுண்டமணி... எம்.ஆர்.ராதாவின் வாரிசு! #VikatanExclusive

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் எப்போதும் நகைச்சுவை நடிகர்களுக்கு தனி நாற்காலி உண்டு. என்.எஸ்.கிருஷ்ணன் உச்சத்திலிருந்த காலகட்டம். சில படங்களை எடுத்து முடித்தவுடன், 'இது ஓடுமா... ஓடாதா' என்று சந்தேகம் எழுந்தால், என்.எஸ்.கிருஷ்ணன் - டி.ஏ.மதுரம் தம்பதியைத் தனி டிராக்கில் நடிக்கவைத்து படத்தில் இணைத்துக்கொண்டதும் உண்டு

கவுண்டமணி

என்.எஸ்.கிருஷ்ணன், சந்திரபாபு, நாகேஷ், தங்கவேலு, வி.கே.ராமசாமி, சுருளிராஜன் எனத் தொடர்ந்த பாரம்பர்யத்தில், கவுண்டமணிக்கு எப்போதுமே சிறப்பான ஓர் இடம் உண்டு. தனக்கான பாணியில் தனித்துத் தெரிபவர் கவுண்டமணி. 1980களில் வெளியாகி மகத்தான வெற்றிபெற்ற பல தமிழ்ப் படங்களை இப்போது பார்த்தால் 'இந்தப் படத்தையா தமிழர்கள் கொண்டாடினார்கள்?', 'இந்தப் படம் எப்படி மகத்தான வெற்றிபெற்றது?' என்று சந்தேகம் எழும். அப்படி வெற்றிபெற்ற படங்களில் இந்த இரண்டு விஷயங்களோ, இரண்டில் ஏதாவது ஒன்றோ நிச்சயம் இருக்கும். இசைஞானி இளையராஜாவின் இசை, கவுண்டமணியின் காமெடி காட்சிகள்தான் அவை. உதாரணம், `சின்னத்தம்பி'. இளையராஜாவின் இசையையும் கவுண்டமணியின் நகைச்சுவையையும் எடுத்துவிட்டால், அபத்தமான கதை, நம்ப முடியாத காட்சிகள்கொண்ட அந்தப் படம் வெற்றி பெற்றுவிடும்.

அதற்கு முன், பல நகைச்சுவை நடிகர்களுக்குக் கிடைக்காத மகத்தான ஒரு வாய்ப்பு கவுண்டமணிக்குக் கிடைத்தது. அது அவர் ஏற்று நடித்த விதவிதமான கதாபாத்திரங்கள். சிவாஜிகணேசனைப்போல் விதவிதமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்தவர் கவுண்டமணி. அதிலும் முக்கியமாக அவர் ஏற்று நடித்த பல கதாபாத்திரங்கள், அடித்தட்டு மக்களைப் பிரதிபலித்தவை. சலவைத் தொழிலாளராக, முடி வெட்டுபவராக, தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொண்டு வித்தை காட்டுபவராக, பிச்சைக்காரராக, நாட்டு மருத்துவராக என எளிய மக்களின் திரைப் பிம்பமாக விளங்கினார்.

தமிழ் சினிமாவில் பல சீர்திருத்தக் கருத்துகள் நகைச்சுவை மூலமாகப் பரப்பப்பட்டன. இதற்கு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் நடிகவேள் எம்.ஆர்.ராதாவும் சிறந்த உதாரணம். அதிலும் எம்.ஆர்.ராதா மதிப்பிட முடியாத கலகக்காரர். புனிதங்கள், அதிகாரங்கள், சம்பிரதாயங்கள் என்ற பெயரில் நிலைநிறுத்தப்பட்ட போலித்தனங்களை தனக்கே உரிய பாணியில் கிண்டலடித்து தகர்த்தவர். எம்.ஆர்.ராதாவைப்போல் திட்டவட்டமான அரசியல் கொள்கை இல்லை என்றாலும், அவரைப்போலவே பல புனிதங்களை தன் நகைச்சுவையின் மூலம் தகர்த்தவர் கவுண்டமணி. அந்த வகையில் கவுண்டமணியை எம்.ஆர்.ராதாவின் வாரிசு எனச் சொல்லலாம்.

'கூலி' என்ற படத்தில், கேன்டீன் உரிமையாளர் கவுண்டமணி. செந்தில் அந்த கேன்டீனில் வேலை பார்ப்பவர். வழக்கம்போல் செந்திலை பல காட்சிகளில் அடிப்பார் கவுண்டமணி. ஒரு காட்சியில் பேச்சுவாக்கில் செந்திலின் கை கவுண்டமணியின் மூக்கில் பட்டுவிட, அவர் மூக்கில் ரத்தம் வழியும். உடனே செந்தில் சொல்வார், "நான் வீரமான சாதிண்ணே. அதான் அடிச்சவுடனே ரத்தம் வந்துடுச்சு". "என்ன சாதி?" என்று கவுண்டமணி கேட்க, அவர் காதுக்குள் சொல்வார் செந்தில். பிறகு கவுண்டமணி செந்திலை அடிக்க, அவர் மூக்கிலும் ரத்தம். "என் சாதி அடிச்சாலும் ரத்தம் வரும்" என்பார். பிறகு அந்த கேன்டீனில் சாப்பிட வந்த பல சாதிக்காரர்களும் மதத்துக்காரர்களும் கவுண்டமணியை அடித்து, `'நாங்க அடிச்சாலும் ரத்தம் வருது'' என்பார்கள். இப்படி சாதித்திமிர் தொடங்கி சாமியார்களின் பித்தலாட்டம் வரை கிண்டலடித்துக் காலி செய்தவர் கவுண்டமணி.

அவர் சமுதாய விஷயங்களை மட்டும் கிண்டலடிக்கவில்லை. சினிமாவுக்குள் இருந்த போலித்தனங்களையும் கிண்டலடித்தார். "என்னடா இந்த சினிமா நடிகனுங்க. பொறந்த நாள் கொண்டாடினா முப்பது வயசைத் தாண்டவே மாட்டேங்கிறாய்ங்க?" என்பார் ஒரு படத்தில். கவுண்டமணியின் 'ஷில்பா குமார்' கதாபாத்திரம் முன்னணி நடிகர்களின் போலித்தனங்களைக் கிண்டலடித்தது.

பொதுவாக ஹீரோக்கள் குறித்த பில்டப் வசனங்களைப் பேசுவதற்கு நகைச்சுவை நடிகர்களையும், துணை நடிகர்களையும் பயன்படுத்துவது சினிமா வழக்கம். ஆனால், கவுண்டமணி அத்தகைய பில்டப் வசனங்களைப் பேசாததோடு மட்டுமல்லாது, உச்ச நடிகர்களைச் சந்தடிசாக்கில் காலி செய்யவும் தயங்காதவர். 

'சேனாதிபதி' என்று ஒரு படம். வயதான வேடத்தில் நடித்திருக்கும் சத்யராஜும் விஜயகுமாரும் நண்பர்கள். கிட்டத்தட்ட நாயகன் சத்யராஜுக்கு இணையான கதாபாத்திரம் விஜயகுமாருக்கு. விஜயகுமார், சத்யராஜ் வீட்டுக்குள் நுழையும் காட்சியில் கவுண்டமணி சொல்வார், "இவனா, இவன் ரொம்பப் பேசுவானே?"

அதேபோல் 'பாபா' படம் வெளியான காலகட்டம், இப்போதுபோலவே அப்போதும் ரஜினி அரசியல் காய்ச்சல் உச்சத்திலிருந்த காலம். ரஜினிக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் முட்டிக்கொள்ள, 'பாபா' படத்தை வெளியிட விட மாட்டோம்' என்று பா.ம.க சூளுரைத்தது. 'ரஜினி அரசியலுக்கு வரப்போகிறார். அதற்கான அறிகுறிகள் 'பாபா'வில் உள்ளன' என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்போடு காத்திருந்தார்கள். ரஜினியும் 'பாபா'வில் அரசியல் பேசினார். தான் முதலமைச்சர் ஆவதற்குப் பதிலாக, இன்னொருவரை முதலமைச்சராகக் கைகாட்டுவார். ஆனால் கவுண்டமணியோ அசால்ட்டாக, "போயும் போயும் இந்த மண்டையனா?" என்பார்.

இப்படி தன்னுடன் நடிக்கும் உச்ச நட்சத்திரங்களின் நாயகப் பிம்பங்களைப் பற்றிக் கவலைப்படாமல் கிண்டலடிப்பவர் கவுண்டமணி. அதே நேரத்தில் கவுண்டமணியின் நகைச்சுவைக் காட்சிகளில் மோசமான சில அம்சங்களும் உண்டு. அவரது நகைச்சுவைக் காட்சிகளில் கறுப்பாக இருப்பவர்கள், உடல் ஊனமுற்றவர்கள், வழுக்கைத் தலை உடையவர்கள் கொச்சையாகக் கிண்டலடிக்கப்பட்டிருப்பார்கள். 

கறுப்பு நிறத்தையும் வழுக்கைத் தலையையும் விதவிதமான வார்த்தைகளால் கிண்டலடித்த கவுண்டமணியும் கறுப்புதான், அவருக்கும் வழுக்கைத்தலைதான் என்பது சுவாரஸ்யமான முரண். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்