Election bannerElection banner
Published:Updated:

கார்ப்பரேட் குழந்தையும் அப்பாவி சிறுவனும்! #TheBossBaby

கார்ப்பரேட் குழந்தையும் அப்பாவி சிறுவனும்! #TheBossBaby
கார்ப்பரேட் குழந்தையும் அப்பாவி சிறுவனும்! #TheBossBaby

கார்ப்பரேட் குழந்தையும் அப்பாவி சிறுவனும்! #TheBossBaby

கார்ப்பரேட் குழந்தையும் அப்பாவி சிறுவனும்! #TheBossBaby

ஒரு மழலையைப் பிரதான பாத்திரமாகக் கொண்ட, ரகளையான நகைச்சுவையுடன் அமைந்த அனிமேஷன் திரைப்படம் The Boss Baby. சாதாரண மழலையாக அல்லாமல் ஒரு கார்ப்பரேட் கனவானுக்குரிய செயல்திட்டத்துடன் அந்தக் குழந்தை நடந்து கொள்வதுதான் இந்தத் திரைப்படத்தை வித்தியாசமாகவும் சுவாரஸ்யமாகவும் ஆக்குகிறது.

ஒரு மழலையின் வருகை அந்த வீட்டின் சூழலையே தலைகீழாக்கி விடுகிறது. குழந்தையின் செயல்பாடுகளுக்கேற்ப காலம் தன்னை மாற்றிக் கொள்கிறது. வீட்டிலுள்ளவர்கள் மட்டுமல்லாமல் வருகிற விருந்தினர்கள் வரை எல்லோருடைய கவனத்தையும் அந்தக் குழந்தை கவர்ந்து கொள்கிறது. ஒரு புதிய வெளிச்சமும் மகிழ்ச்சியும் வீட்டை நிறைப்பதுபோல் ஓர் உணர்வு ஏற்படுகிறது. மற்றவர்களுக்கு இது இன்பமாக இருந்தாலும் வீட்டின் மூத்த குழந்தைகளுக்கு மட்டும் மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருப்பதில்லை. அதுவரை தங்களுக்குக் கிடைத்து வந்த கவனத்தையும் பராமரிப்பையும் ஒரே நாளில் ஒரு சின்னஞ்சிறிய உருவம் களவாடிக் கொள்வதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. இந்தப் புறக்கணிப்பு புதிய உறுப்பினரின்மீது கோபமும் எரிச்சலுமாக மாறுகிறது.

ஆனால், இந்த வருத்தமும் கோபமும் சில நாள்களுக்கு மட்டுமே. குழந்தையுடன் பழகப் பழக அடிக்கடி சில சில்லறைச் சண்டைகள் இருந்தாலும் தன்னிச்சையாகவே சகோதரத்துவ பாசமும் அன்பும் உருவாகி விடுகிறது. மனித வாழ்வியலில் நீண்ட காலமாக நிகழும் இந்த விஷயத்தை நகைச்சுவையுடன் அணுகுகிறது இந்தத் திரைப்படம்.

கார்ப்பரேட் குழந்தையும் அப்பாவி சிறுவனும்! #TheBossBaby

'டிம்' என்பவன் தன் மகளுக்கு தன்னுடைய இளமைப்பருவ அனுபவங்களையும் தன்னுடைய விநோதமான புதிய சகோதரனையும் பற்றி கதையாகச் சொல்கிற பாவனையில் விரிகிறது இந்தத் திரைப்படம்.

டிம்மின் வாழ்க்கை அதுவரை மிக இன்பகரமானதாக கழிகிறது. வீட்டிற்கு அவன் ஒரே மகன். அவனுடைய பெற்றோர், நாய்க்குட்டிகளை விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தில் மார்க்கெட்டிங் துறையில் பணிபுரிகின்றனர். எத்தனை பணி அழுத்தம் இருந்தாலும் இரவு டிம்மிற்கு கதை சொல்லி, பாட்டுப்பாடி தூங்க வைப்பதற்கு நேரம் ஒதுக்காமல் இருக்க மாட்டார்கள். பரஸ்பர அன்போடும் மகிழ்ச்சியோடும் அந்தக் குடும்பம் இயங்குகிறது.

ஆனால், ஒரு நாள் காலையில் டிம்மின் இன்பமான வாழ்க்கையில் ஒரு குறுக்கீடு நிகழ்கிறது. ஒரு விநோதமான கனவுடன் விழித்து அவன் தன் வீட்டு வாசலைப் பார்க்கையில் அவனுடைய பெற்றோர் புதிய குழந்தையுடன் நுழைவதைப் பார்க்கிறான். முதற்பார்வையிலேயே அந்தக் குழந்தையை அவனுக்குப் பிடிக்கவில்லை. அது குழந்தையாக இல்லாமல் பெரிய மனிதர்களுக்கேற்ப இருக்கிறது. அந்த வீட்டையும் பெற்றோரின் நேரத்தையும் அது ஆக்ரமித்துக் கொள்வதால் டிம் எரிச்சலின் உச்சத்திற்கே செல்கிறான். அவனுடைய புகார்கள் எதுவும் செல்லுபடியாவதில்லை. டிம்மும் புதிய குழந்தையும் எதிரிகளாகிறார்கள்.

ஒருநாள்... அந்த ஜூராசிக் பேபி தொலைபேசியில் எவரிடமோ ரகசிய ஆலோசனை செய்து கொண்டிருப்பதைப் பார்த்து திகைத்துப் போகிறான். அது பேசுவதைக் கண்டு ஆச்சரியமடைகிறான். பயத்துடன் அருகில் சென்று 'என்னப்பா தம்பி' என்று விசாரிக்கப் போனால் அதுவே ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் CEO போல கறாரான வணிகத்தனத்துடன் பேசுகிறது.  'இருடா உன்னை வெச்சுக்கறேன்' என்று தம்பி நண்பர்களுடன் உரையாடும் ரகசிய சந்திப்பை ஒலிப்பதிவு செய்து தன் பெற்றோர்களிடம் காட்டிக் கொடுக்க முயற்சிக்கிறான். ஆனால் எதிர்தரப்பானது இந்தச் சதியை மிக எளிதாக முறியடித்து விடுகிறது.

தோற்றுப் போகும் டிம் வேறு வழியில்லாமல் புதியவனிடம் சரணடைந்து சமாதானம் பேசுகிறான். அப்போதுதான் வந்திருக்கும் குழந்தையின் உண்மையான அடையாளம் தெரியவருகிறது. குழந்தைகளை உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் அதுவொரு முக்கிய அதிகாரி. அந்த உலகத்திலிருந்துதான் குழந்தைகள் வருகின்றனர். ஆனால், ஒரு பிரத்யேகமான திரவத்தைத் தொடர்ந்து அருந்துவதன் மூலம் அவனுடைய தம்பி போன்றவர்கள் அதிகாரிகள்போல் பேசுவார்கள். அந்தத் திரவம் இல்லையென்றால், அவர்கள் உண்மையான  'ஞ்ஞா.. ங்கா..' குழந்தையாக மாறிவிடுவார்கள்.

அந்தக் குழந்தை ஒரு ரகசியத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காகத்தான் டிம்மின் வீட்டிற்கு வந்திருக்கிறது. அவர்கள் நிறுவனம் செய்த ஆய்வுகளின் படி குழந்தைகளின் பெரிய எதிரி 'நாய்க்குட்டிகள்தான்'. ஆம், குழந்தைகளை விட நாய்க்குட்டிகளின்மீது பல பெற்றோர்கள் மிகுதியாக அன்பு செலுத்துவதால் குழந்தைகளின் எண்ணிக்கை குறைகிறது. எனவே, நாய்க்குட்டிகளின் கண்டுபிடிப்புகள் தடுக்கப்பட்டாக வேண்டும். டிம்மின் பெற்றோர்கள், நாய்க்குட்டிகளை உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் பணிபுரிவதால், அங்கு நிகழவிருக்கும் ஒரு புதிய கண்டுபிடிப்பைக் களவாடி எடுத்துச் செல்லவே புதிய குழந்தை வந்திருக்கிறது.

டிம் இதையெல்லாம் கேட்டு அதிர்ச்சியடைகிறான். 'இதோ பார் பையா, இந்த ஆப்பரேஷன் வெற்றிகரமாக நிகழ்ந்தால் எனக்குப் பதவி உயர்வு கிடைக்கும். நான் என்னுடைய உலகத்திற்கே மறுபடி திரும்பிப் போய் விடுவேன். இது சாத்தியப்படவில்லையென்றால் இங்கேயே குழந்தையாக இருந்து உன்னுடன் வளர வேண்டியதுதான். யோசி. என்ன சொல்கிறாய்?" என்கிறது. காலம்பூராவும் இவனுடன் மல்லுக்கட்டுவது தன்னால் ஆகாது என்று முடிவிற்கு வேறு வழியின்றி வரும் டிம், குழந்தையின் சதித்திட்டத்திற்கு உதவ ஒப்புக் கொள்கிறான்.

கார்ப்பரேட் குழந்தையும் அப்பாவி சிறுவனும்! #TheBossBaby

புதிய கண்டுபிடிப்பைத் தடுத்து நிறுத்தும் அவர்களின் திட்டம் என்னவானது, கார்ப்பரேட் குழந்தை பதவி உயர்வுடன் அதன் உலகத்திற்கு திரும்பிச் சென்றதா, டிம்மின் நிலை என்ன என்பதையெல்லாம் சிரிக்கச் சிரிக்க சொல்லியிருக்கிறார்கள்.

நேர்த்தியான கோட், சூட், விலையுயர்ந்த கைகடிகாரம், பளபளப்பான ப்ரீப்கேஸ், மொட்டைத் தலை, கறாரான பார்வை என்று கார்ப்பரேட் தனத்துடன் அந்தக் குழந்தை கையைச் சொடுக்கி அதிகாரமிடுவதும், டிம்மிற்கு உலக மகா அலப்பறைகள் தருவதும், டிம்மின் பெற்றோரைக் கண்டவுடன் சட்டென்று குழந்தையாக மாறி 'ஞ்ஞா.. ங்கா.." என்று நடிப்பதும் என... அந்தப் பாத்திரத்தின் கலாட்டா ஒவ்வொன்றும் ரகளை. தன்னுடைய திட்டத்திற்கு உதவ டிம்மிடம் அலட்டலாக அதுபோடும் ஒப்பந்தமும், தன்னுடைய டீமுடன் ஆவேசமாக அது  நடத்தும் மீட்டிங்கும் அசத்தல் ரகம்.

குழந்தைகள் தங்களின் அப்பாவித்தனங்களை இழந்து பெரியவர்களின் வணிகத் தந்திரங்களை விரைவில் கற்றுக் கொண்டால் அது எத்தனை கொடூரமாக இருக்கும் என்கிற அச்சத்தை இந்தத் திரைப்படம் ஏற்படுத்துகிறது. இறுதிப் பகுதியில் தம்பியின் பிரிவைத் தாங்கமுடியாத டிம், அவனுக்குக் கடிதம் எழுதுவதும் கார்ப்பரேட் மகானுபாவர் மனம் திரும்பி டிம் வீட்டிற்கு திரும்ப வருவதும் நெகிழ்ச்சியான காட்சிகள்.

குழந்தைகளைத் தயார் செய்யப்படும் முதல் காட்சியிலிருந்தே ரகளை துவங்கி விடுகிறது. இயல்பாக நடந்து கொள்ளும் குழந்தைகள், குடும்பங்களுக்கு அனுப்பப்பட, அவர்களுக்கு மத்தியில் எல்லாவற்றையும் தலைகீழாக செய்யும் குழந்தை, சிரிக்கவே தெரியாத காரணத்தினால் 'நிர்வாகத்திற்கு' அனுப்பப்படுவது நமது உயரதிகாரிகளை நினைவுப்படுத்தி சிரிக்க வைக்கிறது. ஆனால், பல காட்சிகளில் இது குழந்தைகள் படமா அல்லது பெரியவர்களுக்கான படமா என்பது போன்ற கேள்விகளும் எழாமல் இருப்பதில்லை. அதேபோல், செல்லப் பிராணிகள் வளர்ப்பை மிகவும் மோசமாக சித்தரிக்கின்றது. 

Marla Frazee எனும் அமெரிக்க எழுத்தாளர் 2010-ல் எழுதிய படக்கதையையொட்டி இந்தத் திரைப்படம் உருவாகியிருக்கிறது. அபாரமான கற்பனையுடனும் சிறந்த வரைகலை நுட்பங்களின் உதவியுடனும் உருவான இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் Tom McGrath. படத்திற்கு இசையமைத்திருப்பவர்களுள் ஒருவர் இசை மேதையான ஹான்ஸ் ஜிம்மர். பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்கள் இந்த அனிமேஷன் திரைப்படத்திற்கு தங்களின் குரல்களைத் தந்து சிறப்பித்திருக்கிறார்கள்.

படத்தின் டிரைலர்:

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு