Published:Updated:

“எல்லோர் படங்களும் 100 நாள் ஓடணும்; என் படம் 101 நாள் ஓடணும்!” - அஜித் பாலிசி ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினிதொடர் நிறைவு

“எல்லோர் படங்களும் 100 நாள் ஓடணும்; என் படம் 101 நாள் ஓடணும்!” - அஜித் பாலிசி ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினிதொடர் நிறைவு
“எல்லோர் படங்களும் 100 நாள் ஓடணும்; என் படம் 101 நாள் ஓடணும்!” - அஜித் பாலிசி ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினிதொடர் நிறைவு

“எல்லோர் படங்களும் 100 நாள் ஓடணும்; என் படம் 101 நாள் ஓடணும்!” - அஜித் பாலிசி ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினிதொடர் நிறைவு

‘என் வீடு என் கணவர்’ என்ற படத்தில் ஒரு பாடல் காட்சியில் சில விநாடிகள் வந்து போனது மூலம் அமைந்ததுதான் அஜித்தின் முதல் சினிமா வாய்ப்பு. ஆனால் அடுத்து வந்த ‘பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்கு பட வாய்ப்புதான் மிகச்சரியான அறிமுகம். 1992  ஆகஸ்ட் 3ல் அந்தப் பட, ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து கணக்கிட்டால், இன்னும் சில மாதங்களில் 25 வது வருடத்தைத் தொடுகிறார் அஜித். அன்றைய தெலுங்கு பட அறிமுக அஜித், ‘வேறு மொழிப் படங்களில் நடிக்க மாட்டேன். தமிழில் மட்டும்தான் நடிப்பேன்’ என்று சொல்லும் இன்றைய ‘விவேகம்’ அஜித்தாக வளர்ந்தது எப்படி? இந்தக் கேள்விக்கான பதிலை அவரின் இந்த கால்நூற்றாண்டு கால திரைப்படங்களின் வழியாக நாம் உணர முடியும். அதற்கான ஒரு ரீவைண்ட் தான்.. இந்த ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினி தொடர்! 

‘விவேகம்’ படம் பற்றிய சில சிறப்புச் செய்திகள்:

* சத்யஜோதி ஃபிலிம்ஸ், அஜித்தை வைத்து படம் பண்ணுவதற்காக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே அவரிடம் கால்ஷீட் கேட்டிருந்தது. ‘நிச்சயம் பண்ணுவோம்’ என்று அப்போது கொடுத்த வாக்கை, இப்போது நிறைவேற்றியிருக்கிறார் அஜித்.

• ‘விவேகம்’ படத்தின் வில்லன், பாலிவுட் பிரபலம் விவேக் ஓபராய். அஜித்துக்கு சரிசமமாக டஃப் கொடுத்து மிரட்டியிருக்கிறாராம். அஜித்தின் காதலியாக காஜல் அகர்வால். தவிர, தமிழில் அறிமுகமாகும் அக்‌ஷரா ஹாசனுக்கும் முக்கியமான கேரக்டர். மேலும் தம்பி ராமய்யா, கருணாகரன், அப்புக்குட்டி, ராஜேந்திரன் உள்ளிட்ட நடிகர்களும் உள்ளனர். ஃபாரின் ஆர்ட்டிஸ்ட்டுகள் பலரும் ‘விவேக’த்தில் உண்டு. அஜித்துக்கும் இயக்குநர் சிவாவுக்கும் அப்படி ஓர் ஒற்றுமை. இருவரும் ஒருவர் சொல்வதை மற்றவர் மறுப்பேதும் தெரிவிக்காமல் ஏற்றுக்கொள்வார்களாம்.

* கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2-ம் தேதி தொடங்கிய படப்பிடிப்பு, இந்த ஆண்டு மே மாதம் முடிவடைந்தது. 147 நாள்கள் நடந்த படப்பிடிப்பில் 70 சதவிகிதம், ஐரோப்பாவின் செர்பியா, பல்கேரியா, ஆஸ்திரியா, குரோவேஷியா ஆகிய நான்கு நாடுகளில் நடந்துள்ளது. மீதி 30 சதவிகிதப் படப்பிடிப்புதான் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடந்துள்ளது. படம் ஆகஸ்ட் 10-ம் தேதி ரிலீஸ்.

* ஒரு குற்றச் சம்பவத்தை விசாரிக்கையில் அந்தக் குற்றத்துக்கான காரணங்கள் ஐரோப்பாவின் வெவ்வேறு நாடுகளில் கிளை பரப்பி உள்ளது தெரியவரும். அதை விசாரித்து உண்மையைக் கண்டறியும் இன்டர்போல் அதிகாரியாக அஜித் நடித்திருக்கிறார். இதனால் `விவேகம்' படத்தில் பரபர ஆக்‌ஷன், சேஸிங்குக்குப் பஞ்சமிருக்காது. இதற்கு கட்டுக்கோப்பான உடல் அவசியம் என்பதை உணர்ந்த அஜித், உடல் எடையில் கிட்டத்தட்ட 20 கிலோவுக்கு மேல் குறைத்திருக்கிறார். அதற்கு டயட், ஜிம் பயிற்சியே காரணம். ஷூட்டிங் முடிந்து ஹோட்டலுக்குச் செல்பவர், சீக்கிரமே தூங்கப் போய்விடுவாராம். பிறகு, அதிகாலை 3 மணிக்கு எழுந்து குறைந்தபட்சம் நான்கு மணி நேரம் ஜிம்மில் வொர்க்கவுட் செய்வாராம். குறிப்பிட்ட ஒரு ஆக்‌ஷன் சீக்வென்ஸில் உடற்கட்டு தெரிய வேண்டும் என்பதற்காக டயட், வொர்க்கவுட் ஆகியவை இன்னும் கடுமையாக இருந்ததாம்.

* ‘விவேகம்’ படத்தின் இன்னொரு ஸ்பெஷல் அனிருத்தின் இசை. ஐந்து பாடல்கள், ஒரு தீம் பாடல் என, படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள். இதில் அஜித்துக்கான ஓப்பனிங் பாடலை பாடியிருப்பவர் பிரபல ராப் பாடகர் யோகி பி. ஆடியோவை ஒவ்வொரு பாடலாக ரிலீஸ் செய்யலாம் என்பது திட்டம். ஜூன் மாதக் கடைசியில் அல்லது ஜூலை மாத முதல் வாரத்தில் ஆடியோ ரிலீஸ் இருக்கலாம். முதல் சிங்கிள் ரிலீஸ் அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா இந்த மூன்று நாடுகளில் ஏதாவது ஒன்றில் நடைபெறலாம்.

* வெளியிலிருந்து வரும் உணவில் எண்ணெய் அளவு அதிகமிருக்க வாய்ப்பிருப்பதால், செர்பியா ஷெட்யூல் முழுவதும் அஜித் தனக்கான உணவை தானே சமைத்துச் சாப்பிட்டிருக்கிறார். இதற்காக இவருக்கு ஒரு ட்ரே, ஸ்டவ் உள்ளிட்ட மினிமம் கிச்சன் பொருள்களை வாங்கித் தந்திருக்கிறார்கள். அதில் ஐந்து பேர் சாப்பிடும் அளவுக்கான உணவைச் சமைத்து தானும் சாப்பிட்டு மற்றவர்களுக்கும் கொடுப்பாராம். அதேபோல, தன் படப்பிடிப்புத் தளத்தில் அனைவருக்கும் உணவு வந்துவிட்டதா என்பதை விசாரித்த பிறகே, தான் சாப்பிடத் தொடங்குவார்.

* எந்தக் காரணம்கொண்டும் தன்னால் படப்பிடிப்பு தடைபடுவதோ, தாமதமாவதோ அஜித்துக்குப் பிடிக்கவே பிடிக்காது. வந்தவுடன் அனைவரையும் பார்த்துவிட்டு கேரவனில் ஏறினால், அந்தக் காட்சிக்கான உடைகளை மாற்றிக்கொண்டு அடுத்த ஐந்தாவது நிமிடம் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருப்பார்.

* படப்பிடிப்பு தொடங்கிய முதல் நாளில், முக்கியமான தொழில்நுட்பக் கலைஞர்களிடம் பேசி நலம் விசாரிப்பவர், அடுத்தடுத்த நாளில் டைரக்‌ஷன் டீமில் இருப்பவர்கள், கேமரா அசிஸ்டென்ட்டுகள், லைட்மேன்கள், துணை நடிகர்கள்...என  அனைவரையும் தன் நட்பு வட்டத்துக்குள் கொண்டுவந்துவிடுவார். ஒருகட்டத்தில் ‘நாம் அஜித் படப்பிடிப்பில்தான் இருக்கிறோம்’ என்ற உணர்வே இல்லாத அளவுக்கு எல்லோரையும் இலகுவாக்கிவிடுவார்.

* ‘கதைக்குத் தேவை என்பதால், உடல் இளைக்க முடிவெடுததுவிட்டார். ஆனால் அறுவைசிகிச்சைக்குப் பிறகு இந்த டயட், உடற்பயிற்சியைத் தொடங்கியவருக்கு அவை மிகப்பெரிய சவாலாக இருந்தன. ஆனால், எந்தக் காரணத்தாலும் எடுத்த முடிவிலிருந்து பின்வாங்கவே இல்லை. உடலைக் குறைத்து ஃபிட்டாகத்தான் வந்தார். படப்பிடிப்பிடிப்புக்காகத் தைக்கப்பட்ட உடைகள்தான், இவர் இளைக்க இளைக்க மாற்றப்பட்டுகொண்டே இருந்தன.

* படத் தயாரிப்பு நிறுவனத்திலிருந்து மேற்கண்ட நான்கு நாடுகளுக்கு யார் புறப்பட்டாலும், ‘சார்... தல ஷூட்டிங்கா? அவர் அடுத்த முறை ஏர்போர்ட் வரும்போது முன்னாடியே சொல்லிடுங்க. போட்டோ எடுக்கணும்’ என்று சென்னை விமானநிலையப் பணியாளர்கள் பெரும்பாலானோர் அஜித் ரசிகர்களாக இருக்கிறார்கள். அவர் வந்தால், தங்களின் வேலைகளை மறந்து அவருடன் செல்ஃபி எடுப்பதில் ஆர்வமாகிவிடுகிறார்கள். இவரும் வி.ஐ.பி-களுக்கான வரிசையில் நிற்காமல் பொதுவழிதான் எனப் பிடிவாதம்பிடிப்பதால் நெருக்கடி இன்னும் அதிகமாகிவிடுமாம்.

* அனுமதியே கிடைக்காத செர்பியா அரசின் ராணுவத் தளங்களில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். இதற்காக மூன்று மாதங்களுக்கு முன்னரே யார் யார் வருகிறார்கள் என்ற விவரங்களைத் தெளிவாகச் சொல்லி சிறப்பு அனுமதி பெற்று படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள். அதேபோல் பல்கேரியா தெருக்களில் படப்பிடிப்பு நடத்த அனுமதிபெறுவது என்பது மிகவும் சிரமமான வேலையாம். அதையும் பெற்று பைக் ஃபைட் எடுத்திருக்கிறார்கள். இப்படி ஐரோப்பாவின் நான்கு நாடுகளில் மிகவும் சிரமப்பட்டு படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள்.

* வெளிநாட்டு லொகேஷனில் மால் ஒன்றின் வாசலில் ‘ஸ்ஸ்... அப்பாடா!’ எனக் கைகளைத் தரையில் ஊன்றி வானத்தைப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறார் அஜித். உடன் வந்தவர்கள், ‘சார், நீங்க சென்னையில் இப்படி உட்கார முடியுமா?’ எனக் கேட்டிருக்கிறார்கள். ‘அங்கே முடியாதுங்கிறதால்தான் இங்கே இப்படி உட்கார்ந்திருக்கேன்’ என்று சொல்லிச் சிரித்திருக்கிறார்.

அஜித்தைப் பற்றிய பொதுவான தகவல்கள் சில:

* அஜித்துக்கும் சூர்யாவுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. ‘நேருக்குநேர்’, அஜித்தும் விஜய்யும் பண்ணவேண்டிய படம். அதில் அஜித் இல்லை என்ற பிறகு சூர்யா உள்ளே வருகிறார். இதேபோல ‘நந்தா’ அஜித் பண்ணவேண்டிய படம். இவரின் படத்துடன் ‘நந்தா’ எனத் தலைப்பிட்டு ஆட்டோ பின்னால் போஸ்டர்கள்கூட ஒட்டிவிட்டார்கள். அதன் பிறகு சூர்யா ‘நந்தா’வாகிறார்.

இயக்குநர் ஹரி, இயக்குநர் சரணின் அசிஸ்டென்ட். அந்த ரூட்டில் ஹரியும் அஜித்தும் கமிட்டான படம்தான் ‘ஆறு’. தயாரிப்பாளர் பிரச்னையால் அஜித்திடமிருந்து சூர்யாவுக்குக் கை மாறியது ‘ஆறு’. ‘கஜினி’யின் ஒரிஜினல் பெயர் ‘மிரட்டல்’. கிண்டி லீமெரிடியன் ஹோட்டலை சஞ்சய் ராமசாமியின் வீடாக்கி, அஜித்தை வைத்து  ஆறு நாள்கள் ஷூட்டிங்கூட எடுத்துவிட்டார்கள். பிறகு, சூழ்நிலை காரணமாக ‘மிரட்டல்’, ‘கஜினி’யாக சூர்யாவுக்குக் கைமாறியது.

* ‘காதல் மன்னன்’ மூலம் இயக்குநராக அறிமுகமான சரண், பிறகு அஜித்துடன் ‘அமர்க்களம்’, ‘அட்டகாசம்’, ‘அசல் போன்ற படங்களில் பணியாற்றினார். அவரின் அசிஸ்டென்டான எஸ்.ஜே.சூர்யாவுக்கு ‘வாலி’ மூலம் வாய்ப்பு தந்தார். இதேபோல்தான் இயக்குநர் வி.இசட்.துரைக்கு ‘முகவரி’, ராஜகுமாரனுக்கு ‘நீ வருவாய்' என, ஏ.ஆர்.முருகதாஸுக்கு ‘தீனா’, சரவண சுப்பையாவுக்கு ‘சிட்டிசன்’, இயக்குநர் விஜய்க்கு ‘கிரீடம்’ என,இன்றைய பிஸி இயக்குநர்களுக்கு அன்று முதல் படம் தந்ததே அஜித்தான். தவிர, ‘அசோகா’ படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த விஷ்ணுவர்தனுக்கு ‘பில்லா’ தந்தார். ‘வீரம்’ தொடங்கி இயக்குநர் சிவாவுடன் அடுத்தடுத்து மூன்று படங்கள் நடித்திருக்கிறார். இப்படி திறமையான இளைஞர்களைத் தேடிப் பிடித்து ஊக்குவிப்பதுதான் அஜித் ஸ்பெஷல்.

* ‘அமராவதி’ தொடங்கி சில படங்களுக்கு அஜித்துக்கு டப்பிங் பேசியது விக்ரம்தான். பிறகு ‘உல்லாசம்’ படத்தில் சேர்ந்து நடித்தார்கள். இப்படி இருவரும் வெவ்வேறு நடிப்புத் தளங்களில் இணைந்தே வளர்ந்தனர். அந்தச் சமயத்தில் அஜித்-இயக்குநர் சரண்-தயாரிப்பாளர் பூர்ணசந்திர ராவ் காம்பினேஷனில் தொடங்கப்பட்ட படம் ‘ஏறுமுகம்’. ஒரு ரெளடி, கல்லூரியில் சேர்ந்து படிப்பது போன்ற கதை. ஸ்ரீபெரும்புதூரில் பாடலுக்கான செட் போட்டு ஷூட்டிங் தொடங்கினர். அப்போது ஷூட்டிங் செட்டில் இன் ஹவுஸ் விளம்பரங்கள் சிலவற்றை தயாரிப்பாளர் வைத்திருக்கிறார். தன் படங்களுக்குள் விளம்பரங்கள் கூடாது என்பது அஜித் பாலிசி. அதனால் அஜித்துக்கும் தயாரிப்பாளருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. அதனால் அஜித் ‘ஏறுமுக’த்திலிருந்து வெளியேறினார். பிறகு, அதே படம் ஏவி.எம். - விக்ரம் - சரண் காம்பினேஷனல் ‘ஜெமினி’ ஆனது.

* அஜித் ஆந்திரா மெட்ரிக்கில் 10-ம் வகுப்பு பிரைவேட்டாக டுடோரியலில் படித்தவர். அந்த டுடோரியலை நடத்தியவர் சுப்பையா. பல வருடங்களுக்குப் பிறகு ஏர்போர்ட் ஃப்ளையிங் லைசென்ஸ் வாங்க அவர் படித்த அந்த மெட்ரிக் சர்ட்டிஃபிகேட் தேவைப்பட்டிருக்கிறது. சுப்பையாவைத் தேடிக் கண்டுபிடித்து சர்ட்டிஃபிகேட் வாங்கினார். அப்போது சுப்பையாவிடம், ‘சார், உங்ககூட ஒரே ஒரு போட்டோ எடுத்துக்கிறேன். நான் ஸ்கூல் படிச்சதுக்கான ஒரே அடையாளம் நீங்க மட்டும்தான்’ என்றபடி சுப்பையாவுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார் அஜித். (அன்று அஜித் படித்த ஆந்திரா மெட்ரிக்கில் இவரின் வகுப்பு தோழன் பாடகர் எஸ்.பி.பி.சரண் என்பது கூடுதல் தகவல்)

* நண்பர்கள், உடன் வேலை செய்பவர்கள் என, தெரிந்தவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால், தனக்குத் தெரிந்த, தன் குடும்பத்துக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களைப் பரிந்துரைப்பார். ‘போய்ப் பார்த்தீங்களா... என்ன சொன்னார்?’ என்று ஃபாலோ பண்ணி விசாரிக்கவும் செய்வார்.

* லிஃப்ட், எஸ்கலேட்டர் என எங்கு இருந்தாலும் பெண்கள் வந்துவிட்டால், அவர்களுக்குதான் முன்னுரிமை. அவர்களுக்கு வழிவிட்டு அவர்கள் முதலில் போகட்டும் எனக் காத்திருப்பார்.

* ‘அவங்க படம் நல்லா ஓடுதே, அந்தப் படத்தோட கதை இதுவாமே...’ என எதைப் பற்றியும் அஜித் கவலைப்படுவதில்லையாம். ‘எல்லார் படங்களும் 100 நாள் ஓடணும்; என் படம் 101 நாள் ஓடணும்.’ இதுதான் அஜித் பாலிசி.

* நடிகர் சங்கத்தில் ஓர் உண்ணாவிரதப் போராட்டம். அதில் கலந்துகொண்டிருந்த அஜித்திடம் ஒருவர் எழுந்து எழுந்து அவ்வபோது வணக்கம் சொல்லிக்கொண்டே இருந்தார். ‘நாம எப்போதோ பார்த்துப் பேசினவர் போலிருக்கிறது. தவறாக எடுத்துக்கொள்ளப்போகிறார்’ என நினைத்த அஜித் தன் உதவியாளரை அழைத்து விசாரிக்கச் சொல்லியிருக்கிறார். ‘என் மகளின் இதய அறுவைசிகிச்சைக்கு சார்தான் பணம் கொடுத்தார்’ என்று அவர் சொல்ல, அப்போதும் அஜித்துக்கு அவரின் பெயர் ஞாபகம் வரவில்லை. இப்படி, தான் செய்த உதவிகளை அவர் நினைவில் வைத்துக்கொள்வதில்லை. ‘இதுபோன்ற விஷயங்களை மறந்துகொண்டே இருப்பது நல்லது’ என்று நினைப்பாராம். அந்தக் கடைசிப் பயனாளர் யார் என அஜித்துக்குத் தெரியாது. அந்தப் பணம் வங்கியில் செலுத்தப்படும் அது சம்பந்தப்பட்டவர்களுக்கு போய்ச் சேர்ந்துவிடும். இப்படி வாரம் ஒன்றுக்கு மூன்று முதல் நான்கு லட்சம் ரூபாய் கல்விக் கட்டணமாகவே சென்றுகொண்டிருக்கிறதாம். தன் டிரைவருக்கு சொந்தமாக கார் வாங்கிக்கொடுத்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

‘அஜித்தை அறிந்தால்’ மினி தொடரைப் படித்த உங்களுக்கு எங்களின் நன்றிகள். வணக்கம்!

அடுத்த கட்டுரைக்கு