Published:Updated:

‘ஒரு ஊர்ல ஒரு சச்சின்' அல்ல.. ஒரே ஒரு சச்சின்தான்!’ #Sachin a Billion Dreams - படம் எப்படி?

விகடன் விமர்சனக்குழு
‘ஒரு ஊர்ல ஒரு சச்சின்' அல்ல.. ஒரே ஒரு சச்சின்தான்!’ #Sachin a Billion Dreams - படம் எப்படி?
‘ஒரு ஊர்ல ஒரு சச்சின்' அல்ல.. ஒரே ஒரு சச்சின்தான்!’ #Sachin a Billion Dreams - படம் எப்படி?

‘ஒரு ஊர்ல ஒரு சச்சின்' அல்ல.. ஒரே ஒரு சச்சின்தான்!’ #Sachin a Billion Dreams - படம் எப்படி?

கிரிக்கெட்டில் 1989-ல் அறிமுகம் ஆனதில் இருந்து, கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றது வரை... கிரிக்கெட்டின் மீது தீராக் காதல்கொண்ட விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கரின் டாக்குமென்டரியாக உருவாகியிருக்கும் 'சச்சின் - எ பில்லியன் ட்ரீம்ஸ்' திரைப்படம் என்ன சொல்கிறது?

ஒரு கனவு முளைக்கும்போது அதைப் பத்திரப்படுத்தி, பாதுகாத்து, சரியான சமயத்தில் சிறகை மாட்டிப் பறக்கவிடவேண்டும். கனவுகளைச் சுமந்து சிறகை விரித்துப் பறப்பவன், உயரத்தைத் தீர்மானித்துக்கொள்வான். 'சச்சின் - எ பில்லியன் ட்ரீம்ட்ஸ்' திரைப்படம் சொல்வது, சச்சின் டெண்டுல்கர் என்ற கிரிக்கெட் ஜாம்பவானின் வாழ்க்கை. பாட்டி சொல்லும் கதைகளைப் போல, 'ஒரு ஊர்ல ஒரு சச்சின்...' பாணியில் தொடங்கும் கதையைக் கேட்க ஸாரி... பார்க்கத் தொடங்கினால், படம் முடியும்போது, 'ஒரு ஊர்ல ஒரு சச்சின்' அல்ல 'ஒரே ஒரு சச்சின்தான்!' என கிரிக்கெட் ரசிகர்களுக்குச் சிலிர்க்கும்!  இது சச்சினின் சுயசரிதை! 

அண்ணனின் முயற்சியால், கிரிக்கெட் பயிற்சியாளர் ராமாகாந்த் அச்ரேக்கரிடம் சச்சின் பயிற்சி பெறத் தொடங்குவதில் இருந்து, பயிற்சியாளரின் பல 'ஒரு ரூபாய்' பரிசுகளைப் பெற்றது, வினோத் காம்ப்ளியுடன் இணைந்து விளையாடி சாதனை படைத்தது, பொடியனாக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆனது, அஞ்சலியுடனான காதல், குழந்தைகள், உலகக்கோப்பையைத் தழுவிக்கொள்ள வேண்டும் என்ற ஆதங்கம், கடைசிப் போட்டி... என இன்ச் பை இன்ச் ஆகத் தெரிந்துகொள்ளும் வகையில் படமாக்கப்பட்டிருக்கிறது.

சச்சினின் குழந்தைப் பருவ சேட்டைகளுக்கு திரைவடிவம் கொடுத்தவர்கள், பெரும்பாலான தருணங்களை வார்த்தைகளால் விவரிக்க சம்பந்தப்பட்ட வீரர்களையே பயன்படுத்தியிருக்கிறார்கள். கிரிக்கெட் போட்டிகள், சச்சின் கொடுத்த பேட்டிகள், சச்சின் டெண்டுல்கரின் பெர்ஷனல் வீடியோக்கள், சச்சின் - அஞ்சலி திருமண வீடியோ... போன்ற ஒரிஜினல் ஃபுட்டேஜ்களைப் பயன்படுத்தியிருப்பதன் மூலம் சச்சின் டெண்டுல்கருக்கும் நமக்குமான உறவை இன்னும் நெருக்கம் ஆக்கியிருக்கிறார் இயக்குநர் ஜேம்ஸ் எர்ஸ்கின். ஏ.ஆர்.ரஹ்மான் எப்படி ஆஸ்கர் விருதைப் பெற்றார் என்பது 'சச்சின் - எ பில்லியன் ட்ரீம்ஸ்' படத்தின் பின்ணணி  இசையைக் கேட்கும்போது உங்களுக்குப் புரிந்துவிடும். மகிழ்ச்சி, சோகம், துயரம்... என சச்சினின் விதவிதமான சம்பவங்களோடு ரஹ்மானின் இசையும் விதவிதமாகப் பயணிக்கிறது. 

பிரையன் லாரா, விவியன் ரிச்சர்ட்ஸ், நாசர் ஹுசைன், க்ரீம் சுவான், ரிக்கி பாண்டிங், ஷேன் வார்ன், வாசிம் அக்ரம் என சச்சினை எதிர்த்து ஆடியவர்களைத் தவிர, சுனில் கவாஸ்கர், சவுரவ் கங்குலி, ரவி சாஸ்திரி, தோனி, விராட் கோலி, ஹர்பஜன் சிங்... எனப் பலரும் சச்சினுடனான அனுபவங்களை இந்தத் திரைப்படத்திற்கென பிரத்யேகமாகப் பதிவு செய்திருக்கிறார்கள். சச்சினின் ரசிகர் ஒருவர், சச்சின் விளையாடிய அத்தனை போட்டிகளின் ரன்களையும் மனப்பாடம் செய்துவைத்து, எப்படிக் கேட்டாலும் துல்லியமாகச் சொல்லி அசத்துகிறார். 2003-ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அடித்த 359/2 என்ற இமாலய இலக்கை எட்டிப்பிடிக்க சச்சின் ஒரு தந்திரம் வைத்திருந்தார். அதை அவரே சொல்லும்போது, 'அட' என ஆச்சரியம்! பாசமான உறவுகளைப் பற்றி, நண்பர்களைப் பற்றி, மனைவி குழந்தைகளைப் பற்றி... சச்சின் விவரிக்கும் சம்பவங்கள் எல்லாம் அழகான வாழ்க்கைக்கு, அனைவருக்குமான பாடம். 

சச்சின் காலத்தில் இந்திய அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளராக இருந்தவர்களில், அசாருதீன், கங்குலி, கிரேக் சாப்பல், கேரி கிறிஸ்டன் போன்றவர்களைத் தவிர, மற்றவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. 2003-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை சச்சின் கிரிக்கெட் வரலாற்றில் நடந்தவைகளைக் காட்சிப்படுத்தியிருக்கும் அழுத்தம், அதற்குப் பிறகு நடந்த சம்பவங்களுக்குக் கொடுக்கப்படாமல், ஃபாஸ்ட் ஃபார்வேர்ட் மோடிலேயே பயணிப்பது உறுத்தலாக இருக்கிறது. 

இந்தியாவில் ரசிகர்கள் கிரிக்கெட் மீது கண்மூடித்தனமான அன்பையும், நம்பிக்கையும் கொண்டிருக்கிறார்கள். வெற்றியின்போது உச்சகட்டக் கொண்டாட்டமும், தோல்வியின்போது அடிமட்ட அளவுக்குக் கோபத்தை வெளிப்படுத்துவமாய் இருக்கிறார்கள். இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் இந்த மனநிலையை மிக மோசமான தருணங்களில் சச்சின் எப்படிக் கடந்தார்? உலகக்கோப்பையை வென்றுவிடுவோம் என்ற நம்பிக்கை உச்சத்தில் இருந்த 2003-ஆம் ஆண்டு உலக்கோப்பை இறுதிப்போட்டியில், சச்சின் 4 ரன்களில் அவுட் ஆனபோது அவருடைய மனநிலையும், பிரார்த்தனையும் என்னவாக இருந்தது? 'சச்சின் டொக்காயிட்டார்' என்ற ரீதியல் அனைவரும் கருத்து சொல்லிக்கொண்டிருந்த சமயம், சச்சின் என்ன செய்துகொண்டிருந்தார்? 2011 உலகக்கோப்பையை வென்றபிறகு சச்சின் மனநிலை என்ன? - வெறித்தனமான கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்தக் கேள்விகளைவிட, பதில் என்னவாக இருக்கும் என்ற ஆர்வம் அதிகமாக இருக்கும். 

அந்த ஆர்வத்துடன்  ‘சச்சின் - எ பில்லியன் ட்ரீம்ஸ்’ படத்தைப் பாருங்கள். சச்சினுடன் சேர்ந்து, நாம் பயணிக்கும் ‘டைம்-டிராவல்’ அனுபவத்தை இந்தப் படம் நிச்சயம் கொடுக்கும்!

அடுத்த கட்டுரைக்கு