Published:Updated:

‘ஹூஸ் த ஹீரோ? தட் பரதேசி கய். ஐ லவ் ஹிஸ் ஆக்டிங்’ - ஆச்சர்ய அனுராக்! #VikatanExclusive

ம.கா.செந்தில்குமார்
‘ஹூஸ் த ஹீரோ? தட் பரதேசி கய். ஐ லவ் ஹிஸ் ஆக்டிங்’ - ஆச்சர்ய அனுராக்! #VikatanExclusive
‘ஹூஸ் த ஹீரோ? தட் பரதேசி கய். ஐ லவ் ஹிஸ் ஆக்டிங்’ - ஆச்சர்ய அனுராக்! #VikatanExclusive

‘‘இது, நான் பண்ணின முதல் ஸ்கிரிப்ட். அப்ப இந்த ஸ்கிரிப்ட்ல இருந்தவர் அதர்வா மட்டும்தான். ஆனால் பெரிய பட்ஜெட். அதனால இதை அப்ப உடனடியா பண்ண முடியலை. பிறகுதான் ‘டீமான்டி காலனி’ பண்ணினேன். அந்த வெற்றி தந்த நம்பிக்கையில் ‘நம் முதல் ஸ்கிரிப்ட்தான் நம் 2வது படம்’னு இதை எடுத்தேன். ஆனால், ‘இப்ப உள்ள சூழல்ல இது பத்தாது. நிறைய டெவலப் பண்ணணும்’னு தோணுச்சு. அப்படி பண்ணி முடிக்கும்போது ‘பெரிய இமேஜ் இருக்கிற ஒரு ஹீரோயின் பண்ணினால்தான் இது சரியா இருக்கும்’ங்கிறமாதிரி ஸ்கிரிப்ட் மாறி இருந்துச்சு. அப்படித்தான் நயன்தாரா மேடம் இந்த ஸ்கிரிப்ட்டுக்குள்ள வந்தாங்க. அவங்களைப் பற்றி நிறைய சொல்லிட்டாங்க. ஆனால் அது அத்தனையும் உண்மை. இங்க டைமிங் ஃபாலோ பண்ற ஆர்ட்டிஸ்ட்னு ஒரு சிலரை சொல்வோம். அதில் நயன் மேம் முக்கியமானவங்க. அவங்க பெரிய லெவல் ரீச் பண்ணிட்டாங்க. ஆனால் வேலைக்கு கொடுக்கிற முக்கியத்துவம், மரியாதை... இதெல்லாம்தான் அவங்களை இந்த உயரத்துல வெச்சிருக்குனு நினைக்கிறேன். அவங்க ஷூட்டிங்குக்கு என்னைக்குமே தாமதமா வந்தது கிடையாது. நாங்க லேட் பண்ணிட்டோம்னா, ‘லேட் ஆகுதே, அவங்க வந்து உட்கார்ந்திருக்காங்களே’னு பயப்படுவோம்.’’ என்று கூறியவாறு அனுராக் காஷ்யப், நயன்தாரா, அதர்வா டீமுடன் சேர்ந்து ‘இமைக்கா நொடிகள்’ மூலம் சீட் நுனி த்ரில் அனுபவம் தர வருகிறார் ‘டீமான்டி காலனி’யில் பேயுடன் வந்த அஜய் ஞானமுத்து.

‘‘படம், ரொமான்டிக் சஸ்பென்ஸ் த்ரில்லர். சென்னை, பெங்களூருனு இருவேறு இடங்கள்ல நடக்கிற கதை. அந்த இரண்டு கதைகளும் சேரும் புள்ளிதான் க்ளைமாக்ஸ். அதர்வா-ராஷி கண்ணா இணை சென்னையிலும் நயன்தாரா பெங்களூருவிலும் இருப்பாங்க. அதர்வாவுக்கு டாக்டர் கேரக்டர். நயன்தாரா ஒரு சி.பி.ஐ அதிகாரி. இதற்கிடையில் ‘முடிஞ்சா பிடி’னு சவால்விட்டு தொடர்ந்து கொலைகள் பண்ற ஒரு கொலையாளி. எதற்காக அந்தக் கொலைகள் நடக்குது? அவனைப் பிடிக்க முடிஞ்சதா இல்லையாங்கிறதே படத்தின் கதை. படம் முழுக்க பரபரப்பான ஒரு சஸ்பென்ஸ் ஓடிக்கொண்டே இருக்கும்.’’

‘‘அனுராக் காஷ்யப் எப்படி இந்தப் படத்துக்குள் வந்தார்?’’

‘‘வில்லன் கேரக்டரை கௌதம்மேனன் சாரை மனசுல வெச்சுதான் எழுதினேன். அவரும் நடிக்கிறேன்னுதான் சொல்லியிருந்தார். ஆனால் சில காரணங்களால் அது நடக்காமல் போயிடுச்சு. அந்த சமயத்தில்தான் எங்க டைரக்டர் முருகதாஸ் சாரின் ‘அகிரா’ இந்திப்பட  ட்ரெயிலர் வந்திருந்துச்சு. அதல் அனுராக் சாரை பார்க்கவே புதுசா சூப்பரா இருந்தார். என் உதவி இயக்குநர்களும், ‘ட்ரெயிலர் பார்த்தீங்களா? அவர் நம் கேரக்டருக்கு செமையா செட் ஆவார்’னாங்க. ‘நானும் அதைப்பத்திதான்யா யோசிச்சிட்டு வர்றேன்’னேன். பிறகு முருகதாஸ் சார்ட்ட பேசினேன். அவர்தான் அனுராக் சாரை சந்திக்க உதவி பண்ணினார். சந்திச்சோம். ‘ஸ்கிரிப்ட் கேட்டுட்டு என்ன சொல்லுவாரோ’னு ஆரம்பத்தில் எனக்குள் பயம். ஆனால், ‘வெரி நைஸ். கண்டிப்பா பண்றேன்’னு எளிதா சொல்லிட்டார். பயங்கர சந்தோஷம்.’’

‘‘அவர் செட்ல எப்படி இருக்கார்?’’

‘‘பாலா சார், வெற்றிமாறன் சார், செல்வராகவன் சார், சசிகுமார் சார், ஜி.வி.பிரகாஷ்னு இங்க அவருக்கு ஏகப்பட்ட நண்பர்கள். ‘இன்னைக்கு நான் அவரை பார்க்கலாம்னு இருக்கேன்’னு தன் அப்பாயின்மென்ட் சொல்வார். நான் இந்தப்பட கதையை சொல்லும்போதுகூட, ‘ஹூஸ் த ஹீரோ’னு கேட்டார். ‘அதர்வா’ன்னு சொன்னேன். ‘ஓ தட் பரதேசி கய். ஐ லவ் ஹிஸ் ஆக்ட்டிங்’னார். நாடே கொண்டாடும் ஒரு இந்திப்பட இயக்குநர், இவ்வளவு தமிழ்ப் படங்கள் பார்த்திருக்கிறாரா என்பதே எனக்கு பெரிய ஆச்சர்யம். தமிழ் படங்களை ரெகுலரா ஃபாலோ பண்றார். இதேபோல அவர் பண்ணும் படங்களுக்கும் அவரின் இயல்புக்கும் சம்பந்தமே இருக்காது. குழந்தை மாதிரியான கேரக்டர். ஒருநாள் காலையில் வந்தவர், ‘அஜய் எனக்கு ஒரு மணிநேரம் பிரேக் கொடுக்குறீயா’ன்னார். ‘என்ன சார்’னேன். பக்கத்துல ‘2.0’ ஷூட்டிங் நடந்துட்டு இருக்கு. ஒரு ஒருமணிநேரம் மட்டும் அங்க ஓடிட்டு வந்துடறேன். ‘ஐ வான்ட் டு டேக் பிக்ஸ் வித் ரஜினி சார்’னு ஓடிட்டார். பழக எளிதான கேரக்டர். அவர்கூட படம் பண்ணினதில் எங்க எல்லாருக்குமே சந்தோஷம்.’’

‘‘வெவ்வேறு களங்கள்ல நடக்கும் இரண்டு கதைகள் ஒண்ணு சேரும் புள்ளிதான் க்ளைமாக்ஸ்ங்கிறது, ஒரு க்ரைம் நாவல் உணர்வை தருது. தவிர பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதியிருக்கார். எப்படி இருக்கு இந்த அனுபவம்?’’

“முதல்ல என் டீம்ல உள்ள எல்லார்ட்டயும் என் மனதில் உள்ள கதையை தெளிவா சொல்வேன். பிறகு அவங்களோட பார்வை என்னனு கேட்டு வாங்கிப்பேன். அவங்களோட சரியான வியூஸில் எது என் கதைக்கு செட்டாகுதோ அதை எடுத்துவெச்சுதான் ஸ்கிரிப்டை ஃபைனல் பண்ணுவேன். அப்படி பட்டுக்கோட்டை சாரை சந்திக்கும்போதே 75 சதவிகித திரைக்கதை முடிஞ்சிடுச்சு. ஸ்கிரிப்டை படிச்சவர், ‘சூப்பரா இருக்கு அஜய்’னு சொன்னார். ஆனால், ‘இந்த ஸ்கிரிப்டில் இதையெல்லாம் சேர்க்கலாம்’னு அவர் சொன்ன விஷயங்கள் இன்னும் சூப்பரா இருந்துச்சு. சார் பெரிய க்ரைம் நாவலாசிரியர். அப்படிப்பட்ட ஒருத்தர் எழுதியதால் ஸ்கிரிப்ட் இன்னும் கிரிப் ஆகியிருக்கு. நிறைய பார்வைகள், கோணங்களை உள்ள கொண்டுவந்திருக்கார். அவரைமாதிரி பெரிய அனுபவம் உள்ள எழுத்தாளர்களோடு ஒர்க் பண்ணுவதால் படம் இன்னும் மெச்சூர்டா தெரியும். அவர் சஸ்பென்ஸை ஹோல்ட் பண்ணுவார்னா, நாங்க அதோட டெக்கி, ஹைஃபையான விஷயங்களை சேர்க்கிறதுனு... எந்தப்புள்ளியிலும், ‘இப்படித்தான் இருக்கணும்’னு நாங்க பிடிவாதமா இருந்தது இல்லை. அல்டிமேட்டா எங்க பெஸ்டை சேர்த்து நல்ல ப்ராடெக்ட் கொடுக்கணும்னு ஒர்க் பண்ணியிருக்கோம். இப்படியான ஒரு டீம் எஃபெக்ட்தான் ‘இமைக்கா நொடிகள்’.’’

‘‘சீனியர் ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் இந்த த்ரில்லருக்கு எப்படி வலு சேர்த்திருக்கார்?’’

‘‘பட்ஜெட்ல எதையெதை குறைக்கலாம்னு நினைக்கிற தயாரிப்பாளர்களுக்கு மத்தியில், ‘இது ஏன் இவ்வளவு கம்மியா இருக்கு. எக்ஸ்ட்ரா கேளுங்க’னு கூடுதலா செலவு பண்ண நினைக்கிற எங்க தயாரிப்பாளர் ஜெயகுமார் சார். இந்த ஸ்கிரிப்ட் அவருக்கு ரொம்பப் பிடிச்சிட்டதால் பெரிய படமா பண்ணிட்டு இருக்கார். அவர்தான் ‘இமைக்கா நொடிகள்’ படத்துக்கான முதல் பலம். அடுத்து சினிமட்டோகிராபர் ஆர்.டி.ராஜசேகர் சார். நான் ஸ்கூல் படிக்கும்போதே ‘காக்க காக்க’, ‘கஜினி’ பார்த்துட்டு, ‘நாம படம் பண்ணும்போது இவர்தான் நம் சினிமட்டோகிராஃபர்’னு முடிவு பண்ணிட்டேன். அப்பயே, நான் பண்ண நினைச்ச பட டைட்டிலை எழுதி, ‘ரிட்டன் அண்ட் டைரக்ஷன் அஜய்னு எழுதிட்டு கீழ இவர் பேரை எழுதின அந்த பேப்பர்களை இன்னமும் பத்திரமா வெச்சிருக்கேன். அந்த விஷயத்தை ஆர்டி சார்ட்ட சொன்னேன். ’சூப்பர். வாங்க பின்னிடலாம்’னு கூடுதல் எனர்ஜியோட வொர்க் பண்ணியிருக்கார். அவர் பண்ணினதிலேயே இதுதான் பெஸ்ட் படம்னு சொல்லலாம். இதன் புரொடக்ஷன் வேல்யூ பெருசானதுக்கு முக்கியமான காரணம் எங்க ஆர்ட் டைரக்டர் செல்வகுமார் சார். ‘மதராசப்பட்டினம்’, ‘தனிஒருவன்’ படங்கள் பண்ணினவர். ‘இன்னைக்கு நீங்க ஷூட்டிங்கே பண்ணாதீங்க. நானே முடிச்சிட்டு கூப்பிடுறேன்’னு அவசரத்துக்காக அறைகுறையா விடவே மாட்டார். இந்த டீம்தான் என் பலம்.’’

‘‘இசை, ஹிப்ஹாப் தமிழா ஆதி. என்ன பண்ணியிருக்கார்?’’

‘‘இந்தமாதிரியான த்ரில்லருக்கு பின்னணி இசைதான் பலம். ‘தனி ஒருவன்’ பார்த்துட்டு வந்தபிறகுக்கூட அதோட பிஜிஎம்மை என்னையறியாமல் ஹம் பண்ணிட்டே இருந்தேன். ‘ஹிப்ஹாப்’ ஆதிக்கூட ஒர்க் பண்ணணும்னு அப்பவே முடிவு பண்ணிட்டேன். அவர்ட்ட கதை சொன்ன உடனேயே, ‘பிரிச்சிடலாம் ப்ரோ’ன்னார். எனக்கு அவர் மிகப்பெரிய சப்போர்ட். எந்த பிரச்னையா இருந்தாலும் எந்த நேரத்திலும் அவர்ட்ட பேசலாம். டீசர் கட் பண்ணும்போதுகூட நாங்க ரஃப்பா தந்த பிஜிஎம்மை கேட்டுட்டு, ‘ஓ.கே ப்ரோ, எனக்கு மூட் புரிஞ்சிடுச்சு. பண்ணிடுவோம்’னார். பிறகு அவர் டீசருக்கு பண்ணித்தந்த பின்னணி இசையை கேட்டுட்டு பயங்கர ஷாக். அவ்வளவு பொருத்தமா இருந்துச்சு. இந்தப் படத்துக்கு என்ன தேவை என்பதை சரியா புரிஞ்சிருக்கார்னு தெரிஞ்சுகிட்டேன். பிரமாதமான நாலு பாடல்கள், பிளஸ் பதறவைக்கும் பின்னணி இசையை தந்திருக்கார். இப்படி ஒரே அலைவரிசையில் உள்ள நடிகர்கள், டெக்னீஷியன் டீம்தான் இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம்.” என்றார் அஜய் ஞானமுத்து.