Published:Updated:

‘உண்மையான வன்முறை பயமுறுத்தும்!’- உறியடி இயக்குநர் விஜய்குமார் #OneYearOfUriyadi

‘உண்மையான வன்முறை பயமுறுத்தும்!’- உறியடி இயக்குநர் விஜய்குமார் #OneYearOfUriyadi
‘உண்மையான வன்முறை பயமுறுத்தும்!’- உறியடி இயக்குநர் விஜய்குமார் #OneYearOfUriyadi

‘உண்மையான வன்முறை பயமுறுத்தும்!’- உறியடி இயக்குநர் விஜய்குமார் #OneYearOfUriyadi

படம் முழுக்க சாதிப் பெருமைகளைப் பேசிவிட்டு ஒரு சில வசனங்கள் மூலமோ, ஒரு சில காட்சிகள் மூலமாக மட்டும் சாதிக்கு எதிரான நிலைப்பாட்டைச் சொல்வதாக வந்த சினிமாக்கள்தான் தமிழில் அதிகம். இளைஞர்களிடம் சாதி விதைக்கப்பட்டு, அது பழுத்துத் தொங்கிக்கொண்டிருக்கும் இந்தச் சூழலில், இளைஞர்களை வைத்தே இளைஞர்கள் மீது திணிக்கப்படும் சாதியையும், சாதி என்ற தூண்டில் இளைஞர்களை எப்படித் துளைத்துப் பிடிக்கிறது என்ற அரசியலையும் துணிச்சலாகப் பேசிய படம், இதே நாளில் சென்ற ஆண்டு வெளியான 'உறியடி'. ஒரு வருடம் கடந்தும், தமிழ்சினிமாவின் பேசுபொருளாகத் தொடர்வதே இப்படத்தின் வெற்றி! #OneYearOfUriyadi

“சமூகப் பிரச்னையை எதிரொலிக்கும் விதமா என்னுடைய படம் இருக்கணும்னு முடிவு பண்னேன். நானே தயாரிப்பாளர் என்பதால், பேசத் தயங்கும் சாதி அரசியலைப் பேசலாம் என முடிவெடுத்தேன். தவிர, அரசியல் படம் என்றாலே மினிஸ்டர், சி.எம் ரேஞ்சில் யோசித்துக் கதை எழுதுவாங்க. ஆனா, யதார்த்தத்தில் அப்படி இல்லை. ஊருக்குள் இருக்கும் சிறிய சாதிக் கட்சிகள், பெரிய பெரிய கட்சிகளின் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது. அந்த சாதிக் கட்சிகளின் பின்புலத்தைப் பெருசுகளுக்குச் சொல்றதுக்குப் பதிலா, இன்றைய இளைஞர்களுக்குச் சொல்லணும்னு முடிவெடுத்தேன். 'உறியடி' உருவானது!'' என்கிறார் படத்தின் இயக்குநர், விஜய்குமார்.

‘படம் முழுக்க இளைஞர்கள் குடிக்கிறார்கள், புகைக்கிறார்கள்' என்பது இப்படத்தின் மீது வைக்கப்பட்ட எதிர்விமர்சனம். ஆனால், படத்திலேயே பார் ஓனர் மோர் குடிப்பதும், லேபிள் மாற்றப்பட்ட கள்ளச் சரக்குக்குகளை விற்பதும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். படத்தின் பிராதான கேரக்டர்களில் நடித்த நான்கு இளைஞர்களும் எப்போதெல்லாம் குடிக்கிறார்களோ, அப்போதெல்லாம் பிரச்னைகள் பிண்ணப்பட்டுக்கொண்டே இருக்கும். சுருக்கமாகப் பார்த்தால், படத்தில் இளைஞர்கள் மீது திணிக்கப்பட்ட அத்தனை பிரச்னைகளுக்கும், 'மதுவும் மது சார்ந்த இடங்களும்'தான் காரணமாக இருக்கும். தவிர, ஒரு தலைமுறையையே டாஸ்மாக் மூலமாக குடிக்கு அடிமை ஆக்கியது அரசியல்தானே? -  இதைத்தான் இந்தப் படம் சொன்ன கருத்தும்.

“படத்துல, குவாட்டரோட அம்மா ஹாஸ்டலுக்கு வரும்போது, சிகிரெட் இல்லாத விரக்தியில ரூம்ல இருக்கிற பக்கெட், கட்டிலுக்குக் கீழே எல்லாம் சிகிரெட் துண்டுகள் ஏதாவது இருக்குதானு பசங்க தேடிக்கிட்டு இருப்பாங்க. அந்தக் காட்சியில சிகிரெட்டுக்கு எதிரான ஒரு வசனம் இருந்தது. ஆனா, சென்சார்ல அதை வெட்டிட்டாங்க. பசங்களுக்கு நாம 'புகைப்பது தவறு'னு பாடம் எடுத்தா கேட்கமாட்டாங்க. அவங்களையே அறியாம, அவங்க பண்ற தப்பைச் சொல்ற சூழல் வரும்போது கண்டிப்பா திருந்துவாங்க. இதைத்தான், நானும் சொல்ல வந்தேன். முக்கியமா, பிரச்னை பெருசா வளர்ந்து நின்னதுக்குப் பிறகு பசங்க குடிக்கவேமாட்டாங்க!'' என்கிறார் விஜய்குமார்.

படத்தின் முக்கியக் காட்சி, இடைவேளை. சமீபகால தமிழ்சினிமாவின் 'சிறந்த இடைவேளைக்காட்சி' எனப் பலரும் பாராட்டியிருந்தார்கள். இதில் வன்முறை கொஞ்சம் கோரமாகவே இருக்கும். ஆனால், இயல்பில் நடக்கும் வன்முறையே இதுதான். இந்தக் காட்சி குறித்து இயக்குநர் விஜய்குமார், ''என்னைப் பொறுத்தவரை ஒரு சண்டைக்காட்சியை கூலா, ஸ்டைலிஷா சொல்றதுதான் அபாயமானது. ஏன்னா, சக மனிதர்கள் மீது நடக்குற ஆக்ரோஷமான வன்முறையை, அப்படியே படம் பிடித்துக் காட்டும்போதுதான், நமக்குள்ள ஒரு பயம் உருவாகும்.'' என விளக்கம் கொடுக்கிறார்.

மேலும், ''இன்றுவரை படத்தைப் பற்றிப் பலரும் பேசிக்கிட்டு, எழுதிக்கிட்டு இருக்கிறது மன திருப்தியைக் கொடுத்திருக்கு. 'உறியடி'யை தியேட்டரில் பார்த்த ரசிகர்களைவிட, ஆன்லைனில் திருட்டுத்தனமாகப் பார்த்தவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். ஒருவகையில வருத்தமா இருந்தாலும், பல வகையில அது சந்தோஷத்தைத்தான் கொடுக்குது. ஏன்னா, அது ரசிகர்களோட குற்றம் இல்லை. தவிர, இந்தப் படத்தோட சாட்டிலைட் ரைட்ஸ் இன்றுவரை எந்தச் சேனலும் வாங்கலை. 'ஏ' சர்டிபிகேட்ல இருந்து, 'யு/ஏ' சர்டிபிகேட் வாங்கவே ஆறு மாதம் அலைஞ்சேன். இப்போ, 'இது இளைஞர்களுக்கான படமா மட்டுமே இருக்கு.

குடும்பத்தோட உட்கார்ந்து பார்க்கமாட்டாங்க'னு காரணம் சொல்றாங்க சில டி.வி சேனல்கள். ஏற்கெனவே 'விடியும்வரை விண்மீன்களாவோம்' என்ற தலைப்பை 'டைட்டில் பெருசா இருக்கு, மாத்துங்க'னு படத்தோட பிஸ்னஸ் ஷோவுக்கு வந்தவங்க சொன்னாங்க. சென்சார்ல சில காட்சிகளுக்கு கட் கொடுத்தாங்க. 'தலைகளை வெட்டி'ங்கிற வார்த்தையை நீக்கச் சொன்னாங்க. ரிலீஸ் டைம்ல பல பிரச்னைகள். ஆனா, ஒருவழியா மக்கள் படத்தைப் பார்த்துட்டாங்க. பாராட்டிட்டாங்க. அது போதும், அடுத்த படத்துக்கான வேலைகளுக்கு உத்வேகமா செயல்படலாம்!'' என்று முடித்தார் விஜய்குமார்.

ஒரு திரைப்படம், தன் கதைக்கும் கதைக்கான நோக்கத்திற்கும் நேர்மையாக இருக்கவேண்டும். விவாதத்திற்கு உட்படுத்தப்பட்ட குறைகளைத் தவிர்த்து, 'உறியடி' ஒரு நேர்மையான தமிழ்சினிமா!

இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிக்கு முந்தைய 15 நிமிடங்கள், பொறுக்கியெடுத்த சில வார்த்தைகளை மட்டுமே வசனமாகப் பயன்படுத்தி பெரும்பாலான நிமிடங்கள் மெளனமாகப் பயணிக்கும். விமர்சகர்கள், சினிமா ஆர்வலர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட அந்தக் காட்சியின் 'திரைக்கதை வடிவம்' மேலே இணைக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு