Published:Updated:

பீஃப் கறினா சும்மா இல்லடா! - ‘கோதா’ படம் எப்படி?

பீஃப் கறினா சும்மா இல்லடா! - ‘கோதா’ படம் எப்படி?
பீஃப் கறினா சும்மா இல்லடா! - ‘கோதா’ படம் எப்படி?

'கோதா' படம் பற்றி பார்க்கும் முன் இந்தக் காட்சியைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். "நீங்க ஏன்டா அந்த பீஃப் மட்டும் விடவே மாட்றீங்க?" எனக் கேட்டதும், "பீஃப் என்பது கேரளாவுக்கானது மட்டுமல்ல. அதொரு எமோசன். பீஃப் கறிய கழுவி, துண்டு துண்டா நறுக்கி, கொஞ்சம் மஞ்சப் பொடி.... கடைசியில் மொறு மொறு பரோட்டால அதைத் தொட்டு ஒரு பீஸ எடுத்து சாப்பிட்டா... பீஃப் கறினா சும்மா இல்லடா" என டொவினோ தாமஸ் சொல்வதாக ஒரு காட்சி வரும். திட்டமிட்டதோ, தற்செயலோ இந்த சூழலில் தியேட்டரில் அந்தக் காட்சிக்கு ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் அள்ளுது.

மலையாள சினிமா விளையாட்டு தொடர்பான விஷயங்களின் மீது கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறது. 'ஜார்ஜேட்டன்ஸ் பூரணம்', 'ரக்‌ஷாதிகாரி பைஜு ஒப்பு' படங்களுக்குப் பிறகு இந்த வருடத்தில் மூன்றாவதாக, விளையாட்டை முன்னிலைப்படுத்தும் மலையாள சினிமா 'கோதா'.

கண்ணாடிக்கல்லு கிராமத்தில் ஒரு காலத்தில் குஸ்தி செய்யாத ஆண்களே ஊரில் கிடையாது. ஆனால், அதன் கடைசி தலைமுறை கேப்டன் (ரெஞ்சி பனிக்கர்) மற்றும் அவரது நண்பர்கள் மட்டுமே. கேப்டனின் மகன் ஆஞ்சனேய தாஸ் (டொவினோ தாமஸ்) முன்னாள் மல்யுத்த வீரன். அதன் மீதுள்ள விருப்பம் போய்விட தன் நண்பர்களுடன் கிரிக்கெட், மேட்ச் என சுற்றுகிறார். மல்யுத்தம் மீது கிராமத்தில் யாருக்கும் மதிப்பு கிடையாது. அதனால் தன் மீது கிராமத்தினருக்கு இருந்த மரியாதையும் போய்விட்டதாக நினைக்கிறார் ரெஞ்சி. எப்படியாவது தன் கிராமத்தினருக்கு மீண்டும் மல்யுத்தம் மீது ஆர்வம் வரவழைக்க நினைக்கிறார். அதேசமயத்தில் ஊதாரியாக சுற்றும் மகன் டொவினோவை பஞ்சாபில் இருக்கும் ஓர் கல்லூரியில் சேர்க்கிறார். மாநிலம் கடந்தும் மல்யுத்தம் அதிதி சிங் (வாமிகா கபி) ரூபத்தில் வருகிறது டொவினோவிடம். வாமிகா  சிறுவயதிலிருந்தே மல்யுத்தம் பழகி வருபவர். அவளைப் பார்த்ததும் காதலிக்கத் தொடங்குகிறார் டொவினோ. இந்த இருவரும் ஒரு சந்தர்பத்தில் கேரளாவுக்குச் செல்ல நேர்கிறது. மல்யுத்தக் களத்தில் இறங்க வேண்டிய அவசியம் வருகிறது. அது ஏன்? என்பது மீதிக் கதை.

"ஒரு பெண் கனவு காணவே கூடாதா,எங்களுக்குன்னு கருத்துகூட இல்லைல, அவளுக்குனு எந்த லட்சியமும் இருக்கக் கூடாதா, எப்பவும் கல்யாணம், குழந்தை வளர்ப்பு இதுதான் அவளுடைய வாழ்க்கையா இருக்கணுமா?" என தனது மல்யுத்த கனவை நிறைவேற்ற தன் குடும்பத்தினருடன் மல்யுத்தம் செய்யும் ரோல் வாமிகா கபிக்கு. கையில் மண்ணை அள்ளித் தட்டிவிட்டு கோதாவில் இறங்கி எதிராளியைத் தூக்கி எறிவதோ, அழுது கொண்டே "சில சமயம் எனக்கு தற்கொலை பண்ணிக்கலாம் போல இருக்கும்" என வசனம் பேசுவதோ எல்லா காட்சியிலும் அழகான நடிப்பை வெளிப்படுத்துகிறார் வாமிகா. எப்போதும் விறைப்பும் முறைப்புமான கேப்டனாக வரும் ரெஞ்சி பனிக்கர் அந்த வெற்றிக்குப் பிறகு யாரும் இல்லாத இடத்தில் போய் நெகிழும் இடத்தில் செம. டொவினோ தாமஸுக்கு அதிக காட்சிகள் இருந்தாலும் நடிக்கக் கிடைத்திருப்பது ஒரு சில காட்சிகள்தான், அதை நிறைவாக செய்திருக்கிறார். அஜு வர்கீஸ், கெஸ்ட்ரோலில் வரும் பாலசரவணன் காமெடிகள் ரிலாக்‌ஷேசன். "ஏய் பயில்வானே.. என்னக் கொண்டு பரையப்பிக்கறது" என ஜாலியாக சிடுசிடுக்கும் கேப்டனின் மனைவி கதாபாத்திரம், மல்யுத்த மைதானத்தைக் கைப்பற்ற நினைக்கும் சஜீவ் ரவி என சின்னச் சின்ன கதாபாத்திரங்களும் மனதில் நிற்கும் நடிப்பை வழங்குகிறார்கள்.

கொஞ்சம் பிசகினால் 'தங்கல்' டைப் படமாக மாறிவிடும் சிக்கல், அப்படி ஆகிவிடாமல் காதல், காமெடி, சில சென்டிமென்ட்கள், நிறைய குஸ்தி என கலவையாக கதையை எழுதியிருக்கிறார் ராகேஷ் மன்டோடி. ஆனால், அதுதான் படத்தின் மைனஸும் கூட. வழக்கமாக ஸ்போர்ட்ஸ் ஜனார் சினிமாக்களில் வரும் அத்தனை க்ளிஷேக்களும் இதிலும் உண்டு. தன் கிராமத்துப் பாரம்பரியமான குஸ்தி மீது மக்களுக்கு ஆர்வம் வர வேண்டும் என்ற போர்ஷன்களும் இதற்குப் பேர்லலாக நேஷனல், ஒலிம்பிக்ஸ் வரை ஒரு சாம்பியனாக வாமிகாவை உருவாக்குவதுமாக படம் நகரும்போது, இடையில் காதல், காமெடி, பாடல்கள் இணைவதால் படத்தின் தன்மை நீர்த்துப் போகிறது. "நீங்க கிரிக்கெட் விளையாடுங்க. ஆனா, இந்த மண்ணுக்கும் குஸ்திக்கும் இருக்கும் உறவு உயிரோட்டமானது. நீ அதைத் தடுக்கணும்னு நினைக்கறது வேரோட மரத்தை வெட்டி சாய்க்கற மாதிரி" என சொல்வது போன்ற காட்சி வரும். இப்படி படத்தின் அழுத்தத்தைக் காட்டும் காட்சிகள் மிகக் குறைவாக இருப்பதால், இது எந்த மாதிரியான படம் என்ற குழப்பதை ஏற்படுத்துகிறது. 

வாமிகா போட்டியில் கலந்து கொண்டு ஜெயித்த உடனேயே படம் முடிந்தது போன்ற உணர்வை ஏற்படுகிறது. இரண்டு மணி நேரப்படம் என்றாலும் அதன் பிறகும் நீண்டு கொண்டே செல்லும் காட்சிகள் பெரிய்ய்ய்ய படம் பார்த்ததைப் போன்று உணர்வைத் தருகிறது. அபினவ் சுந்தர் நாயக் எடிட்டிங்கில் இன்னும் ஷார்ப் செய்திருக்கலாம். படத்தின்  இறுதியில் மனயத்து வயல் மைதானத்தில் நடக்கும் மல்யுத்த காட்சிகளில் 'ஸ்டன்னர்' சாம் சண்டைப்பயிற்சியும், விஷ்ணு சர்மாவின் ஒளிப்பதிவும் அசத்தல். ஷான் ரஹ்மான் இசையில் படத்துடன் ஒட்டியே வரும் பாடல்களும், கூஸ் பம்ப்ஸ் உணர்வைத்தரும் பின்னணி இசையும் நன்று. 

படத்தின் துவக்கத்தில் வினித் ஸ்ரீனிவாசன் வாய்ஸ் ஓவரில் மனயத்து வயல் மைதானத்தைப் பற்றியும், கண்ணாடிக் கல் கிராமத்தைப் பற்றியும் ஒரு இன்ட்ரோ கொடுத்திருப்பார். அதன் மூலம் தந்த உணர்வை படம் முழுதும் இயக்குநர் பாசில் ஜோசப் கொடுத்திருந்தால் கோதா களைகட்டியிருக்கும்.