Published:Updated:

’வேலை செய்ய விடுங்கள்’, ‘அரசியலுக்கு வருவது தொடர்பாக நேரம் வரும்போது தெரிவிப்பேன்’ - ரஜினி

குருபிரசாத்
’வேலை செய்ய விடுங்கள்’, ‘அரசியலுக்கு வருவது தொடர்பாக நேரம் வரும்போது தெரிவிப்பேன்’ - ரஜினி
’வேலை செய்ய விடுங்கள்’, ‘அரசியலுக்கு வருவது தொடர்பாக நேரம் வரும்போது தெரிவிப்பேன்’ - ரஜினி

அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது அவர் தனது அரசியல் பயணம் குறித்து சூசகமாக பேசினார். தனது ரசிகர்களிடம் 'போர் வரும்போது பார்த்துக் கொள்வோம்' என ரஜினி தெரிவித்தது பல்வேறு விவாதங்களைக் கிளப்பியது. இதையடுத்து, ரஜினிக்கு ஆதரவும், எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. 


குறிப்பாக, அமித் ஷா முதல் தமிழிசை செளந்தரராஜன் வரை பலரும் அவரை, பி.ஜே.பி-இல் இணைய அழைப்பு விடுத்து வருகின்றனர். இந்நிலையில், ரஜினி தனிக்கட்சி தொடங்க உள்ளார் என்று அவர் சகோதரர் சத்யநாராயண ராவ் கூறியதாக தகவல் வெளியாகியது. ஆனால், தான் அப்படி கூறவில்லை என்று பின் சத்யநாராயண ராவ் மறுத்தார். இதற்கிடையே, காலா பட ஷூட்டிங்கிற்காக, ரஜினிகாந்த், இன்று மும்பை புறப்பட்டுள்ளார்.

அப்போது, தனது போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில், “காலா பட ஷுட்டிங் நாளை தொடங்குகிறது. அதற்காக மும்பை செல்கிறேன். இது என் வேலை. என்னுடைய தொழில். அதைப் பார்க்கப் போகின்றேன். இது உங்களுடைய வேலை. அதை நீங்கள் பாருங்கள். என்னை, என்னுடைய வேலையை பார்க்க விடுங்கள்" என்று கூறினார்.

பின் சென்னை விமானநிலையத்துக்குச் சென்ற அவரிடம், அரசியல் வருகை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், "அரசியலுக்கு வருவது தொடர்பாக நேரம் வரும்போது தெரிவிப்பேன்" என்றார்.

ஆனால், ‘மாட்டிறைச்சிக்குத் தடை’ உள்ளிட்ட கேள்விகளுக்கு ரஜினி பதிலளிக்கவில்லை.