Published:Updated:

ஜானி டெப் - டிகாப்ரியோ, ரொனால்டோ - மெஸ்ஸி : இதுவும் தல தளபதி சண்டைதான்! #Fanfights

தார்மிக் லீ
ஜானி டெப் - டிகாப்ரியோ, ரொனால்டோ - மெஸ்ஸி : இதுவும் தல தளபதி சண்டைதான்! #Fanfights
ஜானி டெப் - டிகாப்ரியோ, ரொனால்டோ - மெஸ்ஸி : இதுவும் தல தளபதி சண்டைதான்! #Fanfights

ந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் ஒருவருக்கு நிகராய் இன்னொருவர் இருக்கத்தான் செய்கிறார். அந்தந்தத் துறையில் கில்லியாக இருக்கும் இவர்களின் ஆதரவாளர்கள் சண்டையும் ரொம்பவே பிரசித்தம். அப்படி நமக்கு பரிச்சயமான நான்கு ஜோடிகள் இவர்கள்தான், இவர்களைப் பற்றிய ஓர் அலசல்!

அஜித் - விஜய் :

தல தளபதிதான் தமிழ்நாட்டின் ஹாட் டாபிக். தமிழ்நாட்டை 'தல நாடு' என்று கொண்டாடும் ஒரு கூட்டம், 'எங்க தளபதிதான்டா கெத்து' என்று காலரைத் தூக்கிவிடும் ஆட்கள் ஒரு பக்கம். அஜித்தை எடுத்துக் கொண்டால் அவரிடம் நடிப்பைவிட அவரின் பெர்சனல் வாழ்க்கையை வைத்துத்தான் பலபேர் ரசிகர்களாக இருப்பார்கள். அதுபோக அவரின் உதவும் சுபாவம், தன்னம்பிக்கை, இது எல்லாத்தையும்விட அவர் பைக், கார் ஓட்டும் ஸ்டைல் இவை எல்லாவற்றையும் வைத்துத்தான் அஜித்துக்கு ரசிகனாக இருப்பார்கள். இந்தப் பக்கம் விஜய்யை எடுத்துக் கொண்டால் அவரது சிம்ப்ளிஸிட்டி, மேடைப் பேச்சு, நடிப்பு. அவைகளை  அவர் டான்ஸ் ஆடும் ஸ்டைல்தான் அவருக்கு வெறித்தனமான ரசிகனாக இருக்க காரணமாக இருக்கும். இந்த இருவருக்குமான ரசிகர்களுக்கு இடையிலான சண்டை என்றும் ஓயாது. இவங்க ரெண்டு அணிகளும் அடிச்சிக்கிட்டா கூட பரவாயில்லை. இவர்கள் மற்ற நடிகர்களின் நடிப்பையும், அவரின் ரசிகர்களையும் கலாய்ப்பதுதான் கொஞ்சம் ஓவர் பாஸ். ஒரே ஒரு ஆறுதலான விஷயம் விஜய்யின் நடிப்பை அஜித் ரசிகர்கள் பாராட்டுவதும், அஜித்தின் மாஸ் கலந்த நடிப்பை விஜய்யின் ரசிகர்கள் பாராட்டுவதும்தான். சண்டையே இல்லாமல் இருந்தாலும் போர் அடிக்கும். உருவத்தை வைத்து கிண்டல், கேலி செய்யாமல் ஜாலியா அடிச்சிக்கிட்டா நல்லா இருக்கும். அந்த ரசிகர் சண்டைகளை எல்லாம் அடுத்த நிமிஷமே மறந்து போயிடுங்க ஃப்ரெண்ட்ஸ்.

தோனி - கோலி :

தமிழ் சினிமாவில் தல தளபதி சண்டை எப்படியோ கிரிக்கெட்டில் தோனி - கோலி சண்டை அப்படி வேற லெவல். சாதாரணமாக ஒரு மீம் போடும்போது கூட தோனியை அஜித்துடனும், கோலியை விஜய்யுடனும்  ஒப்பிட்டுத்தான் சிலர் போடுவார்கள். இந்திய அணியின் தலைசிறந்த கேப்டன்களுள் தோனியும் ஒருவர். எந்தத் தருணத்திலும், வெற்றியோ, தோல்வியோ அவரது முகத்தில் லீவே எடுக்காத அந்த சிரிப்பு, அவரது அவுட் ஆஃப் தி பாக்ஸ் சிந்தனைகள், பல இளைஞர்களின் ரோல் மாடல். சுருக்கமாகச் சொன்னால் ஒரு தலைவனாக டீமை எந்த வித டென்ஷனுமின்றி வழி நடுத்துவது எப்படி என்று தோனியிடம் கற்றுக் கொள்ளலாம். இவரின் ரசிகர்கள் பட்டாளத்துக்கும் அதுதான் காரணம்.

மறுபக்கம் கோலி, இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமே இவர்தான். தோற்கும் தருவாயில் எந்த ஒரு வீரராக இருந்தாலும் அவருக்குப் பதற்றம் ஏற்பட்டுவிடும். ஆனால், எந்தவிதப் பதற்றமும் இல்லாமல், தன்னால் இயன்றவரை கடைசிப் பந்துவரை போராடித் தன் அணியை வெற்றிப் பாதையை நோக்கி அழைத்துச் செல்வார் கோலி. அது மட்டுமின்றி தான் விளையாடும் எல்லாப் போட்டிகளிலுமே எதாவது ஒரு சாதணயை புரிந்துகொண்டேதான் இருப்பார். சச்சினுக்குப் பிறகு எல்லா சாதனைகளையும் படைப்பது நம்ம கோலிதான். சுருக்கமாகச் சொல்லப்போனால் எதாவது ஒரு சாதணையை உடைப்பதோ,  இல்லை புதிதாய் ஏதாவது ஒரு சாதனையைப் படைப்பதோ, அப்படியே நம்ம சின்ன வயது சச்சின், நம்ம கோலி. என்னதான் ஒரு வீரனை மற்ற வீரனோடு ஒப்பிடக் கூடாதென்றாலும், சச்சினை நினைவுப்படுத்தும் கோலியின் அருமை பெருமைகளை தாராளமாக எடுத்துச் சொல்லலாம். அதனாலேயே இவருக்குப் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உருவானார்கள். வெறும் சண்டைகளை மட்டுமே போடாமல், இவர்களை இன்ஸ்பிரேஷனாகக் கொண்டு அன்றாட வாழ்வின் செயல்களில் பிரதிபலித்தால் நல்லாயிருக்கும்.

ரொனால்டோ - மெஸ்ஸி :

இது ஃபுட்பாலில் நடக்கும் முரட்டுத் தனமான சண்டை. பார்சிலோனா - அர்ஜென்டினாவுக்காக விளையாடும் லியோனல் மெஸ்ஸியோ, ரியல் மாட்ரிட் - போர்ச்சுக்கல் அணிக்காக விளையாடும் கிறிஸ்டியானா ரொனால்டோவோ, இந்த இருவரில் யார் சிறந்த வீரர்? இதை நான் சொன்னால் கமென்ட்டில் ரசிகர் சண்டை அனல் பறக்கும். ரொனால்டோவை எடுத்துக்கொண்டால் அவர் காலுக்குப் பந்து சென்றுவிட்டால் எந்தத் திசையில் போகிறார் என்றே கணிக்க முடியாது, தலையை நோக்கி வரும் பந்தை ஹெட்டிங் செய்வதற்காக 44 செ.மீ வரை பறப்பார். எல்லாத்தையும் பண்ணி கோல் போட்டுவிட்டு இவர் நிற்கும் ஸ்டைலுக்காவே ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். மறுபக்கம் மெஸ்ஸி, இவரது புயல் வேக ஓட்டத்துக்கு யாராலும் ஈடு கொடுக்க முடியாது. உசேன் போல்டின் சொந்தக்காரர் போல சூப்பர் ஃபாஸ்ட் வேகத்தில் ஓடுவார். அதேபோல் அவ்வளவு சாதாரணமாக இவரிடமிருந்து பந்தைப் பறித்துச் செல்ல முடியாது. அவ்வளவு டாக்டிக்கலாக விளையாடும்  திறன் கொண்டவர். முக்கியமாக இவர் கோல் போடுவது மட்டுமின்றி மற்றவர்களையும் கோல் போட வைப்பார். அதற்காகவே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உலகம் முழுவதும் திரண்டது. 'எதற்கெடுத்தாலும் எங்களை ஒப்பிடுவது எங்களுக்கே போர் அடிக்கிது'னு ரொனால்டோ ஒரு பக்கம் சொல்ல, 'ரொனால்டோவுடன் ஒரே அணியில் இணைந்து ஒரு முறையாவது விளையாட விரும்புகிறேன்' என்று சொல்லும் மெஸ்ஸி ஒரு பக்கம் ஜில்லிட வைக்கிறார்.  

லியானர்டோ-டி-காப்ரியோ - ஜானி டெப் :

இது ஹாலிவுட் சினிமாவில் நடக்கும் பஞ்சாயத்து. தமிழ் சினிமாவில் தல-தளபதி சண்டை போல் ஹாலிவுட்டில் டி-காப்ரியோ - ஜானி டெப் சண்டை. 'டைட்டானிக்' படத்தின் மூலம் தனக்கென ஒரு ரசிர்கள் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார் லியானர்டோ டி காப்ரியோ. போர் அடிக்கும் காதலர்களுக்கு அந்தப் படம்தான் இன்னமும் சிறந்த என்டர்டெயின்மென்டாக இருக்கிறது. இவரிடம் அழகு, நடிப்பு இரண்டுமே தாறுமாறாக கொட்டிக் கிடக்கிறது, அதனாலேயே பெண் ரசிகர்கள் பட்டாளத்தையும் உண்டாக்கிக் கொண்டார். ரொமான்ஸ் படத்தில் ஆரம்பித்து ஆக்‌ஷன், த்ரில்லர், சயின்ஸ் ஃபிக்‌ஷன் என இவர் தொடாத ஜானர்களே இல்லை. இவரின் விடா முயற்சிக்கு கிடைத்த பரிசுதான் ஆஸ்கர் விருது. 'ரெவனென்ட்' படத்திற்காக இவருக்கு ஆஸ்கர் கிடைத்தது. இவர் ஆஸ்கர் வாங்கிய போது அவரைவிட அவரின் ரசிகர்கள்தான் அதிகமாகச் சந்தோஷப்பட்டனர். இந்தப் பக்கம் நம்ம கேப்டன் ஜேக் ஸ்பாரோ, ஆம் அந்தப் பெயரை சொன்னால்தான் பலருக்கும் இவரை அடையாளம் தெரியும். இவர் இதுவரை போடாத கெட்-அப்களே இல்லை. ஆங்கில சினிமாவின் கமல்ஹாசன் என்றால் அது நம்ம ஜானி டெப்தான். நடிப்புக்கென்றே தன்னை அர்ப்பணித்த மனிதர். அது மட்டுமின்றி நிஜ வாழ்க்கையில் இவர் தங்கம். ஏன்னு கேட்குறீங்களா? 'பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்' பட ஷூட்டிங்கின் போது ஓய்வு நேரங்களில் கேப்டன் ஜேக் ஸ்பாரோ வேடமிட்டு அங்கிருக்கும் குழந்தைகள் மருத்துவமனைகளுக்குச் சென்று அவர்களை குஷிப்படுத்தினார். இருவருமே தனது இலக்கை நோக்கிச் சரியாகப் பயனிக்கிறார்கள். ரசிகர்கள் நாம் ஏன் அடிச்சிக்கணும்? சிந்திக்கணும் மக்களே சிந்திக்கணும்..!

ஆக, ஒவ்வொரு நபருக்கும் திறமையகளும், தனித்துவமும் இருக்கின்றன. அதைப் பார்த்து ரசித்து, அதை நம் வாழ்வில் சண்டை போடுவதைத் தவிர மற்ற விஷயங்களுக்கு எடுத்துக்கொண்டு, அவர்களை மாதிரியே இலக்கை நோக்கிப் போய்க்கொண்டே இருப்போம். 'கைகளில் இருக்கும் ஐந்து விரல்களுமே ஒரே மாதிரி இல்லை... மனிதர்களில் மட்டும் எப்படி..?' என்கிற காட்டுமொக்கைத் தத்துவத்தையே திரும்பவும் சொல்ல வைக்காமல், நீங்களே புரிந்துகொண்டு அடித்துக் கொள்ளாமல் நம் திறமை எதில் இருக்கிறதோ, அதில் சிறந்து விளங்கலாமே..!