Published:Updated:

"சீக்கிரமே ரஜினி சாரின் புதுக்கட்சி!" -  அடித்துச் சொல்கிறார் நடிகர் ஜீவா! #VIkatanExclusive

"சீக்கிரமே ரஜினி சாரின் புதுக்கட்சி!" -  அடித்துச் சொல்கிறார் நடிகர் ஜீவா! #VIkatanExclusive
"சீக்கிரமே ரஜினி சாரின் புதுக்கட்சி!" -  அடித்துச் சொல்கிறார் நடிகர் ஜீவா! #VIkatanExclusive

'லொள்ளு சபா’ ஜீவா, ரஜினிகாந்தின் மினி ஜெராக்ஸ்போலவே ஹேர்ஸ்டைல் வைத்து, அவர் வாய்ஸில் மிமிக்கிரி செய்து லைக்ஸ் அள்ளியவர். தற்போது சில படங்களில் நடித்துவருகிறார். காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியனுடன் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்திருக்கிறார்.

"ரஜினி சாரிடம் அரசியல்குறித்து பேசத்தான் அவர் வீட்டுக்குச் சென்றோம்" என்கிறார் ஜீவா. அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

"உங்களுக்கும் தமிழருவி மணியனுக்கும் எப்படி தொடர்பு ஏற்பட்டது?"

"நான் சினிமாக்காரனாக இருந்தாலும், பெருந்தலைவர் காமராஜரைப் பின்பற்றுபவன். தமிழ்நாட்டில் பல இடங்களிலும் காமராஜரைப் பற்றிப் பேசியிருக்கிறேன். அப்படித்தான் ஒருநாள் காமராஜரைப் பற்றி பேசியபோது, காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியனின் உதவியாளர் எனக்கு நண்பரானார். தமிழருவி மணியன் ஐயாவிடமும் என்னைப் பற்றி சொல்லியிருக்கிறார். 'சினிமாவுக்குள் இப்படி ஒரு ஆள் இருக்கிறாரா? அவரைச் சந்திக்கணுமே!'னு என்னை வரச்சொன்னார். சந்தித்துப் பேசினேன். அப்போது எனக்கு ஒரு புத்தகம்கூடப் பரிசாகக் கொடுத்தார். அதில், 'காமராஜரைக் கடவுளாக மதித்து வாழும் ஜீவாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்'னு எழுதி அவர் கையெழுத்துப்போட்டிருந்தார்.

அதுக்குப் பிறகு பெருந்தலைவர் பிறந்த நாள் விழாவில், 'காமராஜர், மக்களின் தொண்டரா... மக்களின் தலைவரா?' என்ற தலைப்பில் கவியரங்கம் நடந்தது. அதுக்கு ஐயாதான் நடுவர். நான் தலைவர் என்ற தலைப்பில் காமராஜரைப் பற்றி பேசும்போது ஐயாவுக்கு என்னைப் ரொம்ப பிடிச்சுடுச்சு. நானும் காந்திய மக்கள் இயக்கத்திலேயே சேரணும்னு நினைச்சேன். ஆனா, ஐயாதான் 'நீங்க ஒரு துறையில் இருக்கீங்க. நீங்க கட்சியில் சேர்வதால் உங்க தொழில் பாதிக்கக் கூடாது. நீங்க கட்சியில் இணைந்துதான் அரசியலில் செயல்படணும்னு இல்லை. வெளியே இருந்தே செயல்படுங்க'னு சொல்லி ஆலோசனை தந்தார். இப்படித்தான் எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது."

"அரசியல் தொடர்பாகப் பேசத்தான் ரஜினிகாந்த்தைச் சந்தித்தீர்களா?"

"ரசிகர் மன்றச் சந்திப்பின்போது ரஜினி சார், 'அரசியலுக்கு வந்தால், பணம் சம்பாதிக்கணும்னு நினைப்பவர்களை கூட வைச்சுக்க மாட்டேன்'னு பேசியிருந்தார். அப்பதான் `பெருந்தலைவர் கூடவே இருந்த தமிழருவி மணியன் ஐயா போன்றோர் ரஜினி சார் பக்கத்தில் இருந்தால் நல்லா இருக்குமே'னு தோணுச்சு. முதல்ல தமிழருவி மணியன் ஐயாகிட்ட பேசினேன். 'ரஜினியின் நோக்கம் ரொம்பத் தெளிவாக இருக்கு. நாம் என்ன அரசியல் செய்யணும்னு நினைக்கிறோமோ, அதையேதான் அவரும் பேசியிருக்கிறார்'னு தமிழருவி ஐயாவும் சொன்னார். `ரஜினி சாரைச் சந்திக்க ஏற்பாடு செய்யட்டுமா?'னு கேட்டேன். 'தாராளமா சந்திக்கலாமே'னு சொன்னார்.

ரஜினி சாரிடமும் விஷயத்தைச் சொல்லி அப்பாயின்மென்ட் கேட்டேன். உடனே வரச்சொன்னாங்க. தமிழருவி மணியன் ஐயாவைப் பார்த்ததும் ரஜினி சார், 'நான் உங்க பேச்சுக்கு ரசிகன். நான் வாக்கிங் போகும்போது ஹெட்போன்ல உங்க பேச்சைத்தான் நிறைய முறை போட்டுக் கேட்டிருக்கேன்'னு சொன்னார். தமிழருவி மணியன் ஐயாவுக்கும் இது ஆச்சர்யமா இருந்துச்சு. அப்புறம் ரஜினி சாரும் ஐயாவும் இன்றைய அரசியலைப் பற்றி 90 நிமிடங்கள் பேசிட்டிருந்தாங்க. கிளம்பும்போது கார் வரைக்கும் வந்து வழி அனுப்பிவைத்தார் ரஜினி சார்."

"இன்றைய அரசியல் சூழ்நிலைகளைப் பற்றி ரஜினிகாந்த் என்ன நினைக்கிறார்?"

"ஹா...ஹா... அது எல்லாம் சஸ்பென்ஸ். வெளியே சொன்னா தப்பாகிடுமே."

"சரி, உங்ககூட பேசினதை வைச்சு சொல்லுங்க, ரஜினிகாந்த் அரசியலுக்கு நிச்சயம் வருவாரா?"

வேகமாக பதில் வருகிறது, "100 சதவிகிதம் உறுதியாக அரசியலுக்கு வர்றார். இதுல எந்தச் சந்தேகமும் வேண்டாம். இப்ப, அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் சாருக்கு முழு அதிகாரமும் கொடுத்திருக்கிறார். ரசிகர் மன்றத்தில், யார் யார் எல்லாம் பணத்துக்கு ஆசைப்படாம, உண்மையாகவே மக்களுக்கு சேவை செய்யணும்னு நினைக்கிறார்களோ, அவர்களை லிஸ்ட் போட்டு தேர்ந்தெடுத்துட்டிருக்காங்க. ஒவ்வொரு ஏரியாவா இந்தப் பணி நடந்துட்டிருக்கு."

"ஒருவேளை தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் வந்தால், ரஜினிகாந்த் அந்தத் தேர்தலில் போட்டியிடுவாரா?"

"புதிய கட்சி உதயமாகிறது. அதுவும் இந்த ஆண்டுக்குள் தொடங்குகிறார். நிச்சயமாகப் போட்டியிடுவார்."

"கட்சிக்குப் பெயர் வைத்துவிட்டார்களா?"

அதிர்ச்சியாகிறார் "உண்மையாகவே கட்சி பேரு என்னென்னு எனக்குத் தெரியாதுங்க. தமிழருவி மணியன் ஐயாவுக்கு வேண்டுமானால் கட்சியின் பேரு தெரிந்திருக்கலாம். ஆனா, கட்சி பேரு முடிவுசெய்திருப்பாங்கனு நினைக்கிறேன். விரைவில் தமிழக அரசியலில் மாற்றம் வரும்... வரணும்" என பன்ச் வைத்து முடிக்கிறார்.